Published : 27 Jan 2017 10:45 AM
Last Updated : 27 Jan 2017 10:45 AM
சூரியனின் மீது பரவலாக உள்ள காந்தப் புலம் ஓரிரு இடத்தில் மிகுந்து அதன் தொடர்ச்சியாக அந்தப் பகுதி ஒப்பிட்டளவில் குளிர்ச்சி அடைந்து கரும் புள்ளிகளாகத் தென்படுகிறது. சூரியனின் மேற்புற வெப்பம் சுமார் 6000 டிகிரி கெல்வின் என்றால், இந்தப் புள்ளிகளில் மட்டும் அது 3,800 டிகிரியாகக் குறைகிறது.
சூரியனின் முகத்தில் நாம் பார்க்கிற இந்தக் கரும்புள்ளிகளின் எண்ணிக்கையும், தன்மையும் எப்போதும் ஒன்றுபோல் இருப்பதில்லை. 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை புள்ளிகளின் எண்ணிக்கை கூடி குறைந்து ‘ஊசலாடு’கிறது. எண்ணிக்கை கூடிக் குறையும்போது, ஆம்புலன்ஸ் மேலே பொருத்தப்பட்டுள்ள சைரன் ஒளியைப் போலச் சூரியனின் பிரகாசமும் கூடிக்குறையும்.
30 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கூட இவ்வாறே சூரியனின் ஆற்றல் வெளிப்பாட்டில் ஊசல் இருந்தது என்கின்றனர் ஜெர்மன் விஞ்ஞானிகள். தொன்மையான மரத்துண்டுகளைத் தேடிப்பிடித்து அதிலுள்ள ஆண்டு வளையங்களை ஆய்வு செய்து, இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் ஃபிரைபெர்க் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லுட்விக் லுதார்ட் மற்றும் ரோன்னி ராப்ளர்.
சூரியனைத் தொடர்ந்து உற்றுநோக்கி வருகிறார்கள் வானியலாளர்கள். 1755 முதல் சூரியப் புள்ளிகளை கணக்கிடுகிறார்கள் என்றாலும், ஜூரிச் வான்நோக்கிக் கூடத்தில் 1849 முதல் தினமும் புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன. அவர்களும் சூரியனின் ‘ஊசல் இயக்கத்தை’ ஆய்கிறார்கள். தங்களிடமுள்ள தரவுகளை வைத்துச் சூரியனது தற்கால இயக்கத்தின் ஊசலானது 11.2 ஆண்டுகள் என்று கண்டுபிடித்துள்ளார்கள். 1755- ம் ஆண்டு நடைபெற்றது முதல் ஊசல் என்று வைத்துக்கொண்டால், தற்போது நடைபெற்று வருவது 24-வது ஊசல். 2008- ல் தொடங்கிய இந்த ஊசல் 2019- ல் முடியும் என்றும், அதைத் தொடர்ந்து 25- வது ஊசல் தொடங்கும் என்றும் கணித்துள்ளார்கள். ஜெர்மன் விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு திரும்புவோம்.
வீட்டில் உள்ள குண்டு பல்பின் மீது அழுக்குப்புள்ளிகள் படிந்தால் பிரகாசம் குறைவதைப்போல சூரியன் மீது அதிகமான புள்ளிகள் தென்படும்போது பிரகாசம் குறைகிறது. சூரிய ஆற்றல் கூடிக் குறையும் போது, அதன் விளைவுகள் பூமியில் உள்ள தாவரங்களின் வளர்ச்சியிலும் எதிரொலிக்கும். மரங்களை வெட்டி அதன் ஆண்டு வளர்ச்சி வளையங்களை ஆய்வு செய்தால், சூரிய வெளிச்சம் அதிகமுள்ள ஆண்டுகளில் வளையம் சற்றே தடிமனாகவும், ஒளி குறைந்த நிலையில் அதன் வளர்ச்சி குன்றியதால் வளையத்தின் தடிமன் குறைந்தும் காணப்படும்.
தற்காலத்தில் 11.2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடிக் குறையும் ஊசல் போலவே தான் முற்காலத்திலும் சூரியன் இருந்ததா என்பது புதிர். முற்காலத்தில் தொலைநோக்கி கிடையாது என்பதால், அப்போதைய சூரிய இயக்க ஊசலை அறிய வேறு ஒரு யுக்தியை கையாண்டார்கள் அவர்கள். சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஜெர்மனி நாடு உள்ள பகுதியில் ஏற்பட்ட பெரும் எரிமலை வெடிப்பில் புதையுண்டு கற்களாக மாறிப்போன மரங்களின் (கல் மரம்) தொல் படிமங்களை ஆய்வு செய்தனர். சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரிய இயக்கத்தின் ஊசல் பொழுதானது, 10.62 ஆண்டுகளாக இருந்துள்ளது என்கிறது இந்த ஆய்வு. 30 கோடி ஆண்டுகளாக சூரியனது இயக்கத்தில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை என்கிறது இது. இந்தக் கண்டுபிடிப்பால் என்ன பிரயோஜனம் என்று கேட்கிறீர்களா? புவி வெப்பமடைதல், சூரியனின் காந்தப் புயல் இயக்கம் உள்ளிட்ட ஆய்வுகளுக்கு இது உதவும்.
- த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் விஞ்ஞானி. தொடர்புக்கு:tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT