Published : 10 Aug 2016 08:56 AM
Last Updated : 10 Aug 2016 08:56 AM

ஷர்மிளா: அன்றாட வாழ்க்கையின் கொண்டாட்டம்!

மகான்கள், சத்தியாகிரகிகள் போன்றோரின் நற்செயல்களைக் காலப்போக்கில் உறையச்செய்து, அவர்களைச் சிலையாக்கி ஒரு பீடத்தில் வைப்பதுதான் நமது வழக்கம். உறைபடிவத்தில் படிந்ததைப் போன்ற ஒரு தன்மையை அவர்களின் நற்செயல்கள் பெற்றுவிடுகின்றன. உயிருள்ள ஒரு ஜீவனாக இருப்பதற்குப் பதிலாக மகான்களும் திருவுருக்களும் விளம்பரப் பதாகையாகவும் அற்புதக் காட்சியாகவும் அல்லது திரும்பத் திரும்பக் காட்டப்படும் மேற்கோளாகவும் ஆகிவிடுகிறார்கள். நாட்காட்டியில் இடம்பெறும் புகைப்படத் தொகுப்புகளாகவோ, அசையாமல் நிற்கும் சிலையாகவோ ஆகிவிடுகின்றன புனிதத்தன்மையும் வீரச்செயலும். நற்பண்பு என்பது காலத்தின் வார்ப்பெழுத்துகளாகிவிடுகின்றன.

தொடர்ந்து படைப்பூக்கத்துடன் செயல்பட்டு, மேற்கண்டதுபோல் உறைந்துவிடாமல் இருப்பதற்குப் போராடியவர்கள் இரண்டு பேரை நாம் உதாரணம் காட்ட முடியும். ஒருவர் காந்தி. அவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு உண்ணாவிரதப் போராட்டமும், ஒவ்வொரு எதிர்ப்புச் செயலும் சுயவிமர்சனத்தை உள்ளடக்கியதே. வன்முறைகள் தலைதூக்குவதாக உணர்ந்தால் காந்தி பெரும்பாலும் தனது சத்தியாகிரகச் செயல்பாட்டை நிறுத்திக்கொள்வார். தனது எதிர்ப்புச் செயல்பாடுகள் அவர் நினைத்த விதத்தில் செயல்படவில்லை என்றால் தனது பிரம்மச்சரிய வாழ்க்கையையே அவர் ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்வார்.

அந்த அர்த்தத்தில், உண்ணாவிரதமாக இருந்தாலும் போராட்டமாக இருந்தாலும் அவை இரண்டுமே உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனைகளே; அவை யாவும் தொடர்ந்து மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பரிசோதனைகளாகவே அவரால் பார்க்கப்பட்டன. சுயவிமர்சனம், பரிபூரணத் தன்மை இரண்டையும் ஒருங்கே பின்பற்றிய அது போன்ற தருணங்களில் காந்தியைச் சமாளிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. அறம் சார்ந்து படைப்பூக்கமான அரசியலை உருவாக்குவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டதால் அவருக்கு ஈடுகொடுப்பது மற்றவர்களுக்கு அவ்வளவு சிரமமாக இருந்தது.

இன்னொரு பரிசோதனையின் வரலாறு

மற்றுமொரு பரிசோதனையும் இன்றைய இந்தியாவை ஆட்கொண்டிருக்கிறது. இரோம் ஷர்மிளாவின் உண்ணா விரதம்தான் அது. 2000-ல் அவர் தொடங்கிய உண்ணா விரதம்தான் வரலாற்றின் மிக நீண்ட உண்ணாவிரதமாகப் பெயரெடுத்தது. மணிப்பூர் அரசியல் வெளியை அவரது உண்ணாவிரதம்தான் ஆக்கிரமித்திருக்கிறது. அப்படிப்பட்ட உண்ணாவிரதத்தைத் தற்போது நிறுத்திக்கொள்வதாக அவர் அறிவித்திருக்கிறார். ஷர்மிளாவின் உண்ணாவிரதம் இந்த அளவுக்குப் பிரபலமடைந்திருப்பதற்குக் காரணம், அது நீண்ட காலம் மேற்கொள்ளப்பட்டதால் மட்டுமல்ல, அந்த உண்ணாவிரதத்துக்கு வேராக இருக்கும் மாபெரும் துணிவுதான்.

அறத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரபலமான செயல்பாடு அது. அதற்கு அங்கீகாரம் கொடுக்க எந்த கின்னஸும் தேவையில்லை. டெல்லியின் ஆளுகைக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய சவால் அது. அரசின் மனிதத்தன்மைக்கும், அதன் நேர்மைக்கும் விடப்பட்ட சவால். தற்கொலைக்கு முயன்றதாக இரோம் ஷர்மிளா திரும்பத் திரும்பக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அரசு அவருக்குக் கட்டாயமாக உணவு புகட்டுகிறது. திரவ உணவு செலுத்துவதற்கான குழாய் மூக்கில் செருகப்பட்டிருக்கும் ஷர்மிளாவின் புகைப்படம் மணிப்பூர் போராட்டத்தின் அடையாளமாக மிகவும் பிரசித்தி பெற்றது.

உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக ஷர்மிளா அறிவித்தது அரசாங்கத்துக்கும் ஷர்மிளாவின் ஆதரவாளர்களுக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. “எனது உத்தியை நான் மாற்றியாக வேண்டும். ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற செயல்திட்டத்துடன் நான் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று அவர் விளக்கமளித்தார். “நான் உயிருடன் இருக்கும்போதே எனது செயல்திட்டம் நிறைவேறுவதைப் பார்க்க விரும்புகிறேன். ஜனநாயக அதிகாரத்தைப் பயன்படுத்துவதுதான் எனது புதிய உத்தி” என்றும் அவர் சொல்கிறார். ஷர்மிளாவின் இந்தச் செயல்பாடு பெரும் விவாதத்தைத் தூண்டும்.

இயல்பு வாழ்க்கையின் மொத்த வடிவம்

உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்கும் தருணத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்தும் இரண்டு அறிவிப்புகளை அவர் முன்வைத்தார். தேர்தலில் நிற்பதென்பது ஒரு முடிவு. கோவா-பிரிட்டிஷ்காரரும் தன்னுடைய காதலருமான டெஸ்மண்ட் குட்டீனோவை மணப்பது இன்னொரு முடிவு. ஒன்றுக்கொன்று முரண்பட்ட இந்த அறிவிப்புகளின் வலிமையைத்தான் நாம் கொண்டாட வேண்டும். 16 ஆண்டுகளாக அவர் எதற்காகப் போராடினாரோ அந்த இயல்பு வாழ்க்கையின், அன்றாடத்தன்மையின் மொத்த வடிவம்தான் ஷர்மிளாவின் அறிவிப்பு.

ஷர்மிளா சானு என்ற இயற்பெயருடைய அவர் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்டார். பல ஆண்டுகளின் போராட்டங்களுக்குப் பிறகு அவர் துருப்பிடித்துவிட்டார் என்று மக்கள் நக்கலாகச் சிரிக்கக்கூடும். தனது மனவுறுதியின் திடத்தையும் நெகிழ்வுத்தன்மையையும்தான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். தான் போராடிக்கொண்டிருப்பது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிராக என்பது அவருக்குத் தெரியும். ஆனால், இம்முறை புதிய உத்திகளைப் பின்பற்றுகிறார். பிரதேசம் சார்ந்தும் வாழ்க்கைப் போக்கு சார்ந்தும் எழக்கூடிய கேள்விகளுக்கு அப்பால்தான் அந்த உத்திகளைப் பார்க்க வேண்டும். காங்கிரஸாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, தனது போராட்டத்தை எந்த அரசும் கண்டுகொள்வதே இல்லை என்று அவர் கூறுகிறார். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்துவதற்காக ஐந்து பேரை உறுப்பினர்களாகக் கொண்ட ஜீவன் ரெட்டி கமிட்டி சமீபத்தில் நியமிக்கப்பட்டது. அந்தச் சட்டத்துக்குப் பதிலாக சற்று மனிதத்தன்மை கொண்ட சட்டத்தை அந்த கமிட்டி பரிந்துரைத்திருந்தாலும் அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை. அரசியல் கட்சிகளுக்குத் துணிவும் புத்தியும் இருந்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் கைவிட்டிருக்கலாம் என்று ஒமர் அப்துல்லாவும் ப.சிதம்பரமும் கூறியிருப்பதையும் இங்கு சேர்த்துக்கொள்ளலாம்.

சட்டம் தோல்வியடைந்தாலும் அரசியல்வாதிகள் பாராமுகம் காட்டினாலும் அரசியல் செயல்முறையின் மீது இரோம் ஷர்மிளா நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்பதுதான் இதில் சிறப்பான விஷயம். ஒரு வாரத்தில் வீடு திரும்பிவிடலாம் என்று எண்ணக்கூடிய பள்ளிச் சிறுமி போல அவர் தொடங்கிய போராட்டம் 16 ஆண்டுகள் நீடித்தது. அரசியலில் ஈடுபடுவோருக்குத் தேவையான திடசித்தம் தனக்கு இருப்பதாக அவருக்கு அந்தப் போராட்டமே உணர்த்தியது. மேலும், மணிப்பூர் மக்கள் மீதும் இந்தியா மீதும் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாகவும் அந்தப் போராட்டம் அமைந்தது. அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதில் இல்லை ஆச்சர்யம், ஜனநாயக அரசியல் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கைதான் பெரும் ஆச்சர்யம். பணயம் வைப்பது போன்ற செயலாகவும், நம்பிக்கை வைக்கும் செயலாகவும், அரசியலுக்குத் தேவையான திடசித்தத்தின் மீது அவருக்கு உள்ள நம்பிக்கை குறித்த அறிக்கையாகவும் ஜனநாயக அரசியலுக்கு அவர் வழங்கிய மாபெரும் கொடையாகத்தான் அவருடைய செயலை நாம் கருத வேண்டும். அதுவொன்றும் அவ்வளவு எளிதான முடிவாக இருந்திருக்காது. அரசியல் என்ற துஷாட்ஸ் மெழுகுக் காட்சியகத்தில் தான் ஒரு மெழுகு பொம்மை போல ஆகிவிட முடியாது என்பதையே அவர் உணர்த்துகிறார். அதாவது, தனது புனித பிம்பத்தை நீட்டிக்கும் விதத்தில் தான் செயல்பட முடியாது என்கிறார்.

‘திருவுரு’ தொடர்வது முக்கியமல்ல

அரசியல் என்பது வலுவை அடிப்படையாகக் கொண்ட விஷயம் என்றால், அதற்கு நெகிழ்வுத்தன்மை என்பது மிகவும் அவசியம். இந்த நெகிழ்வுத்தன்மையைத்தான் ஷர்மிளாவின் முடிவு பின்பற்றுகிறது. ஒரு வழிமுறை, அது எவ்வளவு அறம்சார்ந்ததாக இருந்தாலும், அதை வழிபாட்டுக்குரிய ஒன்றாக ஆக்கிவிடக் கூடாது என்பதைத்தான் ஷர்மிளா உணர்த்துகிறார். வழிமுறை என்பது அறம்சார்ந்த ஒரு விளைவைப் பெறுவதற்கான வழியே. ஆயுதப்படை சிறப்பு அதிகாரத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பே தவிர, தனக்கிருக்கும் ‘திருவுரு’ தொடர வேண்டும் என்பதல்ல.

அவரது இரண்டாவது முடிவு குறித்து மக்களிடையே இருவிதமான கருத்துக்கள் உருவாகியிருக்கின்றன. திருமணம் செய்துகொள்ளப்போவதாக ஷர்மிளா முடிவெடுத்திருக்கிறார். தேர்தலில் போட்டியிடும் முடிவென்பது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான ஒரு அறிகுறி என்றால், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற அவரது ஆர்வம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான இன்னொரு பணயம். ஏனெனில், மணிப்பூரில் இந்த இயல்பு வாழ்க்கை காணாமல் போய்த்தான் 50 ஆண்டுகள் ஆகின்றன. குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்ற அவரது ஆர்வம், ஷர்மிளாவின் அரசியல் உறுதியைப் பலவீனப்படுத்திவிட்டது என்று சொல்லப்படுவது உண்மையல்ல.

ஓராண்டுக்கு முன்பு அவரை நேர்காணல் செய்திருந்தேன். ‘ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்று நான் கேட்டேன். அவர் சிரித்தார், உண்மையில், அதை நினைத்துக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

‘திருமணம் செய்துகொண்டு, சாதாரணமான ஒரு பெண்ணைப் போல அதற்குப் பிறகு வாழ விரும்புகிறேன்' என்றார். தனக்கு, இருக்கும் பிம்பம் அப்படியே நீடிக்க வேண்டும் என்று சிலர் உள்நோக்கம் கொண்டிருக்கலாம் என்றும் அவர்களைத் தான் ஆதரிக்கப்போவதில்லை என்றும் அவர் சூசகம் தெரிவித்தார். மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் போராடினேன்; ஒரு பெண்ணாகத் தனக்கும் அந்த இயல்பு வாழ்க்கைதான் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் பேசும்போது அவரிடமிருந்து தெறிக்கும் சிரிப்பே வாழ்க்கையை அவர் கொண்டாடுவதற்கும் தினசரி வாழ்க்கையின் சிறுசிறு விஷயங்களை அவர் ரசிப்பதற்கும் அடையாளம். குழந்தைக் கிறுக்கல் போன்ற அவரது கோட்டோவியங்களை எந்த அளவுக்கு உற்சாகத்துடன் என்னிடம் அவர் காட்டினார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அவரது அரசியல் செயல்பாடுகளைப் போலவே தனது கலை குறித்தும் அவர் பெருமிதம் கொண்டதுபோல்தான் இருந்தது. ஒருவேளை இந்த இரண்டுமே இயல்பு வாழ்க்கைக்கும் சிரிப்புக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்துபவையாக இருக்கலாம்.

ஒரு அறச் செயல்பாடாக ஒருவர் தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கும், கிளர்ச்சியையோ பயங்கரவாதத்தையோ அரசியலுக்கான முதலீடாகக் கொள்வதற்கும் இடையிலான ஆழமான வேறுபாட்டை ஷர்மிளாவின் அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது. எதிர்ப்புப் போராட்டம் என்பது தன்னைத் தொடர்ந்து நீட்டிக்க விரும்புவதில்லை. அதே நேரம், பயங்கரவாதமும் கிளர்ச்சியும் தாங்களாகவே பல்கிப் பெருகுபவை. பயங்கரவாதத்தைத் தங்கள் உள்நோக்கத்துக்காக நீடிக்கச் செய்வதற்காக இங்கே வன்முறை அத்தியாவசியமாகிறது. வட கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான கிளர்ச்சிக் குழுக்கள் வரிவிதிப்புகளை நம்பிப் பிழைப்பு நடத்தும் பணப்பறிப்பு கும்பல்களாக ஆகிவிட்டன. விடுதலைக்கான எந்த முயற்சிகளிலும் அவை ஈடுபடுவதில்லை. எல்லைப் பிராந்தியத்தில் நடந்துகொண்டிருக்கும் போதைப்பொருள் வியாபாரத்தின் இடைத்தரகர்களாக அவர்கள் ஆகிவிட்டார்கள். இரோம் ஷர்மிளாவோ ஒரு பெண்ணாகவும் மணிப்பூர்வாசியாகவும் ஒரு குடிமகளாகவும் வாழ்க்கை மீதான, அவரது பாலினம் மீதான, அவரது கலாச்சாரம் மீதான, எல்லோரும் கொண்டாட விழையும் ஜனநாயகம் மீதான, உத்வேகத்தை அவர் வெளிப்படுத்துகிறார். பெண்மையைக் கொண்டாடுவதில் மணிப்பூரிகள் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். மணிப்பூரின் தாய்மார்கள்தான், அசாம் ரைபிள்ஸ் ஆயுதப் படைத் தலைமைச் செயலகத்தின் முன்பு துணிவுடன் நிர்வாணமாகச் சென்று பாலியல் வன்கொடுமைக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராடினார்கள். ஷர்மிளாவின் ஒவ்வொரு செயல்பாடும் அந்தப் பாரம்பரியத்தின் பகுதிதான்.

ஒரு நாவலுக்குரிய முடிவு!

லியோ டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ நாவலின் சிறப்புகளில் ஒன்று என்னவென்றால், போர் முடியும் இடத்தில் அந்த நாவல் முடியவில்லை என்பதுதான். நாவல் என்பது கலைடாஸ்கோப்புக்கும் மேலே என்பதை உணர்ந்தவர் டால்ஸ்டாய். நாவலின் நாயகன் திருமணம் புரிந்துகொண்டு, தினசரி வாழ்க்கைக்கு, அதன் அலுப்புத்தன்மைக்கும்கூட, திரும்பும் இடத்தில் நாவல் முடிவுறுகிறது. ஒரு தீரச் செயலின் தருணத்தில் அந்த நாவலை முடித்திருந்தால் அந்த நாவலின் சீர்மை சிதைந்திருக்கும். அதே போல்தான், ஷர்மிளாவும் எதிர்காலத்தில் நடக்கக் கூடியதை முன்கூட்டியே உணர்ந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறும் முடிவை நோக்கி நாடாளுமன்றமும் நீதிமன்றங்களும் மனதளவில் தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில், அமைதி வாழ்வுக்கென்றே பிரத்யேகப் பிரச்சினைகள் உண்டு என்பதையும், இயல்பு வாழ்க்கையை நோக்கித் திரும்பும் செயலுக்காகவும் திறனுக்காகவும்தான் பெண்கள் கஷ்டப்பட்டார்கள் என்பதையும் ஷர்மிளா குறிப்புணர்த்துகிறார். தங்கள் சுயநலத்துக்காகப் போர்கள் வேண்டுமென்று நினைக்கும் ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். போர்கள்தான் அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கின்றன, அவர்களை அர்த்தப்படுத்துகின்றன. சமாதானத்தால் அவர்களுக்கு ஒரு பயனுமில்லை. பெண்களின் அமைதி வாழ்க்கை என்பது பெண்களின் வேலையைப் போல ஒரு கைவினை. இயல்பு வாழ்க்கையும் அன்றாடத்தன்மையும் என்னவென்பதை மறக்கக் கூடியவர்களுக்கு இந்தக் கைவினையைக் கற்றுத்தர வேண்டும் என்றே ஷர்மிளா குறிப்பால் உணர்த்துகிறார்.

- ஷிவ் விஸ்வநாதன், ஜிண்டால் சட்டக் கல்லூரியின் பேராசிரியர்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x