Published : 07 Apr 2017 10:01 AM
Last Updated : 07 Apr 2017 10:01 AM

நெடுஞ்சாலை மதுக்கடைகள் அகற்றம்... உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உருப்பெற்றது எப்படி?

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுபானக் கடைகளை 2013 சுதந்திர தினத்துக்குள் மூட வேண்டும் என்கிற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சொன்னபோது தமிழகத்தில் இருந்த மதுபானக் கடைகளின் எண்ணிக்கை ஏழாயிரத்து சொச்சம். இதில் 504 மதுக்கடைகளை மூடுவதற்கு கூட தமிழக அரசுக்கு மனம் இல்லை. பல இடங்களில் முன்கதவை மூடிவிட்டு பின்பக்கமாக விற்றார்கள். பல இடங்களில் பெயர் பலகையை மட்டும் தூக்கிவிட்டு விற்பனையைத் தொடர்ந்தார்கள்.

2014 மே 21-ல் அன்று மத்திய அரசு மீண்டும் அந்த சுற்றறிக்கையை அனுப்பியது. உச்ச நீதிமன்றத்திலும் நெடுஞ்சாலை மதுக் கடைகளை மூடுவது தொடர்பாக வழக்கு விசாரணை பல்வேறு கட்டங்களாக நடந்தது. இதில் 2015 செப்டம்பர் 8-ல் அன்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் தலைமை வழக் கறிஞருக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதில், “கடந்த 2005-06-ல் மத்திய அரசு மதுக் கடைகளை நடத்துவது தொடர்பாகக் கொள்கை முடிவுகளை எடுத்திருக்கிறது. அதன் பின்பு நாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே இது தொடர்பாக மத்திய அரசு தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய கொள்கை முடிவு எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

ஆனால், பாஜக அரசுக்கு இதில் விருப்பம் இல்லை. ஆலோசனைக் கூட்டங்கள் பெயருக்காக நடத்தப்பட்டன. அந்தக் கூட்டங் களிலும் மது ஆலை அதிபர்கள், பன்னாட்டு நட்சத்திர விடுதிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அவர்கள் வழக்கை நீர்த்துப் போகச் செய்வது குறித்து ஆலோசித்தார்கள்.

ஒருவழியாக, 2016 டிசம்பர் 15-ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், டி.ஒய்.சந்திர சூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் ஒரு உத்தரவு பிறப்பித்தனர். அந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவை:

* அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகள், மது அருந்தும் கூடம் ஆகியவை நடத்த உரிமம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

* மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் நகர்ப்புறங்களின் வழியாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் சென்றாலும் அங்கு உரிமம் வழங்கக் கூடாது.

* நெடுஞ்சாலை ஓரங்களில் மதுபானம் விற்க இதற்கு முன்பு உரிமம் வழங்கப்பட்டிருந்தால் அந்த உரிமம் 01.04.2017-க்கு முன்பாக ரத்து செய்யப்பட வேண்டும்.

* நெடுஞ்சாலைகளில் இருந்து பார்க்கக்கூடிய தொலைவில், எளிதில் செல்லக் கூடிய தொலைவில் 500 மீட்டருக்குள் மதுக் கடைகள் இருக்கக் கூடாது.

ஆனால், மேற்கண்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மதுபான நிறுவனங்கள் சார்பில் 60 பேரும் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம், ஹிமாச்சலப் பிரதேசம், சிக்கிம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் சார்பிலும் மனு தாக்கல் செய்தார்கள். இதன் மீதான விசாரணை தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வர ராவ் முன்னிலையில் 2017 மார்ச் 29, 30 ஆகிய தேதிகளில் நடந்தது.

“இது மாநில அரசுகள் உரிமைகள் தொடர்பானது. இது மாநில அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும்” என்றார் தமிழக அரசுக்காக வாதாடிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி. “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ள முடியாது” என்றார் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால். இவர்கள் தவிர, நாட்டின் மூத்த வழக்கறிஞர்கள் சுமார் 70 பேர் தீர்ப்பை எதிர்த்து வாதாடினார்கள். அத்தனை பேருக்கும் சலிக்காமல் சட்டத்தின் வழியாகவே பதில் அளித்தார் நீதிபதி சந்திரசூட். கடைசியில் கடந்த மார்ச் 31 அன்று தீர்ப்பை எழுதியவரும் அவரே.

“மதுக் கடைகளை அகற்ற மாநில நெடுஞ்சாலைகளுக்கு விலக்கு அளிக்க முடியாது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கும் இது பொருந்தும். 20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 500 மீட்டர் இடைவெளி, 220 மீட்டராக குறைக்கப்படுகிறது. மேற்கண்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்த நவம்பர் 28 வரை அவகாசம் கேட்ட தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இந்தியாவில் சில மாநிலங்களை தவிர 18 மாநிலங்கள் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரவில்லை என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது” என்றார் அவர்.

இந்திய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் லட்சக் கணக்கான மனித உயிர்கள் மீது அக்கறை கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது. இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் மதுவிலக்கை நோக்கிய பயணத்துக்கு உத்வேகம் அளிக்கும் தீர்ப்பும்கூட. இதோ இன்றைக்கும் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளைப் பெண்கள் முற்றுகையிட்டுப் போராடுகிறார்கள். இது மட்டுமே போராட்டம் அல்ல; ‘மதுக்கடைகள் வேண்டாம்’ என்று கிராம சபைத் தீர்மானங்களை நிறைவேற்றி அதன் அடிப்படையில் சட்டப் போராட்டத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டும். அதுவே தமிழகத்தில் பூரண மதுவிலக்குக்கான தொடக்கமாக அமையும்!

(நிறைந்தது)

டி.எல்.சஞ்சீவிகுமார்

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x