Published : 22 Jan 2014 12:00 AM
Last Updated : 22 Jan 2014 12:00 AM
சிறு வயது முதல் உலகை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம், வெளியூர் பயணத்தில் ஆர்வம் கொண்டவர்கள் சுற்றுலா சம்பந்தமான பட்டப் படிப்புகளை படிப்பதன் மூலம் சுகமான வாழ்வை தேடிக் கொள்ள முடியும்.
இந்தியாவுக்கு ஆண்டுதோறும் வெளி நாடுகளில் இருந்து 20 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தியாவில் வாழும் 2 கோடி பேர், நாட்டின் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு பயணமாகின்றனர். நம் நாட்டில் சுற்றுலா தளங்கள் நிறைந்து இருப்பதால், சுற்றுலா சம்பந்தமான பட்டப் படிப்புக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகமாகி வருகிறது.
பிளஸ் 2 வகுப்பில் எந்த குரூப் எடுத்த மாணவர்களும், பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல்ஸ் மேனேஜ்மென்ட் எடுத்து படிக்கலாம். இப்படிப்புக்கு அதீத திறமை, தைரியம், ஆர்வம், எந்த நேரமும் பணியாற்றக் கூடிய மனநிலை, பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய புத்திசாலித்தனம் தேவை. ஆங்கில மொழி அறிவு, ஹிந்தி பேசும் திறன், அதனுடன் வெளிநாட்டு மொழிகளில் ஏதாவது ஒன்றை கற்றுத் தேர்ந்து இருந்தால் கூடுதல் வாய்ப்பு காத்திருக்கிறது.
தமிழகத்தில் எத்திராஜ், குயின்மேரிஸ், அண்ணா ஆதர்ஸ், ஜெயின் கல்லூரிகளிலும், நீலகிரி, கோவை அரசு கலைக் கல்லூரியிலும் பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல்ஸ் மேனேஜ்மென்ட் பட்டப் படிப்புகளை வழங்குகின்றனர். சில தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் சுற்றுலா சார்ந்த பட்டப் படிப்புகள் உள்ளன. பிற மாநிலங்களில் பி.காம். இன் டூரிஸம் மேனேஜ்மென்ட் பட்டப் படிப்பு உள்ளது.
சுற்றுலா சார்ந்த பட்டப் படிப்பில் கணக்குப் பதிவியல், பொருளாதாரம், மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங் பிரின்ஸ், அகாமடேஷன் மேனேஜ்மென்ட், ஹிஸ்டரி ஆஃப் கன்ட்ரீஸ், டூரிஸ்ட் புரோகிராம், டூரிஸம் பேக்கேஜ் ஆபரேஷன், ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட், டூரிஸம் அண்டு ஹாஸ்பிடாலிட்டி லா மற்றும் டெஸ்டினேஷன் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் சம்பளம் குறைவு என்றாலும், திறமையும், அனுபவமும் கூடும்போது, உச்ச வருமானத்தை எட்டிப் பிடித்து, சுகமான வாழ்க்கை அமைத்துக் கொள்ள இயலும்.
இந்தப் படிப்பை படித்துக் கொண்டு இருக்கும் போதே, IATA கோர்ஸ் எடுத்து படிப்பதன் மூலம் கூடுதல் வாய்ப்பு பெறலாம். ஏர்லைன்ஸ், டூரிஸம் ஆஃபீஸ், டூர் ஆபரேட்டர்ஸ், ஹோட்டல் இன்டஸ்ட்ரீஸ், டிராவல் ஏஜென்சீஸ், ஆன்-லைன் டூரிஸம் என ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. சுற்றுலா சம்பந்தமான படிப்புக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். சுற்றுலா துறையில் ஆர்வம் கொண்டவர்கள் பெற்றோர் எதிர்ப்பு காட்டும் பட்சத்தில், ஏதாவது ஒரு யு.ஜி. டிகிரி படித்துவிட்டு, பி.ஜி. டிகிரியாக எம்.டி.ஏ., (மாஸ்டர் ஆஃப் டூரிஸம் அட்மினிஸ்டிரேஷன்) எம்.பி.ஏ. டிராவல் இன் டூரிஸம் ஆகிய பட்ட மேற்படிப்புகளில் சேர்ந்து பயிலலாம். பாண்டிச்சேரி மற்றும் மெட்ராஸ் யுனிவர்சிட்டிகளில் இந்த பட்ட மேற்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
சுற்றுலா துறையில் பணியாற்றக் கூடியவர்களுக்கு பேச்சுத் திறனும், செயலாற்றலும் இருந்தால், இத்துறையில் வெற்றிக் கொடி நாட்டலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment