Published : 13 Mar 2017 09:27 AM
Last Updated : 13 Mar 2017 09:27 AM

ட்ரம்புக்குப் பாடம் சொல்லும் டோனி!

பிரிட்டனையும் அமெரிக்காவையும் அதிக வலியில்லாமல் வளப்படுத்தும் ஒரு பொருளாதார தேசியத்துக்காக… ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச வர்த்தக முறை, நேட்டோ, ஐநா சபை போன்ற பெரிய அமைப்புகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்பது பிரெக்ஸிட், ட்ரம்பிஸத்தின் மிக மிக ஆபத்தான வாதம்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் உரையாற்றுவதற்கு 11 நாட்கள் முன்பு, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஆற்றிய உரை முக்கியமானது. “ட்ரம்பிஸத்தின் பிரிட்டன் மாதிரியை நிராகரிக்க வேண்டும்” என்று அந்த உரையில் உணர்வுபூர்வமாக வேண்டுகோள் விடுத்தார் டோனி பிளேர். “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ‘பிரெக்ஸிட்’ வாக்கெடுப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார் அவர். கட்டாயம் வாசிக்க வேண்டிய உரை அது. ஏனெனில், ‘பிரெக்ஸிட்’டுக்கும் ‘ட்ரம்பிஸ’த்துக்கும் இடையிலான ஒற்றுமைகள் மிக ஆழமானவை.

அடிப்படையில், இரண்டு உலகப் போர் களுக்குப் பிறகு உலகத்துக்கு ஸ்திரத் தன்மையை வழங்கிய வளம், பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம், வெளிப் படைத்தன்மை ஆகியவற்றைப் பரப்பிய - ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச வர்த்தக முறை, நேட்டோ, ஐநா சபை போன்ற பெரிய அமைப்புகளைப் பலவீனப்படுத்தவே ‘பிரெக்ஸிட்’டும் ‘ட்ரம்பிஸ’மும் விழைகின்றன. பிரிட்டனையும் அமெரிக்காவையும் அதிக வலியில்லாமல் வளப்படுத்தும் ஒரு பொரு ளாதார தேசியத்துக்காக இவை அனைத்தையும் கைவிட வேண்டும் என்பது பிரெக்ஸிட், ட்ரம்பிஸத்தின் மிக மிக ஆபத்தான வாதம்.

தங்களுக்குத் தாங்களே ஆதரவு

இந்தப் பெரிய அமைப்புகளில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால், அந்த அமைப்புகள் கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டு வளப்படுத்தியதையோ, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான 70 ஆண்டுகளில் அமைதியைப் பேணியதையோ குறிப்பிட அதன் எதிர்ப்பாளர்கள் மறந்து விடுகிறார்கள். அந்த அமைப்புகளுக்குப் பதிலாக தங்களுக்குத் தாங்களே ஆதரவு எனும் தேசியவாதங்களை நமக்குத் தர ‘ப்ரெக்ஸிட்’, ‘ட்ரம்பிஸ’ ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள். இதுபோன்ற தேசியவாதங்கள்தான் இரண்டு உலகப் போர்களுக்கு வழிவகுத்தன. அவர்களது சூளுரை இதுதான்: ‘கிழித்தெறி; மீண்டும் ஒட்ட வைக்காதே’! டோனி பிளேர் குறிப்பிட்டதுபோல், இன்றைய அரசியலின் மறுக்க முடியாத அம்சம், புரட்சிக்கான ஆவல்தான்!

ஆபத்தான அறிவீனம் இது. பனிப்போர் காலகட்டத்தில் சர்வதேச அமைப்புகள் காரணமாகவும், அமெரிக்கா - சோவியத் ஒன்றியம் எனும் இரண்டு வல்லரசுகள் மீதான பயத்தின் காரணமாகவும் உலக நாடுகள் ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக இருந்தன. பனிப்போருக்குப் பிறகான காலகட்டத்தில், அதே அமைப்புகள் காரணமாகவும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் காரணமாகவும் நாடுகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருந்தன.

நாம் இப்போது இருப்பது பனிப்போருக்குப் பிந்தைய காலகட்டத்துக்கும் பிந்தைய காலகட்டத்தில். இப்போது அமெரிக்காவின் தலைமையும், சர்வதேச அமைப்புகளின் ஒற்றுமையும் முன்பு எப்போதையும்விட அதிகமாகத் தேவைப்படுகின்றன.

மிக மோசமான தவறு

ஏனெனில், தொழில்நுட்பம், உலகமயம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் ஏற்பட்டிருக்கும் வேகம், எல்லா நாடுகளின் அரசுகளையும் பலவீனப்படுத்தியிருக்கிறது; அதி சக்திவாய்ந்த கோபக்கார மக்களை உருவாக்கியிருப்பதுடன், உலகின் பல பகுதிகளின் சீர்குலைவுக்கும் காரணமாக இருக்கிறது. இந்த நேரத்தில் அமெரிக்காவின் உலகத் தலைமையையும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் சர்வதேச அமைப்புகளையும் கைவிட நாம் முடிவுசெய்தால், அமெரிக்காதான் பிரதானம் என்று ட்ரம்பிஸம் சொல்வதுபோல் எல்லா நாடுகளுக்கும் அதனதன் பொருளாதார தேசியம்தான் பிரதானம் எனும் நிலையை நாம் ஏற்படுத்தினால், வாழ்வில் இதுவரை செய்யாத மிக மோசமான தவறைச் செய்கிறோம் என்றே அர்த்தம்.

டோனி பிளேரின் உரையின் பெரும்பகுதி அதைப் பற்றித்தான் இருந்தது. பிளேருக்கு பிரிட்டனில் செல்வாக்கு இல்லை. ஆனால், பிரிட்டன் அரசியலில் இருக்கும் பலருக்குத் தெரிந்த, ஆனால் சொல்ல விரும்பாத உண்மைகளைப் பற்றிப் பேசுவதற்கான சுதந்திரத்தை அவரது ‘செல்வாக் கின்மை’ அவருக்குக் கொடுத்திருக்கிறது. “பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்குப் பின்னர், யூரோவுக்கு நிகரான பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு 12% குறைந்திருக்கிறது. டாலருக்கு நிகரான பவுண்டின் மதிப்போ 20% குறைவு. நாம் மேலும் ஏழ்மை நிலையில் இருப்போம் என்பதுதான் பிரிட்டனின் எதிர்கால வளத்தின் மீதான சர்வதேசப் பொருளாதாரச் சந்தையின் மதிப்பீடு” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

உன்னத நோக்கம்

“நமது முதலாளித்துவம் நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதற்கான சரியான தருணம் இதுதான் என்று சொல்கிறார்கள். அதுபோன்ற ஒரு உன்னத நோக்கத்துக்கு அடிக்கல் நாட்டுவது எப்படி? குறைந்த வரி முறை, மேம்போக்காகக் கண்காணிக்கப்படும் பொருளாதாரம் ஆகியவற்றை நோக்கிய நகர்வை வைத்து ஐரோப்பாவை மிரட்டுவதன் மூலமா? அது அந்த நோக்கத்துக்கே நேரெதிரானது” என்கிறார்.

பிரிட்டனுக்கு வந்த குடியேறிகள் பற்றியும், பிரெக்ஸிட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு அவர்கள்தான் காரணம் என்று சொல்லப் படுவது பற்றியும் எதிர்கால வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்வார்கள் என்று டோனி பிளேர் கேட்கிறார். “பிரிட்டனின் ஸ்திரத் தன்மைக்கே அச்சுறுத்தலாக இருந்தார்களா அந்த அகதிகள்? இல்லை. தன்மையுடன் நடந்துகொண்டார்கள்; கடுமையாக உழைத்தார்கள்; வரி கட்டினார்கள். நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார பலனுக்குப் பங்களித்தார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

பருவநிலை மாற்றம் புரளியா?

அமெரிக்காவுக்கும் இந்தக் கேள்விகள் பொருந்தும்! அதாவது, அமெரிக்காவுக்கு வர விரும்பும் குடியேறிகளை நாம் அனுமதிக்கக் கூடாது. பருவநிலை மாற்றம் என்பது ஒரு புரளி; நிலக்கரி மின்உற்பத்தி செய்யும் நிலையங்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்; நீண்ட கால சுகாதாரப் பாதிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும்; நடுத்தர வர்க்கத்தினரின் வேலை வாய்ப்புகளை மீண்டும் உருவாக்குவதற்கு மக்கள், சுகாதாரம், உட்கட்டமைப்பு ஆகியவற்றில் எல்லாம் முதலீடு செய்ய வேண்டியதில்லை. அப்புறம், ‘ஐரோப்பிய ஒன்றியம், ஐநா சபை போன்றவை எல்லாம் காலாவதியாகிவிட்ட தூண்கள் - இப்படித்தான் நம்புகிறார் ட்ரம்ப்.

ஐரோப்பிய ஒன்றியத்தைப் பற்றிக் குறிப்பிடும் டோனி பிளேர், “நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது, இது அடிப்படையில் - தாராளமயம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகிய விழுமியங்களின் கூட்டணி. உலகம் மாறிவரும் நிலையில், தேச எல்லைகள், கலாச்சார எல்லைகளையெல்லாம் தாண்டி வெளிவரும் நிலையில், 21-ம் நூற்றாண்டை எந்த மாதிரியான விழுமியங்கள் ஆளப்போகின்றன? இந்தக் கேள்விக்கான தீர்வை உறுதிசெய்வதில் பிரிட்டனுக்கென்று ஒரு தனித்த கடமை இருக்கிறது” என்று கூறுகிறார்.

அமெரிக்காவுக்கும் அந்தப் பொறுப்பு இருக் கிறது. ட்ரம்பைப் பொறுத்தவரை உலகம் என்பது வெற்றி - தோல்வி அடிப்படையிலான ‘ரியல் எஸ்டேட்’ சந்தை. குறுகிய கால அடிப்படையில், சின்னச் சின்ன வெற்றிகளை அவர் விரும்புகிறார். அது அவருக்குக் கிடைக்கலாம். ஆனால், இன்றைக்கு வளமான, பாதுகாப்பான நாடாக அமெரிக்கா உருவானதற்கு, அனைத்து நாடுகளுக்குமான ஒரு உலகத்தை நாம் கட்டமைத்ததுதான் காரணம்!

‘தி நியூயார்க் டைம்ஸ்’

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x