Published : 28 Feb 2014 10:17 AM
Last Updated : 28 Feb 2014 10:17 AM
ஜான் வில்லியம்ஸ் எழுதிய ‘ஸ்டோனர்’ என்ற நாவல், முதல் பதிப்புக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏன் மறு பதிப்பு விற்பனையில் முதலிடத்தைப் பிடித்தது என்று எவராலும் விளக்கம் தர முடியாது.
ஏராளமான புத்தகங்கள் வாசகர்களால் படித்து மறக்கப்பட்ட பிறகு, பேச்சுவாக்கில் யாரோ சிலர் சிலாகித்துவிட, மீண்டும் புதிய வாசகர்களால் தேடிப்பிடித்து வாங்கப்பட்டாலும் சில நூறு பிரதிகளுக்கு மேல் விற்பது அரிது. இந்த நிலையில், இலக்கியத்தின் மீது காதலில் விழுந்துவிட்ட இளைஞன் புதிய உலகைக் காண்பதாக வரும் ‘ஸ்டோனர்’ நாவல் ஏன் திடீரென வாசகர்களின் கவனத்தைக் கவர வேண்டும் என்று புரியவில்லை.
ஓடிப்போய் அந்த நாவலை வாங்கிய வாசகர்களில் பலர் அதைத் திறந்து பார்க்கும் வாய்ப்பைக்கூட இன்னும் பெற்றிருக்க மாட்டார்கள்; அடித்துச் சொல்லலாம், அதை வாங்கியவர்களில் கணிசமானவர்கள் அந்தப் புத்தகத்தைப் படிக்கவே போவதில்லை என்று! அந்த வாசகர்களின் புத்தக அலமாரிகளில் ‘முதுகு முறிக்கப்படாமல்’ அந்த நாவல் இனி ஆண்டுக் கணக்கில் உறங்கிக்கொண்டிருக்கப்போகிறது. 1992-ல் அபாரமாக விற்பனையான ஜுங் சாங் எழுதிய ‘வைல்ட் ஸ்வான்ஸ்’ நாவலுக்கும் இதே மரியாதைதான் கிடைத்தது!
வாசிப்பு அருகிவிட்ட காலம் இது
இருந்தாலும், சோகத்தை வெளிப்படுத்தும் ‘ஸ்டோனர்’ என்ற அந்த நாவல் நம்முடைய சிந்தனைக்குத் தீனி போடுகிறது. தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவரும் நாவலாசிரியையுமான ரூத் ரெண்டல், ‘ரேடியோ-4’-ல் செய்த விமர்சனத்தில், “இந்த நாவல் நம்முடைய காலத்தது” என்றார். “படிப்பது என்பது அரிதான செயலாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், இது அரிய இலக்கிய விருந்து” என்றார். புத்தகம் படிப்பதென்பது தன்னெழுச்சியாக நடக்கும் செயலாக இப்போது இல்லை. படிப்பது ‘சிறப்பு நடவடிக்கை'யாகிவிட்டது. புத்தகம் படிப்போர் மனதில் நான் சொல்வது அச்சத்தை ஊட்டக்கூடும்.
ரூத் ரெண்டல் சொல்வது சரியா? அவர் சொல்வது சரியல்ல என்று மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஊட்டக்கூடிய விதத்தில் எழுத வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துவிட்டேன். இதை எப்படிச் சொல்வது என்று திட்டமிட்டுக்கொள்ளவில்லை.
ஆனால், “பிரிட்டனில் உள்ள வளரிளம் பருவத்தினர் ஹாரி பாட்டர் நாவல்களை உடனுக்குடன் வாங்கிவிடுகின்றனர். பிரிட்டனில் மட்டும் ஆண்டுதோறும் 1,50,000 தலைப்புகளில் புத்தகங்கள் புதிதாக அச்சிடப்படுகின்றன. பொருளாதாரத்தில் மந்தநிலை, புத்தகங்களை மின்புத்தகங்களாகப் படித்துக்கொள்ளலாம் என்ற சூழல்கள் உள்ள போதிலும் 2013-ல் மட்டும் 104 கோடி பவுண்டுகள் மதிப்புக்குப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.
‘பெர்சபோன்' புத்தகங்களும் ‘அன்பவுண்ட்' பதிப்பகப் புத்தகங்களும் ஏராளமாக விற்பனையாகின்றன. அன்பவுண்ட் நிறுவனத்தாரின் ‘லெட்டர்ஸ் ஆஃப் நோட்' என்கிற புத்தகம் கிறிஸ்துமஸ் பருவத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான புத்தகம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது” என்று கூற முற்பட்டேன்.
நூலகங்கள் மூடப்படும் காலம் இது
இதையெல்லாம் எழுத என்னுடைய மேஜைக்கு அருகில் உட்கார்ந்தபோது என்னையும் அறியாமல், அச்சமூட்டும் எண்ணங்களே ஏற்பட்டன. ‘‘உண்மைகளை எதிர்கொள்ளத் தயங்காதே” என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். “நூலகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்படுகின்றன. நூலகங்களை மூடக் கூடாது என்று தொழிலாளர் அமைப்புகள்கூட வற்புறுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றன. விற்பனைக் குறைவால் புத்தகக் கடைகளை நடத்தவே முடியாமல் உரிமையாளர்கள் தடுமாறுகின்றனர். பி.பி.சி. நிறுவனம் இப்போது இலக்கியத்துக்காகத் தன்னுடைய தொலைக்காட்சி சேவையில் நேரம் ஒதுக்குவதை நிறுத்திவிட்டது' என்ற உண்மைகளும் கண் முன்னால் தோன்றுகின்றன.
சமீபத்தில் ரயிலில் சென்றுகொண்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் தங்கள் மடிக்கணினியின் சின்னத்திரையையே உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். படித்த, வசதியான வீட்டு இளைஞர் அருகிலிருந்தார். அவரிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தேன். “சமீபத்தில் வாசித்த புத்தகம் எது?” என்று கேட்டேன். “நான் புத்தகம் படிப்பதையே நிறுத்திவிட்டேன்” என்று அவர் பதிலளித்தார்.
140 பிரதிகள்
ஒரு பதிப்பாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “நல்ல நாவல் என்று பாராட்டப்படும் புத்தகத்தின் விற்பனை இப்போது எப்படி இருக்கிறது?” என்று கேட்டேன். “விமர்சகரால் நன்றாகப் பாராட்டப்பட்ட புத்தகம் என்றால், அதிகபட்சம் ஒரே சமயத்தில் 140 வரை விற்கும்!” என்று சாவதானமாகப் பதிலளித்தார்.
நல்ல புத்தகங்கள் என்பவை பல்கலைக்கழகப் பேராசிரியர்களையோ, வாழ்க்கையை எதிர்கொள்ள அவர்கள் கூறும் வழிமுறைகளைப் பற்றியவையோ அல்ல. தொலைக்காட்சி நிறுவனங்களின் ‘அறுசுவை அரசர்கள்' எழுதும் ‘ரெசிபி'யைப் பற்றியதாகவோ, வயதாகிக்கொண்டே வரும் நகைச்சுவை நட்சத்திரங்களைப் பற்றியதாகவோதான் இருக்கின்றன. படிப்பு என்பது அமைதியாக வும் பொறுமையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய தவம். ஆனால் இப்போது, படிக்க முடியாதபடிக்கு ஊளையிடும் சூறைக்காற்றே எங்கும் நிறைந்திருக்கிறது.
ட்விட்டர் உலகம்
2014-ல் அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள் இரண்டு என்று இலக்கிய முகவர் ஒருவர் புத்தாண்டு தினத்தன்று ட்விட்டரில் அறிவித்தார். அந்த இரண்டில் ஒரு புத்தகம், வரும் ஜூன் மாதம் வரையில் பதிப்பிக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லையாம்! ட்விட்டர் உலகவாசிகள் நூல்களைப்பற்றி விவாதிக்கவும் அறிமுகப்படுத்தவும் ட்விட்டர்தான் நல்ல இடம் என்று பேசிக்கொள்கிறார்கள். என்ன காரணத்தாலோ இந்த ரசிகர்கள் அப்படி ‘நவீனத்தைத் தேடி' அலைகிறார்கள். விளைவு, நாவல் எழுதி வெளிவருவதற்கு முன்னதாகவே அதைப் பற்றிய இரக்கமற்ற விமர்சனங்கள் வெளியாகி நாவலே கொல்லப்பட்டுவிடுகிறது!
‘தி கோல்டு பிஞ்ச்', ‘தி லூமினேர்ஸ்' என்ற நாவல்கள் கற்பனையான அலமாரியில் வாசிக்கப்படாமலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மொத்த விற்பனையாளருக்கு வேனில் போய்க்கொண்டிருக்கும் புத்தகத்தைக்கூடக் கடுமையாக விமர்சித்து அதன் ஆயுளை முடித்துவிடுகிறார்கள்.
நீங்கள் கருவியல்ல
எதிர்காலத்தில் மிகக் குறைந்த வாசகர்கள்தான் நாவல்களைப் படிப்பார்கள் என்றால், அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டுமா? நிச்சயமாக, கவலைப்பட்டுத்தான் ஆக வேண்டும். இலக்கிய எதிர்காலத்துக்காக அல்ல, புரிந்துணர்வே அடிபட்டுப்போகிறதே என்பதற்காக. சிறிய வயதில் நாவல்களை எடுத்துப் படிக்காமல் இருந்திருந்தால், என்னால் இந்த அளவுக்கு நன்கு எழுதவும் படிக்க வும் முடிந்திருக்காது. கணினி அறிவியலாளர் ஜேரன் லேனியர் இப்படி வலியுறுத்துகிறார்: “நீங்கள் மனிதர்தான், கருவியல்ல”.
கதைகளின் வல்லமை
கதைகளைப் படிக்காமல் எப்படி நாம் நம்மையும், நம்மைத் தாங்கி நிற்கிற இந்தப் புவியையும் புரிந்துகொள்ளப் போகிறோம்? நமக்கு நாமே பேசிக்கொண்டுதானே நம்முடைய கோபங்களைத் தணித்துக்கொண்டு, உத்வேகம் பெற்று, சிந்தனையை மேம்படுத்திக்கொண்டு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வளர்ச்சி பெற்றுவருகிறோம்.
கதைகளும் அற விழுமியங்களும் பின்னிப்பிணைந்தவை என்று நான் கூறும்போது, பண்டைய கலை விமர்சகரான லீவிஸின் ‘தொண்டரடிப்பொடி' என்றே என்னை நீங்கள் நினைக்கலாம், ஆனால், உண்மை அதுதான். நாவல்கள் படிப்பது நமக்குள் இரக்க சிந்தையைத் தூண்டுகிறது. உலகம் சிக்கலானது என்பதைப் புத்தகங்கள்தான் நமக்கு உணர்த்துகின்றன. சமுதாயத்தின் முடிச்சுகளைக் கதைப் புத்தகங்கள்தான் அவிழ்க்கின்றன. ஸ்டீபன் கிராஸ் என்ற உளவியல் பகுப்பாய்வாளர் எழுதிய
‘தி எக்ஸாமின்ட் லைஃப்' என்ற புத்தகம் அபாரமாக விற்பனை யானது. தொழிலில் அவர் பெரிய நிபுணர் அல்ல என்றாலும் சிக்மண்ட் பிராய்டு போலவே, அழகாகக் கதை சொல்லும் வல்லமையை அவர் பெற்றிருக்கிறார். அதனால்தான் புத்தகம் விற்பனையானது. புத்தகங்கள் என்றாலே அழகியல் உணர்ச்சி, கலாச்சாரம், படிப்பதில் கிடைக்கும் இன்பம் என்று பல விஷயங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் வேண்டாமென்று புறக்கணிப்பது எத்தனை பரிதாபகரமானது?
என் பாட்டிக்கு உடம்பெல்லாம் காது
என்னுடைய தந்தைவழிப் பாட்டி 11 வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்த நேரிட்டது. கண்ணில் அரிதாக ஏற்படும் பாதிப்பு காரணமாகப் பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திவிட்டார். நாளாக நாளாக அது வளர்ந்து அவரது கண் பார்வை முழுக்கப் பறிபோனது. வெகு இளம் வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார்.
எனவே, அவர் எப்போதும் வறுமையிலேயே வாழ்ந்துவந்தார். ஆனால், அவருக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது. யாருக்காகவும் எதற்காகவும் அதை விட்டுக்கொடுக்க அவர் மறுத்துவிட்டார். ஆரம்ப காலத்தில் பெரிய எழுத்துப் புத்தகங்களையோ, சிறிய எழுத்தாக இருந்தால் - உருப்பெருக்கிக் கண்ணாடி கொண்டோ - படித்துவந்தார்.
நிலைமை மேலும் மோசமாகவே ‘பேசும் புத்தகங்களை' வாங்கிப் படித்தார். ஒரு பெரிய டேப் ரிக்கார்டரையும், அதுவரை டேப்புகளாக வெளியான புத்தகங்கள் பற்றிய விவரக் குறிப்புப் புத்தகத்தையும் வரவழைத்தார். அவற்றிலிருந்து அவர் தனக்குத் தேவையான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்.
கண் பார்வை இல்லாததால் புத்தகத்துடன் இருக்கும் நேரத்தில் வீட்டுக்குள் யார் வந்தாலும் அவருக்குத் தெரியாது. எனவே, நாங்கள் அவருக்குத் தெரியாமல் பின்னாலிருந்து அவர் எப்படிப் படிக்கிறார் என்று பார்ப்போம். டேப்பில் கதை கூறப்படும்போது, நாற்காலியின் நுனிக்கே வந்து டேப்புக்கு அருகில் குனிந்து காதைத் தீட்டிக்கொண்டு கேட்பார். ஒரு வார்த்தையையும் தவறவிட்டுவிடக் கூடாது என்ற கவனம் அதில் தெரியும். ‘உடம்பெல்லாம் காது' என்ற சொலவடை அவருக்கே பொருந்தும்.
‘புத்தகக் குரல்' ஒலிக்கும்போது அவருடைய புருவங்கள் நெறியும், முகத்தில் அவ்வப்போது லேசான புன்னகை அரும்பும், எல்லாவிதமான உணர்ச்சிகளும் அவருடைய முகத்தில் கதைக்கேற்ப வந்து போகும். அவருடைய புருவங்களைக் கவனித்தால், அது இடைவிடாமல் நாட்டியமாடுவதைப்போல இருக்கும். புத்தகத்துடன் ஒன்றியிருக்கும்போது அவர் வேறொரு உலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பார். குளிரும் பசியும் வாட்டினாலும்கூட அவருடைய படிப்பைக் கெடுத்துவிடக் கூடாது என்பதால், நான் பொறுமையாகக் காத்துக்கொண்டிருப்பேன். பாட்டி டீ வேண்டும் என்று கேட்க எனக்குத் தயக்கமாக இருக்கும்.
© தி கார்டியன், தமிழில்: சாரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT