Last Updated : 28 Apr, 2017 09:15 AM

2  

Published : 28 Apr 2017 09:15 AM
Last Updated : 28 Apr 2017 09:15 AM

எழுத்துச் சீர்திருத்தமும் பெரியாரும்

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முக்கியப் பங்களிப்புச் செய்த பெரியார், அந்தச் சீர்திருத்தத்தை ‘குடிஅரசு’20.1.1935 இதழிலிருந்து நடைமுறைப்படுத்திய போது, அந்த இதழின் தலையங்கத்தில் எழுதினார்: ‘தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்கு வெகுகாலத்துக்கு முன்பிருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயமாகும். தோழர் குருசாமி அவர்கள் எழுதியிருந்ததுபோல பெருத்த பண்டிதர்களில்கூடப் பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய் வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள்.’

பெரியார் பிறரது பங்களிப்புகளையும் அவர்களி டமிருந்து அறிந்துகொண்டதையும் மிகுந்த அடக்க உணர்வோடு ஒப்புக்கொண்டவர்: ‘நாம் 10 ஆவது வயதுக்கு மேல் எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிக்கவில்லை. நமக்குப் புத்தக ஆராய்ச்சி இல்லை. நமக்குள்ள அறிவு என்பதைக் கொண்டு நடுநிலை என்பதிலிருந்து ஆராய்வதன் மூலம் அறிவதும், ஆராய்ச்சிக்காரர்கள் என்பவர்களைச் சந்திக்கும்போது கேட்டு அறிவதும்தானே ஒழிய வேறில்லை என்பதைக் கண்ணியமாய் ஒப்புக்கொள்கிறோம்’ - குடிஅரசு, 25.12.1927. ‘நடுநிலை’ என்று இங்கு பெரியார் கூறுவது objective என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு உரிய பொருளில்.

துணிச்சல்தான் பெரியார்

எனினும் பெரியாரின் மூலச் சிறப்பு, அவர் தம் பட்டறிவில் கண்டறிந்தவை, பிறரிடமிருந்து கற்றறிந்தவை ஆகியவற்றைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்திலிருந்து புத்திணைவுக்குக் (synthesis) கொண்டுவந்து, அதனை வெகுமக்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்ததும் அவற்றைத் தம்மால் இயன்றவரை நடைமுறைப்படுத்தியதும், தமது சீர்திருத்த முயற்சியை அறுதியானதாகவும் இறுதியானதாகவும் கொள்ளாமல் இருந்ததும் ஆகும்: “உதாரணமாக நெருப்புக்கு - சுமார் நூறாயிரம், பதினாயிரம் வருடங்களுக்கு முந்தி சக்கிமுக்கிக் கற்கள்தான் ஏற்படுத்தப்பட்டிருந்தன. (தமிழ் மொழி) ‘கடவுளால்’ஆதியில் பொதிய மலையில் இருந்தோ, கைலாயமலையில் இருந்தோ கண்டுபிடிக்கப்பட்டதாகவோ, உபதேசிக்கப்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் இன்று நெருப்புக்கு ஒரு பொத்தானை அமுக்குவதோ, ஒரு முனையைத் திருப்புவதோ ஆகிய காரியத்தில் வந்துவிட்டது. சாதாரணமாய், 500 வருடங்களுக்கு முந்தி இருந்த மக்களின் அறிவுக்கும் அவர்களுடைய வாழ்க்கை சவுகரியத்துக்கும் இன்று இருக்கும் மக்களின் அறிவுக்கும், வாழ்க்கை அவசியத்துக்கும் எவ்வளவோ மாறுதலும், முற்போக்கும் இருந்து வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது… அதுபோலவே, இன்னும் ஒரு 100 ஆண்டு அல்லது 500 ஆண்டுகள் சென்றால், இன்றைய நிலையிலிருந்து இன்னமும் எவ்வளவோ தூரம் மாற்றமடைந்து முன்னேற்றங்கள் என்பவை ஏற்படலாம். ஆகையால், மாறுதலைக் கண்டு அஞ்சாமல் அறிவுடைமையுடனும் ஆண்மையுடனும் நின்று விஷயங்களை நன்றாய் ஆராய்ச்சிசெய்து, காலத்துக்கும் அவசியத்துக்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளி, கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவு கொண்டவன் என்னும் மனிதனின் இன்றியமையாக் கடமையாகும் என்பதை அனேகர் உணர்ந்திருந்தாலும் அதன் பயனாய் இன்றைய தமிழ் எழுத்துக்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பல என்பதைப் பற்றிப் பலருக்கு அபிப்பிராயம் இருந்தாலும், எவரும் தைரியமாய் முன்வராமலே இருக்கிறார்கள்.’ இவ்வளவு பெரிய காரியத்துக்கு பாஷா ஞானம், இலக்கண ஞானம், பொதுக் கல்வி இல்லாத ஒரு சாதாரண மனிதன் முயற்சிக்கலாமா?’ என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், தகுந்த புலமையும், பாஷா ஞானமும், இலக்கண அறிவும் உள்ளவர்கள் எவரும் முயற்சிக்காவிட்டால் என் செய்வது? தவம் செய்வதா? அல்லது ஜெபம் செய்வதா? தமிழ் இன்றல்ல நேற்றல்ல; எழுத்துக்கள் ஏற்பட்டது இன்று நேற்றல்ல. ஆனால், எழுத்துக்கள் கல்லிலும் ஓலையிலும் எழுதும் காலம் போய் காகிதத்தில் எழுதவும், அச்சு வார்த்துக் கோக்கவும் ஏற்பட்ட காலம் தொட்டு இன்றுவரை, அவற்றில் யாதொரு மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், யாராவது ஒருவர் துணிந்து இறங்க வேண்டியதாயிற்று”.

அந்தத் துணிச்சல்காரர்தான் பெரியார். அன்று அவருக்குப் பக்கபலமாக இருந்தவர்களில் முக்கியமானவர், சுயமரியாதை இயக்கத்தில் பெரியாருக்கு இணையான சிந்தனையாளராகவும் துடுக்குத்தனம் கொண்டவருமாக இருந்த குத்தூசி குருசாமி.

அறிஞர்களின் பங்களிப்பு

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம், ‘பகுத்தறிவு’ (நாள், வார, மாத ஏடுகள்), ‘புரட்சி’, ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப் பட்டு வந்தபோதிலும், அண்ணாவின் ‘திராவிட நாடு’மற்றும் திமுகவினர் நடத்திவந்த பல ஏடுகள் ஆகியவற்றில் பழைய எழுத்துமுறையே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பெரியார் நூற்றாண்டு விழாவினையொட்டி விடுக்கப்பட்ட அரசாங்க ஆணை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அதிகாரபூர்வமாக்கியது என்றாலும், அதை உடனடியாகப் பரவலாக்கி, தமிழ் பேசும் உலகம் முழுவதும் அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான முதன்மைப் பாத்திரம் ‘தினமணி’யின் அன்றைய ஆசிரியராக இருந்த அறிஞர் ஐராவதம் மகாதேவனுக்கே உரியது (பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முழு மரியாதை அளிக்க வேண்டுமென்றால், அய்ராவதம் என்றுதான் எழுத வேண்டும் என்பது வேறு விஷயம்!) அதன் பிறகுதான் (கலைஞர்) மு.கருணாநிதியின்’முரசொலி’யும்கூட புதிய எழுத்து முறைக்கு வந்துசேர்ந்தது.

உயிரெழுத்துக்களில் ‘ஐ, ஒள’என்பன தமிழ் மொழிக்குத் தேவையில்லை என்ற பெரியாரின் கருத்தை முன்னெடுத்துச் செல்வதில் காலஞ்சென்ற தமிழறிஞர்கள் சாலை இளந் திரையன், சாலினி இளந்திரையன் (நடப்புக் காலத்தில்) ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் முதலியோர் பங்களிப்புச் செய்துள்ளனர். தமிழ் அல்லாத பிற இந்திய மொழிச் சொற்கள், அயல் நாட்டு வேற்று மொழிச் சொற்கள் ஆகியவற்றின் ஒலிகளைக் கூடுமான வரை தமிழில் கொண்டு வரவும் , அதேவேளை கிரந்த எழுத்துக்களைத் தவிர்க்கவும் தமிழ் எழுத்துக்களிலேயே சில குறியீடுகளைப் பயன்படுத்துவது பற்றி ஆழமாகச் சிந்தித்தவர் காலஞ்சென்ற சி.சு.செல்லப்பா.

கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் மட்டும் ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான புதிய சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பிற மாநில, பிற நாட்டுத் தொடர்புகள், மாநில - நடுவண் அரசாங்கங்களுக்கான உறவுகள், உயர் கல்வி முதலியன தொடர்பாக ஆங்கிலத்தின் தேவையைப் பற்றிப் பேசும் அரசியல் கட்சிகள், இன்று வரை நமக்குக் கிடைத்துள்ள ஒரே ஒரு நல்ல ஆங்கிலம் - தமிழ் அகராதி 1965-ல் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது மட்டுமே என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். பழைய தமிழ் எழுத்துக்கள் எப்படியிருந்தன என்பதை இந்தத் தலைமுறையினர் அறிந்துகொள்வதற்கும் அது இப்போது பயன்பட்டுவருகிறது.

எஸ்.வி.ராஜதுரை, மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர், எழுத்தாளர், ‘தலித்தியமும் உலக முதலாளியமும்' உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்

தொடர்புக்கு: sagumano@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x