Published : 10 May 2017 09:40 AM
Last Updated : 10 May 2017 09:40 AM
சேர்த்து, பிரித்து எழுதும் விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் சொற்கள் இன்னும் பலவும் இருக்கின்றன. கூட, கூடும், பார் முதலானவை அவற்றில் சில. கூட, கூடும் ஆகிய சொற்கள்
ஒன்றுகூடுதல் என்னும் பொருளில் வரும்போது சேர்த்து எழுத வேண்டும். ‘அதுகூடத் தெரியாதா?’, ‘பேசுவதுகூடத் தவறுதான்’ என்றெல்லாம் முதலில் வரும் சொல்லுக்கு அழுத்தம் தருவதற்காகப் பயன்படுத்தப்படும்போது சேர்த்து எழுத வேண்டும். வரக்கூடும், தரக்கூடும் என ஐயத்தை வெளிப்படுத்தும் இடங்களிலும் சேர்த்து எழுத வேண்டும். இந்த இடங்களில் பிரித்து எழுதினால் கூட்டம் கூடுதல் என்னும் பொருளைத் தந்து குழப்பம் ஏற்படுத்தக்கூடும்.
கூடாது என்னும் சொல்லைத் தகாது என்னும் பொருளில் பயன்படுத்தும்போது அதைப் பிரித்து எழுத வேண்டும். எ.டு.: ‘மஞ்சள் கோட்டைத் தாண்டக் கூடாது.’
பார்த்தல் என்னும் செயலைக் குறிக்கும்போது பார் என்பதைப் பிரித்து எழுத வேண்டும் (எ.டு.: அங்கே பார்). யோசித்துப்பார், செய்துபார் என்று பரிசீலனைக்கான பொருளில் சொல்லும்போது சேர்த்து எழுத வேண்டும். இந்த இடங்களில் பிரித்தால் பொருள் குழப்பம் ஏற்படும்.
விடு என்னும் சொல், விடுதல், துறத்தல் என்னும் பொருளில் வரும்போது பிரித்து எழுத வேண்டும் (எ.டு.: கையை விடு, பழக்கத்தை விடு). செய்துவிடு, போய்விடு, முடுக்கிவிடு விட்டுவிடு என இன்னொரு வினைச் சொல்லுக்குத் துணையாக வரும்போது சேர்த்து எழுத வேண்டும். அமெரிக்காவுக்குப் போ என்று சொல்லும்போது ‘போ’ என்பதைப் பிரித்து எழுதலாம். காணாமல்போ, ஒழிந்துபோ என்னும் பயன்பாடுகளில் போ என்பதன் பொருள் போகுதல், செல்லுதல் ஆகிய பொருள்களில் பயன்படவில்லை. எனவே இந்த இடங்களில் சேர்த்து எழுதலாம்.
போல, போல் ஆகியவையும் குழப்பம் ஏற்படுத்தக்கூடியவை. அதுபோல, வந்ததுபோல் என்னும் இடங்களில் சேர்த்து எழுதலாம். அதைப் போல, வந்ததைப் போல் என்று முதலில் வரும் பெயர்ச் சொல்லில் வேற்றுமை உருபு சேர்ந்து வந்தால் பிரித்து எழுதலாம். வேண்டும், முடியாது ஆகிய சொற்கள் இன்னொரு சொல்லுக்குத் துணையாக நின்று வேறு பொருள் தருவதில்லை என்பதால் இவற்றை எப்போதும் பிரித்தே எழுத வேண்டும்.
பிரித்தல், சேர்த்தல் தொடபான எல்லாச் சொற்களையும் எடுத்துக் கூறி விளக்குவது இயலாது. ஒரு சொல்லைச் சேர்த்து எழுதினால் அதற்கு ஒரு பொருள், பிரித்து எழுதினால் வேறொரு பொருள் வரும் என்றால் அந்தச் சொல்லைச் சேர்ப்பதிலும் பிரிப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். நாம் கூற விரும்பும் பொருளுக்கு எது பொருத்தமாக இருக்கும், எப்படி எழுதினால் நாம் சொல்ல முனையும் பொருளில் குழப்பம் ஏற்படாமல் இருக்கும் என்பனவற்றை ஆலோசித்து இந்த முடிவை எடுக்க வேண்டும்.
- அரவிந்தன், தொடர்புக்கு:
aravindan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT