Last Updated : 21 Jun, 2017 09:12 AM

 

Published : 21 Jun 2017 09:12 AM
Last Updated : 21 Jun 2017 09:12 AM

இந்த முறை குடியரசுத் தலைவர் தேர்தல் ஏன் முக்கியமானதாகிறது?

குடியரசுத் தலைவர் தேர்தல் களம் சூடேறிவிட்டது. பிஹார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தன்னுடைய வேட்பாளராக அறிவித்துவிட்டது. காங்கிரஸ் தலைமையிலான பிற எதிர்க்கட்சிகள், அரசு தங்களிடம் முதல் கட்ட ஆலோசனையில் வேட்பாளர் பெயரைக் கூறாததால் அதற்காகக் காத்திருந்து இப்போது பின்தங்கிவிட்டன. ஆர்எஸ்எஸ் பின்னணி உள்ளவரை ஏற்க மாட்டோம் என்று காங்கிரஸ், இடதுசாரிகள், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கூறியிருந்தும், அப்படிப்பட்ட ஒருவரையே பாஜக நிறுத்தியிருப்பதால், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவது நிச்சயம் ஆகிவிட்டது. பாஜக, காங்கிரஸ் இரு பெரும் கட்சிகளின் அரசியலைத் தாண்டி, இந்த முறை குடியரசுத் தலைவர் தேர்தல் சில காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. என்னென்ன?

குடியரசுத் தலைவர் பதவி என்பது வெறும் அலங்காரப் பதவிதான், மத்திய அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் அவர் செயல்பட வேண்டும் என்று விவரம் தெரியாதவர்கள் கூறக்கூடும். அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாகவும், இயற்கையான சட்டத்துக்கு எதிராகவும், உள்நோக்கங்களுடனும் நாடாளுமன்றம் மசோதாக்களைக் கொண்டுவந்தாலும் அவற்றைக் கேள்விக்கு உள்ளாக்குவது, விவாதத்துக்கு உள்படுத்துவது, தாமதப்படுத்துவது ஆகிய செயல்களில் குடியரசுத் தலைவரால் இறங்க முடியும்.

ஒரே அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள் பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகிய இரண்டு பதவிகளையும் வகிக்கும்போது சுயேச்சையான செயல்பாடுகள் இனி அறவே இருக்காது என்ற அச்சம் நியாயமானது.

குடியரசுத் தலைவர்கள் பல சமயங்களில் பிரதமரோடும், ஆளும் அரசோடும் முரண்படவும் செய்திருக்கிறார்கள். 1951 ல் இந்து மதச் சட்டம் தொடர்பாக, வரைவு மசோதா நிலையிலேயே தனக்குத் தகவல்கள் வேண்டும் என்று கேட்டார் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத். தான் கோரியபடி தராவிட்டால் அந்த மசோதாவை உச்ச நீதிமன்றப் பரிசீலனைக்கு அனுப்ப நேரிடும் என்று எச்சரித்தார் பிரசாத்.

1962 ல் சீன ஆக்கிரமிப்பு தொடங்கியதும், மத்திய அமைச்சரவையிலிருந்து பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனனை நீக்கியே தீர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் வற்புறுத்தி சாதித்தார். 1987 ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ஜைல்சிங் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார். இருவருக்கும் இடையில் கருத்து மோதல்கள் முற்றின. இதனால் குடியரசுத் தலைவரைச் சந்தித்து தேசிய, சர்வதேசிய பிரச்சினைகள் குறித்து விளக்கும் நடைமுறையைக் கைவிட்டார் ராஜீவ் காந்தி. அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் தனக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார் ஜைல்சிங். எதைத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறதோ அவற்றைத் தெரிவித்தால் மட்டும் போதும் என்றார் ராஜீவ் காந்தி. சுமுக நிலையை ஏற்படுத்த இருவரும் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. இருவரும் தக்க முன் தயாரிப்புகளுடன் வந்து தனியாகப் பேசியதால், 130 நிமிடங்கள் - அதாவது 2 மணி 10 நிமிடங்களுக்கு - இந்தச் சந்திப்பு நீடித்தது. இருவரும் மதிய உணவுக்குக்கூடச் செல்லாமல் பேசினர். 1997 ல் உத்தர பிரதேசத்தில் கல்யாண் சிங் தலைமையிலான மாநில அரசு ஆட்சியைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர பிரதமர் ஐ.கே.குஜ்ரால் விரும்பினார். குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 1998-ல் வாஜ்பாய் தலைமையிலான அரசு, பிஹாரில் ராப்ரி தேவி தலைமையிலான அரசைக் கலைக்க விரும்பியபோதும் கே.ஆர். நாராயணன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 2006-ல் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது, ஆதாயம் தரும் பதவிகளை வகிக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளைக் காப்பாற்றும் வகையில் முன் தேதியிட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதுகுறித்து விளக்கம் கேட்ட குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கையெழுத்திட மறுத்தார். பிரதமர் மன்மோகன் சிங் அதற்கு நேரில் சென்று விளக்கம் அளிக்க நேரிட்டது.

இப்படி எப்போதெல்லாம் குடியரசுத் தலைவர்கள் ஆட்சியாளர்களுடன் முரண்பட்டிருக்கிறார்களோ அப்போதெல்லாம் அவை பெரும் விவாதத்துக்கு உள்ளாயின. இந்திய அளவில் மட்டுமல்ல; சர்வதேச அளவிலும் இந்தியக் குடியரசுத் தலைவரின் மாறுபட்ட போக்கு எப்போதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இம்முறை பாஜக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அது அடைபடும் என்று அச்சப்படுவதற்கான நியாயமான காரணம் இருக்கிறது.

ஜனநாயக எல்லை என்ன?

மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின் பாடநூல் கழகம், கலை பண்பாட்டு அமைப்புகள், தணிக்கை வாரியம், பிரச்சார் பாரதி என்று முக்கிய அமைப்புகளில் எல்லாம் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டதை அடுத்து, குடியரசுத் தலைவர் பதவியை நோக்கியும் காய்கள் நகர்த்தப்பட்டிருக் கின்றன. பிரச்சினை அதுவல்ல. இந்த அரசு நியமித்த பல முக்கிய பதவிகளுக்கானவர்கள் எதிர்க்கட்சியின் அபிப்ராயத்தையே பொருட்படுத்தாமல் நியமிக்கப் பட்டவர்கள் என்பதை நினைவுகூர வேண்டும்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தேர்விலுமேகூட என்ன நடந்தது? முதலில் வேட்பாளர் தேர்வுக்கு ஒரு குழு அமைத்திருப்பதாகச் சொன்னது. அப்புறம், பொது வேட்பாளருக்காக ஆலோசனை நடத்துவதைப் போல எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்த பாஜக தலைவர்கள் ‘வேட்பாளர் யார்’ என்று உத்தேசமாகக்கூட அவர்களிடம் தெரிவிக்காமல் திரும்பி வந்தனர். கடைசியில், தன்னுடைய கூட்டணிக் கட்சியினருக்கும்கூட வேட்பாளர் பெயரை அவர்கள் கூறவில்லை என்பதை இப்போது சிவசேனையின் எதிர்வினை காட்டுகிறது. பாஜக தலைவர்கள் பலருக்குமேகூட மோடி அறிவித்த பின்னர்தான் வேட்பாளர் யார் என்று தெரிந்திருக்கிறது. அதாவது, ஆலோசனை கலக்கப்படவில்லை - தகவல் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. மோடியின் பாஜகவில் இவ்வளவுதான் ஜனநாயகம் என்று ஜனநாயக எல்லை சுருங்கிவரும் நாட்களிலேயே குடியரசுத் தலைவர் தேர்தல் இவ்வளவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் பெரும்பான்மைவாதம்!

பசுப் பாதுகாப்பு, மாட்டிறைச்சி விற்பனைக்காக மாடுகள் விற்கத் தடை போன்ற இந்துத்துவக் கொள்கைகளைச் சட்டங்களாக அல்லாமல், நிர்வாக உத்தரவுகள் வழியாகவே அமல்படுத்தத் தொடங்கி யிருக்கிறது மத்திய அரசு. சிறுபான்மையினச் சமூகத்தவருக்குப் பிரதிநிதித்துவமே கிடைக்காத படிக்கு உத்தர பிரதேசத்தில் வேட்பாளர் தேர்வை முடித்து, தேர்தலில் அமோக வெற்றி பெற்று பெரும்பான்மைவாத ஆதிக்கத்தை அரசியல்ரீதி யாகவே கொண்டுவந்திருக்கிறது. சிறுபான்மையினர் ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நம்பிக்கையைத் தகர்த்திருப்பதுடன், மதரீதியாக மக்களை ஓரணியில் திரளச் செய்ய முடியும் என்றும் தொடர்ந்து நிரூபித்துவருகிறது மோடியின் பாஜக. மக்களவையில் மட்டுமல்ல; மாநிலங்களவையிலும், மாநிலங்களிலும் தங்கள் கட்சிக்குப் பெரும்பான்மை வலுவைக் கூட்ட எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது. தேர்தல் மூலம்தான் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்காமல், அது எடுத்துவரும் கொல்லைப்புற நடவடிக்கைகளுக்கு வட கிழக்கு மாநிலங்களில் அது கையாளும் உத்திகள் ஓர் உதாரணம்! (ஏன், இப்போது தமிழகமேகூட ஓர் உதாரணம்தான்!)

இந்நிலையை முழுப் பெரும்பான்மையை அது அடைந்துவிட்டால், அதன் கனவில் இருக்கும் ‘இந்து ராஷ்டிரம்’ அமைக்க அது எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என்று அஞ்சுகின்றன எதிர்க்கட்சிகள். இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனும் நிலையிலிருந்து இந்துக்களின் நாடாக அறிவிக்கும் நிலையை நோக்கித்தான் இந்த ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது.‘இறையாண்மையுள்ள சமத்துவ மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு’ என்ற அரசியல் சட்டத்தின் இப்போதைய முகப்புரை, ‘இந்து ராஷ்டிரம்’ என்று மாற்றப்பட்டுவிடும் என்ற அச்சம் பலரிடமும் இருக்கிறது. மோடி நெருக்கடி நிலையை அறிவிக்கக் கூடும் என்ற அச்சமும் இருக்கிறது.

எப்படியிருப்பார் புதிய தலைவர்?

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர் பாஜக சாராத ஒருவராகவோ, தனித்து முடிவெடுக்கும் ஒருவராகவோ இருந்தால், இப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது ஒரு தார்மிகத் தடையை அவர் உருவாக்குவார் என்ற எண்ணம் இருக்கிறது. அந்த வகையிலேயே இந்த முறை குடியரசுத் தலைவர் தேர்தல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது!

- வ.ரங்காசாரி, தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x