Published : 05 Mar 2014 10:25 AM
Last Updated : 05 Mar 2014 10:25 AM

பயிற்சிக் கால பாடங்கள்

என் முதல் கார்ப்பரேட் வேலையின் தலைப்பும் பணி புரிந்த இடமும் குறிப்பிடத்தகுந்தவை. அந்த பெரிய குழுமத்தின், தொழிலகக் கல்வி நிறுவன தொடர்பு மையத்தின் பயிற்சி மேலாளர் என்பதுதான் அது. கல்வி நிறுவனங்களிலிருந்து பொறியியல் மற்றும் நிர்வாகவியல் மாணவர்களைத் தேர்வு செய்து ஓராண்டு பயிற்சி அளித்து அவர்களை பணியில் அமர்த்துவது என் பணி. இது தவிர நிறுவனத்தின் அனைத்து நிர்வாகப் பயிற்சிகளை நிர்வாகிப்பதும் என் கூடுதல் பணி. பயிற்சி நடத்துவதுதான் நம் வேலை என்று நினைத்து சேர்ந்த என்னை நிர்வாகப் பயிற்சி பற்றி 360 டிகிரி வியாபாரப் பார்வை கொள்ள வைத்தது அந்த பணி.

தொண்ணூறுகளின் மத்தியில் கிடைத்த அந்த அனுபவம், பிறகு அந்த பன்னாட்டு நிறுவனத்தில் சேர்கையில் மனித வள பயிற்சித் திட்டத்திற்குப் பெரிதும் உதவியது. இங்கும் எல்லா நிலை பயிற்சி மாணவர்களைச் சேர்ப்பதும் அதில் பெரும்பான்மையோரை வெளி நாட்டிற்குச் செல்ல வைத்து பயிற்சி அளிப்பதும் எம் பணியாக இருந்தது.

இவை தவிர, பல தொழில் படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்குத் தொடர்ந்து இன்டெர்ன்ஷிப் வழங்கியவன் என்கிற தகுதியில் பயிற்சிக் காலம் பற்றி என் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

மாணவர்களுக்கு இரு மன நிலைகள் உண்டு: வேலையின் முதல் வருடம் (இப்போதெல்லாம் சில மாதங்கள்தான்) பயிற்சி எனும்போது ஒரு மனநிலை. வெறும் பயிற்சி மட்டும்தான் இங்கு; வேலையை பிறகு வெளியில் தேட வேண்டும் எனும் போதும் இன்னொரு மன நிலை. இதற்கேற்ப அவர்களின் வருகை, காலந் தவறாமை, பங்களிப்பு என அனைத்தும் வேறுபடும்.

குறிப்பாக, வாரம் இரு நாட்கள் அல்லது ஒரு மாதம் மட்டும் என குறுகிய கால பயிற்சி வடிவங்கள் இங்கு பெரிதும் வீணடிக்கப்பட்ட முயற்சிகளே.

பெரும்பான்மையான நேரங்களில் இது சிபாரிசு போலத்தான் ஹெச்.ஆரை வந்து சேரும். கஸ்டமரோட மச்சினி பையன், நம்ம எம்ப்ளாயியோட நண்பர் மகள், அரசாங்க அதிகாரியோட பி.ஏ விற்கு தூரத்து சொந்தம் இப்படி. “பாத்து செய்யுங்க. ஏதும் முடியலின்னா ஒரு சர்டிபிகேட்டாவது ஏற்பாடு செஞ்சு கொடுத்துருங்க!”

சர்டிபிகேட்டில் சந்தோஷப்பட்டு பயிற்சிக்கே வராத புத்திசாலி மாணவர்களும் உண்டு. ஆனாலும் “ஒரு எக்ஸ்போஷர்” கிடைக்க கம்பெனிக்கு வருபவர்கள்தான் அதிகம். ஆனால் பயிற்சிக் காலம் முடிந்து போகையில் அது கானல் நீராகி கம்பெனியை அதிகம் திட்டி விட்டு போவோர் எண்ணிக்கைதான் அதிகம்.

“வேலையே கொடுக்கலை”, “உட்காரவே நாற்காலி இல்லை”, “சாதாரண வேலை தான் தந்தார்கள்; என் படிப்பிற்கு ஏற்றது ஒண்ணும் இல்லை”, “கம்பெனி தகவல்கள் எதுவும் தர மாட்டேங்கறாங்க”, “இவங்கள பாக்கறதுக்கு காத்திருந்தே காலம் போயிடுச்சு!”

கம்பெனி தரப்பு வாதம் என்ன?

“சார், ஒழுங்கா வரமாட்டாங்க”, “லீவு எடுக்கறதுக்கு முன்ன சொல்ல மாட்டாங்க”, “அடிப்படையே தெரியலை இவங்களுக்கு; எங்க ஆரம்பிக்கறதுன்னே தெரியலை”, “எதிர்பார்ப்பு மட்டும் இருக்கு; எக்ஸ்ட்ரா வேலை செய்யத் தயாரா இல்லை. முடிச்சி விட்டா போதும்னு இருக்கு.”, “நம்ம வேலை பாக்கவே நேரமில்லை; இவங்கள எங்க சார் கவனிக்கறது?”

இரு தரப்பும் ஒரு பரஸ்பர வாய்ப்பைத் தவறவிடுகிறார்கள். இதுதான் உண்மை.

பயிற்சிக் காலத்தை பயனுள்ளதாக்க என்ன செய்யலாம்?

எந்த நிலை என்றாலும் தவறாது ஒரு டெஸ்ட் வைத்து எடுங்கள். அதையும் கடினமாக வையுங்கள். அதில் தேறி பயிற்சியில் சேரும்பொழுது பயிற்சி பற்றி கூடுதல் மரியாதை கிட்டும். தேறாதோர்களை எடுக்கும் சூழ்நிலையிலும் அது அந்த இடத்தின் தர எதிர்பார்ப்புகளை சுட்டிக் காட்டும்.

எதையும் எழுத்து மூலம் கொடுங்கள். தினசரி வருகை பதிவு வையுங்கள். யார் கீழே பணி புரிகிறீர்கள் என்று தெளிவுபடுத்துங்கள். இவர்களை அனுப்பும் கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்/ முதல்வரிடம் ஒரு போன் காலிலாவது உங்கள் எதிர்பார்ப்பைச் சொல்லுங்கள். அவர்களிடமிருந்தும் பயிற்சி முடிகையில் இறுதி அறிக்கை ஒன்று தேவை என்று கேளுங்கள்.

பணிக் காலத்தில் அவர்கள் துவங்கி நடத்தி முடிக்கும் வண்ணம் ஒரு சிறு வேலையையாவது செய்ய வையுங்கள். காத்திருக்கும் நேரம், உடனடி பணி இல்லாத நேரம், பணிக்கு வர முடியாத நேரம் இவற்றில் என்ன செய்ய வேண்டும் என்று முன்பே உணர்த்துங்கள். ஏதோ சரியில்லை என்றால் உடனே அழைத்து பேசுங்கள்.

எல்லா முக்கிய மீட்டிங்கிலும் அவர்களை உட்கார வையுங்கள். கம்பெனியின் பிரச்சினைகளை (சொல்லக் கூடியதை) அவர்களிடம் பகிருங்கள். அவர்களிடம் ஆலோசனை உள்ளதா என்று பாருங்கள். முடிந்து செல்கையில் இந்த குழுவில் ஒருவரையாவது பிற்காலத்தில் வேலைக்கு சேர்க்க முடியுமா என்று பாருங்கள். ஏனென்றால் இவர்களிடம் கொஞ்சம் முதலீடு செய்திருக்கிறீர்கள்.

மாணவர்கள் என்ன செய்ய?

கம்பெனி செல்லுமுன் வலை தளம், அங்கு பணி புரிபவர்கள் மூலம் பணி கலாச்சாரம் பற்றி சில நடைமுறை தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள். உங்கள் தொழில் திறனை விட உங்கள் தவறாத வருகை, ஆர்வம், பொறுமை, கற்கும் மனோபாவம் இவைகளை முதலில் நிர்வாகத்திற்கு காட்டுங்கள்.

எம்பி எம்பி எம்பிஏ படித்திருக்கிறீர்கள் என்பதற்காக, கம்பெனியை எப்படி நடத்த வேண்டும் என்று உங்களிடம் கருத்து கேட்பார்கள் என்று நினைக்காதீர்கள். ஜெராக்ஸ் எடுப்பது, டேட்டா என்ட்ரி செய்வது எதுவாக இருந்தாலும் மனப்பூர்வமாய் செய்யுங்கள்.

உங்கள் சிறப்புத் தகுதிகள், ஆர்வங்கள் இவைகளைப் பற்றி பேசாதீர்கள். செய்முறையில் செய்து காண்பியுங்கள். அல்லது செய்த சான்றை காண்பியுங்கள்.

ஆபிஸ் பாலிடிக்ஸ் தெரிந்து கொள்ளுங்கள். கலந்து கொள்ளாதீர்கள். புனை பெயர்கள், பாஸ் பற்றி ஜோக்குகள் எல்லாம் காதுக்கு வரும். உங்கள் வாயிலிருந்து வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த குளறுபடி என்றாலும் நீங்களே போய் முதலில் சொல்லுங்கள். பிறர் சொல்லி அவர்கள் காதுக்கு போகக் கூடாது.

பரிட்சைக்கு படிக்கணும், காலேஜ்ல கல்சுரல்ஸ், கொஞ்சம் புராஜக்ட் வேலை பாக்கி என எந்த நியாயமான காரணம் இருந்தாலும் விடுமுறை எடுக்காதீர்கள். உங்கள் முகமும், உங்கள் வேலையும் அவர்கள் நினைவில் ஊன்ற கால அவகாசம் தேவை. அவசியப்பட்டால் பயிற்சி காலம் முடிந்து கம்பெனிக்கு வந்து சிறு பணிகளை முடித்துத் தரத் தயாராக இருங்கள்.

பயிற்சி முடிந்து பணி வாய்ப்பு பற்றிக் கேளுங்கள். உங்களை மேலும் எப்படி தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேளுங்கள். எந்த நம்பிக்கையையும் அவர்கள் தராவிட்டாலும் தொடர்பு இழக்காமல் பேசி வாருங்கள். நிறுவனப்பயிற்சி என்பது பாடம் சார்ந்தது மட்டுமல்ல. உங்களைப் பட்டை தீட்டிக் கொள்ள கிடைத்த பட்டறை அது.

கட்டை விரல் கேட்காத பல துரோணாச்சாரியர்கள் அங்கு உங்களுக்கு கிடைப்பார்கள்!

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x