Last Updated : 16 Oct, 2013 10:19 AM

 

Published : 16 Oct 2013 10:19 AM
Last Updated : 16 Oct 2013 10:19 AM

மாற்றத்தின் வித்தகர்கள் - 3: குறுங்காடு தங்கசாமி

தமிழ்நாட்டில் இயற்கை ஆர்வலர் மத்தியில் பிரபலமான ஒரு பெயர் சேந்தங்குடி தங்கசாமி. ‘மரம் தங்கசாமி’என்று சொன்னால், பெயர் எளிதில் விளங்கும்.

ஒரு சாதாரண விவசாயியான தங்கசாமி ஏராளமான மரங்களை வளர்த்துப் பணக்காரர் ஆன கதை எல்லோராலும் எழுதப்பட்டது. அது சுயமுன்னேற்றக் கதை. தங்கசாமியிடம் நம் சமூகம் கவனிக்காமல் விட்ட இன்னொரு கதை உண்டு - எதிர்கால இந்திய விவசாயத்தின் மறுமலர்ச்சிக்கான விதை அது - குறுங்காடு வளர்ப்பு!

பத்து ஏக்கர் நிலம். அதில் ஒரு வீடு. வீட்டையொட்டி சின்னதாய்க் காய்கறித் தோட்டம். சுற்றிலும் குறுங்காடு. ஆமாம், சின்னக் காடுதான் அது. புன்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, அழிஞ்சி, நாட்டு வாதுமை, புங்கன், பெருங்காலி, தங்கபட்டி, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, செண்பகம், கறிவேப்பிலை, வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியம், வாகை, கொண்டைவாகை, இயல்வாகை, வாதநாராயணம், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி, நாவல், நெல்லி, பலா, வில்வம், மா, இலுப்பை, கொடுக்காப்புளி, சப்போட்டா, இலந்தை, சீதா, மாதுளம், அரநெல்லி, கரம்போலா, கொய்யா, கம்பளி, அகத்தி, அத்தி, அழிஞ்சி, பூமருது, அசோகா, மயில் கொன்றை, திருவாட்சி, மந்தாரை, கொக்கு மந்தாரை, மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, நெருப்புக் கொன்றை, தேக்கு, சந்தனம், ஆலம், அரசம்... நூற்றுக் கணக்கான மரங்கள் அல்ல; வகைகள். ஏழாயிரத்துச் சொச்ச மரங்கள். கூடவே, சிறிதும் பெரிதுமான பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள்... இதுதான் தங்கசாமியின் குறுங்காடு.

ஒருகாலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தின் வெம்மைக்கும் வறட்சிக்கும் சரியான உதாரணம் தங்கசாமியின் ஊரான சேந்தங்குடி. இன்றைக்கு அந்தப் பிரதேசத்துக்குள் நுழையும்போதே காற்றில் குளுமையை உணர முடிகிறது. எங்கும் பசுமை வியாபித்திருக்கிறது. 46 ஆண்டுகளில் தங்கசாமி உருவாக்கிய மாற்றம் இது.

“பாரம்பரியமான வெவசாயக் குடும்பம். எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்சதும் வெவசாயத் துறையிலேயே வேலை கிடைச்சுது. வீட்டுல சொன்னாக, ‘யப்பா... வீட்டுக்கு நீ ஒரே புள்ள. நீ பாட்டுக்கு வேலைக்குப் போயிட்டீன்னா, குல வெவசாயம் செத்துப்போகும்’னு. சரிதான்னுட்டு, பயிற்சியை மட்டும் முடிச்சுப்புட்டு வயக்காட்டுக்கே வந்துட்டேன். படிச்ச ஆளு, அதுவும் அப்ப வெவசாயப் பயிற்சி வேற எடுத்துக்கிட்ட துடிப்பு, ஊரு முழுக்கப் பச்சைப் புரட்சியைப் பேசுறான்... சும்மா பழைய வழியிலேயே போவ முடியுமா? நவீன வெவசாயம்… நவீன வெவசாயம்னு கூவிக்கிட்டு உரம், பூச்சிக்கொல்லில தொடங்கி பட்டுப்பூச்சி, தேனீ வளர்ப்பு வரைக்கும் போய்ட்டேன். கொஞ்ச நாள்தான். எல்லாம் காலி. 30 ஆயிரம் கடன். 1960-ல 30 ஆயிரம் எவ்வளவு பெரிய தொகை? ஒரு குடியானவன் சேத்து அடைக்குற காசா அது? மனசு விட்டுப்போச்சு. தற்கொலைதான் கடைசி வழின்னு தோணுச்சு. ஒடிஞ்சு உட்கார்ந்துட்டேன்.

அப்போதான் ரேடியோல ஒரு குரல். சீனிவாசன் ஐயா பேசுறார். ‘மரப் பயிறும் பணப் பயிரே...’, ‘தோப்பில்லா குடும்பத்துக்குக் காப்பில்லை’னு. அப்படியே கடவுளே வந்து சொன்ன மாதிரி இருந்துச்சு. அன்னைக்கு மரத்தைக் கட்டிக்கிட்டேன். வெவசாயம் பண்றதுக்குத்தானே தண்ணியோட்டம் உள்ள பூமியா இருக்கணும்? மரம், பூமிக்கேத்த மாதிரி நடலாம். அங்கேயும் இங்கேயுமா இருந்த வயவாய்க்கால் எல்லாத்தையும் பங்காளிங்ககிட்டே கொடுத்துட்டு, கடனை அடைச்சேன்; ஒரே இடத்துல பத்து ஏக்கராவா சேர்த்து வாங்குனேன். மரக்கன்னா நட்டேன். கொஞ்ச வருஷம். நட்டேன். வெட்டுனேன். நட்டேன். வெட்டுனேன். தேவையான காசு வந்துடுச்சு. ஒரு நா விடியக்காலையில முழிச்சுப்பார்க்குறேன். அது நா வரைக்கும் நான் மரமா பார்த்தது எல்லாம் திரண்டு காடா நிக்குது. சத்தியமா அன்னைக்கு வரைக்கும் மரத்தைக் காசாத்தான் பார்த்தான் இந்தத் தங்கசாமி; ஆனா, காடு காசு இல்லை; அது சாமி. பொறி தட்டிடுச்சு. ‘தங்கசாமி இனி உனக்கு வேலை இதுதான்டா’ன்னு.

அன்னைக்கு ஆரம்பிச்சு இன்னைக்கு வரைக்கும் காடுதான் என் மூச்சுலேயும் பேச்சுலேயும் கலந்துகெடக்கு. யாரு என் வீட்டுக்கு வந்தாலும் சரி; யாரு வீட்டுக்கு நான் போனாலும் சரி... மரக்கன்னு ஒண்ணைப் புடிச்சு நட்டுடறது. வீட்டுல எந்த விசேஷ நாள்னாலும் மரக்கன்னை நட்டுப்புடுறது. இன்னைக்கு என் கை பட்ட மரக்கன்னு உலகம் முழுக்க முளைச்சுக் கெடக்கு. நம்புவீங்களா, கோடி வெதை, கன்னுங்களைத் தன் கையால கொடுத்திருக்கான் தங்கசாமி. என் மவன் கல்யாணத்து அன்னைக்கு மட்டும் ஊருல 10 ஆயிரம் கன்னுகளைக் கொடுத்தேன். அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இஸ்ரேல்னு எங்கெங்கோ இருந்து வர்ற புள்ளைங்க இந்த வெவசாயிகிட்டே இருந்து பாடம் கத்துக்கிட்டுப்போவுதுங்க.

ஆனா, இந்தக் கதை எல்லாம் இப்போதான். ஆரம்பத்துல சுத்தி நின்ன அத்தனை பேரும் என்ன சொன்னான் தெரியுமா? தங்கசாமி ஒரு லூஸுப் பையன்னான். அப்புறம், தங்கசாமி மாதிரி நம்மளும் மரம் நட்டுக் காசு பார்க்கலாம்னு எல்லாரும் மரம் நட்டான். இங்கே நான் சுட்டிக்காட்டணும்னு நெனைக்குற விஷயம் ஒண்ணு உண்டு. மரம் வளர்க்குறதுக்கும் குறுங்காடு வளர்க்குறதுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. மரம் வளர்க்குறது நீங்க ஒரு வீடு கட்டுற மாதிரி; குறுங்காடு வளர்க்குறது ஒரு அரண்மனையையே கட்டி எல்லாருக்கும் இடம் கொடுக்குற மாதிரி. ஒரு ஆச்சரியம் என்னன்னா, வீடு கட்டுறதைவிட அரண்மனை கட்டுறதுதான் எளிமையான விஷயம்கிறதுதான். மரம் வளர்க்குறது ஒரே மாதிரி மரங்களா பத்திவிடறது. குறுங்காடு வளர்க்குறது எல்லா வகை மரங்களுக்கும் இடம் கொடுக்குறது.

மரங்கள்ல பூமிக்குச் சத்து கொடுக்குற மரங்களும் உண்டு; பூமிகிட்டே இருந்து சத்தை எடுத்துக்குற மரங்களும் உண்டு. குறுங்காடுங்கிறது இந்த ரெண்டு வகை மரங்களையும் உள்ளடக்கினது. மனுஷங்களுக்கான பூ மரங்கள் - பழ மரங்கள் மட்டும் இல்லை; பறவைங்க விரும்பி வர்ற மரங்களும் இங்கே இருக்கும். காரண காரியங்கள் இல்லாம வளர்க்குற மரங்களுக்கு இடையிலேயே செஞ்சந்தனம், தேக்கு, ரோஸ்வுட், வாழை, தென்னைனு காசு பார்க்க என்னென்ன மரங்கள் வேணுமோ அதுகளையும் நாம வளர்த்துக்கலாம்.

ஒரு முத்தின செஞ்சந்தன மரம் விலை இரண்டரை லட்சம். இங்கே பல நூறு செஞ்சந்தன மரம் நிக்குது. நான் எவ்வளவோ பெரிய கோடீஸ்வரன்? பாம்பு, பல்லியில ஆரம்பிச்சு எந்தெந்த மூலையில இருந்தோ இங்கே வர்ற பேர் தெரியாத பறவைகள் வரைக்கும் இந்தக் காட்டுல ஆயிரமாயிரம் உயிரினங்கள் வாழுது. எனக்கு எவ்வளவு சொந்தஞ்சோளி?

நம்ம வெவசாயிகளுக்கு நான் சொல்றது சின்ன யோசனைதான். உங்க நெலம் எவ்வளவு இருக்கோ, அதை மூணாப் பிரியுங்க. ரெண்டு பங்குல மாத்தி மாத்தி விவசாயம் பண்ணி நாசமாப் போங்க - அது உங்க உரிமை, கடமை. மிச்ச ஒரு பங்குல மட்டுமாவது கண்டிப்பா மரங்களை நடுங்க. உங்க சந்ததி பொழைச்சுக்கும். விவசாயிங்க மட்டும் இல்லை; அரசாங்கமும் இதை யோசிக்கணும். பெருகுற மக்கள்தொகையால கெடுற சுற்றுச்சூழலையும் உணவுத் தேவையையும் சமாளிக்கணும்னா, தரிசாக் கெடக்குற நெலத்திலெல்லாம் பல வகை மரங்களை நடணும்” - தீர்க்கமான குரலில் பேசுகிறார் தங்கசாமி.

பக்தர்கள் மலைக்கு மாலை போடுவதுபோல, தங்கசாமியும் மாலை போடுவது உண்டு. இது 18-வது வருடம். ஆண்டுதோறும் மாலை போட்டு, 48 நாட்கள் விரதம் இருந்து, குடுமியான்மலை, ஆடுதுறை என்று வேளாண் மையங்களுக்குச் சென்று விரதம் முடிக்கிறார். போகும் வழிநெடுக குறுங்காடு பிரச்சாரம். “இந்த நாடு விவசாயிகளின் நாடு; இந்த நாட்டின் மறுமலர்ச்சி கிராமங்களில் இருந்துதான் தொடங்கும்” என்கிற காந்தியின் வார்த்தைகள்தான் தங்கசாமியின் இயக்கத்துக்கான ஆதார சுருதி. தன்னுடைய பயணத்தில் தங்கசாமி தவறாமல் வலியுறுத்தும் காந்தியின் வார்த்தைகள் இன்னும் சிலவும் உண்டு: “எல்லாருடைய ஆசையையும் நிறைவேற்றும் வல்லமை இந்த பூமிக்கு உண்டு; ஆனால், எல்லாருடைய பேராசையையும் நிறைவேற்றும் திராணி அதற்குக் கிடையாது!”

சமஸ் - தொடர்புக்கு: writersamas@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x