Published : 20 May 2017 03:54 PM
Last Updated : 20 May 2017 03:54 PM
சமீபத்திய அரசியல் நிகழ்வுகளைப் பார்க்கும்போது தமிழகம் பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதான பிம்பம் உருவாகி வருகிறது. ஊழல் அரசியலில், இயற்கைவள சுரண்டல்களில், வழிபாட்டு அரசியலில் தமிழகம் படுகுழி பாதாளத்தை நோக்கிய படுவேகமான வீழ்ச்சி ஏற்பட்டது என்பது இன்று நேற்றல்ல.
எழுதப்படாத அந்த வரலாற்றின் நாயகர்கள் சகல மரியாதைகளுடன்தான் நம்ஊடகங்களில், மேடைகளில், அரசு அதிகாரங்களில் பவனி வந்துகொண்டிருக்கிறார்கள். அதிகாரத்தோடும் அதிகாரம் இல்லாமலும் எதிராளியைத் தாக்கத் தொடுக்கும் அவர்களது அம்புகளிலிருந்து புறப்படும் கணைகள் திரும்பிவந்து அவர்களையே பதம் பார்த்துக்கொண்டிருக்கிறன.
காங்கிரஸ் பேரியக்கம்
உண்மையிலேயே காங்கிரஸ் பேரியக்கக்கத்தின் வீழ்ச்சி இந்தியாவின் வீழ்ச்சியாகவும் மாறிப்போனதை இன்றுள்ள இந்திய அரசியல் எடுத்துக்காட்டி வருகிறது. வரலாறுகளைக் கண்ட காங்கிரஸ் தொடர்ந்து சுத்திகரிக்கப்படாத நிலையில் கரடுதட்டிப்போய் தனது கோரமுகத்தைக் காட்டத் தொடங்கியது. அப்போதுதான் பாஜக தனக்கான ஒளிமயமான பாதைக்கு மோடி எனும் துடிப்பான நாயகனைத் தேர்ந்தெடுத்தது. புத்துணர்ச்சிமிக்க பாதையில் கட்சி மட்டுமல்ல நாடே மாறும் என்று அவர்கள் இனிக்க இனிக்க பேசத் தொடங்க மக்களும் பெரும் நம்பிக்கையில் திளைத்தார்கள்.
ஆனால் கடந்த மூன்றாண்டுகால பாஜக ஆட்சியில் நடந்ததெல்லாம், பிற்காலத்தில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட காங்கிரஸ் ஆட்சியில்கூட காண முடியாதது. கடந்த ஆண்டு நவம்பர் 8-ல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம் 'கறுப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிக்கவே' என்று சொல்லப்பட்ட ஒன்றே போதும், பாஜக அரங்கேற்றிய அவல நகைச்சுவை நாடகக் காட்சிகளுக்கான ஓர் எளிய உதாரணம்.
பணமதிப்பு நீக்கம்
பணமதிப்பு நீக்கம் அமலுக்கு வந்த அடுத்த வாரத்தில் (நவம்.16,2016) கர்நாடக முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் ரூ.650 கோடி செலவில் நடந்ததற்கான வாய்ப்பு எப்படி என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சில நூறுகோடிகளுக்கு புதிய நோட்டுகள் கைமாற்றித் தந்ததாக சிலர் கைது செய்யப்பட்டார்கள். விட்டாலாச்சாரியா படங்களிலோ ராஜமௌலி படங்களிலோ காணக் கிடைக்காத மாயாஜால அதிசயங்கள் இவை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, டெல்லியில் ஆளும் கேஜ்ரிவாலின் மக்களாட்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கியது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, பாண்டிச்சேரியில் ஆளும் நாராயணசாமி ஆட்சியை சுதந்திரமாக செயல்படவிடாமல் (அரசியல் அமைப்புச் சட்டப்படி முதல்வரைவிட குறைவான அதிகாரம் பெற்றிருந்தும்) துணைநிலை ஆளுநரை தலைமீது தொங்கும் மிரட்டும் கத்தியென இறக்கியதும், ஐந்து மாநில தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வாய்ப்பிருந்தும் (பஞ்சாபில் தனிப்பெரும்பான்மையுடன் வந்ததை ஒன்றும் செய்ய முடியாத நிலையில்) கொல்லைப்புற வழியாக ஆட்சி பிடிக்கப்பட்ட கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட எல்லாமே பாஜகவின் மகோன்னத ஜனநாயக விரோதத்துக்கு அரிய சான்றுகள்.
காங்கிரஸ் இல்லாத இந்தியா?
இத்தகைய பாதையில்தான் 2019-ல் 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' எனும் முழக்கத்தோடு களம் இறங்கியிருக்கிறது பாஜக. ஒற்றைக் கட்சி, ஒற்றை அதிகாரம் ஒரு நாட்டுக்கு நல்லதுதானா? அது பன்முகம் என்ற நிகழ்தகவுகளின் பல்வேறு சாத்தியங்களை அழிக்கும் பாசிஸத்தின் பாதை. இதே லட்சியத்தோடு மண்டல கட்சிகளையும் கபளீகரம் செய்ய பாஜக தயங்குவதாகத் தெரியவில்லை.
கடந்த ஆறேழு மாதங்களாக தமிழகத்தை உண்டு இல்லை என ஆக்கிக்கொண்டிருப்பதில் ஆகிக்கொண்டிருப்பதில் அதிமுகவிலிருந்து கிளைத்தெழுந்து இருவேறு புதிய கட்சிகளாக இருப்பதற்கு தலைவர் முன்னாள் முதல்வர் இல்லாதது மட்டுமல்ல காரணம். கடந்த ஆறேழு மாதங்களின் தொடக்கத்திலிருந்தே நடைபெற்றுவந்த பல்வேறு முரணான நிகழ்வுகளுக்கும், அவற்றின் செயல்களுக்கும் பின்னால் டெல்லியின் மிகப்பெரிய பெரிய கைகள் இருக்கின்றன என்கிறார்கள். ''என்கிறார்கள்'' என்பதைக்கூட யார் என உறுதியாக சொல்ல முடியாத இனம்புரியாத அச்சம் பலரையும் பிடித்து வாட்டிவருகிறது.
பல ஆண்டுகளாக உறுமீன் வரும்வரை காத்திருந்து வாடிநின்ற 'சைவ கொக்கு' ரஜினி தற்போது நடத்திய ரசிகர்கள் சந்திப்பு நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. அது மார்க்கண்டேய கட்ஜூவரை பேச வைத்திருக்கிறது.
ரஜினியின் வார்த்தைகள்
தமிழக தடாலடி அரசியல் மாற்றங்களின் தொடர்ச்சியாக ஜனநாயகம் பற்றி ரஜினி நேற்று பேசியதை பார்க்க வேண்டியதில்லைதான். ஆனால் அவர் பேசியது அவருக்கே புரிந்ததா என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது. அல்லது புரிந்தவர்கள் யாராவது சொன்னால் விளங்கிக்கொள்ளலாம். தமிழகத்தின் இன்றைய முக்கிய தலைவர்களான மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், சீமான் ஆகியோரின் தனித்தன்மைகளை திறம்பட பாராட்டிப் பேசினார். மேலும் ரஜினி, இதேமாதிரி தேசியக் கட்சிகளிலும் சில தலைவர்கள் இருக்கிறார்கள் என்று அதில் இன்னும் சிலரையும் இணைத்துக்கொண்டார்.
மேற்படி தலைவர்களைப் பேசிய கையோடு அதையே புரட்டிப் போட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்து அவர் உதிர்த்த சில வார்த்தைகள்தான் உச்சபட்ச நகைச்சுவை.
''இவர்கள் அனைவரும் இருந்தாலும் ஜனநாயகம் கெட்டுப்போயிருக்கிறதே. அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் மன ஓட்டமே மாறி இருக்கிறதே. முதலில் ஜனநாயகத்தை மாற்ற வேண்டும். மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்.'' -- என்ன பேச்சு இது?
இத்தனை திறமையான தலைவர்கள் இருந்தும் ஜனநாயகம் கெட்டுப்போயிருக்கிறது என்று சொல்லவருகிறார். அதாவது இவர்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் ஜனநாயகம் கெட்டுப்போயிருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளார். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறார். சரி, ஜனநாயகத்தின் பிடி யார் கையில் இருக்கிறது என்று நினைக்கிறார். சட்டமும் ஒழுங்கும் நிர்வாகமும் யார் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதில்கூட தெளிவான புரிதல் இல்லை. மக்களை ஜனநாயகமாக வாழவிட வேண்டியது அரசாங்கம்தான். ஜனநாயகப் பாதையில் அரசு செயல்படுகிறது என்பதை உறுதிசெய்ய வேண்டியது ஆள்வோர்தான். எதிர்க்கட்சிகளோ, பிற மக்கள் இயக்கத்தவர்களோ அல்ல.
அரசியல் பிரவேசம்
மற்றபடி ரஜினி பேசிய ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தம் காணத் தேவையில்லை. அது ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், தன்னைத்தானே உரசிப் பார்த்துக்கொள்ளவுமான சொற்கள்தான். அதற்கு பெரிய தேவையில்லாத அர்த்தங்கள், கற்பனைகள், பிம்பங்கள் எதையும் நாம் உருவாக்கிக்கொள்ளத் தேவையில்லை.
ஆனால் கடந்த 20 ஆண்டுகாலமாக வேறு வேறு காலங்களில் வராத திடீர் எழுச்சி தோன்றியது எப்படி? உண்மையிலேயே தமிழகத்தில் வெற்றிடம் உருவாகியிருக்கிறதா, தொடர்ந்து அரசியலில் இயங்கிவரும் தலைவர்கள் யாருமே அந்த இடத்திற்குத் தகுதியான ஆட்கள் இல்லையா என்றெல்லாம் தொடர்ந்து எழும் பல கேள்விகளைத் தடுக்க முடியவில்லை.
போட்டோ செஷன் வார்த்தைகள்
ரசிகர்களை அழைத்து போட்டோ செஷன் நடத்தியிருப்பதற்கு பின்னால் இருப்பது அவரது தனிப்பட்ட உற்சாகம் மட்டும்தானா? அல்லது பின்னிருந்து இயக்கும் பெரிய கைகளா? இக்கேள்விகளை அவ்வளவு நேர்மையாக ஏற்றுக்கொண்டு உடனடியாக யாரும் பதில்சொல்லிவிடப் போவதில்லை. எது எப்படியிருந்தாலும் ரஜினி தனியே கட்சி ஆரம்பித்தாலும் சரி, தமிழ் மாநில பாஜகவின் புதிய எழுச்சிமிக்க தலைமை ஏற்றாலும் சரி, ரஜினி அரசியலுக்கு வருவது சற்றேறக்குறைய உறுதி செய்யப்பட்டுவருகிறது.
ரஜினி என்கிற தனிமனிதர் பற்றி ஆளாளுக்கு ஒரு ஒரு அபிப்ராயம் இருக்கலாம். அவை அனைத்தும் சாதகமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அல்லது பாதகமாகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை. ஆனால் ஊடகங்களும் சில தலைவர்களும் அவர்களது நடவடிக்கைகளை வரவேற்று அவரது படிமத்தை ஊதிப்பெருக்கத் தொடங்கியிருப்பதென்னவோ ஒரு புதிய அலை வரப்போவதற்கான அறிகுறியைப் போல பரவசப்படுகிறார்கள்.
அதற்கான முகாந்திரங்களை யோசிக்கும்போது, ''தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது'' என்று 96-ல் ரஜினி சொன்ன வாசகமேதான் காதுகளில் ஒலிக்கிறது. காரணம் ரஜினியின் வருகையால் தமிழகத்தில் புதியதாக என்ன மறுமலர்ச்சி உருவாகிவிடும் என்று இந்த நிமிடம் வரை சொல்ல ஆளில்லை.
90களிலிருந்தே அவரை நம்பி கட்அவுட் பாலாபிஷகேமுமாக அலைந்து திரிந்த லட்சக்கணக்கான ரசிகர்களை நினைத்தால் ஒருபக்கம் பாவமாயிருக்கிறது. அவர்களையும் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதும், அப்பாவியான தமிழக இளைஞர் சமுதாயத்தை யார் வேண்டுமானாலும் சினிமா என்ற மாயைக்குள் இழுத்துக்கொள்ளமுடியும் என்பது தனியே ஆராயவேண்டிய மிகப் பெரிய சோக வரலாறு.
அரசியலில் சம்பாதிக்க நினைப்பவர்கள்
போட்டோசெஷனின் முதல்நாளான கடந்த மே 15-ம் தேதி ரசிகர்களை சந்திக்கும்போது ரஜினி சொன்னது ''அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை சேர்க்க மாட்டேன்'' என்று சொன்ன வார்த்தைகள் மூன்று நாட்களாக கடைவீதிகளின் நாளிதழ் வார இதழ் போஸ்டர்களில் தொங்கியதுதான் மிச்சம்.
ஊழலை ஒழிப்பதும் பணத்தாசை இல்லாமல் ஆட்சியதிகாரம் என்பதும் இன்று யார் அரசியலுக்கு புதிதாக வந்தாலும் சொல்லியே ஆக வேண்டிய ஒருவகை சம்பிரதாய வார்த்தைகளே அவை. ஆனால் அரசியலில் சம்பாதிக்க நினைப்பவர்கள் இவரிடம் சொல்லிவிட்டா செய்யப் போகிறார்கள். அல்லது இவரே கூட நாளைக்கு இதை ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கப் போகிறாரா?
ரசிகர்களின் இன்றைய நிலை
இந்த வார்த்தைகளைக் கேட்டு ஏற்கெனவே வாழ்க்கையைத் தொலைத்துவிட்ட ரசிகர்கள் வெருட்டு ஓடினாலும் ஓடக் கூடும். காத்திருந்து காத்திருந்து களைத்துப்போன ரசிகர்களுக்கு எந்த ஆறுதல் வார்த்தைகளையும் அவர் சொன்னதில்லை. ஆர்வக்கோளாறில் சொந்த செல்வங்களை இழந்த ரசிகர்களுக்கு இவர் தரப்பிலிருந்து உதவிகள் ஏதும் செய்ததாக தெரியவில்லை.
தமிழகத்தின் உணர்வுபூர்வமான விஷயங்களில் தலையிட்டு அதற்கான தீர்வை அல்ல ஆறுதலைக் கூட இதுநாள்வரை வழங்காத ரஜினியின் இத்தகைய பசப்பு வார்த்தைகளும் பஞ்ச் டயலாக்குகளும் காற்றில் பஞ்சுபஞ்சாய்ப் பறந்து போய்விடும் என்பதுதான் உண்மை.
உண்மையான நாட்டுப்பற்றாளர்களின் ஆர்வம் வேறு. அவர்கள் மனம்குளிர ஈசான மூளையில் அவ்வப்போது மின்னல் அடிக்கவும் செய்கிறது. சகாயம், ஆர்.நல்லகண்ணு போன்ற நேர்மையான வழிகாட்டிகளை தமிழக ஜனநாயகம் தேடிக்கொண்டிருக்கிறது.
சமூக வலைதள விழிப்பு
அதற்கு தமிழகத்தைப் பொறுத்தவரை முக்கிய காரணம், இன்று சமூக வலைதளங்களில் மக்களின் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக உள்வாங்கி நவீன அணுகுமுறையோடு இயங்கிவரும் இளைஞர்களின் மாபெரும் விழிப்புணர்வின் தாக்கம். அவ்வளவு எளிதாக அவற்றைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் அரசியல் பிரவேசம் முன்னிட்டு ரஜினி நிகழ்த்திய தடாலடி ரசிகர் சந்திப்புகள், அவர் மறதிமிக்க தமிழக மக்கள்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்... எவ்வளவு குறைத்து மதிப்பிட்டுள்ளார் என்பதையே காட்டுகிறது. இந்த நம்பிக்கையும் குறைத்து மதிப்பிடலும் அவரது சுயசிந்தனையிலிருந்து உருவானதாகத் தெரியவில்லை.
96களின் ரஜினி அல்ல இவர்
96களில் அவருக்கிருந்த குறைந்தபட்ச சுயசிந்தனையும் இப்போது அவருக்கில்லை. அதைத் தொடர்ந்து அவர் விடுத்த வாய்ஸே எடுபடாத நிலை ஒரு தேர்தலில் ஏற்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட எந்த ஆட்சி அலங்கோலங்களையும் விமர்சிக்கும் துணிச்சலும் அவருக்கு ஏற்பட்டது இல்லை. சுயலாபங்களுக்காக மத்திய அரசையும், மாநில அரசையும் பகைத்துக்கொள்ளமுடியாத நிலை அவருடையது.
இதனால் எல்லாம் ரஜினி எனும் தனி மனிதரின் பண்புநலன்களைக் களங்கப்படுத்திவிடமுடியாது. ஆனால் பொதுவாழ்க்கைக்குத் தேவை நல்ல மனிதர் என்ற அடையாளம் அல்ல. அதற்கும்மேலான மாநில வாழ்வின் பிரச்சினைகளின்மீதான பரந்துபட்ட துணிச்சலான பார்வை.
அடிக்கடி புத்தர் கதைகளை உதாரணம் காட்டும் ரஜினியின் சம்பளம் கோடிகளில் விலைபேசப்படுவது என்பது மட்டுமல்ல சென்ற ஆண்டு, ரஜினி நடித்து ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்பட வெளியீட்டின்போது அதன் டிக்கெட் வரலாறு காணாத விலைக்குச் சென்றதற்கு அவர் எந்தவித மறுப்பும் தெரிவிக்காத புகழின் போதையில் திளைப்பவர்தான் என்பதைக் காட்டிக்கொடுத்துவிட்டது. மலிவான விலையில்கூட வேண்டாம், அரசு நிர்ணயித்துள்ள விலைக்கே தனது சினிமாவை அவர் காட்டியிருந்தாரேயானால் அல்லது அதற்கு துணை நின்றிருந்தால் அவரை நாம் கையெடுத்துக் கும்பிட்டிருக்கலாம்.
சமீபத்தில் ஒரு சிறு நிகழ்வு, இசைக்குயில் எம்எஸ் சுப்புலட்சுமி போன்ற எவ்வளவோ பெரிய கலைஞர்கள் சென்று சாதனை படைத்த ஐநா சபையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் நடனம். முக்கியமான நடன நிபுணர்கள் உள்ளிட்ட பொதுத் தளத்தில் இயங்கும் பலரின் பலமான விமர்சனத்திற்கு ஆளான நிகழ்வு அது. எத்தனையோ சிறந்த பரதநாட்டியக் கலைஞர்கள் சென்னையைத் தாண்டமுடியாத நிலையில் இருக்க, தன் மகளின் ஐநா சபை நடன நிகழ்வுக்காக ஏற்படுத்தப்பட்ட செயற்கையான வாய்ப்பையாவது அவர் தடுத்து நிறுத்தியிருக்கலாம். இதனால் அவரது நல்லவர் பிம்பம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் ஆசை யாரை விட்டது?
இத்தகைய சூழ்நிலையில்தான் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வெற்றிடத்தின் மீது நகர்த்தப்படும் ஒரு பகடைக் காயாக ரஜினிகாந்த் இருப்பதை புரிந்துகொள்ளமுடிகிறது. டெல்லியின் ஆசீர்வாதத்தால் வெவ்வேறு மாநிலங்களின் காட்சிகள் மாறிவருவதன் தொடர்ச்சியாகவே தமிழகத்திலும் அவர்களது விளையாட்டுகள் தொடர்கின்றன.
ஆக்டோபஸ் கரங்கள்
தமிழக முன்னாள் முதல்வர் மரணம் குறித்த திறந்த விசாரணை இன்று வரை இல்லை, அதற்கான எத்தகைய மத்திய அரசின் வழிகாட்டுதல் நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டதான எந்தவித தகவலும் இல்லை. இந்திய மாநிலங்கள் எங்கும் பாஜக தனது கொடியை நாட்டி வருகிறது. தங்களது ஆக்டோபஸ் கரங்களை விரிவுபடுத்துவதில் இருக்கும் ஆர்வம் ஜனநாயகத்தைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் கொடிநாட்டும் வேகம் கிளம்பியிருக்கிறது. தமிழக பாஜக தமிழக தலைவர்கள் பேசும்பேச்சிலேயே அதன்வேகம் தொடர்ந்து வெளிப்பட்டுவருகிறது. அதிலும் மாநிலத்தில் தமிழ்நாட்டில் இதுவரை ''பலமுறை ஆண்ட கட்சிகள் காணாமல் போகும்'' என பாஜகவினர் கூறுவதில் தமிழகத்தின் நலன் அல்லது அவர்களது தன்னம்பிக்கை என்பவற்றையெல்லாம் விட அவர்களது மதிநுட்ப வியூகம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுவருகிறது.
பாஜகவின் உற்சாக நண்பரான ரஜினிகாந்த் ஜனநாயகம் கெட்டுப்போயிருக்கிறது என்கிறார். அது யாரால் கெட்டு வருகிறது என்பதுகூடத் தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை. ஆனால் அவரை வரவேற்பவர்களுக்குத் தெரியாமல் போனதுதான் ஆச்சரியம்.
ஆட்சிக்கட்டிலில் ரஜினி
எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்கிற இன்றைய இந்திய நிலையில் தமிழகம் ஒரு பொம்மலாட்ட பொம்மையாக ஒரு கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஜினி அதிகாரத்திற்கு வருவதற்கான சகல அறிகுறிகளும் தென்படுகின்றன.
மக்கள் வாழ்வில் தன் சொந்தங்களைவிட ஊடகங்களில் தென்படும் நிழல்மனிதர்களின் மீதான கரிசனம் பெருகியுள்ள காலம் இது. இத்தகைய ஒரு காலத்தில் ஊடகங்களால் உருவாக்கப்படும் பொதுக் கருத்துகள் நேர்மையானவைதானா? எத்தகைய நம்பகத்தன்மைமிக்கவை? - அல்லது ஆராயத்தக்கவை என்பதை யோசிக்கும் பக்குவமும் பொறுமையும் அவர்களுக்கு இல்லை. மக்கள் ரஜினிக்கு ஏகோபித்த வரவேற்பை தந்து ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் இதுநாள் வரை மீனவர்கள் பிரச்சினைக்காகவும், ஈழத் தமிழர் நலனுக்காகவும், தமிழக வாழ்வாதாரப் பிரச்சினையைத் தீர்க்கத் தேவையான காவிரி நீர் பங்கீடு பிரச்சினைக்காகவும், நீட் தேர்வு ரத்துக்காவும், மது ஒழிப்புக்காகவும், ஆற்று மணல் கொள்ளையைத் தடுப்பதற்காகவும், தமிழர்களின் பண்பாட்டின் தொன்மையை பறைசாற்றும் புதிய கண்டுபிடிப்பான மதுரை அருகேயுள்ள கீழடி ஆராய்ச்சிக்காக மத்திய அரசின் தடங்கலற்ற அங்கீகாரத்திற்காகவும், ஜல்லிக்கட்டுக்காகவும், நீர்நிலைகளை மீட்பதற்காகவும் எத்தனையோ இன்னல்கள்பட்டு தமிழக மக்கள் பிரச்சினைகளின் வாழ்வாதாரப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் உண்மையான தவ வாழ்க்கைகக்கு ஒரு மரியாதையும் இல்லாமல்போய்விடும்.
அதைப் பற்றி ஒரு வார்த்தையும் உளப்பூர்வமாக உணர்வுபூர்வமாக தெரியாமல் கூட பேசத் தயங்குபவர்களுக்கு ஆட்சிக் கட்டிலில் அமரும்போது தமிழகம் வேதனையான பாதையில் தனது புதிய வீழ்ச்சியையே சந்திக்கும். ஆனால் அதன்பிறகு மீண்டும் புதிய போராளிகள் உருவாவார்கள். மீண்டும் அயர்ந்துபோவார்கள்... மறைவார்கள்... வழிபாட்டுக் கலாச்சாரத்தை மீள்பார்வைக்கு உட்படுத்தாமல் அதில் பலியாகிக்கொண்டிருக்கும் தமிழகமோ அடுத்த சில பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ரஜினியைத் தேடக் கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT