Published : 15 May 2017 08:04 AM
Last Updated : 15 May 2017 08:04 AM
‘தங்கள் பகுதியில் மதுக் கடைகள் திறக்க எதிர்ப்பு; பெண்கள் போராட்டம்’ எனும் செய்திகளைத் தினமும் பார்க்கிறோம். ஒரு நாளைக்குக் குறைந்தது 10 இடங்களில் கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. மக்கள் எதிர்ப்பை மீறி மதுக் கடைகளை திறக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கண்டிப்பு காட்டுகிறது. ஆனால், எந்தக் கவலையும் இல்லாமல் சுடுகாடு, ஏரிக்கரையில் மதுக் கடைகளைத் திறக்கிறார்கள். மரத்தடியில் வைத்து விற்கிறார்கள். பசுமை வீடு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டில் மதுக் கடை வைக்கிறார்கள். நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட அத்தனை கடைகளையும் ஊருக்குள் எப்படியேனும் திறந்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது தமிழக அரசு.
சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை வரி வருவாய் கொண்டது தமிழக அரசு. இதில் சுமார் 30% மது விற்பனையால் கிடைக்கிறது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, இரண்டு கட்டங்களில் 1,000 மதுக் கடைகள் மூடப்பட்டன. எதிர்காலத்தில் படிப்படியாக மதுக் கடைகள் மூடப்படும் என்றும் அரசு அறிவித்தது. நெடுஞ்சாலை மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்கிற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழகத்தில் 3,321 கடைகளை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. எனினும் 2,800 கடைகள் மட்டுமே மூடப்பட்டன. இவற்றில் 1,163 கடைகள் வெவ்வேறு இடங்களில் மீண்டும் திறக்கப்பட்டன. எதிர்ப்பு காரணமாக 263 கடைகள் மூடப்பட்டன. ஆக, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூடப்பட்ட கடைகள் 1,900 மட்டுமே. இதன் மூலம் மது விற்பனையில் 12% குறைந்திருக்கிறது. ஆனால், படிப்படியான மதுவிலக்குக் கொள்கைக்கான பயணமாகக் கருதாமல், வருவாய் இழப்பு போலவே அரசு கருதுகிறது.
ஊழியர்களுக்கு நெருக்கடி
ஒவ்வொரு மாவட்டத்திலும் மூடப்பட்ட கடைகளை ஒன்றுவிடாமல் மீண்டும் நிறுவ வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. ஊழியர்கள் பலர் வீட்டுக்குச் சென்றே பல நாட்களாகிவிட்டன. அவர்கள் தெருத் தெருவாகக் கடைக்கு இடம்பிடிக்க அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கடையையும் மீண்டும் திறக்கக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘மீண்டும் வேலை வேண்டும் என்றால், புதிய கடையைப் பிடித்துக் கொடுங்கள்’ என்கிறார்கள் அதிகாரிகள்.
இன்றைய சூழலில் கடையைப் பிடிப்பது சுலபம் அல்ல. கடை நெடுஞ்சாலையை விட்டு 500 மீட்டர் தள்ளியிருக்க வேண்டும். குடியிருப்பு, வழிபாட்டுத் தலம், கல்வி நிலையம் அருகில் இருக்கக் கூடாது. ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இருக்க வேண்டும். அப்படியே இடம் அமைந்தாலும், அங்கு மதுக் கடை அமைக்க அதன் உரிமையாளர் சம்மதிக்க வேண்டும். அவர் சம்மதித்தாலும் சர்ச்சை காரணமாக வழக்கத்தைவிடக் கூடுதலான முன்பணம், வாடகைக்குத்தான் சம்மதிப்பார். இன்றைய நிலவரப்படி பாருடன் சேர்ந்த ஒரு கடைக்கு சராசரியாக ரூ. 5 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை முன்பணம் தேவை. சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அரை கிலோ மீட்டர் உள்ளடங்கிய இடங்களில் ரூ.2 கோடி முன் பணம் கேட்கிறார்கள். வாடகை ரூ. 20 ஆயிரம் தொடங்கி ரூ. 2 லட்சம் வரை தர வேண்டியிருக்கிறது.
லஞ்சம், கூடுதல் விலை
ஆனால், இவ்வளவு பெரிய தொகையை டாஸ்மாக் நிறுவனம் கொடுக்காது. அது பொதுப்பணித் துறை மூலம் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை மட்டுமே கொடுக்கும். கடை முன்பணமாக மூன்று மாத வாடகையை மட்டுமே அரசு அளிக்கும். அதையும் கடை வைத்து விற்பனை தொடங்கிச் சில வாரங்கள் கழித்தே அளிக்கும். இது மட்டும் அல்ல, கடை வைக்கத் தேர்வுசெய்த இடத்தைப் பார்வையிட வரும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மற்றும் கலால் துறை உதவி ஆணையருக்குத் தலா ரூ.10,000 லஞ்சம் கொடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.3,000 அளிக்க வேண்டும்.
இறுதியாக, அந்தப் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலைய ஆய்வாளரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற ரூ.5,000 முதல் ரூ.1 லட்சம் வரை அளிக்க வேண்டும். ஆக, ஒரு கடையை அமைக்கப் பல லட்சம் செலவாகிறது. அரசு தரும் தொகை சில ஆயிரங்கள் மட்டுமே. முன்பணம் உள்ளிட்ட இந்தப் பெரும் தொகையை பார் ஒப்பந்ததாரர், டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே, போட்ட பணத்தை எடுக்க 24 மணி நேரமும் பாரில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும். இவ்வளவு சிரமங்களையும் மீறித்தான் 900 கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. எவ்வளவு சிரமம்... எத்தனை பேருக்கு மன உளைச்சல்! ஒவ்வொரு பகுதியிலும் கடையைத் திறக்க முயற்சி நடக்கையில், அந்தப் பகுதியின் பெண்கள் நிம்மதியிழக்கிறார்கள். சாலைக்கு வந்து போராடுகிறார்கள். சமூக ஆர்வலர்கள் ஒரு இடத்தில் போராட்டம் நடத்திக் கடையை அடைப்பதற்குள், இன்னோர் இடத்தில் கடை திறக்கப்படுகிறது. மறுபடியும் அங்கே ஓட வேண்டியிருக்கிறது.
என்ன நடக்கிறது?
சில தினங்களுக்கு முன் முதல்வர் பழனிசாமி சேலத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, ‘நெடுஞ்சாலைகளை உள்ளாட்சிகளிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடக்கின்றன. மதுக் கடைகளை அங்கு திறப்பதற்கான ஏற்பாடா அது?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்கவே நெடுஞ்சாலைகள் உள்ளாட்சிகள் வசம் ஒப்படைக்கப்படுகிறது’என்றார். ஆனால், உண்மை என்ன?
தமிழகத்தில் இருக்கும் 12 மதுபான ஆலை களில் கொள்முதல் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான மிடாஸ் கோல்டன் ஆலை. கடந்த 2015-16 நிதியாண்டில், அந்த நிறுவனத்தின் விற்றுமுதல் தொகை மட்டும் ரூ.2,770 கோடிக்கும் அதிகம். அவ்வளவும் அரசு கொள்முதல் மட்டுமே. மற்றொரு மதுபான ஆலை உரிமையாளர் ஒருவர் சசிகலாவை சிறையில் சென்று சந்தித்த பின்பு, ஆறு மாதங்கள் நிறுத்தப்பட்டிருந்த அவரது ஆலையின் கொள்முதல் உத்தரவு மீண்டும் தரப்படுகிறது. தமிழக வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் அசாதாரண சூழல் நிலவுகிறது. ஆட்சியும் கட்சியும் எப்போது கைவிட்டுப் போகும் என்பது ஆள்பவர்களுக்கே தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததால் மத்திய அரசும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் சாக்காகக் கூறிக்கொண்டு மீண்டும் மதுக் கடைகளைத் திறப்பதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். மதுப் பிரச்சினை இனி குறைந்துவிடும் என்று சற்றே நிம்மதி அடைந்திருந்த மக்களை ஏமாற்ற முயன்றால், அதற்கு மிகப் பெரிய விலையைத் தர வேண்டியிருக்கும்!
- டி.எல்.சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT