Last Updated : 20 Jan, 2014 12:00 AM

 

Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM

சமாதானப் புறாவா ஷரோன்?

ஏரியல் ஷரோன் (1928-2014) உடல் நலிவுற்று 2006-ல் கோமாவில் விழுந்தார். ‘மனிதாபிமானமின்றி நடந்துகொண்ட நாம், இனி உயிர் பிரியும் வரையில் எவர் கண்ணிலும் படாமல் மறைவாகவே வாழ்ந்து மறைவோம்’ என்று எண்ணிவிட்டதைப் போலவே அவருடைய இறுதி முடிவு அமைந்தது. பாலஸ்தீனத்தைக் கைப்பற்றிய ஹகன்னா என்ற இஸ்ரேலியத் துணைநிலை ராணுவப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் ஷரோன். அப்போது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட இஸ்ரேலிய ராணுவப் படைத் தளபதிகளில் ஒருவரானார்; பின்னாளில் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல்வாதியாகவும் உருவெடுத்தார்.

அக்கிரமமான செயல்களில் ஈடுபட்டார் என்று அவர்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு, 1953-ல் தொடங்கி அவருடைய இறப்புக் காலம் வரையில் தொடர்ந்தது. மிகக் கடுமையான போர்க் குற்றங்களும் அவற்றில் அடக்கம். அமெரிக்காவாலும் ஐரோப்பிய நாடுகளாலும் பாதுகாக்கப்பட்டதால், இந்தக் குற்றச்சாட்டுகளை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் சந்திக்க வேண்டிய அவசியமே இல்லாமல் வாழ்ந்தவர் ஷரோன். “சாப்ராவிலும் ஷாடிலாவிலும் நிகழ்த்திய கொடூரங்களுக்காக நீதிக்கு முன் நிறுத்தப்படாமலேயே கல்லறைக்கு ஷரோன் சென்றது வெட்ககரமான செயல்” என்று வெடித்தார் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த சாரா லீ விட்சன். 1982-ல் பேரூத்தில் நடந்த படுகொலைகளுக்காகவாவது அவர் விசாரணையைச் சந்தித்திருக்க வேண்டும். அந்தப் படுகொலைகளில் 1,400-க்கும் மேற்பட்ட நிராயுதபாணிகளான பாலஸ்தீனர்களும் லெபனானியர்களும் உயிரிழந்தனர்.

ஷரோன் மறைவை அடுத்து, ‘சமாதானத்துக்காகப் பாடுபட்டவர்’, ‘மிகச் சிறந்த ராஜதந்திரி’ என்றெல்லாம் அவருக்குப் புகழ் மாலைகள் சூடப்பட்டன. இரக்கமற்ற ராணுவத் தலைவர், இப்போது அமலில் இருக்கும் - இஸ்ரேலிய அரசின் தோல்விக்குள்ளான கொள்கைக்குக் காரணமே அவர்தான் என்பதெல்லாம் மறக்கப்பட்டு அவருக்குப் புகழாரங்கள் சூட்டப்படுகின்றன. பாலஸ்தீனர்களை நடமாட விடாமல் அவர்களுடைய குடியிருப்பிலேயே முடக்கிவைத்து, சிறிது காலம் கழித்து அங்கிருந்து தப்பினால் போதும் என்று அவர்களை ஓட விட்டு, ஆக்கிரமித்த பகுதியில் புதிய குடியிருப்புகளைக் கட்டி, அதில் இஸ்ரேலியர்களை வலுக்கட்டாயமாகக் குடியமர்த்தும் நடைமுறையைத் தீவிரப்படுத்தியவர் ஷரோன்.

தண்டனைக்குட்படாதவர்

ஷரோனின் கணக்கு 1953-ல் தொடங்கியது. அவருடைய 101-வது படைப்பிரிவு குய்பியா என்ற பாலஸ்தீன நகருக்குள் நுழைந்து பள்ளிக்கூடங்கள் உள்பட 45 சிவிலியன் கட்டிடங்களை வெடிவைத்துத் தகர்த்தது. அந்தத் தாக்குதலில் சுமார் 70 பொதுமக்கள் இறந்தனர். அவர்களில் சரிபாதி பெண்களும் குழந்தைகளும்தான். ‘வாரியர்’ என்ற பெயரில் தான் எழுதிய சுயசரிதையில், “குய்பியா ஒரு பாடமாக அமைந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஷரோன். ‘யூதர்கள் ரத்தம் - இனி சிந்தப்படுவதற்காக அல்ல’ என்று மற்றவர்களுக்கு உணர்த்துவதுதான் அந்தப் பாடமாம்.

குய்பியாவிலிருந்து பேரூத்தில் உள்ள சாப்ரா, ஷாடிலா முகாம்களுக்கான பாதை வெகு நீண்டதாக இருந்துவிடவில்லை. இந்த முகாம்களில் நடந்த படுகொலைகள் ஷரோனின் மேற்பார்வையில்தான் நடந்தன. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட கான் கமிஷன், இந்தப் படுகொலைகளுக்குத் தனிப்பட்ட முறையில் அவர்தான் காரணம் என்று சுட்டிக்காட்டியது.

“சின்னஞ்சிறு சிசுக்கள், குழந்தைகள், வயிற்றில் கருவைச் சுமந்திருந்த கர்ப்பிணிகள், மூத்தவர்கள் இந்தப் படுகொலைகளில் சிக்கி உயிரிழந்தனர். பல சடலங்கள் அடையாளம் தெரியாத வகையில் சிதைக்கப்பட்டிருந்தன” என்று ‘மனித உரிமைகள் கண்காணிப்பு கமிஷன்’ அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பெல்ஜிய நீதிமன்றங்களில் ஷரோனுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தன. அந்த வழக்குகளைச் செல்லாததாக்க அரசியல் நிர்ப்பந்தம் தரப்பட்டு, நாடாளுமன்றம் மூலம் அதன் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டது. ஷரோனை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

ராணுவத்தை விட்டு விலகிய ஷரோன், லிகுட் என்ற வலதுசாரி அரசியல் கட்சியைத் தொடங்கினார். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி பெருவெற்றி பெற்றது. அப்போது வேளாண் துறை அமைச்சரான ஷரோன், குடியேற்றக் கொள்கையை வகுத்தார். அதுகுறித்து 1979-ல் பேசியபோது, “இன்னும் ஓராண்டில், (பாலஸ்தீனப் பகுதிகளில்) குடியேற்றுவது இயலாததாகிவிடும். எனவே, நாம் இப்போது விரைந்து செயல்பட்டாக வேண்டும். தீவிரமாகவும் விரைவாகவும் (யூதர்களை) குடியேற்றம் நடைபெற வேண்டும். முதலில் நாம் காலூன்றிக்கொள்வோம், பிறகு அந்த இடத்தை அழகுபடுத்துவோம்” என்றார். 1967-ல் நடந்த போரின்போது இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றிய நிலப் பகுதிகளில்தான் இந்தக் குடியேற்றம் நடந்தது. 4-வது ஜெனீவா மாநாட்டின் 49-வது சட்டப்பிரிவுக்கு முரணாகத்தான் இந்தக் குடியேற்றம் நிகழ்ந்தது. ஷரோனின் ராணுவம் தந்த பாதுகாப்பில் நூற்றுக் கணக்கில் – ஆயிரக் கணக்கில் இஸ்ரேலியர்கள் குடியேறினர். இஸ்ரேலிய அரசு மேலும்மேலும் நிலங்களைக் கைப்பற்றி, அதில் குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது. பாலஸ்தீனர்களை அவர்களுடைய வசிப்பிடங்களிலேயே நெருக்கும் அளவுக்கு எல்லைச் சுவர்களை விரிவுபடுத்திக்கொண்டேயிருந்தனர். இஸ்ரேலியர்களுக்குத் தாராளமாக இடம் கிடைத்தது. பாலஸ்தீனர்கள் தங்களுடைய பகுதிகளைத் தொடர்ந்து இழந்துவந்ததால் அவர்களுடைய சாலைகள்கூட மிகவும் குறுகிவிட்டன.

லாபகரமான நிலப் பிடிப்பு

மேற்குக் கரைப் பகுதியில் அதிகபட்சம் எந்த அளவுக்கு இடங்களைப் பிடிக்க முடியுமோ அந்த அளவுக்குப் பிடித்துக்கொள்ளுமாறு ஷரோன் திட்டமிட்டுச் செயல்பட்டார் என்று ஐ.நா. சபையின் உண்மை அறியும் குழு 2013 ஜனவரியில் அறிக்கை தந்தது. காசா குன்றுப் பகுதியிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் வாபஸான செயலானது, இந்த ஆக்கிரமிப்பு கண்ணில் பட முடியாதபடிக்கு மறைக்கும் தந்திரமே. கைப்பற்றப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் பாலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களும் ஒருவரோடு ஒருவர் கலந்துவிடாதபடிக்கு மிகவும் கவனமுடனும் திட்டமிட்டும் குடியிருப்புகளும் சாலைகளும் வழித்தடங்களும் அமைக்கப்பட்டன என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. சாப்ரா, ஷாடிலா பகுதிகளில் அமைந்துள்ள இந்தப் புதிய குடியேற்றங்கள், ஒரு ‘புல்டோசரைப் போல’ செயல்பட்ட ஷரோன் விட்டுச்சென்ற சீதனங்கள்.

திறந்தவெளிச் சிறைச்சாலை

1967-ல் இஸ்ரேல் கைப்பற்றியது முதலே இப்பகுதி பாலஸ்தீனர்களின் ‘திறந்தவெளி சிறைச்சாலை’யாகத்தான் இருக்கிறது. இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு காரணமாக பாலஸ்தீனர்களின் வறுமை கூடிக்கொண்டே போகிறது. பாலஸ்தீனக் குடியிருப்புகளில் இஸ்ரேல் மேற்கொண்ட படுகொலைகளும் அவ்வப்போது நிகழ்த்தும் வன்முறைத் தாக்குதல்களும் நடமாட்டத்துக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் பாலஸ்தீன மக்களின் சுதந்திர உணர்வுகளை மங்கச் செய்வதற்குப் பதிலாக, கனல் விட்டு எரியும் அளவுக்குத் தூண்டிக்கொண்டேயிருக்கிறது.

ஷரோனும் இந்தியாவும்

2003-ல், இந்தியாவுக்கு வந்த முதல் இஸ்ரேலியப் பிரதமர் ஷரோன். இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஏற்பட்ட புதிய நட்புறவை வலுப்படுத்த பா.ஜ.க. தலைமையிலான அரசு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அப்போது ‘தி இந்து’ (ஆங்கிலம்), “இந்த நேரத்தில் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனை வரவேற்று உபசரித்து, இந்திய அரசு தவறான சமிக்ஞைகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது” என்று எழுதியது. ஆயினும் பா.ஜ.க-வும் அதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியும் டெல் அவிவ்வுடன் ஏற்படுத்திக்கொண்ட நெருக்கம் காரணமாக இஸ்ரேலின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுவிட்டன. இஸ்ரேலிடமிருந்து அதிக அளவு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாகிவிட்டது இந்தியா. இதன் மூலம் இந்தியா - பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் கொள்கைக்கு ஆதரவு தருகிறது.

ஷரோனின் மறைவுக்குப் பிரதமர் அலுவலகத்திலிருந்து இரங்கல் செய்தி விடுக்கப்பட்டாலும், ஷரோனுக்குக் கண்டனம் தெரிவிப்பவர்களுக்கும் இங்கே குறைவில்லை. அணி சாரா நாடுகளின் இயக்கத்தில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த இந்தியா, இஸ்ரேல் குறித்து தான் என்ன நினைக்கிறது என்று வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மறைக்கிறது. தன்னுடைய மேற்கத்திய நாடுகளின் நண்பர்களுடைய உதவியால் நீதிமன்றங்களைச் சந்திக்காமல் தப்பிய ஷரோனின் வாழ்க்கையைப் பாராட்டுகிறது இந்திய அரசு!

(கட்டுரையாளர், பேரூத்தில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர்). © தி இந்து (ஆங்கிலம்), தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x