Published : 03 Apr 2017 09:50 AM
Last Updated : 03 Apr 2017 09:50 AM

திருலோக சீதாராம் எனும் பன்முக ஆளுமை

தமிழ்க் கவிதை உலகின் ஒரு அபூர்வ கவி ஆளுமை திருலோக சீதாராம். செளந்தர்ய ஒலி உலகில் வாழ்ந்து பாடித் திளைத்தவர். அந்த இசை தந்த நுண்ணுணர்வின் வழியாகவே அவர் இலக்கியத்தை, மனிதர்களைப் பார்த்தார். அந்தப் பார்வை தமிழுக்கும் சில புதிய வண்ணங்களைச் சேர்த்தது.

ஒரு கவிஞராக, சிறு பத்திரிகையாளராக, இலக்கியக் கட்டுரையாளராக, தேர்ந்த மொழிபெயர்ப்பாளராக, மேடைதோறும் பாடி உரை நிகழ்த்தும் பேச்சாளராக, பாரதி, பாரதிதாசன் கவிதைகளைப் பாடிப் பரப்பிய குயிலாகப் பறந்து திரிந்தவர் திருலோக சீதாராம்.

இந்திய தேசியக் கவியும் தமிழ்க் கவிதையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவரும் படைப்பிலக்கியத்தில் பல சோதனை முயற்சிகளைச் செய்தவருமான பாரதியை இன்று நாம் கொண்டாடி மகிழ்கிறோம். ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் அவரை முழுமையாக அறிந்திருந்தவர்கள் வெகு சிலரே. அவர்களுள் முக்கியமானவர்கள் வ.ரா, பாரதிதாசன், ஜீவா, திருலோக சீதாராம். எழுத்தோடும் பேச்சோடும் மட்டும் நில்லாமல், தன் வளமான குரலால் பாரதி பாடல்களைப் பாடி மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர் திருலோகம்.

மனத்தடை இல்லா நட்பு

பாரதியார் குடும்பத்தாரோடு திருலோகம் எவ்வளவு நெகிழ்ந்த அன்பும் உற்ற உறவும் கொண்டிருந்தாரோ, அது போலவேயான அன்பையும் நட்பையும் பாரதியின் சீடரான பாரதிதாசனோடும் கொண்டிருந்தார். சுயமரியாதை இயக்கக் கவிஞராக இருந்துகொண்டு, ஒரு பிராமணரான பாரதிக்குத் தாசன் என்று அழைத்துக்கொள்வதைத் திராவிட இயக்கப் பிரமுகர்கள் சிலர் ஆட்சேபித்தபோது, பாரதியை யாரும் இனத்தின் பெயரால் இழிவுபடுத்துவதை நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன் என்று கோபத்துடன் எதிர்த்துள்ளார் பாரதிதாசன். பிராமண எதிர்ப்பில் தீவிரமாக இருந்த அவருக்கு திருலோகத்திடம் நட்பு கொள்வதிலும் எந்த மனத்தடையும் இருந்திருக்கவில்லை.

காங்கிரஸ் தலைவரும், அன்றைய தமிழக முதலமைச்சருமான காமராஜரோடு திருலோக சீதாராம் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார். 1961 ஜூலை 29, சனிக்கிழமை திருச்சி டவுன் ஹாலில் நடைபெற்ற ‘சிவாஜி’ வாரப் பத்திரிகை இதழின் வெள்ளி விழா மலரை வெளியிட்டு உரையாற்றியிருக்கிறார் காமராஜர். திருலோகம் கவிதைகளின் மீதும் சிவாஜி இலக்கிய இதழ் மீதும் கொண்டிருந்த பெரும் மதிப்பால், அவரை அரசவைக் கவிஞராக நியமிக்க எண்ணி, அதைச் சிலரிடம் வெளிப்படுத்தியும் உள்ளார் காமராஜர். ஆனால், பிற்பாடு அது சில அரசியல் காரணங்களால் நடக்க இயலாமல் போனது.

அதிசயப் பிறவி

1940-களின் இறுதியில், பாவேந்தருக்குப் பொற்கிழி அளிப்பதாக ஒரு திட்டத்தை அப்போதைய திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான அண்ணா அறிவித்தார். அது தொடர்பான சர்வ கட்சிக் கூட்டம் ஒன்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்று பாரதிதாசனின் கவிதை நயங்களைப் பற்றிப் பேசிய திருலோகத்தைப் பார்த்து, ‘அக்ரஹாரத்து அதிசயப் பிறவிகளில் இவரும் ஒருவர்’ என்றார் அண்ணா. பாராட்டியதோடு மட்டுமல்லாமல் ‘திராவிட நாடு’ பத்திரிகை வெளியிட்ட பாவேந்தர் சிறப்பு மலரில் பாவேந்தரைப் பற்றி ஒரு பாடல் எழுதுமாறு கேட்டு வாங்கிப் பிரசுரித்துள்ளார்.

அந்தக் காலகட்டம் மொழியின் மறுமலர்ச்சிக்கான காலகட்டம். சம்பிரதாயங்களைக் கடந்து மொழியை, கலாச்சாரத்தை வேறு தளங்களில் முன் நிறுத்திய ஒரு காலகட்டம். தான் தேசிய இயக்கத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் திராவிட இயக்கத்தால் மொழிக்குக் கிடைத்த வளத்தை, பயன்பாட்டை மறுக்காமல் சந்தோஷமாக வரவேற்கிறார் திருலோகம்.

இளம் கவி திருலோகம்

பெரம்பலூருக்கு அருகிலுள்ள தொண்டைமான்துறை என்ற ஊரில் திருவையாறு லோகநாத ஐயருக்கும் மீனாட்சி சுந்தரம்மாளுக்கும் 1917 ஏப்ரல் முதல் தேதியன்று பிறந்தவர் திருலோக சீதாராம். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். மூன்று வயதிருக்கும்போதே தந்தையை இழந்து, மாமன் வீட்டில் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். இவருக்கு லலிதா என்ற தங்கையும் பஞ்சாபகேசன் என்ற தம்பியும் இருந்தனர். 1936-ல் தனது 19-ம் வயதில் 10 வயதான ராஜாமணியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மதுரம், வஸந்தா, இந்திரா என்ற மூன்று பெண் குழந்தைகளும் பசுபதி, சுப்பிரமணியன், முரளிதரன், ராமகிருஷ்ணன் என்ற நான்கு ஆண் குழந்தைகளும் பிறந்தனர். திருலோக சீதாராம் மறைவுக்குப் பின், முப்பத்துநான்கு ஆண்டுகள் வாழ்ந்த திருலோகத்தின் மனைவி ராஜாமணி அம்மாள் 2007-ல் தன்னுடைய 81-வது வயதில் மறைந்தார்.

இளம் வயதிலேயே திருலோகத்துக்குக் கவிதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டதோடு அல்லாமல், பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் ஏற்பட்டது. அதனால், அவரது 18-வது வயதிலேயே ‘இந்திய வாலிபன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். பிறகு, விழுப்புரத்துக்கு அருகில் பரிக்கல் என்ற சிற்றூரில் ராம சடகோபன் என்பவர் நடத்தி வந்த ‘தியாகி’ பத்திரிகையின் துணை ஆசிரியராகச் சில மாதங்கள் பணிபுரிந்தார். மந்தஹாசன் என்ற புனைபெயரில் எழுதத் துவங்கிய திருலோகம், சில ஆண்டுகளுக்குப் பிறகு திருலோக சீதாராம் என்ற பெயரிலேயே தன் எழுத்தைத் தொடர்ந்தார்.

தமிழால் ஆன வாழ்வு

கோவை விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவோடும் நெருங்கிய நட்புக்கொண்டிருந்தார் திருலோகம். ஜி.டி.நாயுடு அழைப்பின்பேரில் கோவைக்குச் சென்று பல தடவை பேசியுள்ளார். ஒரு கணக்குத் தணிக்கையாளன் சோதனை செய்தால்கூட தவறு கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு நேர்மையாய்க் கணக்கு எழுதுவதில் தேர்ந்தவராக இருந்த திருலோகத்தின் லெளகீகக் கணக்குகள் மட்டும் எப்போதும் சமனாகாமலேயே இருந்தன. தன்னை முன்னிறுத்துவதைவிடவும் தன் முன்னோர்களை, சக படைப்பாளிகளை, இளைஞர்களை முன்னிறுத்தும் தாய்மை மனம் கொண்ட திருலோகத்தின் வாழ்வு தமிழால் ஆனது.

தமிழ் இலக்கியத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்ட காலகட்டம் கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, எம்.வி.வி, தி.ஜானகிராமன் போன்றவர்கள் வாழ்ந்த காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் அவர்களோடு தன்னையும் இணைத்துக்கொண்டு, சிறு பத்திரிகை மூலமாகவும் இசை வழியாகவும் தன் வழியில் இலக்கிய சலனங்களை ஏற்படுத்தியவர் திருலோக சீதாராம்.

சித்த புருஷர் சீதாராம்

தனது பதினெட்டாம் வயது துவங்கி தன் காலம் முடியும் வரையிலும் சிறு பத்திரிகை ஆசிரியராகவே வாழ்ந்த திருலோக சீதாராம், 1973 ஆகஸ்ட் 23 அன்று தனது ஐம்பத்தாறாம் வயதில் மறைந்தார். அவர் மறைவுக்குப் பின் ஜெயகாந்தன் பேசிய இந்த வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை.

“திருலோக சீதாராம் என்பவர் சதா இங்கே திரிந்துகொண்டிருக்கும் சித்த புருஷர்களில் ஒருவர். அவர் நமக்குத் தோற்றம் காட்டியதும் நம்மிடம் துலங்கியதும் ஒரு அருள். அவர் எங்கேயும் போவதில்லை. தோன்றியது யாவும் மறையும் - சூரியன் தோன்றி மறைவதுபோல. ஆனால், தோன்றியது யாவும் மறையும் என்றால் என்ன பொருள்.. மறைந்தது யாவும் தோன்றும் என்பதுதான். எனவே, இந்தப் பொருள் சுழற்சியில் சிக்குண்ட மஹா பாக்யவான்கள் நாம். அவர்களைக் கண்டுகொண்டோம்; அவர்களுடைய சொற்களைக் கேட்டோம்; அவர்களைச் சுமந்தோம். அந்தச் சொற்களையும் கருத்துகளையும் இன்னும் சுமந்துகொண்டு சுவாசித்து வாழ்கிறோம்; வாழ்வோம். இதிலிருந்து நமது சந்ததிகள் சுடரோடு பொலிவர்”.

- ரவி சுப்பிரமணியன், எழுத்தாளர், கவிஞர், ஆவணப்பட இயக்குநர்

திருலோக சீதாராம் நூற்றாண்டு நாள் ஏப்ரல்-1 -திருலோக சீதாராம் (1.4.1917 23.8.1973)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x