Published : 27 Sep 2013 01:33 PM
Last Updated : 27 Sep 2013 01:33 PM
அமெரிக்கா கவலை தெரிவிக்கவில்லை. அக்கம்பக்கத்து தேசங்கள் கூடி உட்கார்ந்து கும்மியடிக்கவில்லை. நடந்த அவலத்துக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு யாரும் ட்விட்டரில் குறுவரி அறிக்கை வெளியிடவில்லை. ஆப்பிரிக்காவெங்கும் பதற்ற மேகங்கள் பவனி வருவதாக வருணிப்பு வித்தகர்கள் வார்த்தை ஜாலம் காட்டவில்லை. சரியாகச் சொல்வதென்றால் நைரோபி ஷாப்பிங் மால் துர்ச்சம்பவத்தைக் காட்டிலும் இதில் பறிபோன உயிர்களின் எண்ணிக்கை அதிகம். கேட்டால், மனுஷனும் மிருகமும் ஒன்றா என்பார்கள். உயிரென்று பார்த்தாலும், உறவென்று பார்த்தாலும் உலகென்று பார்த்தால் எல்லாமே ஒன்றுதான். மனுஷனைக் கொல்வதற்கு அரசியல் சார்ந்த அபத்தப் பிரகடனங்கள். மிருகத்தைக் கொல்வதற்குப் பொருளாதாரம் சார்ந்த ஆதிக் காரணங்கள்.
ஜிம்பாப்வேயின் வாங்கே (Hwange) கானகத்தில் எண்பத்து ஏழு யானைகள் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டிருக்கின்றன. தந்தம் எங்கள் சொந்தம் என்று எடுத்துச் சென்று காசாக்கிச் சாப்பிட்ட கடத்தல்காரர்களில் ஐந்து பேரைக் கண்டுபிடித்து விசாரித்துக் ்கொண்டிருக்கிறார்கள். மிச்சமுள்ள மகானுபாவர்கள் காலக்கிரமத்தில் அகப்படுவார்கள்; அதில் சந்தேகமில்லை. ஆனால் எண்பத்து ஏழு யானைகளின் உடல்களைத் தரையில் கிடத்திச் சிந்தித்துப் பார்க்க முடியுமா நம்மால்! அத்தனாம்பெரிய ஜீவராசியை வெகு அலட்சியமாக சயனைட் கொடுத்து சாகடித்துவிட்டு தந்தங்களை வெட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.
இது முதல் முறையல்ல. ஜிம்பாப்வேயில் அடிக்கடி இப்படிப்பட்ட கொத்துக் கொலைகள் அரங்கேறிய வண்ணம்தான் இருக்கிறது. போன வருஷம் இதே மாதிரி, இதே காட்டில் ஓரிடத்தில் நாற்பத்தியொரு யானைகளின் உடல்களைக் கண்டெடுத்தார்கள். நாலைந்து மாதங்களுக்கு முன்பு பதின்மூன்று காண்டாமிருகங்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. வருஷத்துக்கு எப்படியும் முப்பதாயிரம் மிருக பலிகளையாவது ஆப்பிரிக்கா சந்திக்கிறது.
மனுஷனுக்குப் பணம் தேவை. யானைகளின் தந்தங்களும் காண்டாமிருகங்களின் முரட்டுக் கொம்புகளும் தோலும் இன்னபிற மிருக ஜாதி ஜீவ ஜந்துக்களின் சகல விதமான பாகங்களும் விலைபோகும் சரக்காக இருக்கிற வரைக்கும் பூனைக்குக் கட்டவேண்டிய மணியாகப் பட்டது பூஜையில் தான் வைக்கப்பட்டிருக்கும்.
ஆப்பிரிக்காவெங்கும் இந்த யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் வேட்டை மாபெரும் தொழிலாகவே நடைபெற்று வருகிறதென்றாலும், கடந்த வருடங்களில் ஜிம்பாப்வே காடுகளில் நிகழும் மிருக மரணங்கள் நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்திருப்பது கண்கூடு. அமெரிக்காவிலும் சைனாவிலும் யானைத் தந்தங்களுக்கும் காண்டாமிருகக் கொம்புகளுக்கும் கடும் டிமாண்ட் இருக்கிறது. அரசாங்கம் தலைகீழாக நின்று தண்ணி குடித்துப் பார்த்தாலும் கடத்தல்காரர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை. சர்வதேச போதைக் கடத்தல் நெட் ஒர்க்குக்குச் சமமான பலத்துடன், சகல வசதிகளுடன், பலத்த பாதுகாப்புகளுடன் இந்தக் கடத்தல்காரர்கள் தமது ஜோலியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
சயனைட் மட்டுமல்லாமல் ஒரு சில ரசாயன வாயுக்களையும் இந்தக் கடத்தல்காரர்கள் பயன்படுத்துகிறார்கள். முன் காலத்தில் செய்தது போல யானைகளுக்காகக் குழி வெட்டி, வலைவிரித்துக் காத்துக்கொண்டிருக்கிற தெல்லாம் இப்போதில்லை. நவீனத்துவத்தின் நாசகார முகம் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. கூட்டமாகத் திரியும் மிருகங்களை இந்தக் கும்பல் சுற்றி வளைப்பது வரைக்கும்தான் கஷ்டம். வளைத்துவிட்டால் வினாடிப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். கொல்வது ஒரு கோஷ்டி. கொன்று முடித்த தகவல் கிடைத்ததும் பறந்து வந்து தந்தங்களையும் கொம்புகளையும் தோலையும் எடுத்து அடுக்கி வைத்துவிட்டுப் போவது வேறு கோஷ்டி. அதைக் காட்டைவிட்டு வெளியே கொண்டு வருவது இன்னொரு கோஷ்டி. அது இறக்கி வைக்கும் இடத்தில் அள்ளிக்கொண்டு எல்லை தாண்டி ஓட வேறொரு கோஷ்டி.
வேண்டாம். குலை நடுங்கிப் போகும். போதை மருந்து மற்றும் கள்ள ஆயுத மார்க்கெட்டைவிட மிருக வேட்டை மார்க்கெட் பெரிது.
பாரம்பரிய சீன மருத்துவத்தில் காண்டாமிருகத்தின் கொம்பைக் குழைத்துத் தயாரிக்கப்படும் என்னவோ ஒரு சூரணத்துக்குப் பெரிய மகத்துவம் உண்டு என்று எந்தப் பிரகஸ்பதி கிளப்பிவிட்டானென்று தெரியவில்லை. இன்றைக்கு உலகமெங்கும் மேற்படி காண்டாமிருகக் கொம்பு சூரணம் கண்டபடி பிரபலமாகிக்கொண்டிருக்கிறது. அபத்தங்களை நம்புவதில் மனித குலத்தை விஞ்ச வேறு குலமில்லை. இந்த அறியாமையைத்தான் வேட்டைக்காரர்கள் காசாக்கிக் கொழிக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment