Last Updated : 21 Jun, 2016 09:44 AM

 

Published : 21 Jun 2016 09:44 AM
Last Updated : 21 Jun 2016 09:44 AM

பொருள் ஆதாரம் யாரிடம்?

அலசல் - பொருளாதாரம்



*

இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டின் பொருளாதாரத்தை இரண்டு ஆண்டுகளில் மாற்ற முடியாது. பொதுவாகவே, பொருளாதாரக் கொள்கைத் திட்டங்களுக்கும் பொருளாதார வளர்ச்சி அல்லது மாற்றத்துக்கும் உள்ள கால இடைவெளி அதிகம். ஆனால், அரசாட்சியில் உள்ள நம்பகத்தன்மை, சரியான கொள்கை முடிவுகளை வைத்து இந்தப் பொருளாதாரத்தை எங்கு இட்டுச்செல்லும் என்பதைக் கணிக்க முடியும்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வந்தபோதிலும், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் பெரிய வீழ்ச்சி இல்லை. மாறாக, சிறிய அளவில் வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. இதனால், உலகில் அதிக பொருளாதார வளர்ச்சி கண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற பெருமையை அடைகிறது.

வளர்ச்சியும் வீழ்ச்சியும்

அட்டவணை 1-ல் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி லேசான ஏற்றத்தைக் காட்டினாலும், விவசாயம், மீன்பிடிப்பு, சுரங்கத் துறைகளில் வளர்ச்சி குறைவாகவும் ஏற்றதாழ்வுடனும் இருந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் பருவமழை பொய்த்ததாலும் விவசாயம் பாதிப்புக்குள்ளானது. இந்த ஆண்டு பருவ மழை சாராசரியைவிட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததால், விவசாயம் மீண்டும் வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்துள்ளது.

விவசாயமும் கிராமப் பொருளாதாரமும் தொடர்ந்து அடைந்துவரும் வீழ்ச்சி கவலைக்குரியது. 2016-17 நிதி ஆண்டில் ரூ. 18,000 கோடி நீர்ப்பாசனம், விவசாயக் காப்பீட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கிராம வேலை உறுதித் திட்டத்துக்கும், கிராமப் பஞ்சயத்துகளுக்கு வழங்கப்படும் கொடையும் மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயமும் கிராமப் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரக் கொள்கைகளில் மீண்டும் முக்கிய அம்சமாகத் தொடர வேண்டும். விவசாயம் வளர்ச்சி அடைந்தபோதெல்லாம், இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்திருக்கிறது.

புள்ளியியல் ஜாலம்

இந்தியாவை உலகின் தொழில்பேட்டையாக மாற்ற வேண்டும் என்பது மோடி அரசின் கனவு. ‘இந்தியாவில் உருவாக்குவோம்’, ‘திறன்மிகு இந்தியா’, ‘எழுக இந்தியா’, ‘நில் இந்தியா’ என்று தொழில் உற்பத்தி, தொழில்முனைவு, தொழிலாளர் உற்பத்தித் திறன் ஆகியவை உயரப் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இவற்றின் தாக்கம் பொருளாதாரத்தை உயர்த்துவதாக இல்லை. பெட்ரோலியம் மற்றும் கனிமப் பொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்ததைப் பயன்படுத்தியும், நமது தொழில் துறையை வளர்த்திருக்க முடியும் என்பதே உண்மை.

தொலைநோக்குடன் அணுகினால் மட்டுமே நம் தொழில் துறை வளர்ச்சியை உறுதிசெய்ய முடியும். சேமிப்பு விகிதம் 36%, முதலாக்க விகிதம் 40% என்ற அளவைத் தொட்ட இந்தியப் பொருளாதாரம், இன்று முறையே 33%, 30.8% என்று குறைந்திருப்பது பொருளாதாரப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது. ஆக, விவசாயமும் தொழில் துறையும் பெரிய வளர்ச்சியை அடையாதபட்சத்தில், ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி உயர்ந்திருப்பது ஒரு புள்ளியியல் ஜாலம் என்று வர்ணிக்கப்படுவதுடன், நிலையான வளர்ச்சியைத் தராது என்பது திண்ணம்.

பொது நிதியியலும் பணவீக்கக் கட்டுப்பாடும்

அட்டவணை 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல, மத்திய அரசின் மொத்த பொதுச் செலவு நாட்டின் மொத்த உற்பத்தியில் 2013-14-ல் 13.8% ஆக இருந்தது. 2016-17-ல் 13% குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நான்கு ஆண்டுகளில் அரசின் வரி மற்றும் வரி அல்லாத வருவாய் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் ஒட்டுமொத்த நிகர வருவாய் 2013-14-ல் 9% ஆக இருந்ததை 2016-17-ல் 11.1% ஆக உயர்த்த முயற்சிகள் உள்ளன. குறைந்த செலவு, அதிக வருவாய் என்பதால், அரசின் நிதிப் பற்றாக்குறை இந்த நான்கு ஆண்டுகளில் 4.5%-லிருந்து 3.5% ஆகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் பணவீக்கம்

பணவீக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகுந்த ஏற்றத்தாழ்வுடன் இருந்துள்ளது. 2016 ஜனவரி முதல் பணவீக்கம் 6%-க்கும் குறைவாக இருப்பதால், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று கூற முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் மற்ற உலோக விலைகளும் குறைவாக இருந்தது, இந்தியாவில் பணவீக்கம் குறைவாக இருந்ததற்கு ஒரு காரணம். கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதெல்லாம் மத்திய அரசு கலால் வரிவிகிதத்தை உயர்த்தித் தனது வரி வருவாயைப் பெருக்கிக்கொண்டது. ஆகவே, உலகப் பொருளாதார மந்தநிலையாலும், கச்சா எண்ணெய், உலோக விலைகளின் வீழ்ச்சியாலும், உள்நாட்டில் தேவை குறைந்ததினாலும்தான் பணவீக்கம் குறைவாக இருந்துள்ளது. மேலும், இப்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர கடந்த இரண்டு மாதங்களில் பணவீக்கமும் ஏறுமுகத்தில் உள்ளது.

எப்போதும் பொது பணவீக்கத்தைவிட உணவுப் பொருள் பணவீக்கம் அதிகமாக இருக்கும். கடந்த ஆறு மாதங்களில் அட்டவணையில் உள்ளதுபோல உணவுப் பொருள் பணவீக்கம் அதிகரித்துவருவது பணவீக்கம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதைக் காட்டுகிறது. பணவீக்கம் ஏழைகள் மேல் விதிக்கப்படும் வரி என்று கூறுவார்கள். வறுமை ஒழிப்பை நோக்கிய பொருளாதாரக் கொள்கையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது மிக அவசியம். இதைச் செய்யத் துணிந்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் இப்போது வெளியே செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது மோசமான நடவடிக்கை.

பொது விவாதங்களையும், மாற்றுக் கருத்துகளையும் ஏற்காத ஓர் அரசாக மோடி அரசு இருப்பது பொருளாதாரத்துக்கும் சமுதாயத்துக்கும் நல்லதல்ல.

தடுமாறிய பொருளாதாரக் கொள்கைகள்

சந்தைப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல மூன்று முக்கிய முடிவுகளை அரசு முன்வைத்தது. தொழில் துறைக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம், தொழிலாளர் சட்டங்களில் திருத்தம், பொருள் சேவை வரி என்ற ஜிஎஸ்டி சட்டம். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அவசரச் சட்டமாக நிறைவேற்றி, பின்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற முடியாமல் போனது மிகப் பெரிய சறுக்கல். இதேபோல தொழிலாளர் சட்டத்திலும், தொழிலாளர் வைப்பு நிதி தொடர்பான செயல்பாடுகளிலும் அரசால்தான் நினைத்த மாற்றங்களைச் செய்ய முடியாமல் தவிக்கிறது. இந்த இரு சட்டங்களிலும் மக்களுக்கும் அரசுக்கும் உள்ள வேறுபாடு வெளிப்படையாக உள்ளதை அறிய முடிந்தது.

இந்த அரசின் மீது பெரிய ஊழல் குற்றசாட்டுகள் எதுவும் இல்லை என்றாலும், வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தைக் கொண்டுவருவோம் என்ற உறுதிமொழி இன்றுவரை உறுதியான திட்டத்துடன் செயல்பாட்டுக்கு வரவில்லை. அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு ஏதுவாக குறிப்பாக பெருநிறுவனங்களிடமிருந்தும், செல்வந்தர்களிடமிருந்தும் அதிக வரி வருவாயை ஈட்ட இந்த அரசு தவறிவிட்டது. கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் அரசின் கவனம் இருக்கிறதா என்ற கேள்வி ஏற்படும் அளவுக்கு அரசின் மெத்தனம் தொடர்கிறது. லலித்மோடி, விஜய் மல்லையா தொடர்பான சர்ச்சைகளில் அரசின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கும், அதில் அரசு நேர்மையாக நடந்துள்ளதா என்று கேள்வி எழுப்பும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம்.

தொடர்ந்து, உற்பத்தித் துறை மந்த நிலையில் இருப்பது, பங்குச் சந்தையில் எவ்வித முனேற்றமும் இல்லாமல் இருப்பது, சமூகப் பாதுகாப்பு, சமூக முன்னேற்றத் துறைகளில் அரசின் செலவினங்கள் குறைவது என்று இதுவரை வெளிப்படும் அறிகுறிகள் எதுவும் நல்ல சமிக்ஞைகளாக இல்லை. தேர்தலின்போது மோடி சொன்னவை நடக்க வேண்டும் என்றால், வரும் மூன்றாண்டுகளில் ஐந்தாண்டு ஓட்டம் ஓட வேண்டும்!

- இராம.சீனுவாசன், பேராசிரியர்

தொடர்புக்கு: seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x