Published : 09 Mar 2014 12:00 AM
Last Updated : 09 Mar 2014 12:00 AM
பி.ஆர்.அம்பேத்கரின் மிகவும் புரட்சிகரமான புத்தகம் ‘சாதி ஒழிப்பு’. இந்துமத அடிப்படைவாதிகள் அல்லது தீவிரவாதிகளுக்காக எழுதப்பட்டதல்ல அந்தப் புத்தகம்; தங்களை ‘மிதவாதிகள்’ என்று கருதிக்கொள்வோர்களுக்காக எழுதப்பட்டது. ‘இந்துக்களிலேயே சிறந்தவர்கள்’ என்று அம்பேத்கர் அவர்களை அழைத்தார். ‘இடதுசாரி இந்துக்கள்’ என்று சிந்தனாவாதிகள் அவர்களை அழைக்கின்றனர். இந்து மத சாஸ்திரங்களில் நம்பிக்கை வைத்துக்கொண்டு, தன்னை சுதந்திரச் சிந்தனையாளன் என்றோ மிதவாதி என்றோ ஒருவர் கூறிக்கொள்வது முரண்பாடானது. ‘சாதி ஒழிப்பு’ பிரசுரமானபோது, இந்துக்களிலேயே மிக உன்னதமானவர் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி, அந்தச் சீண்டல்களுக்குப் பதிலளித்துவந்தார்.
அம்பேத்கருக்கும் காந்திக்கும் விவாதம் நடப்பது புதிதல்ல; அவர்களுடைய காலத்துக்கும் முன்னதாகவே தொடங்கி, இன்றுவரை நீடித்துவரும் சமூக, அரசியல், சித்தாந்த மோதல்களுக்கு, அவர்களுடைய தலைமுறையின் பிரதிநிதிகளாக இருந்து அவ்விருவரும் வாதிட்டனர். தீண்டத்தகாத வர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய அம்பேத்கர், சாதி முறையை எதிர்த்த - கி.மு. 200-100 காலத்திய - அறிவிஜீவிகளின் வாரிசாக விளங்கினார். குஜராத் மாநிலத்தின் வாணிபக் குலத்தில் பிறந்த வைசியரான காந்தி - சமூகத்தில் சலுகைகள் மிக்க - உயர் சாதி அமைப்புகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் வாரிசாகத் திகழ்ந்தார்.
இந்திய சமூகத்தின் நெடிய வரலாற்றைத் தெரிந்துகொள்ளாதவர்களுக்கு, இந்த விவாதத்தின் பின்னணியையும் அம்சங்களையும் விளக்குவது எளிதல்ல. அவ்விருவரும் கடந்தவந்த அரசியல் பாதைகளைப் புரிந்துகொண்டால்தான் விவாதத்தின் தன்மை, நோக்கம்பற்றி உணர முடியும். அவ்வாறு புரிந்துகொள்ள, சற்றே இதர களங்களுக்குள்ளும் சுற்றிவர வேண்டும்.
இந்த விவாதம் இரு வெவ்வேறு நிலைகளை எடுத்துக்கொண்ட இரு தனி நபர்களைப் பற்றியதல்ல. இருவருமே இரண்டு வெவ்வேறு சமுதாயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள். அவர்களுடைய விவாதமே இந்திய தேசிய விடுதலை இயக்கம் என்ற களத்தில்தான் விரித்துரைக்கப்பட்டது. அவ்விருவரும் என்ன சொன்னார்கள், என்ன செய்தார்கள் என்பது இன்றைய அரசியல் களத்திலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய கருத்து வேறுபாடுகள் அன்றைக்கும் இன்றைக்கும் சமரசம் செய்துகொள்ள முடியாதவை. இருவருமே அவரவர் தொண்டர்களால் ஆழமாக விரும்பப்பட்டவர்கள், தெய்வமாகவே வழிபடப்படுகிறவர்கள். இருவருமே ஒருவருக்கொருவர் பின்னிப் பிணைந்தவர்களாகவே இருந்தாலும், ஒரு தரப்புத் தொண்டர்களுக்கு இன்னொருவரைப் பற்றிய பேச்சு மகிழ்ச்சி தருபவையாக இருந்ததில்லை.
வலுவான எதிராளி
அம்பேத்கர்தான் காந்தியின் கருத்துகளை வலுவாக மறுத்த எதிராளி. அரசியல்ரீதியாகவும் அறிவுபூர்வமாகவும் மட்டுமல்ல; தார்மிக அடிப்படையிலும் காந்திக்குப் பலமான சவாலாக விளங்கியவர் அம்பேத்கர். காந்தியின் வரலாற்றில், அம்பேத்கரைப்பற்றிக் குறிப்பிடாமல் இருப்பது முழுமையான வரலாறாகிவிடாது. அதுபோலவே அம்பேத்கரைப் பற்றிய நூலில், காந்தியைப் பற்றிய குறிப்புகள் இல்லாமல் இருப்பதும் சரியல்ல. ஏனென்றால், அம்பேத்கரின் வாழ்வில் காந்தியின் கருத்துகளுக்கு எதிர்வினை உண்டு.
இந்திய தேசிய (விடுதலை) இயக்கமானது மிக அற்புதமாக உருக்கி வார்க்கப்பட்டது. ஹாலிவுட்டில் எட்டு ஆஸ்கர் விருதுகளைக் குவிக்கும் அளவுக்குக் கதாபாத்திரங்களும் திருப்பங்களும் கதைக்களமும் கொண்டது அது. கருத்துக்கணிப்புகள் நடத்துவதையும் புத்தகங்கள், பருவ இதழ்கள் நடத்துவதையும் நாம் பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறோம்; அவற்றில் நாம் நம்முடைய தேசத்தை உருவாக்கிய தந்தையர்களை வரிசைப்படுத்தியும் வரிசை மாற்றியும் விளையாடிக்கொண்டிருக்கிறோம். காந்தியைக் கடுமையாக விமர்சிப்போர் உண்டு. இருந்தாலும், அவர்தான் வரிசையில் முதலிடம் பிடிக்கிறார். மற்றவர்களை நாம் கணக்கில்கொண்டு பார்க்க வேண்டும் என்றால், முதலில் காந்தியைத் தனியாகப் பிரித்து ஒதுக்கிவைத்துவிட்டு, மற்றவர்களைப் பட்டியலிட வேண்டும். காந்திக்குப் பிறகு, மிகப் பெரிய இந்தியர் யார்? அம்பேத்கர்தான் அந்த இடத்துக்கு வருகிறார். ஆனால், ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’யில் - இந்திய அரசின் நிதியுதவியோடு தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தில் - அம்பேத்கர் பாத்திரத்துக்கு சிறிய இடம்கூடத் தரப்படவில்லை.
அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டத்தை வகுத்தவர் என்ற அளவில்தான் பார்க்கப்படுகிறாரே தவிர, அவருடைய ஆழ்ந்த அரசியல், சமுதாயச் சிந்தனைகள் நினைவுகூரப்படுவதில்லை. அவரை அரசியல் சட்டத்தை வகுத்தவர் என்ற முறையில் மட்டுமே பார்ப்பதும் ஒருவகையிலான பாரபட்சம் தான். உண்மை என்னவென்றால் அம்பேத்கர், காந்தி இருவரையுமே ‘இவர் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவானவர்’ என்றோ ‘ஏகாதிபத்தியத்துக்கு எதிரானவர்’ என்றோ நம்மால் முத்திரை குத்திவிட முடியாது. அவர்களுடைய கருத்து மோதல்களால், ஏகாதிபத்தியம்குறித்தும் அதற்கு எதிரான போராட்டங்கள்குறித்தும் நாம் மேலும் பல தகவல்களை அறிய முடிகிறது.
வரலாறு, காந்தியிடம் கருணையுடன் நடந்துகொண்டது. அவருடைய வாழ்நாளிலேயே கோடிக் கணக்கானவர்கள் அவரைத் தெய்வமாகவே கருதினர். காந்தியின் தெய்வீகத்தன்மை உலகம் முழுவதற்குமே பொருத்தமானதாக ஏற்கப்பட்டது. எனவே, அவருடயை ‘சகாப்தம்’ முடிவில்லாமல் நீள்கிறது. காந்தி சில விஷயங்களில் முரண்பட்ட நிலையை எடுத்தவர் என்பது கடந்துவிட்டது. அவையும் அவரை மீண்டும் அடையாளம் காணவே உதவிற்று. காந்தி எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்கிறார். ஒபாமா அவரை நேசிக்கிறார், அமெரிக்காவில் அரசு இடங்களை ஆக்கிரமிக்கும் அரசு எதிர்ப்பாளர்களான புதிய சத்தியாகிரகிகளும் அவரை நேசிக்கிறார்கள். கலகக்காரர்களும் அவரை நேசிக்கிறார்கள், ஒழுங்கான விதிகளைப் பின்பற்றும் நிறுவனங்களும் அவரை நேசிக்கின்றன. நரேந்திர மோடி அவரை விரும்புகிறார், ராகுல் காந்தியும் அவ்வாறே; ஏழைகள் அவரை விரும்புகின்றனர், பணக்காரர்களும் அப்படியே. “பழமையை மாற்றக் கூடாது, அப்படியே தொடர வேண்டும்” என்று விரும்புவோருக்கும் அவர் புனித குரு.
அவரவருக்கு ஏற்ற காந்தி
காந்தியின் வாழ்க்கையும் எழுத்துகளும் 48,000 பக்கங்களில் எழுதப்பட்டு, 98 தொகுதிகளாகத் திரட்டப் பட்டிருக்கின்றன. அவற்றைத் தனித்தனியாகவும் நிகழ்ச்சிகள் வாரியாகவும், வாக்கியங்கள் வாரியாகவும் எழுதியும் பேசியும் அவற்றுக்கு விளக்கம் அளித்துவருகின்றனர். பிரச்சினை என்ன வென்றால், காந்தி எல்லாவற்றையும்பற்றி கருத்துச் சொல்லியிருக்கிறார்; அந்தக் கருத்துகளுக்கு எதிரானதையும் சொல்லியிருக்கிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தங்களுக்குத் தேவையான கருத்துகளை மட்டும் திரட்டிப் பேசுவோருக்கு இவை சாதகமாகவே அமைந்துள்ளன. 1946-ல்
எழுதப்பட்ட, ‘பிரமிடு எதிர் சமுத்திர வட்டம்’ என்பதைப் படித்தால், அவருடைய கருத்துகள் முரண்பட்டிருப்பதை உணரலாம். “சுதந்திரம் என்பது அடிநிலையிலிருந்துதான் தொடங்குகிறது. ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாக அல்லது முழு அதிகாரம் பெற்ற பஞ்சாயத்தாக விளங்கும். எனவே, ஒவ்வொரு கிராமமும் சுயசார்புள்ளதாகவும் தன்னுடைய விவகாரங்களைத் தானே பார்த்துக்கொள்ளக்கூடியதாகவும் உலகமே எதிர்த்தாலும் தன்னைத் தற்காத்துக்கொள்ளக்கூடிய தாகவும் இருக்க வேண்டும். இந்தக் கட்டமைப்பில் எண்ணிலடங்கா கிராமங்கள் இடம்பெறும், அவை விரிவடைந்துகொண்டே போகும், அந்த வட்டம் எப்போதும் மேலே உயராது. வாழ்க்கை என்பது பிரமிடைப் போல, நுனியைத் தாங்குகிற அகலமான பீடத்தைப் போல இருக்காது. ஆனால், அது சமுத்திர வட்டத்தைப் போல இருக்கும், அதன் மையத்தில் ஒரு தனிநபர்தான் இருப்பார் - அவர் தன்னுடைய கிராமத்துக்காக உயிரையும் விடுவார். எனவே, இதில் உள்ள வெளிவட்டம், உள்வட்டங்களை நொறுக்கிவிடாது. அது எல்லாவற்றுக்கும் ஆற்றலை வழங்கி, தனக்கு வேண்டிய ஆற்றலை அவற்றிட மிருந்து பெறும்” என்கிறார் காந்தி.
ஆனால், 1921-ல் வெளியான ‘நவஜீவன்’ இதழில், சாதி முறைக்கு அங்கீகாரம் தரப்பட்டிருக்கிறது. குஜராத்தி மொழியில் எழுதப்பட்டதை அம்பேத்கர் மொழிபெயர்த்திருக்கிறார். (காந்தி மக்களை ஏமாற்றிவிட்டார் என்று கூறும் அம்பேத்கர், ஆங்கி
லத்திலும் குஜராத்தியிலும் அவர் எழுதியவற்றை ஒப்பிட்டு வாசிக்கும்படி அறிவுறுத்துகிறார்.)
“சாதி முறையை அழிக்க முற்படுவோரின் கருத்தை நான் எதிர்க்கிறேன்” என்று ஆரம்ப காலத்தில் காந்தி கூறியிருக்கிறார்.
ஆனால் பிற்பகுதியில், “சாதி என்பது அடக்கு முறைக்கு மற்றொரு பெயர். மகிழ்ச்சிக்கு வரம்பு கட்டுவது சாதி. மகிழ்ச்சிக்காக ஒருவர் தனக்கு விதிக்கப்பட்ட வட்டத்தைவிட்டு வெளியே வருவதை சாதி அனுமதிப்பதில்லை. பிற சாதியினருடன் சேர்ந்து சாப்பிடுவது, திருமணம் செய்துகொள்வது போன்றவை சாதி அடிப்படையில் தடுக்கப்படுகின்றன” என்று கூறியிருக்கிறார்.
சரி, “எப்போதும் விரிவடைந்து, மேல்நோக்கி வளராத (ஆதிக்கம் செலுத்தாத) வட்டங்கள்” என்று அவர் முன்னர் கூறிய கருத்துக்கு இது முரணாக இருக்கிறதா, இல்லையா?
இவ்விரு கருத்துகளும் 25 ஆண்டுகள் இடைவெளியில் கூறப்பட்டவை என்பது உண்மையே. அப்படியென்றால், காந்தி சீர்திருத்தவாதியாக மாறிவிட்டாரா? சாதிகுறித்த கருத்துகளை மாற்றிக்கொண்டுவிட்டாரா? சாதி அமைப்பு முறையில் அவர் கொண்டிருந்த அடிப்படை நம்பிக்கையை மாற்றிக்கொள்ளாமல், “4,000 சாதிகளாக இல்லாமல் பழையபடி நான்கு வருணங்களாக சாதிகள் இணைந்துவிட வேண்டும்” என்றார் காந்தி. “இந்த வர்ணாசிரமம்தான் சாதி முறையின் பிறப்பிடம்” என்கிறார் அம்பேத்கர்.
தன்னுடைய வாழ்நாளின் இறுதிப் பகுதியில், “சேர்ந்து சாப்பிடுவதையோ, சாதி மறுப்புத் திருமணங்களையோ நான் ஆட்சேபிக்கவில்லை” என்றார் காந்தி. (அவை வெறும் கருத்துகளே தவிர, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் நடவடிக்கைகள் அல்ல!) வர்ணாசிரமத்தில் தனக்கு நம்பிக்கை இருந்தாலும், வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்லாமல், அவரவர் மதிப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றார். இதேதான் ஆரிய சமாஜத்தின் கருத்தும். இது எவ்வளவு அபத்தமானது என்று அம்பேத்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். “தங்களுக்கு வேறு தகுதிகள் இல்லாவிட்டாலும், பிறப்பின் அடிப்படையில் சாதிய படிநிலையில் மேலே இருப்பவர்களை அந்த இடத்தைவிட்டு இறங்குங்கள் என்று எப்படி உங்களால் வற்புறுத்த முடியும்?” என்று கேட்டார் அம்பேத்கர். “பிறப்பின் அடிப்படையில் கீழ்நிலையில் இருக்கும் ஒருவர், மற்ற தகுதிகள் காரணமாக உயர்நிலை அடைந்தால், அவருக்கு உரிய அங்கீகாரம் தருமாறு உங்களால் எப்படி நிர்ப்பந்தப்படுத்த முடியும்?” என்றும் கேட்டார். “பெண்களுடைய நிலை என்ன, அவர்களுடைய நிலையை மட்டும் வைத்து எடை போடப்படுமா அல்லது அவர்களுடைய கணவன்மார்களுடைய நிலையைப் பொருத்ததா?” என்றும் கேட்டார்.
இந்தக் கேள்வி நியாயமானதா?
சிலர் கேட்பதுண்டு: “காந்தி எப்போதுமே சதுர் வர்ணத்தில் தனக்கிருந்த நம்பிக்கையைத் திட்டவட்டமாகவும் வெளிப்படையாகவும் என்றுமே கைவிட்டதில்லை. இருந்தாலும், அவருடைய கருத்துகளில் எதிர்மறையானவற்றை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், அவர் சொன்னவற்றில் நன்மை எதுவோ அதைக் கொண்டு மக்களிடமிருந்து நல்லவற்றைப் பெற ஏன் பாடுபடக் கூடாது?”
இது நல்ல கேள்விதான், காந்திக்காகக் கோயில் கட்டியவர்கள், அதை நிர்வகிக்கும் விதத்தி லேயே தாங்களாகவே அதற்குப் பதிலையும் அளித்து விட்டார்கள்.
நம்முடைய நன்மைக்கு விரோதமானதாகவே இருந்தாலும் - பாடல் புனைவோர்கள், எழுத்தாளர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள், இசைவாணர்கள் ஆகியோரின் திறமையை நாம் பாராட்டிப் புகழ்கிறோம். வித்தியாசம் என்னவென்றால், காந்தி பாட்டு எழுதுகிறவரோ, எழுத்தாளரோ, இசைவாணரோ, விளையாட்டு வீரரோ அல்ல. அவர் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டும் என்று கருத்துச் சொன்னவர், பரம்பொருளிடம் தன்னை ஒப்படைத்துவிட்டு மக்களிடையே ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர், அறநெறிப்படி வாழ்ந்தவர், மனிதாபி மானம் மிக்க காருண்யவான், உண்மை, சத்தியாகிரகம் போன்ற அறநெறிகளைக் கொண்டு மிகப் பெரிய சாம்ராஜ்யத்தையே வீழ்த்தியவர். சத்தியாகிரகத்தை வலியுறுத்திய காந்தி, அதிகார பீடங்களிடமும் உண்மையையே பேசிய காந்தி, அநீதிக்கு எதிராகப் போர்க்கோலம் கொண்ட காந்தி, சாந்தமான காந்தி, தாயுள்ளத்தையும் தந்தையின் கண்டிப்பையும் தன்னுள்ளே ஒருங்கே பெற்ற காந்தி, அனைவரையும் தாய்போல் அரவணைத்த காந்தி, அரசியல் களத்தில் பெண்களும் உள்ளே வர வழிவகுத்த காந்தி, புவியின் சுற்றுச்சூழலைக் காக்க விரும்பிய காந்தி, சிக்கலான நிலையிலும் ஒருவரி பதிலால் சிரிப்பில் ஆழ்த்திய காந்தி - ஆகிய இந்த காந்திகளில் ஒருவரை, சாதி அல்லது வர்ணம்பற்றி கருத்துத் தெரிவித்த காந்தியுடன் எப்படி நாம் இணைத்துப் பார்ப்பது?
அடிப்படையிலேயே மூர்க்கத்தனமான - சாதிகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட - நிறுவனரீதியாகவே அநீதிக்குத் துணைபோன சாதிய அமைப்புகள் மீது, இந்த அற விழுமியங்களைக் கொண்டு என்ன செய்வது? காந்தி இப்படித்தான் சிக்கலான சிந்தனை கள் நிரம்பியவர் என்று கூறிவிட்டு விட்டுவிடுவதா?
காந்தி அசாதாரணமானவர், அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடியவர், நாட்டின் விடுதலைப் போராட்டத்தின்போது அவர் அதிகாரத்தில் இருந்தவர் களிடம் நிஜமாகவே உண்மையைத்தான் பேசினாரா? உண்மையிலேயே தரித்திர நாராயணர்களிடம் அவர் சேர்ந்திருந்தாரா?
“காங்கிரஸ் இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடுகிறது என்பதால், இந்திய நாட்டு மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறது, மிகவும் ஏழ்மை நிலையிலிருப்போருக்காகப் போராடுகிறது என்று ஆறுதல்படுவது முட்டாள்தனமானது” என்றார் அம்பேத்கர். “காங்கிரஸ் சுதந்திரத்துக்காகப் போராடுகிறது என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு யாருடைய விடுதலைக்காக அது போராடுகிறது என்பதும் முக்கியம்” என்றார் அவர்.
1931-ல்தான் காந்தி, அம்பேத்கர் சந்திப்பு முதல் முறையாக நடந்தது. “காங்கிரஸ் கட்சியை ஏன் இவ்வளவு காட்டமாக விமர்சிக்கிறீர்கள்?” என்று அம்பேத்கரிடம் கேட்டார் காந்தி. காங்கிரஸ் அப்போது ‘ஹோம் ரூல்’ (சுயாட்சி உரிமை) வேண்டும் என்று கோரிவந்தது. “காந்திஜி, எனக்கு ஹோம்லேண்ட் என்று எதுவுமில்லை” என்று பதில் அளித்தார் அம்பேத்கர். அப்போதுதான், “தீண்டப்படாதவர் என்று அழைக்கப்படும் ஒருவர்கூட இந்த தேசம்குறித்துப் பெருமை கொள்ள மாட்டார்” என்ற பிரபலமான கருத்தை அவர் வெளியிட்டார்.
வரலாறு அம்பேத்கரிடம் கனிவுகாட்டவில்லை. முதலில் அது அவரை அடக்கிவைத்தது. பிறகு, அவரைப் பெருமைக்கு உரியவராக்கியது. அவரை இந்தியாவின் தீண்டப்படாதவர்களின் தலைவனாக்கியது, ‘சேரிகளின் மன்னன்’ ஆக அடையாளப்படுத்தியது. அது அவருடைய எழுத்தாற்றலையும் முற்போக்கான அறிவுத்திறனையும் கொதித்தெழும் சுபாவத்தையும் திரையிட்டு மறைத்தது.
அதேசமயம், அம்பேத்கரைப் பின்பற்றுவோர் அவருடைய திறமைகளைப் பல வழிகளிலும் இன்றும் உலகுக்குத் தெரியப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் நாடெங்கும் அவருக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் நிறுவப்பட்டது.
சிலை அல்ல உயிர்!
அவருடைய சிலை என்பது முற்போக்கான, உயிருள்ள அடையாளம்; தலித்துகளுக்கு உண்டான இடங்களைப் பெறவும், அவர்களுக்கு உரிய உரிமைகளைக் கேட்கவும் உதவுவது. அவர்களுக்கு உரிய நிலம், நீர், கல்வி, வேலைவாய்ப்பு, இதர சமூக உரிமைகளைக் கேட்டுப் பெறுவதற்கான கருவி அது. பொது இடங்களில், கையில் புத்தகத்துடன் அம்பேத்கர் சிலைகள் நிறுவப்படுகின்றன (நல்ல வேளையாக அந்தப் புத்தகம், ‘சாதி ஒழிப்பு’ பற்றியதல்ல; அது இந்திய அரசியல் சட்டப் புத்தகத்தின் மாதிரி வடிவம்). நல்லதற்கோ கெட்டதற்கோ ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையையும் வரையறுப்பதுதான் அந்தப் புத்தகம்.
அரசியல் சட்டத்தையே, தேசத்தைச் சீர்குலைப்பதற் காகப் பயன்படுத்துவது என்பது ஒன்று; அதனால் வாய்ப்புகளுக்கு வரம்பு கட்டப்படுவது மற்றொன்று. அம்பேத்கருடைய காலச் சூழ்நிலை அவரைப் புரட்சி வீரராக்கியது. அதேசமயம், வாய்ப்பு கிடைத்தபோது அதிகார பீடங்களில் கால் பதிக்கவும் இடம் கொடுத்தது. அவருடைய அறிவாற்றல் இந்த இரு சந்தர்ப்பங்களையும் மிக வலுவான வகையில் பயன்படுத்திக்கொள்ள உதவியாக இருந்தது. இப்போதைய காலநிலைகளைக் கொண்டு பார்க்கும்போது, அவர் இரட்டையான - சில சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும்படியான - பாரம்பரியத்தை விட்டுச் சென்றிருக்கிறார். அம்பேத்கர் சீர்திருத்தவாதி! அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை! அரசியல் சட்டம் என்பது புரட்சிக்குத் தடையாக வரக்கூடும். ‘தலித் புரட்சி’ இதுவரை நடைபெறவில்லை. நாம் இன்னும் அதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். அதற்கு முன்னால் இன்னொரு புரட்சி - இந்தியாவில் (நடைபெற) வாய்ப்பே இல்லை.
நவயானா பதிப்பகத்தின் வெளியீடான டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் ‘அனிஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்’ சிறப்புப் பதிப்புக்கு அருந்ததி ராய் எழுதிய முன்னுரையிலிருந்து சில பகுதிகள்.
தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT