Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM
தஞ்சையின் கீழ வெண்மணி கிராமத்தில் தலித்துகளாகவும் விவசாயத் தொழிலாளர்களாகவும் இருந்த மக்களிடையே ஒரு விடுதலை உணர்வு தலைதூக்கியிருந்தது. அது இந்தியாவின் சுதந்திரம் தந்த புத்துணர்வாக இருக்கலாம். அல்லது பிராமணராகப் பிறக்க நேரிட்டாலும், மிகவும் அடிமட்ட மக்களிடம் வந்து வாழ்ந்த சீனிவாசராவ் என்ற கம்யூனிஸ்ட் விவசாய சங்கத் தலைவர் ஏற்படுத்திய தன்னம்பிக்கையாக இருக்கலாம். ஒருங்கிணைந்து வேலை செய்யும் ஒற்றுமை உணர்வைத் தந்த விவசாய சங்கம் காரணமாக இருக்கலாம். ஏதோ ஒன்று, அவர்களை தங்களுக்குத் தேவையானதைப் பண்ணையார்களின் முகத்துக்கு நேராக, சத்தமாகச் சொல்லக்கூடிய தைரியத்தைத் தந்தது.
தலித் தொழிலாளர்களின் தைரியம் தஞ்சையின் பண்ணையார்களுக்கு மானப்பிரச்சினையாக இருந்தது. ஆனாலும், அவர்கள் பின்வாங்கவே செய்தனர். பேச்சுவார்த்தைக்கும் தயாரானார்கள். கூலி உயர்வை அவர்கள் தரத் தயாராக இருந்தனர். ஆனால், சங்கத்தைக் கலைக்க வேண்டும் என்றனர். கம்யூனிஸ இயக்கம் பிளவுபட்டது. தி.மு.க. எனும் புதிய கட்சி தமிழகத்தின் ஆளும்கட்சியாக மாறியது. சீனிவாசராவ் காலத்தில் பண்ணையார்களுக்கு ஏற்பட்ட பயம் அவர் இறந்த பிறகு குறைந்திருக்கலாம். இவற்றில் ஏதோ ஒன்றால் கூடுதல் தைரியம் கிடைத்த பண்ணையார்கள் முன்னேறித் தாக்கியதன் விளைவே 1968, டிசம்பர் 25 கீழ வெண்மணி படுகொலைகள். கொல்லப்பட்ட அனைவரும் தலித் மக்கள். அது அந்த நேரத்தில் உலகச் செய்தியாக இருந்தது.
தமிழகக் காவல் துறையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அடையாளம் காண முடியாத 15 உடல்களும் ஒன்பது குழந்தைகளும் (அதில் 7 பெண் குழந்தைகள்) பெண்கள் 13 பேரும் ஆண்கள் 7 பேருமாக 42 பேர் கொல்லப்பட்டதாக உள்ளது. இந்திய, தமிழக அரசு ஆவணங்களில் இதுவே அதிகாரபூர்வமான ஆவணம். ஆனால், எரிக்கப்பட்ட இடத்தில் உள்ள தியாகிகள் சின்னத்தில் 44 பேரின் பெயர்ப் பட்டியல் உள்ளது. ஏன் இப்படி என்ற விவரத்தை உங்களுக்குச் சொல்வதற்காகத் தேடினேன்.
தாய்மார்கள் நெஞ்சோடு அணைத்திருந்த நிலையில் சாம்பலாகிவிட்ட இரண்டு குழந்தைகளைக் கணக்கெடுக்காமல் விட்டுவிட்டார்கள் என்கிறார் தோழர் நல்லகண்ணு. அப்படியே இருக்கட்டும், அதற்குப் பிறகும் அந்த இரண்டு உயிர்கள் வரலாற்றில் பதிவாகாமல் போனது எப்படி என்று தேடுகிறேன். என்னால் இன்னமும் தெரிந்துகொள்ள முடியவில்லை.
கீழ வெண்மணி படுகொலைகளும் அதற்கு முன்பாக 1957 முதுகுளத்தூர் கலவரம் என்று அழைக்கப்பட்ட தலித் மக்கள் மீதான தாக்குதல்களும் அவற்றைப் போல சுதந்திர இந்தியாவில் தலித் மக்கள் மீது பல மாநிலங்களில் நடந்த தாக்குதல்களும் தான் வன்கொடுமைகளைத் தனியாகக் கண்காணிக்கக் கூடிய ஓர் அமைப்பை உருவாக்கக் கூடிய கட்டாயத்தை மத்திய அரசுக்கு ஏற்படுத்தியது.
இந்திய அரசியல் சாசனம் கண்ணியத்துடன் உயிர் வாழும் உரிமையை அனைத்து இந்தியர்களுக்கும் தந்துள்ளது. அதை தலித் மக்களுக்கும் உத்தரவாதப்படுத்த குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1955-ல் வந்தது. அதனால், அதைச் செய்ய இயலவில்லை. அதனால்தான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ல் உருவானது.
“கார் வைத்துள்ள பண்ணையார் நடந்துபோய், உதவியாட்கள் இல்லாமல் குடிசைக்குத் தீ வைத்தார் என்பதை நம்ப முடியவில்லை” எனச் சொல்லி, 23 பண்ணையார்களை சென்னை நீதிமன்றம் 1973-ல் விடுவித்தது. வெண்மணி ஒரு தனித்த சம்பவம் அல்ல. 1997-ல் பிஹார் லட்சுமிபூரில் 27 பெண்கள் 16 குழந்தைகள் உள்பட 58 தலித் மக்கள் கொல்லப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட 26 பேரை பிஹார் உயர் நீதிமன்றமும் இதே பாணியில் இந்த வருடத்தில் கடந்த 75 நாட்களுக்கு முன்பாக விடுவித்துள்ளது. அந்த இரண்டு குழந்தைகளும் அரசாங்கத்துக்கும் நமது சமூகத்துக்கும் மாயை ஆகிவிட்டன. காணாமல் ஆக்கிவிடுவது என்பது உயிரோடு எரித்துவிடுவதைவிடக் கொடுமையானது. எரித்தவர்கள் எரிக்கப்பட்டவர்களை அமரர்களாக, தியாகிகளாக ஆக்கினார்கள். பண்ணையார்களுக்கு நன்றி. ஆனால், குழந்தைகளைக் காணாமல் போகச்செய்த நீதிமன்றமும் அரசும் நாமும் அந்தப் பண்ணையார்களைவிடக் கொடுமையானவர்கள்.
இனியாவது, 44 பேர்கள்தான் செத்தார்கள் என்று நீதிமன்றமும் தமிழக அரசும் அதிகாரபூர்வமாகச் சொல்ல வேண்டும். காணாமல்போகச் செய்யப்பட்ட அந்த இரண்டு குழந்தைகளுக்கும் சாவுக்குப் பிறகாவது கண்ணியம் தரப்பட வேண்டும்.
அந்தக் குழந்தைகளைப் பற்றி நான் தேடிக்கொண்டு இருக்கிறேன்… உங்களுக்குத் தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்கள்.
தொடர்புக்கு: neethirajan.t@kslmedia.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT