Published : 22 Oct 2014 08:01 AM
Last Updated : 22 Oct 2014 08:01 AM

மெல்லத் தமிழன் இனி...! 12 - குடியின் குறீயிடா தீபாவளி?

தீபாவளி தினத்தன்று ஆறுதலான ஒரு செய்தி. வழக்கமாக வாய்மொழியாகவேனும் தீபாவளி தினம் ‘சிறப்பு’ மது விற்பனை இலக்கை நிர்ணயிப்பார்களாம். கடந்த ஆண்டு 220 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 200 கோடி ரூபாய் எட்டப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அப்படி எதுவும் இலக்கு நிர்ணயிக்காதது ஆறுதல் அளிக்கிறது. அதற்காகப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் நல்லதை வரவேற்போம்!

ஆனாலும், தீபாவளி அன்று மதுக் கடைகளில் கூட்டம் மூன்று மடங்காகக் குவியும் என்கின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்.

சமீப சில ஆண்டுகளாகக் குடியின் குறியீடாக மாறிவிட்டது தீபாவளி. அட்வான்ஸ் கொண்டாட்டமாக முந்தைய நாள் இரவே மதுவிருந்துகள் களைகட்டுகின்றன. ஒன்று வாங்கினால், இன்னொன்று இலவசம் என்கின்றன சில விடுதிகள். சில நட்சத்திரத் தனியார் மதுவிடுதிகள் வாடிக்கையாளர்கள் அதிக மாக மது குடிக்க வேண்டும் என்று போட்டிகள் வைக்கின்றன. சாவதற்கெல்லாமா போட்டிகள் வைப்பார்கள்! ஒரு காலத்தில் எப்போது விடியும் என்று தீபாவளி எண்ணெய்க் குளியலுக்காக ஏங்கிய தமிழன், இன்று எப்போது மதுக் கடை திறக்கும் என்று ‘ஹேங் ஓவருடன்’ காத்திருக்கிறான்.

தீபாவளிக்கு இலக்கு

போகிற போக்கில் இப்படி ஒரு குற்றச்சாட்டைச் சொல்லவில்லை. ஒரு புள்ளிவிவரம்: சாதாரண நாட்களில், ஒரு நாளைய மது விற்பனை சராசரியாக 65 கோடி ரூபாய். அதுவே, சனி, ஞாயிறு எனில் 90 கோடி ரூபாய். தீபாவளி எனில், சுமார் 150 கோடி ரூபாய். தீபாவளிக்கு முன்னும் பின்னுமான மூன்று நாட்களில் மட்டுமே மது விற்பனை சுமார் 300 கோடி ரூபாயை எட்டும் என்கிறார்கள். சாதாரண நாளைவிட மூன்று மடங்கு அதிகமாகக் குடிக்கிறார்கள் அல்லது மூன்று மடங்கு அதிகமான நபர்கள் குடிக்கிறார்கள்!

தீபாவளி பண்டு கேள்விப்பட்டிருக்கிறோம். தீபாவளி கொண்டாட்டத்துக்காக மாதம்தோறும் சீட்டுக் கட்டிப் பணம் சேமிப்போம். இதில் பல வகைகள் இருந்தன. சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். சிலர் தங்க நகை அல்லது பித்தளை அண்டா நிறைய இனிப்புகள் தருவார்கள். சிலர் பணமாகத் தருவார்கள். ஏமாற்றிவிட்டு ஓடுபவர்களும் உண்டு. அப்படி ஏமாற்றும் பண்டுகளைவிட அபாயகரமான தீபாவளி பண்டுகள் சில ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கின்றன என்பது தெரியுமா?

ஆமாம், பல்வேறு ஊர்களில் தீபாவளி மது விருந்துக்காகவே பிரத்யேக பண்டுகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறான பண்டுகளின் பெயர்களே ‘கிக்’ ஏற்றுகின்றன. சமீபத்தில் கண்ணில் பட்டது, ‘மஜா தீபாவளி பண்டுச் சீட்டு’. மாதம்தோறும் பணம் கட்டினால், தீபாவளி அன்று மொத்தமாக மது தருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களிடம் பேசினால், “தீபாவளி அன்றைக்குக் கையில் காசு இருக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, கூலி வேலை செய்பவர்கள் குழந்தைகளுக்குப் பட்டாசு, துணிமணி வாங்கவே சிரமப்படுகிறார்கள். அவர்கள் மது குடிக்க எங்கே போவார்கள்? அவர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் சேமிப்புச் சீட்டு நடத்துகிறோம்” என்கிறார்கள் ‘அக்கறையாக’. எவ்வளவு கொடுமை இது!

தென்மாவட்டங்களில் நிறைய குழுவினர் இதுபோன்று சீட்டுகளைச் சேர்க்கிறார்கள். வண்டி நிறைய மதுபாட்டில்களை நிரப்பிக்கொண்டு குற்றாலம், கொடைக்கானல் போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று சூழலை மேலும் நாசம் செய்கிறார்கள்.

தொலைந்துபோன தீபாவளி

பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் தீபாவளியை எப்படிக் கொண்டாடினோம்? எப்போது விடியும் என்று தூங்காமல் காத்திருப்போம். சுருக்கத் தூங்கி, கருக்கலில் கண்விழிப்போம். ஏகாந்தமான எண்ணெய்க் குளியல். புத்தாடை அணிந்து, தூறல் நனைய பட்டாசு வெடிப்போம். காலையில் இனிப்புடன் சிற்றுண்டி. கணிசமான பேருக்குக் கறிக்குழம்புடன் இட்லி. அப்புறம் கோயில், சினிமா, உறவினர் வீடு இன்ன பிற ஆரோக்கியமான பொழுதுபோக்குகள். கடந்த காலங்களைக் கொஞ்சம் அசைபோட்டுப் பாருங்களேன்! வாருங்கள், இன்றைய தினமாவது மது இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்.

(தெளிவோம்)
- டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x