Published : 07 Oct 2014 08:36 AM
Last Updated : 07 Oct 2014 08:36 AM

மெல்லத் தமிழன் இனி 2 - ஆடிட்டரி ஹாலுசினேஷன்

கோயிலுக்குச் சற்றுத் தள்ளி நின்றுகொண்டு, “ச்சூ... ச்சூ... ச்சூ... ச்சூ...” என்று காது பக்கமாக எதையோ விரட்டிக்கொண்டே இருந்தார் அவர். அருகில் நின்ற அவருடைய மனைவி, “ஒண்ணுமில்லை, வாங்க” என்று கையைப் பிடித்து இழுத்தார். “இரு புள்ளை... சீய் போடி இவ வேற... ச்சூ... ச்சூ... ச்சூ...” என்று அவர் காது பக்கமாக விசிறுவது அதிகமானது.

தம்பதியர்போல. எங்கோ கிராமத்திலிருந்து வந்திருக் கிறார்கள். சிறிது நேரத்தில் காது பக்கமாக விசிறுவது வேகம் எடுத்தது. இப்போது இரு காதுகளிலும் படீர் படீர் என்று அடித்துக்கொண்டார். அவர் மனைவி அழுதுகொண்டே அவர் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, மனைவியின் கையை வெறிகொண்டு கடித்துவிட்டார் மனிதர். கையில் ரத்தம் துளிர்க்க, “அய்யோ… அம்மா...” என்று அந்தப் பெண்மணி அலறித் துடித்தார். கூடவே, கணவரின் முதுகில் ஓங்கிச் சாத்தினார். அப்போதும் விடாமல் காதுகளில் கடுமையாக அறைந்துகொண்டார். ஒரு கட்டத்தில் செங்கல் ஒன்றை எடுத்துக் காதில் சாத்திக்கொண்டார். “என்னங்க... என்னங்க...” என்று அந்தப் பெண் அலறி கையைப் பிடித்துத் தடுக்க முயற்சித்தார். ம்ஹூம், வெறி கொண்ட மாதிரி கல்லைக் கொண்டு படீர் படீர் என்று அடித்துக்கொண்டார். நல்லவேளையாக அந்தப் பெண்ணின் ஓலம் கேட்டு நாலைந்து பேர் ஓடி வந்து பிடிக்க, காதில் ரத்தம் வழிய மயங்கிச் சரிகிறார் அந்த மனிதர்.

காட்டு முனி கட்டு

பொங்கும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்துக் கும்பிட்டு, “நல்ல மனுஷன் சாமீ... ஆறு மாசமாதான் இப்படிக் காதுல அடிச்சிக்கிறாரு. குடிப்பழக்கம். யாரோ பில்லி சூனியம் வெச்சிட்ட மாரி ஆயிடுச்சுங்க” என்கிறார் அந்தப் பெண். அப்படியே கைத்தாங்கலாகக் கணவரைத் தூக்கி, “வாங்க, கோயிலுக்குப் போவலாம்” என்று அழைத்துச் செல்கிறார்.

பூசாரிக்கு அவர் ஏற்கெனவே பரிச்சயம்போல. “என்ன, தொரைக்கு இங்க வராம இருக்க முடியலை போலிருக்கு” என்று வரவேற்றார். வழக்கமான சம்பிரதாயங்கள் செய்யப்பட்டன. “முழுசா ஒரு வருஷத்துக்குக் கட்டிவிட்டிருக்கேன். இன்னியி லேருந்து நாள் கணக்கு வெச்சிக்கோ. இந்த முறை காட்டு முனி கட்டுடா. பூ முனி மாதிரி நெனைச்சிப்புடாத. ரத்தங் கக்கிச் செத்துப்புடுவ, அப்புறம் என்னைச் சொல்லக் கூடாது” என்கிறார் பூசாரி.

இரண்டாவது பெண்ணின் கதி?

கோயிலுக்கு வெளியே வருகின்றனர். அந்தப் பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தேன்.

“தருமபுரி பக்கம் காரியமங்கலம்ங்க. ரெண்டு பேரும் கரும்பு வெட்டுறோம். ஒரு நாளைக்கு ஐநூறு ரூவா கெடைக்கும். அதுல என் பங்கையும் பிடுங்கிக் குடிச்சிப்புடறாருங்க. ஐநூறு ரூவா மொத்தத்தையும் குடிச்சிட்டா குடும்பத்தை எங்கங்க நடத்துறது? இங்க வந்து கயிறு கட்டறது பத்து தடவைக்கும் மேல ஆகிப்போச்சுங்க. மொதத் தடவ கயிறு கட்டுனப்ப ஆச்சரியப்பட்டேங்க. மனுஷன் மூணு வருஷம் குடிக்கவேயில்ல. ஒரே மூச்சா சம்பாதிச்சு, மூத்த பொண்ணு கல்யாணத்த நடத்திப்புட்டோம். ஒரு ஏக்கர் குத்தகைக்கு எடுத்துக் கத்திரிக்காய் போட்டோம். ஆனா, சேராத சகவாசம், திரும்ப குடிக்கப் போயிடுச்சு. ரெண்டாவது பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணியிருந்தோம். பத்திரிகைகூட அடிச்சாச்சு. நகை வாங்கிட்டு வர்றேன்னு போச்சு. பாலக்கோடு பஸ் ஸ்டாண்டுல குடிச்சுப்போட்டு மயங்கிக்கிடந்திருக்காரு. பாக்கெட்டுல இருந்த எம்பதாயிரம் ரூவா பணத்தைத் திருடிட்டாங்க. கல்யாணமும் நின்னுபோச்சு. இருபது நாளு எங்கெங்கேயோ சுத்திப்புட்டு வந்தாரு. ஆறு வருஷமாச்சு. பொண்ணுக்கும் முப்பத்திநாலு வயசாச்சு. அதுக்குக் கல்யாணம் பண்ண வக்கில்லாமப் போச்சு. பாவம் அது, துணிக் கடையில் எண்ணூறுவா சம்பளத்துக்கு வேல பாக்குது” என்கிறார் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே.

ஆடிட்டரி ஹாலுசினேஷன்

அவர்களை அப்படியே விட மனம் இல்லை எனக்கு. டாக்டரிடம் போனில் பேசினேன். “அவருக்கு இருப்பது ஆடிட்டரி ஹாலுசினேஷன். குடிநோய் முற்றிய நிலையில் காதுக்குள் குரல் கேட்கும். பிடிக்காத மனைவியோ மாமனாரோ மிகக் கேவலமாகத் திட்டுவார்கள். வண்டு ரீங்காரமிடும். சிலருக்கு இளையராஜாவோ ஏ.ஆர். ரஹ்மானோ இசைக் கச்சேரி நடத்தக்கூடும். புலிகூட காதுக்குள் கர்ஜிக்கலாம்” என்றார். கூடவே, தருமபுரி அரசு மருத்துவமனையில் மனநலப் பிரிவில் மருத்துவர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, “உடனே அங்கு செல்லச் சொல்லுங்கள். விட்டால் உயிருக்கு ஆபத்து...” என்றார். நான் ஒரு கடிதம் எழுதிக்கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தேன்.

ஆடிட்டரி ஹாலுசினேஷன் நிலை வரை வந்து குடிநோய் தொடர்ந்தால் உயிருக்கே உலை வைக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடிட்டரி ஹாலுசினேஷனின் முற்றிய நிலைதானே சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் குடிசைவாசியான தாஸைக் கூவத்தில் குதிக்கச் சொல்லி உத்தரவிட்டது. அப்போது கூவம் கரையில் கணவரின் பிணம் முன்பாக நான்கு பெண் குழந்தைகளுடன் அவரது மனைவி நெஞ்சில் அடித்துக்கொண்டு டாஸ்மாக் கடைகளுக்குச் சாபம் விட்டார். இப்போது எப்படி இருக்கிறார்கள் அவர்கள்? எனக்கு தாஸின் குடும்பத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x