Published : 10 Apr 2017 08:52 AM
Last Updated : 10 Apr 2017 08:52 AM
தேர்தலில் ஒரு கட்சி போட்டியிடவும் வெற்றிபெறவும் அதன் கொள்கைகளும் வாக்குறுதிகளும் மட்டும் போதாது, பொருளாதார பலத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்ற அவல நிலை இன்னும் தொடர்கிறது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் அரசியல் கட்சிகள் தேர்தல் நிதியை வசூலிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. யாரால் அதிக அளவில் தேர்தல் நிதியை வசூலித்துத் தர முடிகிறதோ அவரே சில சமயங்களில் வேட்பாளராகவும் தேர்வாகிறார்.
இப்படி வற்புறுத்தியும் ஆசை காட்டியும் சிறு வியாபாரிகளை அச்சுறுத்தியும் வாங்கப்படும் தேர்தல் நிதி ஒரு பக்கம், வணிக நிறுவனங்கள் தாமாக முன்வந்து வாரி வழங்கும் நிதி இன்னொரு பக்கம். அரசியல் கட்சிகளுக்கு வந்துசேரும் தேர்தல் நிதி எவ்வளவு? அதைக் கட்சிகள் எந்தெந்த வகைகளில் பெறுகின்றன? அதை எப்படிச் செல விடுகின்றன என்பதில் இதுவரை எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. 2004 தொடங்கி 2014 வரையிலான 11 ஆண்டு களில் தேர்தல் செலவுகளுக்கான தொகை யில் ஏறக்குறைய 70% எந்த வகை களில் பெறப்பட்டது என்ற விவரம் தெரிவிக்கப் படவில்லை என்று ஜனநாயகச் சீர்திருத்தங் களுக்கான அமைப்பு தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
உச்சவரம்பு நீக்கம்
அரசியல் கட்சிகள் தாங்கள் பெறுகின்ற தேர்தல் நிதிக்குத் தணிக்கை முறைகளைப் பின்பற்றுவதில்லை. குறிப்பாக, தேர்தல் நிதி பணமாகப் பெறப்படுவதாலேயே அது வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. எனவே, ஒரு தனி நபரிடம் ரூ.20,000-க்கு மேல் நன்கொடை பெற்றால், அதை வருமான வரித் துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை மக்கள் பிரதி நிதித்துவச் சட்டத்தின் மூலமாக நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆனால், அரசியல் கட்சிகள் தனிநபர்களிடமிருந்து பெறும் நன்கொடை களை ரூ.20,000-க்கும் குறைவாகக் காட்டுகின்றன. அதனால், கணக்கு காட்டப்பட வேண்டிய தேர்தல் நிதியின் வரம்பைக் குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்திவந்தது.
அதன் அடிப்படையில், நடப்பு ஆண்டுக் கான பட்ஜெட்டில் இது தொடர்பிலான அறிவிப்பையும் உள்ளடக்கிருந்தது மோடி அரசு. அதன்படி, கணக்கு காட்டப்பட வேண்டிய குறைந்தபட்சத் தொகை ரூ.20,000 என்ற அளவிலிருந்து ரூ.2,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, இனிமேல் எந்தவொரு கட்சியும் தனிநபர்களிடமிருந்து ரூ.2000-க்கு மேல் தேர்தல் நிதி பெற்றாலே, அது பற்றித் தெரிவித்தாக வேண்டும் என்பதே இதன் விளக்கம். மேலோட்டமாகப் பார்க்கும்போது இது சீர்திருத்தம்போலத் தெரிந்தது. ஆனால், பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டபடி, நிறுவனங்கள் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்த மசோதா மோடி அரசின் உண்மையான முகத்தைக் காட்டியிருக்கிறது.
முன்னதாக, நடைமுறையிலிருக்கும் விதிமுறைகளின்படி, தனியார் நிறுவனங்கள் கடைசி மூன்றாண்டுகளில் அடைந்த மொத்த லாபத்திலிருந்து 7.5%ஐ மட்டுமே தேர்தல் நிதியாக வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தின்படி, லாபத்தில் 7.5 % என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னதாக நிறுவனங்களின் லாப - நட்டக் கணக்கோடு எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதியளிக்கப்பட்டது என்ற விவரத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்’ என்ற கட்டாயமும் இருந்தது. இப்போது அதுவும் நீக்கப்பட்டிருக்கிறது. தாங்கள் எந்தக் கட்சிக்கு நிதி வழங்கினோம் என்ற விவரத்தை இனி அவை தெரிவிக்க வேண்டிய தில்லை. அதனால் நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அரசியல் கட்சி களுக்கு நிதி வழங்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஆக, இந்தப் புதிய திருத்தமானது, தேர்தல் அரசியலில் பெரு நிறுவனங்களின், முதலாளிகளின் செல் வாக்கை மேலும் அபரிமிதமாக அதிகரிக்கச் செய்யும்.
தேர்தல் நிதிப் பத்திரம்
இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் தெரி விக்கப்பட்டுள்ள முக்கியமான இன்னொரு ‘தேர்தல் சீர்திருத்தம்’ தேர்தல் நிதிப் பத்திரங்களின் அறிமுகம். இம்முறையின்படி, சில குறிப்பிட்ட வங்கிகளில் குறிப்பிட்ட பண மதிப்புகளில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். அரசியல் கட்சி களுக்கு நன்கொடை அளிக்க விரும்பு பவர்கள் இந்தப் பத்திரங்களை மின் - பணப்பரிமாற்றம் மூலமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வாங்கி, தாங்கள் விரும்பும் கட்சிகளுக்குக் கொடுக்கலாம். பத்திரங்களை வைத்திருப்பவரே அதற்கு உரிமையுடையவர் என்ற அடிப்படையில் இவை வழங்கப்படும். ஆனால், நன்கொடை அளித்தவர் யார் என்ற விவரம் இந்தப் பத்திரத்தில் இடம்பெற்றிருக்காது. அரசியல் கட்சிகள் தங்கள் வங்கிக் கணக்கில் இந்தப் பத்திரத்தைப் பணமாக மாற்றிக்கொள்ளலாம்.
தேர்தல் நிதிப் பத்திரங்கள் வங்கிப் பணிகளோடு தொடர்புடையதாக இருப்ப தால், அதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி வேண்டும். எனவே, ரிசர்வ் வங்கி சட்டத்திலும் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட உள்ளன. தேர்தல் நிதிப் பத்திரங்களைப் பணம் கொடுத்து வாங்க முடியாது என்பதால், நன்கொடை அளிப்பவர் களின் விவரங்களைக் கண்டறிந்துவிட முடியும். என்றாலும், அந்தப் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர் இல்லாததால் நன்கொடையாரால் கொடுக்கப்பட்டது என்ற விவரத்தைக் கட்சிகளோ, வாக்காளர்களோ வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லை.
ஜேட்லியின் வினோத விளக்கம்
“மக்கள் அரசியல் கட்சிகளுக்குக் காசோலைகள் மூலமாக நன்கொடைகளை வழங்க விரும்புகிறார்கள். ஆனால், தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த அச்சப் படுகிறார்கள். தேர்தல் நிதிப் பத்திரங்களைப் பயன்படுத்தினால் நேர்மையான நன்கொடை முறை, நன்கொடையாளர்கள் பற்றிய ரகசியங் களைப் பாதுகாப்பது என இரண்டையும் சாதிக்க முடியும்” என்று அருண் ஜேட்லி கூறியிருக்கிறார். எனினும், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் இந்த முயற்சியால் தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. வாக்காளர் பத்திரங்கள் வாங்கு வதற்குப் பான் கார்டு அல்லது ஆதார் எண் அவசியமில்லை என்பது மேலும் மேலும் சந்தேகங்களையே வளர்க்கிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலமாக கருப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொன்ன மோடி அரசு, அரசியல் கட்சிகளின் தேர்தல் நிதி விவாகரத்தில் அதற்கு நேரெதிராக நடந்து கொள்கிறது.
நன்கொடைகளைப் பணமாகப் பெறுவது முற்றிலுமாகத் தடைசெய்யப் பட்டு வங்கிகளின் வழியாக மட்டுமே நிதி யளிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்து வதன் மூலம் வெளிப்படைத்தன்மை உரு வாகும் என்று மோடி அரசு தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால், அதற்காக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை களால் தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே உள்ளன. அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரங்களுக் காகத் தனியார் நிறுவனங்களைப் பெருமளவில் சார்ந்திருக்கும்போது, கட்சி களால் அரசியல்ரீதியில் சுதந்திரமாக முடி வெடுக்க முடியுமா, ஆட்சிப் பொறுப் பில் அமரும்போது மனச்சாய்வுகள் இல்லாமல் செயல்பட முடியுமா என்ப தெல்லாம் ஜனநாயக ஆட்சிமுறை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் முக்கிய சவால்கள். மோடி அரசு இப்போது மேற்கொண்டிருக்கும் ‘சீர்திருத்தங்கள்’ அந்தச் சவால்களின் சுமையை அதிகரிக்கின்றனவே அன்றி குறைக்கவில்லை!
செல்வ புவியரசன்
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT