Published : 04 Dec 2013 12:00 AM
Last Updated : 04 Dec 2013 12:00 AM
கிறிஸ்துமஸும் புத்தாண்டும் நெருங்குகிறது. மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலம். கிறிஸ்துமஸுக்காகவும் புத்தாண்டுக்காகவும் ஆடைகளையும் பரிசுகளையும் பண்டிகைக்கான பொருள்களையும் இனிப்புகளையும் பல்பொருள் அங்காடிகளில் வாங்கி மகிழ வேண்டிய நேரம். வாழ்க்கையில் நம்மைவிட வசதிக் குறைவாக வாழும் மக்களையும் நினைத்துப் பார்ப்பதற்குரிய நேரமும்கூட. உதாரணத்துக்கு: நாம் செல்லும் பல்பொருள் அங்காடிகளில் பணிபுரியும் ஊழியர்கள், நாம் வாங்கும் பொருள்களுக்கு பில்போட்டுப் பணம் வாங்கும் காசாளர் ஆகியோரைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம்.
சவால் நிறைந்த வாழ்க்கை
கடந்த சில பத்தாண்டுகளாகவே அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை சவால் நிறைந்ததாகவே இருந்துவருகிறது. அதிலும் குறிப்பாக சில்லறை வணிகத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு - அதாவது வால்-மார்ட், மெக்டொனால்ட் போன்ற நிறுவனங்களில் பணிபுரிகிறவர்களுக்கு - முன்னேற்றமே இல்லாமல் இருக்கிறது.
நிதி நெருக்கடிகள் இருந்தாலும்கூட 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட, அமெரிக்கா இப்போது மேலும் பணக்கார நாடுதான். ஆனால், மேற்பார்வையாளர் அல்லாத கடை ஊழியர்கள் போன்றவர்களின் ஊதியம், 1973-ம் ஆண்டு முதல் குறைந்தே வந்திருக்கிறது. இப்போது 30% குறைந்துவிட்டது.
இந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர், ஏழைகளுக்கு அரசு தரும் இலவச உணவு ஸ்டாம்புகளைத்தான் நம்பியிருக்கிறார்கள். அது கிடைத்தால், குழந்தைகளுக்குத் தாராளமாக உணவு கொடுக்கிறார்கள். அப்படியானால், மருத்துவச் செலவுக்கு? - ஆம், நாம்தான் அவர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். குடியரசுக் கட்சியினர் விரும்புவதுபோல இந்த உணவு ஸ்டாம்பு திட்டங்களை நிறுத்திவிடாமல், அவற்றை மேலும் பயனுள்ள வகையில் நாம் விரிவுபடுத்த வேண்டும். சுகாதாரச் சேவைகளை அனைவருக்கும் வழங்கும் சீர்திருத்தத்தை வலதுசாரிகள் தீவிரமாக எதிர்த்தாலும் நாம் வலுப்படுத்த வேண்டும்.
உயர்த்துவது நல்லது
முதலில் சில உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்ச தேசிய ஊதியம் சில ஆண்டுகளுக்கு முன்னால் உயர்த்தப்பட்டாலும், வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால் அது மிகமிகக் குறைவு. சராசரி ஊதிய அளவிலும் விலைவாசி உயர்வின் பின்னணியிலும் பார்க்கும்போது இது புலப்படும். அமெரிக்காவிலேயே மிகக் குறைந்த சம்பளத்துக்கு யார் வேலைசெய்கிறார்கள்? நான் முதலில் குறிப்பிட்டபடி பல்பொருள் அங்காடிகளிலும் உணவுப்பண்டக் கடைகளிலும் வேலை செய்கிறவர்கள்தான்.
சம்பளத்தை உயர்த்தினால் வெளிநாட்டவர்களின் கடும் போட்டி காரணமாக அந்த வேலை வெளிநாடுகளுக்குப் போய்விடும் என்ற வழக்கமான பூச்சாண்டி இங்கே எடுபடாது. ஏனென்றால், பர்கர் சாப்பிடுவதற்காகவும், மீன் வறுவல் சாப்பிடுவதற்காகவும் விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக அமெரிக்காவிலிருந்து யாரும் காரில் சீனாவுக்குப் போக முடியாது. என்ன விலையானாலும் அவற்றையெல்லாம் இங்கேதான் சாப்பிட்டாக வேண்டும். எனவே, இவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைத் தாராளமாக உயர்த்தலாம்.
சர்வதேச அளவில் போட்டியில்லை என்றாலும், இவர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதற்காகச் சட்டம் இயற்றியே உதவி செய்துவிட முடியுமா? அப்படிச் செய்தால் இயற்கையான பொருளாதார விதியை (தேவை - அளிப்பு தொடர்பானது) நாம் மீறுவதாக ஆகிவிடாதா? ‘சந்தைத் தேவதைகள்’ இந்த தெய்வக் குற்றத்துக்காக நம்மைத் தண்டித்துவிடாமல் போகுமா? ஊதியத்தை உயர்த்தினால் என்ன ஆகும் என்பதற்கு நம்மிடையே உள்ள சான்றுகளே இந்தக் கேள்விகளுக்கு விடையாக அமையும். அந்தச் சான்றுகளும் நம்முடைய பொருளாதாரத்துக்கு நன்மை தரும் சான்றுகள்தாம். குறைந்தபட்ச ஊதியத்தைச் சற்று உயர்த்துவதால், ஊழியர்களின் ஊதியம் கணிசமாக உயரும், அதே சமயம் வேலைவாய்ப்பை எந்த வகையிலும் அது பாதிக்காது.
இன்னொரு ஒபாமா, இன்னொரு அமெரிக்கா
இது எப்படி நல்ல சான்று என்பதை மேலும் ஆராய்வோம். சாதாரணமாக, பொருளாதார ஆய்வுகள் அனைத்துமே சோதனைச் சாலையில் நடத்தப்படுபவை அல்ல என்பதால், அது ஒரு குறையே. உதாரணத்துக்கு: பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அதிபர் ஒபாமா எடுத்ததால், நம்முடைய பொருளாதாரத்துக்கு என்ன ஆனது என்று நம்மால் பார்க்க முடிகிறது. அப்படிப் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் என்னவாகியிருக்கும் என்று பார்க்க இன்னொரு அமெரிக்காவோ இன்னொரு ஒபாமாவோ இன்னொரு சந்தையோ கிடையாது. எனவே, எடுத்ததால் என்ன நன்மை, எடுக்காவிட்டால் என்ன தீமை என்று முடிவுகளைக் கண்டுபிடிக்க முடியாது.
குறைந்தபட்ச ஊதியத்தைப் பொருத்தவரை பல உதாரணங்களைக் கூறலாம். அமெரிக்காவிலேயே ஒரு மாநிலம் ஊதியத்தை உயர்த்தும்போது, பக்கத்து மாநிலம் அப்படி உயர்த்தாமலேயே இருப்பது உண்டு. குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதால் மோசமான விளைவுகள்தான் ஏற்படும் என்றால், மாநிலங்களுக்கு மாநிலம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தெரிந்துவிடும். அப்படி எதுவும் நடந்ததில்லை.
எனவே, குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது எல்லா வகையிலும் பொருளாதாரத்துக்கும் ஊழியர்களுக்கும் நல்லதுதான். சில வேளைகளில் சில தொழில்களுக்கு அது பாதகமாக இருந்திருக்கக்கூடும். ஆனால், நாம் பெரும்பாலான மக்களைப் பற்றித்தான் பேசுகிறோம்.
10.10 டாலர்கள்
இப்போது அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 7.25 டாலர்கள் என்ற கணக்கில் குறைந்தபட்ச ஊதியம் கணக்கிடப்படுகிறது. இதை ஒரு மணி நேரத்துக்கு 10.10 டாலர்களாக உயர்த்த வேண்டும் என்று பொருளாதாரக் கொள்கை வகுப்புக்கான நிறுவனம் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இப்படி ஊதியம் உயர்த்தப்பட்டால் அது 3 கோடி ஊழியர்களுக்குப் பலன்தரும். பெரும்பாலானவர்களுக்கு அது நேரடியாகவும் மற்றவர்களுக்கு மறைமுகமாகவும் பலன் கொடுக்கும். தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்ந்தால் மேலாளர், மேற்பார்வையாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஊதியம் உயரும்.
ஏன் உயர்த்த வேண்டும்?
விலையை நிர்ணயிப்பதைப் போல ஊதியத்தையும் குறைந்தபட்சம் இவ்வளவு என்று நிர்ணயிக்க வேண்டும் என்றாலே, பல பொருளாதார அறிஞர்களுக்கு வேம்பாகக் கசக்கிறது. அப்படி ஊதியத்தை நிர்ணயிப்பது பொருளாதாரத்துக்கு நல்லது என்றாலும், அவர்கள் விரும்புவதில்லை. இவர்களில் சிலர் தொழிலாளர்களின் நலனில் அக்கறைகொண்டு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை விரும்புவதில்லை. தொழிலாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக ஊதியத்தை உயர்த்துவதைவிட, குறைந்த விலையில் சாப்பாடு போன்ற சலுகைகளை வேண்டுமானால் வழங்கலாம் என்று கூறுவோரும் உண்டு. ஈட்டிய ஊதியம் மீதான வரிச் சலுகை போன்றவற்றை வழங்கலாம் என்று சிலர் கூறுவதுண்டு. உண்மையிலேயே இந்தச் சலுகை, குறைந்த ஊதியக்காரர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. இது மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும்.
குறைந்தபட்ச ஊதிய உயர்வும் இந்த வரிச் சலுகையும் ஒன்றுக்கொன்று அனுசரணையாக இருப்பவையே தவிர, ஒன்றுக்கு இன்னொன்று மாற்று அல்ல. இதில் ஏதாவது ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு இன்னொன்றைக் கைவிட்டுவிடக் கூடாது. இரண்டுமே மேற்கொள்ளப்பட்டால் தொழிலாளர்களுக்கு அது மிகுந்த நன்மையைத் தரும். இந்த இரண்டையுமே அதிகப்படுத்த வேண்டும். ஆனால், இப்போதுள்ள அரசியல் சூழலைக் கவனிக்கும்போது, நாடாளுமன்றத்தில் அத்தகையதொரு சட்டம் இயற்றப்படுவதற்கு வாய்ப்பு கிடையாது என்று தெரிகிறது. வெளியிலிருந்துதான் அதற்கான அழுத்தம் தரப்பட வேண்டும்.
மக்களுடைய ஆதரவு அதிகமாக இருந்தால் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆதரவு ஜனநாயகக் கட்சியினரிடமிருந்தோ சுயேச்சைகளிடமிருந்தோ மட்டும் வருவதல்ல... குடியரசுக் கட்சியினரிடமிருந்தும் பழமைவாதிகளிடமிருந்தும்கூட வருகிறது. அனைத்துத் தரப்பினருமே ஊதியம் உயர்த்தப்படுவதை வரவேற்கின்றனர். குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்துவது பெரும்பாலான அமெரிக்கர்களுக்குத்தான் பலன் அளிக்கும், அது அரசியல்ரீதியாகச் சாத்தியமும்கூட. அதற்கு நாம் முயற்சி செய்வோம்.
- © நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT