Published : 14 Apr 2017 10:59 AM
Last Updated : 14 Apr 2017 10:59 AM
இந்த ஆண்டிலிருந்து அம்பேத்கரின் பிறந்தநாள், தேசிய தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. நீராதாரங்களை நிர்வகிப்பதன் அவசியங்களை மக்களுக்கு உணர்த்தும் வகையில் தேசிய தண்ணீர் தினம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வைஸ்ராய் ஆட்சிக்காலத்தில் 1942-46 ஆண்டுகளில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கரின் பொறுப்பில் நீர்ப்பாசனத் துறையும் இருந்தது. அந்த அடிப்படையில் நீர் மேலாண்மையின் முன்னோடியாக அம்பேத்கரை அடையாளப்படுத்துகிறது மத்திய அரசு. அம்பேத்கருக்கும் தண்ணீருக்குமான உறவில் அது ஒரு புள்ளி மட்டுமே. தண்ணீரைப் பெறுவது ஓர் அரசியல் உரிமை, ஆனால் அது ஒடுக்குமுறையின் கருவியாகவே உபயோகப்படுத்தப்பட்டுவருகிறது என்பதை அம்பேத்கர் ஆதாரங்களோடு விளக்கியிருக்கிறார். அதுவே அவருக்கும் தண்ணீருக்குமான தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய அம்சம்.
ஒடுக்குமுறையின் கருவி
அம்பேத்கரின் பிரபலமான புத்தகங்களில் ஒன்று, `சாதியை அழித்தொழித்தல்’. அதில் இந்தியா முழுவதும் தலித்துகளுக்கு தண்ணீரைப் பெறும் உரிமை எப்படியெல்லாம் மறுக்கப் படுகிறது என்பதை அவர் பட்டியலிட்டிருக்கிறார்.
1928-ல் மத்திய இந்தியாவில் தலித்துகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறி நடக்கும்போது கிராமத்துக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டனர். 1935-ல் குஜராத்தில் தலித் பெண்கள் தண்ணீர் எடுப்பதற்கு உலோகக் குடங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தடுக்கப்பட்டனர். தடையை மீறி உலோகக் குடங்களைப் பயன்படுத்திய பெண்கள் தாக்கப்பட்டனர்.
தலித்துகள் மட்டுமல்ல, அவர்கள் வளர்த்துவந்த கால்நடைகள்கூட பொது நீர்நிலைகளில் நீர் அருந்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகைச் செய்திக் குறிப்புகள், பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளுக்கு சமர்ப்பித்த கோரிக்கை மனுக்கள் ஆகியவற்றையெல்லாம் ஆதாரங்களாகக் காட்டி தலித்துகளுக்கு நீர் பெறும் உரிமை மறுக்கப்பட்டதை அம்பேத்கர் விளக்கியிருக்கிறார். பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூட அனுமதிக்காத நீங்கள், அரசியல் அதிகாரத்திற்கு அருகதை உள்ளவர்கள்தானா என்ற அம்பேத்கரின் கேள்வி இன்றைய சூழலுக்கும் பொருத்தமாகவே இருக்கிறது.
தண்ணீரைப் பெறுவது அடிப்படை உரிமை
அரசியல் சட்ட விவாதத்தின்போது அம்பேத்கர் சிறப்புக் கவனம் எடுத்துக்கொண்ட விஷயங்களில் தண்ணீர் உரிமையும் ஒன்று. சாதி, சமயம், பாலினம் என்று பாகுபாடுகள் காட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி அவர் முன்வைத்த வரைவில் நீர் உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆறுகள், குளங்கள், கிணறுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் மனிதர்களிடையே பாகுபாடு கூடாது என்று அவரது வரைவு அழுத்தம் கொடுத்தது.
சட்டத்தினாலன்றி வேறு எந்தவொரு காரணத்தாலும் பொதுப் பயன்பாட்டுக்கான கிணற்றிலும் நீர்நிலைகளிலும் ஒருவர் தண்ணீர் எடுப்பதைத் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அவர் முன்வைத்த வரைவுதான் அரசியல் சட்டத்தின் ஷரத்து 15-ஆக வடிவம் கண்டுள்ளது. ஷரத்து 15(2)-ன்படி, பொதுப் பயன்பாட்டுக்காகப் பொது நிதியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள நீர்நிலைகள் அல்லது கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்று அடிப்படை உரிமையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அரசியல் சட்ட விவாதத்தின்போது தண்ணீரைப் பயன்படுத்தும் உரிமையை வலியுறுத்தி அவர் வாதாடியபோது அதற்கு ஆதாரமாகக் காட்டியது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளைத்தான். மதராஸ் மாகாண வருவாய் வாரியப் பதிவுகள் எண். 723-ன்படி (நவம்பர் 5, 1892) வட தமிழகத்தின் தலித்துகளுக்கு நீர் பெறும் உரிமையில் பாகுபாடு காட்டப்பட்டது உறுதியாக தெரிந்தது. அவர்களோடு முரண்பாடு வரும்போதெல்லாம் அவர்களது வயல் வரப்புகளை வெட்டி தண்ணீரை வெளியேற்றுவது வழக்கமாக இருந்திருக்கிறது.
குஜராத் நிலவரம்
இதெல்லாம் எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய கதை, இப்போது அதைப் பற்றி பேசுவது சரியா என்ற கேள்வி எழலாம். அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டபோதும்கூட இன்னும் தண்ணீரைப் பயன்படுத்தும் உரிமையில் பாகுபாடுகள் நீங்கவில்லை என்பதுதான் உண்மைநிலை. யுனிசெப் நிறுவனம் 2013-ல் ‘இந்தியாவில் நீர்வளம்- நிலையும் வாய்ப்புகளும்’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தியாவைப் பொறத்தவரை, தண்ணீர் என்பது ஓர் அரசியல் பிரச்சினையாகவே இன்னும் இருக்கிறது. வகுப்பு, சாதி, பாலினம் முதலிய வேறுபாடுகள் நீரைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பில் பாகுபாடு நிலவ காரணமாக இருக்கின்றன.
இந்தச் சிக்கலுக்கு இதுவரை கண்டறியப்பட்டுள்ள தீர்வு, குடிநீர்க் குழாய் இணைப்புகள். இந்தியக் கிராமப்புறங்களில் தலித்துகள் தற்போது குடிநீர் பெறுவதில் பாகுபாடு கணிசமாகக் குறைந்திருக்கிறது என்றால் அது சமூக மனமாற்றத்தால் அல்ல, குடிநீர்க் குழாய் இணைப்புகளின் வழியாகத்தான். ஆனால் இந்த தொழில்நுட்பங்களின் துணைகொண்டு தண்ணீர்ப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்துவிட முடியாது. ஏனென்றால், உலக மக்கள்தொகையில் 16% பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். ஆனால் உலக நன்னீர் வளத்தில் இந்தியாவின் பங்கு வெறும் 4% மட்டும்தான்.
யுனிசெப் அறிக்கையில், குஜராத்தில் 2001-ல் தொடங்கப்பட்ட தண்ணீர் மற்றும் கழிவு அகற்றல் மேலாண்மை அமைப்பின் செயல்பாடுகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. குஜராத்தின் கிராமப்புறங்களில் நீர்ப் பகிர்வுத் திட்டங்களை சமூக பங்கேற்புடன் நடத்துவதுதான் இந்த அமைப்பின் நோக்கம். ஆனால் அங்கும்கூட தலித்துகள் இனத்தவர்கள் பொது நீர்நிலைகளைப் பயன்படுத்த முடியாத நிலையே நீடிக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.
உரிமையா, மேலாண்மையா?
அனைவரும் சரிசமமாக நீரைப் பயன்படுத்தும் உரிமையைத்தான் அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால் மோடியின் அரசோ அவரை நீர் மேலாண்மைத் திட்டங்களை வகுத்த முன்னோடி என்று மட்டுமே சித்தரிக்கிறது. ஒருவர் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்திய கொள்கைகளை விலக்கி வைத்துவிட்டு, அவரிடமிருந்து இணக்கமான அடையாளத்தை மட்டும் எடுத்தாள்வது மோசமான அரசியல் தந்திரம்.
அம்பேத்கரின் பெயரில் பணமில்லா பரிவர்த்தனைக்கான ‘பீம் ஆப்’ என்ற செல்போன் செயலியையும்கூட மோடி அறிமுகப் படுத்தியுள்ளார். தான் பிரதமராவதற்குக் காரணமே அம்பேத்கர் தான், அவர்தான் தனக்கு உந்துசக்தியாக இருந்தார் என்று அம்பேத்கர் சர்வதேச மைய அடிக்கல் நாட்டு விழாவின்போது மோடி அவருக்குப் புகழாரம் சூட்டினார். அம்பேத்கர் தலித்துகளின் தலைவர் மட்டுமல்லர், மனித குலத்தின் தலைவர் என்ற மோடியின் வார்த்தைகள் 100% உண்மை.
அம்பேத்கர் பல பரிமாணங்களைக் கொண்ட மாபெரும் ஆளுமை. அவரது பொருளாதாரச் சிந்தனைகள் மோடிக்கு உவப்பாக இருக்கலாம். ஆனால் அம்பேத்கரின் ஆரம்பக்கால பொருளியல் ஆய்வுகளைக் காட்டிலும் அவர் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து மேற்கொண்ட சமூகப் பகுப்பாய்வுகளே முக்கியமானவை.
அம்பேத்கரின் பொருளியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, அவரின் சமூகப் பகுப்பாய்வுகளையும் அவர் முன்னிறுத்திய சமய தத்துவங்களையும் மோடி கண்டுகொள்ளாமலே விட்டுவிடுகிறார். அம்பேத்கருக்கும் நீருக்குமான தொடர்பும்கூட அப்படித்தான். அம்பேத்கர் வலியுறுத்தியது நீர் உரிமை. மோடி பேசுவது நீர்மேலாண்மை.
செல்வ புவியரசன்
puviyarasan.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT