Last Updated : 17 Dec, 2013 09:47 AM

 

Published : 17 Dec 2013 09:47 AM
Last Updated : 17 Dec 2013 09:47 AM

பட்டங்களைச் சுமக்கும் படைப்பாளிகள்

பட்டப்பெயர்களை வழங்குவதில் தமிழர்களுக்கு இணையாக உலகில் யாரையும் குறிப்பிட முடியாது. அதே மாதிரி பொய்யாக வழங்கப்பட்ட பட்டங்களைப் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வதிலும், அந்தப் பட்டப் பெயர்களை மேடையில் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்று கவனிப்பதிலும் தமிழர்களுக்கு இணை யாருமில்லை. பட்டம் கொடுப்பவருக்கும் தாங்கள் சொல்கிற வார்த்தை பொய் என்று தெரியும். பெறுபவருக்கும் தெரியும் அச்சொல் பொய் என்று. பிறகு ஏன் பட்டங்களைப் போட்டுக்கொள்கிறார்கள்?

பட்டங்களால் நாம் சாதித்தது

யாருக்கு வெட்கம் இருக்கிறதோ இல்லையோ நிச்சயமாக எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டும். பெயருக்கு முன்னால் பட்டங்களைப் போட்டுக்கொள்வதோடு, பத்திரிகைகளில், சுவரொட்டிகளில், டிஜிட்டல் பேனர்களில் பட்டப்பெயர் சரியாக அச்சிடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து மகிழ்பவர் எழுத்தாளர் அல்ல. நாம் நம்முடைய எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் வழங்கிக் கௌரவித்த பட்டப்பெயர்கள் எவ்வளவு? தங்களுக்குத் தாங்களே பட்டப்பெயர்களைச் சூட்டிக்கொண்டு திரிகிற கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் எவ்வளவு?

பட்டங்களை மேலோட்டமாகப் பார்வையிட்டாலே தமிழில் எத்தனை உலக மகா கவிஞர்களும் அகிலத்தின் சிறந்த எழுத்தாளர்களும் பிரபஞ்ச சிந்தனையாளர்களும் உலகப் பெரும் அறிஞர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியலாம். இப்படி ஆயிரக்கணக்கான கவிஞர்கள், புலவர்கள், அறிஞர்கள் வாழ்கிற நாட்டில், மொழி எப்படி வளம் பெற்றிருக்க வேண்டும்? ஆனால், மொழியும் மொழி அறிவும் சிறுமைப்பட்டுப் போனதுதான் கடைசியில் நடந்திருக்கிறது.

ஒரே பட்டத்தை…

ஒரே பட்டத்தைப் பலரும் போட்டுக் கொள்கிறார்கள். கவிஞர், புலவர், பாவலர், அறிஞர் என்ற பட்டப்பெயர்கள் நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது நபர்களுக்குப் பொருந்துவதில்லை. கைக்குழந்தைக்கு கோட்சூட் போட்டுவிட்ட மாதிரி இருக்கிறது. பட்டப்பெயர்களை அச்சிடாதீர்கள், மேடையில் பயன்படுத்தாதீர்கள், மீறி அச்சிட்டால், மேடையில் புகழ்ந்தால் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்று சொன்ன தமிழ் எழுத்தாளர்கள் உண்டா? அவ்வாறு அச்சிட்டதற்காக நிகழ்ச்சிக்குப் போக மறுத்த எழுத்தாளர்கள் உண்டா? “அவர் எழுத்தில், பேச்சில் தமிழன்னை விளையாடுவாள்” என்றும், “தமிழன்னை அவருக்கு உயர்ந்த அரியாசனம் தந்திருக்கிறாள்” என்றும் மேடையில் புகழ்ந்தபோது கூச்சத்தில் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்த எழுத்தாளர்கள் எத்தனை பேர்?

பாரதி தன் பெயருக்கு முன்னால் ‘மகாகவி’ என்று போட்டுக்கொண்டாரா? பாரதிதாசன் ‘புரட்சிக் கவிஞர்’ என்று போட்டுக்கொண்டாரா? பட்டங்கள் மக்கள் தருவது, காலம் தருவது. நமக்கு நாமே சூடிக்கொள்வதில்லை. துதிபாடிகளால் தரப்படுவதில்லை. அன்றாடம் பயன்படுத்தும் சொற்களுக்கு மீறி அடுத்த சொல்லைத் தேடவோ பயன்படுத்தவோ உருவாக்கவோ இயலாத பலர் இன்று பெரும் கவிஞர்களாக உலாவருகிறார்கள்.

சினிமாவுக்குச் சில பாடல்கள் எழுதியவர் நமக்கு அற்புதமான கவிஞர் என்றால், ஐம்பெரும் காப்பியங்களைத் தந்தவர்களுக்கு என்ன பெயர்? எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தந்தவர்களுக்கு என்ன பெயர்? ஐவகை நிலங்களைப் பிரித்து, கூடுதல், பிரிதல், காத்திருத்தல், பதற்றமடைதல், வருத்தப்படுதல் என்று ஐவகை உணர்ச்சிகளாகப் பிரித்து மனித வாழ்வின் தமிழ்மொழியின் வற்றாத ஆச்சரியங்களாக உருவாக்கித் தந்துவிட்டுப் போனவர்களுக்கு என்ன பெயர்? திருவள்ளுவரும் புலவர், ‘வானமும் நிலவும் போல, வாசுகியும் வள்ளுவனும் போல, பூவும் நாறும்போல எப்போதும் இணைந்தே இருங்கள்’ என்று திருமணத்துக்கும் பிறந்த நாளுக்கும் வாழ்த்து மடல் எழுதித் தருபவரும் நமக்குப் புலவர்தான்.

திருவள்ளுவர் யார்?

தரமான ஒரே ஒரு கவிதை நூலைக்கூட எழுதாதவர்கள் கவிதை உலகின் மன்னர்கள் எனப் பட்டம் சூட்டிக்கொண்டால் திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், கபிலர் போன்றவர்கள் யார்? பிழைப்பு நடத்த பி.ஏ. தமிழ் படித்தவரும், ஒரு கட்டுரையைப் பிழையின்றி எழுதத் தெரியாதவரும் ‘புலவர்’ என்றால், கணியன்பூங்குன்றன், நக்கீரர், பரணர் போன்றவர்கள் யார்? ஒரே ஒரு நூலை மட்டும் அதுவும் முழுமையாக உள்வாங்காமல் படித்துவிட்டு வழிகாட்டி ஆசிரியரிடம் ஐந்தாயிரம் பத்தாயிரம் என்று கொடுத்துவிட்டு , ஆய்வேடு என்ற குப்பையில் கையெழுத்து வாங்கி பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துப் பட்டம் பெறுகிறவர் ஆய்வியல் நிறைஞர் நமக்கு.

திராவிட மொழிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு அரிய உண்மைகளை வெளிப்படுத்திய பர்பலோவும், வையாபுரிப் பிள்ளையும், கா. சிவத்தம்பியும் தமிழ் அறிஞர்கள். கல்லூரி ஆண்டு விழாக்களில் கீழ்த்தரமாக நகைச்சுவை நிரம்பப் பேசுபவரும் தமிழ் அறிஞர். அறிஞர் என்றால் என்ன என்பது குறித்து நாம் அறிந்து வைத்திருப்பதென்ன? தமிழர்களிடம் இருந்த வெட்க உணர்ச்சி எப்போது செத்துப்போயிற்று?

‘ஆகச் சிறந்த’ பட்டங்கள்

நவீன எழுத்தாளர்கள், கவிஞர்களையும் இந்த வியாதி விட்டுவைக்கவில்லை. “தமிழ் நவீன கவிஞர்களில் இவர் முக்கியமானவர்”, “நவீன தமிழ்க் கவிதையின் ஆகச்சிறந்த கவிஞர்”, “தமிழின் முக்கியமான கவி ஆளுமை இவர்”, “இவருடைய கவிதை-தமிழ்க் கவிதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது”, “இவர்தான் தமிழின் முக்கியமான எழுத்தாளுமை”, “இவர்தான் நவீன தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவர்”, “தமிழின் ஆகச் சிறந்த கவிஞர்”, “இவர்தான் நாம் வாழும் காலத்தின் கலைஞன்”, “இவரை நீக்கிவிட்டு இன்று தமிழ் இலக்கியம் பேச முடியாது”, “தற்காலத்தில் இவர்தான் மாபெரும் கலைஞராகத் திகழ்கிறார்.”

இப்படிப் பல அடைமொழிகள். தமிழில் ஒரு பத்தி தவறின்றி, அர்த்தச் செறிவுடன் எழுதத் தெரியாதவர்கள் மகா கலைஞர்களாகப் போற்றப்படுகிறார்கள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், புலவர்கள், அறிஞர்கள் தங்களிடம் உள்ள பணத்தை அநாவசியமாகச் செலவு செய்கிறார்களா? பணத்தைவிட, தங்கத்தைவிட, வைரத்தைவிட எழுத்தாளர்களுக்கு மதிப்பு வாய்ந்தது எது? சொற்கள். அதை எப்படி வீணடிக்கிறார்கள், உயிரிழக்கச் செய்கிறார்கள்? சொற்களை வீணடிப்பவர்களும், அர்த்தமிழக்கச் செய்பவர்களும்தான் கவிஞர்களா, எழுத்தாளர்களா?

படைப்புகளுக்குப் பதிலாகப் பட்டங்களைச் சுமக்கிற காலம் இது. வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு எல்லாவற்றையும் கேளிக்கைப் பொருளாக்கியிருக்கிறது நிகழ்காலம். நம்முடைய எழுத்தாளர்களும் கவிஞர்களும் புலவர்களும் பாவலர்களும் அறிஞர்களும் சுமந்திருக்கிற பட்டங்களே அதற்குச் சான்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x