Published : 16 Oct 2013 01:04 PM
Last Updated : 16 Oct 2013 01:04 PM
முதலில் ஒரு பள்ளி ஆசிரியை கொலை. இப்பொழுது கல்லூரி முதல்வர். இரண்டும் தண்டனை பெற்ற மாணவர்களின் வெறிச்செயலால் நிகழ்ந்த கொடூரங்கள்.
உளவியல் ஆலோசகர்கள் பள்ளி/ கல்லூரிகளில் கட்டாயம் தேவை என்கிற குரல் வழக்கம் போல சில காலம் ஒலித்து ஓயும்.
உளவியல் ஆலோசகர்கள் நியமனம் பற்றி பேசுவதற்கு முன் இன்னும் சில தண்டனை கொடுத்து உயிர் விட்டவர்களின் கதைகளைப் பார்க்கலாம்.
சென்ற ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, தன்னால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தொழிலாளியின் கொடுவாளால்- இரவு உணவு சாப்பிடும் போது தன் இல்லத்திலேயே- உயிர் விட்டான் என் நண்பன் ராஜ ராஜேஸ்வரன். விருதுநகர் ராம்கோ சிமெண்டில் நடந்த பயங்கரம் இது. இதற்கு முன் கோவை ப்ரிக்காலில் இதே போன்ற சம்பவம். இருவரும் மனித வளத்துறை தலைவர்கள். இரண்டு சம்பவங்களும் மாருதியில் நடைபெற்ற படுகொலை அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்காதது பெறும் சோகம்.
ஆசிரியரோ மேலாளரோ- உயர் நிலையிலிருந்து யார் தண்டனை அளித்தாலும் அதை இயல்பாக எடுத்துக் கொள்வதும், அதனால் அவர்களின் உறவு நிலை பாதிக்கப்படாமல் இருந்ததும் முன்பொரு காலத்தில். அதை பொதுப்படையாக “கால மாற்றம்” என்று எடுத்துக்கொள்ளாமல் அது ஏன் என்று பகுப்பாய்தல் அவசியம்.
படிக்க, வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தாலே அரிது அப்போது. அதனால் ஒரு சார்புத்தன்மை இருந்தது. அதிகாரத்தை வணங்கும் கூட்டுக்குடும்ப முறை இருந்தது. மீறல்கள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தாலும் நெறி பின்பற்றப்பட்டது. அதிகாரத்தில் அனேகம் பேர் “முன் மாதிரிகளாய்” திகழ்ந்தார்கள். நியாயம் பெரிதும் மதிக்கப்பட்டது. பரஸ்பர அன்பும், மரியாதையும் அதிகம் இருந்தது. கல்வி/ தொழில் மையங்களில் சட்டமும், தண்டனையும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று பன்னாட்டு வியாபாரச் சூழலில் கல்வி, மருத்துவம், தொழில் எல்லாம் வர்த்தகம் மட்டுமே பிரதானமாக கொண்டு இயங்கும் இந்த நிலையில், ஆசிரியர்- மாணவர் மற்றும் மேலாளர்- பணியாளர் என இரு அடுக்குகளும் தீராத மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது தான் நிஜம். காரணங்கள் தான் வேறு வேறு. மனித உறவுகளை பேண அவசியமோ அவகாசமோ இல்லை. இது போன்ற சம்பவங்கள் நடக்காத நாட்களில் இதை ஒரு பொருட்டாகக் கூட யாரும் பேசுவதில்லை.
நம் படங்கள் நாயகர்கள் சரக்கடிப்பதையும், ஃபிகரை (பெண்ணினத்தின் தற்போதைய திரைப்பட அடையாளச் சொல்) துரத்தி கரெக்ட் பண்ணுவதையும், நண்பனுக்காக ஆளை போட்டுத்தள்ளுவதையும் தான் அதிகம் காட்டுகிறது.
நாம் குடியை அனுமதித்து விட்டு குற்றங்கள் பெருகி வருகிறது என்று ஒப்பாரி வைக்கிறோம்.
இன்றைய இளைஞர்களிடம் பணம் சம்பாதிப்பது மட்டுமே வெற்றி என்ற எண்ணமும், அதையும் வெகு சீக்கிரமே அடைய வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த லட்சியமும் இல்லை.
தவிர தொழில்நுட்பம், இருக்கின்ற கொஞ்ச நஞ்ச உறவுகளையும் சுருக்கி வருகிறது. மொபைல் வாங்குவதும், புது மொபைல் மாற்றுவதும் சமூக அந்தஸ்து தருகிறது இவர்களுக்கு. இந்த நிலையில் தன் உணர்வுகளை அறிந்து கொள்ளும் அறிவோ, உறவுகளை புரிந்து கொள்ளும் முயற்சியோ, சுய அலசலுக்கான ஆன்மிகத் தேடலோ, இலக்கியம்/ நல்ல திரைப்படம் பற்றிய ஆய்வோ, நல்ல மனிதர்களின் வழி நடத்தலோ இன்று பெரும்பாலும் பலருக்கு வாய்க்கவில்லை என்பதுதான் நிஜம்.
இந்த விளிம்பு நிலையில்தான் பலர் உள்ளனர். ஆசிரியர்- மாணவர் மற்றும் மேலாளர்- பணியாளர் என இரு அடுக்குகளுக்கும் இது பொருந்தும்.
குற்றம் நிகழ்வதற்கான செழுமையான மண்ணாக மாறி வருகிறது நம் சமூகம். இதில் குற்றவாளிகளைத் தண்டிப்பது மட்டும் குற்றங்களை க் கட்டுப்படுத்தாது.
உளவியல் ஆலோசனை உதவுமா?
உதவும்தான். ஆனால் எங்கிருக்கிறார்கள் ஆலோசகர்கள்? நம் தேவைக்கு ஏற்ற தகுதி வாய்ந்தவர்கள் மிக மிகக் குறைவு. இன்னொரு அபாயம் ஒன்று பெருகி வருகிறது. ஆசிரியர்களும் மேலாளர்களும் சில புத்தகங்கள் அல்லது வெறும் ஒரு நாள் பயிற்சி மேற்கொண்டு ஆலோசகர்கள் ஆகி விடுகிறார்கள்.
சமீபத்தில் நான் நடத்திய ஆலோசனை முகாமில் பங்கு கொண்டு என்னிடம் பேசிய ஒரு கல்லூரி முதல்வர் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது: “இத்தனை வருடங்களாக கவுன்சலிங் என்ற பெயரில் வெறும் அறிவுரைதான் செய்து வந்திருக்கிறேன் என்று இன்று புரிந்தது!”
தமிழகத்தில் எத்தனை கல்லூரிகளில் முறையான சைக்காலிஜிக்கல் கவுன்சலிங்க் படிப்புகள் உள்ளன? அவற்றை முடித்தவர்களுக்கு உடனே வேலை கிடைக்கிறதா? வருங்காலத் தேவைகளுக்கு ஏற்ற வல்லுனர்களை உற்பத்தி செய்ய என்னத் திட்டம்?
பள்ளிக்கூடங்களை கூட விடுங்கள். எல்லா தொழிற்சாலைகளிலும் ஆலோசகர்கள் உண்டா?
உற்பத்தித்திறனுக்குக் கொடுக்கும் பயிற்சியும் ஆலோசனையும் உறவுத்திறனுக்கு அளித்திருக்கிறோமா? ஒரு நல்ல உரையாடல் பல வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கும். இதை முழுதும் நம்பினால் ஏன் உரையாடல் திறனை வளர்க்கும் உளவியல் பயிற்சியை எல்லா மனித வள மேலாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுக்கத் தவறுகிறோம்?
ஆரோக்கியமான உரையாடல் நிகழ்த்தத் தவறியதால்தான் பல உயிர்களை இழந்து வருகிறோம்.
சம்பவம் நடந்தவுடன் எழும் கூச்சல் மெல்ல காற்றில் கரைகிறது.
சட்டத்தை வலுப்படுத்துதல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் குற்றத்தை தடுக்க எடுக்கும் எல்லா வளர்ச்சி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதலும்.
அற்புதமாக இயங்கும் பள்ளிகளும் கல்லூரிகளும் சட்டத்தாலும் கட்டுப்பாட்டாலும் மட்டும் கொண்டு வரப்பட்டவை அல்ல! அது மனித மூளைகளாலும் இதயங்களாலும் உருவாக்கப்பட்டவை.
“ஒரு பிரச்சினை என்றால் என்னிடம்தான் முதலில் சொல்லி என்ன செய்யலாம் என்று கேட்பான். நான் சொன்னால் கண்டிப்பாகக் கேட்பான்!” என்று ஒவ்வொரு பள்ளியிலும், பணியிடத்தில் இன்றும் சிலர் சொல்லிக் கேட்கிறோம். அவர்களிடம் உள்ள சூட்சமம் என்ன? அதை எல்லாரும் ஏன் செய்ய முடியவில்லை?
இன்று கம்ப்யூட்டர் எல்லா பாடத்தையும் சொல்லிக் கொடுக்கும். “மாதா பிதா கூகுள் தெய்வம்” என்று ஆகி வரும் காலத்தில் அன்பு செலுத்த, ஆலோசனை சொல்ல, அரவணைக்க, நம்பிக்கை வைக்க, பக்குவப்படுத்த.... ஆசிரியர்கள் தேவை.
ஆசிரியராக அறிவை விட அன்பு தேவை. இதை உணரும் காலத்தில் பள்ளிகளில் வன்முறை ஒழியும்.
தன்னை முழுமையாக ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்தும் மனிதனிடம் வன்முறையைக் காட்ட எந்த மாணவனுக்கும் மனம் வராது.
உலகில் ஐந்து சதவிகிதம் குற்றவாளிகள் என்றாலும் மீதமுள்ள 95% மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம் என்று நாம் அனைவரும் நம்மையே கேட்டுக்கொள்வோம்.
மனிதனும் தெய்வமாகலாம். மனிதன் மிருகமாகவும் ஆகலாம். அது பல நேரங்களில் அவன் உறவு கொள்ளும் சக மனிதர்களைச் சார்ந்தது.
இந்த கோர சம்பவங்களில் இரு பக்கமும் பாதிக்கப்பட்டவர்கள்தான். பள்ளி, கல்லூரி, தொழில் அதிபர்களுக்கு வெறும் அவப்பெயர் மட்டும் தான் அதிக பட்ச நஷ்டம். சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு...? அவர்கள் குடும்பங்களுக்கு...?
“உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை இன்று முடியலாம்...
முடிவிலும் ஒன்று தொடங்கலாம்...!”
இது கவிஞர் கண்ணதாசனின் பாடல்.
சின்ன உணர்வுக்காக பெரிய உறவையும் – உயிரையும்- இழக்காமல் இருக்க நம் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுப்போம்!
email: Gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT