Published : 24 Jun 2016 08:53 AM
Last Updated : 24 Jun 2016 08:53 AM
அமெரிக்காவுக்குப் பைத்தியம் பிடித்தால், உலக நாடுகளுக்கும் பைத்தியம் பிடிக்கிறது
ஆர்லாண்டோவில் நடந்த மனித குலத்தின் கொடூர சம்பவத்தைப் பற்றி இன்றைக்குப் பேச விரும்புகிறேன். ஆனால், அதற்கு முன்பாக ஹிரோஷிமாவைப் பற்றி - இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மே 27-ல் ஜப்பானில் அதிபர் ஒபாமா வழங்கிய ஆழமான உரையைப் பற்றிப் பேச விரும்புகிறேன். அதிபர் தேர்தல் பிரச்சார முழக்கங்களுக்கு இடையே கண்டுகொள்ளப்படாமல்போன உரை அது.
முதன்முறையாக, நம் அனைவரையும் கொன்றழிக்கும் ஆற்றல் ஒரு நாட்டின் மூலம் கைக்கொள்ளப்பட்டதன் அடையாளம் ஹிரோஷிமா என்று ஒபாமா குறிப்பிட்டார். “ஆனால், நாம் இன்றைக்கு நுழையும் உலகத்தில் சிறிய குழுக்கள், சொல்லப்போனால் நவீன ஆயுதங்கள் கொண்ட ஒரு தனிநபரால் நம் அனைவரையும் கொல்ல முடியும். எனவே, தொழில்நுட்பம் நம்மை எந்த இடத்துக்கு வழிநடத்திச் செல்கிறது என்பதன் தார்மிக விளைவுகளைப் பற்றி நாம் சிந்திக்கத் தொடங்குவது நலம்” என்றார் ஒபாமா.
ஹிரோஷிமா உணர்த்தும் உண்மை
“அறிவியல், கடல்கள் தாண்டியும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள வைக்கிறது. மேகங்களுக்கு மேலே பறந்து செல்ல வைக்கிறது. நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. அண்டவெளியை அறிய உதவுகிறது. அதேசமயம், அதே கண்டுபிடிப்புகள் மிக மோசமான உயிர்க்கொல்லி ஆயுதங்களாகவும் மாற முடியும்” என்று ஒபாமா குறிப்பிட்டார். “நவீன யுகத்தின் போர்கள் இந்த உண்மையை நமக்கு உணர்த்துகின்றன. ஹிரோஷிமா இந்த உண்மையை நமக்கு உணர்த்துகிறது. மனிதகுலம் தொடர்பான நிறுவனங்களில் சமமான வளர்ச்சியைக் கொண்டிருக்காத தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை அழித்துவிடும். அணுவைப் பிளக்கச் செய்யும் அறிவியல் புரட்சி ஒரு தார்மிகப் புரட்சியையும் கொண்டிருக்க வேண்டும்” என்றார் அவர்.
அதிபர் குறிப்பிட்ட பிரச்சினை, நம் காலத்தின் மிக முக்கியமான பிரச்சினை. அதிவேகமாக வளர்ந்துவரும் நமது தொழில்நுட்பத் திறன், பெரும் சேதத்தை ஏற்படுத்த தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் அது வழங்கும் பலம் ஆகியவற்றுக்கும் (முப்பரிமாண பிரின்டரைப் பயன்படுத்தி உங்களால் ஒரு துப்பாக்கியைத் தயாரித்துக்கொள்ள முடியும்), இந்த ஆற்றலைப் பொறுப்புடன் கையாள்வதற்கும் நிர்வகிப்பதற்குமான தார்மிக மற்றும் சமூக வளர்ச்சிக்கும் இடையில் அதிகரித்துக்கொண்டே வரும் வேறுபாடுதான் அந்தப் பிரச்சினை.
ஆர்லாண்டோ சம்பவம் தொடர்பாக நான் பேசுவது அந்த அடிப்படையில்தான். ஏராளமான அப்பாவி மக்களை ஒரு தனிநபரால் கொல்ல முடியும் என்ற சூழல் நிலவும் நிலையில், சமூக, சட்ட மாற்றங்கள் தொடர்பாக நாம் மறுபரிசீலனை செய்ய மறுக்கும் சூழலில், இதுபோன்ற சம்பவங்கள்தான் நடக்கும். ராணுவ பாணி துப்பாக்கிகளைத் தனிநபர்களும் வாங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தே கிறுக்குத்தனமானது. குடியரசுக் கட்சியிடம் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டம் தொடர்பாக அறிவார்த்தமான கருத்து இல்லாதது, இன்னும் மிகப் பெரிய படுகொலைச் சம்பவங்களுக்கு இட்டுச் செல்லும்.
அதேசமயம், முஸ்லிம் இளைஞர்கள் மேற்கத்திய நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களையும், இன்னும் சொல்லப்போனால், முஸ்லிம் நாடுகளிலேயே பிற முஸ்லிம் மக்களையும் கொல்ல, இஸ்லாம் மதத்திலிருந்தே தாக்கத்தையும் அனுமதியையும் பெறுவதைக் கடந்த ஆண்டுகளாகப் பார்த்துவருகிறோம்.
நான் முஸ்லிம் நாடுகளிலும் வசித்திருக்கிறேன். இஸ்லாம் மதத்தின் சாரம் இதுதான் என்று கருதும் அளவுக்கு முஸ்லிம் சமூகங்களின் மேன்மையான நாகரிகத்தை அனுபவித்திருக்கிறேன். அதேசமயம், அரபுலகம், பாகிஸ்தான், ஆப்கன் ஆகிய நாடுகளில் உள்ளவர்களால் வளர்த்தெடுக்கப்படும் தன்பாலின உறவாளர்களுக்கு எதிரான, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான, மத அடிப்படையில் கறாரான இஸ்லாமிய வடிவங்களுக்கும் முன்னர் குறிப்பிட்ட நாகரிகத்துக்கும் தொடர்பே இல்லை எனும் அளவுக்கு மிக மோசமான வன்முறைகளைப் பார்த்துவருகிறேன்.
சகிப்பின்மை அடிப்படையிலான இந்தக் கருத்தாக் கங்களை முன்வைக்கும் இணையதளங்கள், சமூக வலைதளங்கள், மசூதிகள் போன்றவை உலகின் எந்த மூலையிலும் இருப்பவர்களிடம் தாக்கம் செலுத்து கின்றன. இவையெல்லாம் முடிவுக்கு வரவில்லையெனில், பாரிஸிலோ, பிரஸ்ஸல்சிலோ, சான் பெர்னாடினோவிலோ அல்லது ஆர்லாண்டாவிலோ அடுத்த தாக்குதல்களை நாம் எதிர்பார்க்க வேண்டியதுதான்.
இனியும் வன்முறை வேண்டாம்
உள்ளுக்குள்ளிருந்தே இவற்றையெல்லாம் நிறுத்தக் கூடிய ஒரே விஷயம்: முஸ்லிம் அரசுகள், மதகுருக்கள், மக்கள் ஆகியோர் இதுபோன்ற நடவடிக்கைகளை அங்கீகரிக்க மறுப்பதுதான். ஒரு கிராமத்தில் உள்ள மதகுரு, “இனியும் வன்முறை வேண்டாம்” என்று சொன்னால் போதும். ஆனால், இவையெல்லாம் எந்த அளவுக்கு நடக்க வேண்டுமோ அந்த அளவுக்கு நடக்கவில்லை.
இறுதியாக, தனிநபர்கள் பெரும் சக்திவாய்ந்தவர் களாக மாறும் காலகட்டத்தில், நமது (அமெரிக்க) அரசு கண்காணிப்பு விஷயத்தில் தனக்கு இருக்கும் அனைத்து சக்திகளையும் - தகுந்த நீதியமைப்பின் கீழ் - பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடும் பயங்கர வாதிகளைக் கண்காணிக்கவும் கைதுசெய்யவும் வேண்டும். கண்காணிப்பிலிருந்து தப்புவதற்கான அனைத்து சாதனங்களும் இந்தக் கயவர்களிடம் தற்போது ஏராளமாக இருக்கின்றன.
பின்வரும் வார்த்தைகளால் தனது ஹிரோஷிமா உரையை நிறைவுசெய்தார் ஒபாமா. அந்த வார்த்தைகள் ஆர்லாண்டோ சம்பவத்துக்கும் பொருந்தும். “இறந்தவர்கள் அனைவரும் நம்மைப் போன்றவர்கள். மேலும், போர்களை அவர்கள் விரும்பவில்லை. மாறாக, அறிவியலின் அதிசயங்கள் மனித வாழ்வை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அவர்கள். மனித வாழ்வை அழிப்பதை அல்ல”.
தனிநபரின் பலத்தைத் தொழில்நுட்பம் அதிகரிக்கும் இந்தக் காலகட்டத்துக்கு ஏற்ற முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். சமூகப் பிரக்ஞை கொண்ட துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டம், சமூகப் பிரக்ஞை கொண்ட பாலின சமத்துவம், தனிநபர் சட்டங்கள் நமக்குத் தேவை. ஆனால், அதற்குச் சமூகப் பிரக்ஞை கொண்ட தலைவர்கள்தான் நமக்குத் தேவை.
சமூகப் பிரக்ஞை வேண்டும்
குண்டுபோடுவதன் மூலம், எல்லைச் சுவர் எழுப்புவதன் மூலம், அவமதிப்புகள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்று கருதும் தலைவர்கள் அல்ல. ஆர்லாண்டோ சம்பவம் நடந்த சமயத்தில் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள். மத்தியக் கிழக்கு நாடுகள் மீது குண்டு வீச உத்தரவிட்டிருப்பார்; தனிமைப்படுத்தப்படும் உணர்வும், பயமும் அமெரிக்க முஸ்லிம்களிடம் உருவாகியிருக்கும்; அமெரிக்காவுடன் முழுமையான போரில் இறங்கிவிட்டதாக ஐஎஸ் அமைப்பு குதூகலித்திருக்கும்; இதைச் சாக்காக வைத்து, அமெரிக்காவில் உள்ள மசூதி மீதி அமெரிக்க சமூகம் குண்டுவீசும் கிறுக்குத்தனம் நிகழும். எதிர்வினையாக உலகமெங்கும் உள்ள நமது தூதரகங்கள் மீது குண்டுகள் வீசப்படும். அமெரிக்காவுக்குப் பைத்தியம் பிடித்தால் உலகத்துக்கும் பைத்தியம் பிடிக்கும்.
இந்தப் பிரச்சினையில், ஒபாமா எடுக்கும் எல்லா முடிவுகளையும் நான் ஆதரிக்கவில்லை. ஆனால், இந்த மனிதர் ஆழமாகச் சிந்தித்து, பொறுப்புடன் நடந்துகொள்கிறார். டிரம்போ 360 டிகிரி கோணத்தில் அத்தனை திசையிலும் வெறுப்பை உமிழ்கிறார். பொய் சொல்கிறார். அச்சத்தை விதைக்கிறார். அமெரிக்க ராணுவத்திலும், எஃப்.பி.ஐ.யிலும் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் அமல்படுத்த மறுக்கும் அளவிலான அச்சுறுத்தல்களை உருவாக்குகிறார். டிரம்பை அதிபராக்க ஆதரவு தரும் குடியரசுக் கட்சி செனட்டர்களுக்கும் எம்பிக்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்... அவர் உங்களைத் தன்வசப்படுத்திவிடுவார். அவர் செய்யும் எல்லா செயல்களுக்கும் நீங்களும் பொறுப்பாவீர்கள்!
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’
தமிழில்: வெ.சந்திரமோகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT