Published : 24 Oct 2014 09:13 AM
Last Updated : 24 Oct 2014 09:13 AM
“ஏன் இப்படி செஞ்சீங்க?” .......
“பெத்த குழந்தையையே கொல்ல எப்படி மனசு வந்துச்சு?”
எதற்கும் பதில் இல்லை அந்தப் பெண்ணிடம். விசாரணை அதிகாரியிடம் பேசினேன். “ரொம்ப அழுத்தம் சார். ஒருநாள் முழுக்க விசாரிச்சிட்டோம். வாய் திறந்து ஒரு வார்த்தை பேச மாட்டேங்குது.” என்றார்.
ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை அருகே இருக்கும் கோயில் கரடு கிராமம். அழகான குடும்பம் அது. மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை. ஒன்றரை வயதில் பெண் குழந்தை. திவ்யதர்ஷினி. இப்போது திவ்யதர்ஷினி உயிரோடு இல்லை. தினமும் குடித்துவிட்டு வந்து பிரச்சினை செய்யும் கணவரின் சித்ரவதை தாங்காமல், பெற்ற குழந்தையையே கொன்றுவிட்டார் தாய். அதுவும் எப்படி? அரிவாளால் வெட்டி, அப்போதும் கோபம் தீராமல் தீ வைத்து எரித்துக் கொன்றுவிட்டார். நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது.
குற்றவுணர்ச்சியா, அப்படியென்றால்?
தமிழகத்தில் குடிநோயாளிகளுடன் சேர்த்துக் குடும்ப நோயாளிகள் மூன்று கோடி பேர் என்று முன்பு குறிப்பிட்டிருந்தோம். அந்த மூன்று கோடி பேரில் ஒருவர்தான் இந்தத் தாய். குடிநோயாளியால் பாதிக்கப்பட்ட குடும்ப நோயாளி அவர். சத்தம் இல்லாமல் அழுகின்ற மனைவிகளில் ஒருவர் இவர். கனத்த மவுனம் வெடித்திருக்கிறது. அவர் மட்டுமில்லை. தெருவுக்கு நான்கு வீடுகள் குடிநோயாளிகளால் பாதிக்கப்பட்ட குடும்ப நோயாளிகளால் நிரம்பியிருக்கிறது.
அந்தக் கணவருக்கு வயது 28-தான். “கட்டிட வேலை பார்க்குறேனுங்க. சின்ன வயசுலயே குடிக்க பழகிட்டேன். பத்து வருஷமாச்சு. மழையினால பத்து நாளா வேலை இல்லைங்க. போன வாரம் குழந்தை கால்ல இருந்த கொலுசை வித்தேன். வீட்டுல இருக்குற பாத்திரமெல்லாம் வித்துக் குடிச்சிட்டேனுங்க. அன்னைக்கு ராத்திரி வந்தப்ப வீட்டுல பாத்திரம்கூட இல்லை. காஸ் சிலிண்டர் மட்டும்தான் இருந்துச்சு. அதைத் தூக்கிட்டுப்போய் வித்துக் குடிச்சிட்டேன். விடிஞ்சு வந்து பார்த்தா படுபாவி இப்படிப் பண்ணியிருக்கா...” என்கிறார் அவர். அவர் பேச்சில் தனது மதுப் பழக்கம்மீது கொஞ்சம்கூடக் குற்றவுணர்ச்சி இல்லை. தனது தீவிர மதுப் பழக்கத்தால்தான் மனைவி குழந்தையைக் கொன்றுவிட்டாள் என்கிற எண்ணம் அவருக்கு இல்லை.
பனிமலை நுனி
“நீங்க குடிச்சதாலதான் உங்க குடும்பம் சீரழிஞ்சது தெரியுமா? அதனாலதான், உங்க குழந்தையை உங்க மனைவி கொன்னுட்டாங்க தெரியுமா? இப்ப அவங்களும் ஜெயிலுக்குப் போயிட்டாங்க. மூணு வயசுப் பையனை எப்படிப் பார்த்திப்பீங்க?”
திடீரென்று உணர்வு வந்தவராகத் தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார். “தெரியலைங்க... நெஜமாத் தெரியலைங்க. இப்பகூட குடிச்சிட்டுதான் வந்தேங்க. என்னால குடிக்காம இருக்க முடியலை. குடிக்கலைன்னா கை, கால் எல்லாம் உதறுது. காலையில ஒரு குவார்ட்டர் குடிச்சாதான் சிமென்ட் கரண்டியைக் கையில பிடிக்க முடியுது. குடிக்காம தூக்கம் வரலை. குடியாலதான் குடும்பமே சீரழிஞ்சுப்போச்சு. இதை நிப்பாட்ட ஒரு வழி சொல்லுங்க…” கதறி அழுகிறார். இன்று நாட்டில் குடிநோயாளிகளில் பாதிப் பேர் இப்படித்தான் மதுப் பழக்கத்தைத் தவிர்க்க இயலாமல் தவிக்கின்றனர். மதுக்கடைகளை நிரந்தரமாக மூடினால் மட்டுமே இந்த பேரழிவுகளைத் தடுக்க முடியும்.
“சட்டம் அந்தப் பெண்ணை குற்றவாளியாகத்தான் பார்க்கும். மனிதாபிமானரீதியாகப் பார்த்தால் பாதிக்கப்பட்டவர் அந்தப் பெண்தான். மனநல மருத்துவத்தில் ‘டிப் ஆஃப் த ஐஸ்பர்க்’ என்பார்கள். அதாவது, கடலின் மேற்பரப்பில் சிறிய பனிக்கட்டிபோலத் தெரியும். சிறியதுதானே என்று நெருங்கினால் கப்பலே தகர்ந்துவிடும். மிகப் பெரிய பனி மலையின் சிறு நுனி அது. இந்தக் கொலையை அவர் திட்டமிட்டெல்லாம் செய்யவில்லை. மாதக் கணக்கில், வருடக் கணக்கில் தொடர்ந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார் அவர்.
மன அழுத்தம் தாங்க இயலாமல், கணவரின் சித்ரவதை தாங்க முடியாமல், அன்றைய தினம் ஊரே புத்தாடை உடுத்தி மகிழ்ந்துகொண்டிருக்கும்போது குழந்தைக்குப் பால் வாங்கக்கூட இயலாமல் விரக்தியின் உச்சத்துக்குச் சென்றிருக்கிறார். உண்மையில், அந்தக் கோபம் கணவன் மீதான கோபம். கணவனின் குடிப்பழக்கம் மீதான கோபம். சந்தர்ப்பம் வாய்த்திருந்தால் கணவரைக் கொன்றிருப்பார் அவர். ஆனால், அப்படி வாய்க்காமல் கண நேர ஆத்திரத்தில் குழந்தையைக் கொன்றிருக்கிறார்.
ஆபத்தின் வீரியம் அறியாமல் அலட்சியமாக இருக்கிறோம் நாம். உளவியல்ரீதியாக பார்த்தால் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் அரக்கன் உறங்கிக்கொண்டிருக்கிறான். கல்வி, கலாச்சாரம், நாகரிகம் இவையே அந்த அரக்கனை உறங்க வைத்துக்கொண்டிருக்கிறது. விரும்பத் தகாத புறச்சூழல்களே அந்த அரக்கனை அவ்வப்போது தட்டி எழுப்புகின்றன. அதில் முக்கியமானது மது. ஒரு பானை சோற்றில் ஒரு சோறுதான் அந்தப் பெண்மணி. தமிழகத்தில் பல குடும்பங்களில் இப்படிப் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். பெரும்பான்மையோருக்கு எங்கு சென்று தீர்வு காண்பது என்று தெரியவில்லை. இங்கு அனைத்து அரசு மருத்துவமனை மனநல சிகிச்சை பிரிவிலும் குடிநோயாளிகளுக்கு என்று தனி பிரிவு அமைக்க வேண்டும். அதில் மற்றுமொரு தனிப் பிரிவாக, குடிநோயாளியால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும்” என்கிறார் டாக்டர் மோகன வெங்கடாசலபதி.
டாக்டர் சொல்வது உண்மைதான். அவருடைய, சொற்களில் சொல்வதென்றால், தமிழகம் என்கிற கப்பலும் பனிமலையின் முகட்டில் மோதியாயிற்று. கப்பல் எப்போது கவிழும் என்பதைத்தான் இன்னும் சொல்ல முடியவில்லை!
(தெளிவோம்)
- டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT