Published : 14 Oct 2014 09:44 AM
Last Updated : 14 Oct 2014 09:44 AM
பளீர் என்று வெளிச்சம். மின்சாரம் வந்துவிட்டது. கூடவே, இளம் பெண்ணின் குரல். “அண்ணா, பயப்படாதீங்க. என் பேரு சரண்யா. இவங்க எல்லாம் குடிநோயால் மனநலம் பாதிக்கப்பட்டவங்க. எல்லோரும் போய்ப் படுத்துத் தூங்குங்க” என்றார்.
தூக்கம் வரவில்லை. விடிந்திருந்தது. வெளியே வந்து பார்த்தேன். மழை ஓய்ந்திருந்தது. நேற்று இருட்டில் தெரியவில்லை. அது அப்படி ஒன்றும் காடு அல்ல. ஆனால், எங்கும் பசுமை பரவியிருந்தது. பறவைகளின் கீதங்களால் சூழல் ஏகாந்தமாக இருந்தது. குடிநோயாளிகள் மற்றும் மனநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்ற சூழல் இதுவே.
காலை 7 மணிக்குத் தொடங்கியது யோகா, மூச்சுப் பயிற்சி. குங்குமம், சந்தனப் பொட்டு வைத்து ஆச்சாரமாக இருந்த ஒரு அக்கா, “எல்லோரும் சாப்பிட வாங்க” என்றார். அந்த அக்காவின் பெயர் காஞ்சனா. தருமபுரி பக்கம்.சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, “காஞ்சனாவும் குடிநோயாளிதான்” என்றார் சரண்யா. அதிர்ச்சியாக இருந்தது. யோசித்துக்கொண்டே இருக்கும்போது டாக்டர் வந்துவிட்டார்.
ஏதோ காய்ச்சல், சளிக்கு வந்ததுபோல வெளிநோயாளிகள் குவிந்திருந்தனர். நம் ஊரில் இவ்வளவு பேரா மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? வந்ததில் பாதிப் பேர் குடிநோயால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது அவர்கள் பேச்சில் தெரிந்தது. கணிசமானவர்களுக்கு வயிறு பெருத்திருந்தது. தொப்பை என்று அதைச் சொல்ல முடியாது. பளபளவென பலூன் போன்று வீங்கி, வெடிக்கத் தயார் என்றது. மதுவின் உபயம். சிகிச்சை சம்பிரதாயங்கள் முடிந்து வந்தார் டாக்டர் மோகன வெங்கடாசலபதி. நீண்ட நேரம் என்னைக் குடைந்துகொண்டிருந்த கேள்வியை அவரிடம் கேட்டேன். “காஞ்சனா எப்படிக் குடிநோயாளி ஆனார்? அவரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே?”
“காஞ்சனா நேரடிக் குடிநோயாளி அல்ல. மறைமுகக் குடிநோயாளி. கணவனின் குடிநோயால் பாதிக்கப்பட்டவர். மிகவும் ஏழ்மையான சூழலில் இருந்த அவரை குடிநோயாளிக்குக் கட்டி வைத்துவிட்டார்கள். மணவறைக்கு வரும்போதே மாப்பிள்ளைக்கு மப்பு. தினமும் அடி, உதை. குறைந்தபட்சம் தாம்பத்தியத்தில்கூட இயல்பாகக் கிடைக்க வேண்டிய சுகம் அவருக்குக் கிடைக்கவில்லை. கொடூரமான, இயற்கைக்கு முரணான தாம்பத்தியம். கூடவே சந்தேகம். நடுவே இரண்டு குழந்தைகள். கணவன் வீட்டுக்கு வந்தாலே அவருக்கு நடுக்கம் எடுக்க ஆரம்பித்துவிட்டது.
கணவனை நினைத்தாலே பயம்
ஒருகட்டத்தில் கணவனை நேரில் கண்டால்தான் நடுக்கம் என்பது மாறி, கணவனை நினைக்கும்போதெல்லாம் நடுக்கம் ஏற்பட்டது. நடுக்கத்தைக் கட்டுப்படுத்த துணிகளை எடுத்துக் கைகால்களை இறுகக் கட்டிக்கொண்டார். அழுக்குத் துணி மூட்டைக்குள் ஒளிந்துகொண்டார். இருட்டு மூலையில் பதுங்கினார். கண் விழிக்கப் பயம், பல் விளக்கப் பயம், குளிக்கப் பயம், சாப்பிடப் பயம். மனநலம் மொத்தமாகப் பாதிக்கப்பட்டுவிட்டது. கடைசியில், பேய் பிடித்துவிட்டது என்று காஞ்சனாவை விரட்டிவிட்டார் கணவர்.
காஞ்சனாவின் வயதான தந்தையும் ஊர்க்காரர்கள் சிலரும் அவரை இங்கு கொண்டுவந்து சேர்த்தனர். மூன்று மாதங்களாக சிகிச்சையில் தேறிவருகிறார். ஆனாலும், கொஞ்சம் கூச்சல், அதிகச் சத்தம் கேட்டாலும் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொள்கிறார் அவர். உண்மையில், காஞ்சனாவுக்குக் கலை உணர்வு அதிகம். அழகாகக் கோலம் போடுவார். அருமையாகச் சமைப்பார். அவருடைய இயல்பையே சிதைத்துவிட்டிருக்கிறது குடிநோய்” என்றார்.
“கணவனால் பாதிக்கப்பட்டார் என்பது சரி. ஆனால், அதை எப்படிக் குடிநோயாக எடுத்துக்கொள்ள முடியும் டாக்டர்?”
“குடிநோய் என்பது குடும்ப நோய். சமூக நோய். அது குடிப்பவரை மட்டும் பாதிப்பதில்லை. அவரைச் சார்ந்த அனைத்தையுமே பாதிக்கிறது. ஒருவர் குடிப்பதால், இழப்பு அவருக்கு மட்டுமல்ல. அவரது குடும்பத்துக்கு இழப்பு, அவரது அலுவலகத்துக்கு இழப்பு, அவர் சார்ந்த சமூகத்துக்கு இழப்பு, மொத்தத்தில் நாட்டுக்கே இழப்பு. இதில் மிக அதிகமாக, நேரடியாகப் பாதிக்கப்படுவது குடிநோயாளியின் குடும்பத்தினரே.
3 கோடி குடிநோயாளிகள்
எங்கே தனது மகன் குடித்தே செத்துவிடுவானோ என்று பெற்றோர் கலங்குகின்றனர். எப்போது சித்ரவதை ஆரம்பிக்கும் என்று பயத்துடன் காத்திருக்கிறார் மனைவி. அப்பா எப்போது கொஞ்சுவார்? எப்போது திட்டுவார் என்று தெரியாமல் திகைக்கின்றன குழந்தைகள். ஒரு நாள், ஒரு மாதம் அல்லது சில மாதங்கள் இப்படியான தவிப்பு, மன உளைச்சல் இருந்தால் தாங்கிக்கொள்ளலாம். ஆனால், அது வருடக் கணக்கில் நீடித்த தவிப்பாக மாறும்போது, மனநோயாக உருவெடுக்கிறது.
காஞ்சனா அளவுக்கு இல்லை என்றாலும் இன்றைக்கு ஒவ்வொரு குடிநோயாளியின் வீட்டிலும் கூடுதலாக அவரால் பாதிக்கப்பட்ட இரண்டு மறைமுகக் குடிநோயாளிகள் இருக்கிறார்கள். குறிப்பாக, மனைவிகள்.
என்ன... மானம், மரியாதை கருதி வெளியே சொல்ல முடியவில்லை. பக்கத்து வீட்டுக்குக் கேட்டுவிடக் கூடாது என்று சத்தம் இல்லாமல் அழுகிறார்கள். ஒருவேளை உங்களுக்கு வாய்ப்பு இருந்தால், குடிநோயாளியின் மனைவி யாரிடமாவது மனம்விட்டுப் பேசிப் பாருங்கள். வெடித்து, வெம்பி அழுதுவிடுவார். தமிழகத்தில் குடிநோயாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடி என்கிறது புள்ளிவிவரம். ஆனால், குடும்ப நோயையும் கணக்கில் சேர்த்தால், குடிநோயாளிகளின் எண்ணிக்கை சுமார் மூன்று கோடி” என்றார்.
அதிர்ச்சியாக இருந்தது!
(தெளிவோம்)
- டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
ஓவியம்: வெங்கி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT