Last Updated : 27 Sep, 2013 03:26 PM

 

Published : 27 Sep 2013 03:26 PM
Last Updated : 27 Sep 2013 03:26 PM

திட்டமிடாத நாடு உருப்படாது

திட்டமிடாத நாடு இலக்கை அடைய முடியாது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலருடைய பொறுப்பற்ற செயல்களைப் பார்க்கும்போது, திட்டமிடாமல் படுகுழியில் விழும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அரசின் முடிவைச் சீர்குலைக்கத் தங்களுக்குள் கலந்து பேசத் தனி தேநீர் விருந்தை அவர்கள் ஏற்பாடு செய்துகொண்டனர். நமக்குள்ள வசதிகளை, வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டு பயன்படுத்தினால் பல்வேறு சாதனைகளைப் படைக்க முடியும் என்ற நிலை இருந்தும் நாம் அதில் தவறுகிறோம்.

எதிர்காலத்துக்காகத் நல்ல கற்பனைகளை வரவேற்றுப் பரிசளிக்கத் தயாராக இருக்கும் உலகில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கே குடியேறி, தங்களுடைய கற்பனைத் திறனைக் கொண்டு சாதனைகளைக் குவிக்கும் திறமைசாலிகள் ஏராளமாக இருக்கின்றனர். தொழில்நுட்பம், வர்த்தகம், கலைத் துறை என்று எந்தத் துறையிலும் தங்களுடைய கற்பனை வளத்தைக்கொண்டு அரிய சாதனைகளைச் செய்யக் கூடியவர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத, ஆபத்தை விளைவிக்காத சுத்தமான மின் ஆற்றல் என்பது மிகப் பெரிய சொத்து. அதைத் தயாரிக்கக்கூடிய முதலீட்டு வாய்ப்புகளும் தொழில்நுட்பங்களும் இயற்கை எரிவாயுக் கையிருப்புகளும் நம் வசம் இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி நம்முடைய நாட்டில் மீண்டும் தொழிற்சாலைகளை முன்பைப் போல முழு மூச்சில் செயல்பட வைக்க முடியும். உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் தொழிற்சாலைகளை ஈர்த்துவிட முடியும்.

முன்பெல்லாம் உலகில், வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற பாகுபாடுதான் இருந்தது. இப்போது அதிகம் கற்பனை செய்யும் நாடு, கற்பனை வளம் இல்லாத நாடு என்ற பிரிவுதான் இருக்கிறது. உலகிலேயே அமெரிக்காதான் அதிக கற்பனை வளத்துக்கு இடம் தரும் நாடாக இருக்கிறது. அந்தக் கற்பனைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கான கண்டுபிடிப்புகளும் கருவிகளும் வாய்ப்புகளும் இங்கேதான் கொட்டிக்கிடக்கின்றன. புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்ய மக்கள் காத்திருக்கின்றனர்.

உலகில் பல நாடுகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் கடந்து முன்னுக்கு வர முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. நாம்தான் வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் அவற்றையே சாதகமாக்கிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் நாம் இப்போது முட்டுச்சந்தில் நிற்கிறோம். நாம் ஒரு மனிதரை இரண்டு முறை நம்பித் தேர்ந்தெடுத்தோம். அவர் ஆரம்பத்தில் சூரத்தனமாகச் செயல்பட்டார். தன்னுடைய கட்சியிலேயே அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்தலில் ஒரு பெண்ணை வெற்றிகொண்டார். இப்போதோ மௌன சாமியாராகிவிட்டார். வேறு யாராலும் அவரைப் போல இருக்க முடியாது.

ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்ட அமெரிக்காவைப் போன்றதொரு நாடு இந்நேரம் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். ஆனால், நாமோ நமக்கு நாமே காயப்படுத்திக்கொண்டு ரணங்களோடு அழுகிறோம். தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் வியாதி இரு கட்சிகளையும் (குடியரசு, ஜனநாயகம்) பீடித்துச் செயலிழக்கவைத்துவிட்டது. ஆனால், இப்போது நடந்திருப்பது இதுவரை நடந்தவற்றிலேயே மிகவும் கீழ்த்தரமானது.

பிரதான எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியை, தேநீர் விருந்து நடத்திய சிறு கும்பல் கைப்பற்றியிருக்கிறது. வெளிநாட்டவர் குடியேற்றம், துப்பாக்கிகளுக்குக் கட்டுப்பாடு, சுகாதாரம், கடன் சுமை, வரி வசூல் என்று அமெரிக்காவுக்கு முக்கியமான எந்த விஷயத்திலும் இந்தக் கும்பலுக்கு அக்கறை இல்லை.

இரு கட்சிகளும் சிறிதளவு தங்களுடைய அகங்காரங்களை விட்டுக்கொடுத்து ஒத்துழைத்தால் நாம் உலகில் பிற நாடுகளைவிடத் தனித்து முன் நிற்போம். ஆனால், இந்தக் கும்பலோ தான் விரும்புகிறபடி அரசு செயல்படாவிட்டால் அரசையே செயலிழக்கச் செய்வதுடன், நாட்டின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கிவிடப்போவதாக மிரட்டிக்கொண்டிருக்கிறது.

2013 முதல் 2021 வரையில் அமெரிக்க அரசு செய்ய வேண்டிய செலவுகளில் சுமார் ரூ. 700 ஆயிரம் கோடியை வெட்டக்கூடிய தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றப் போவதாக வேறு மிரட்டிக்கொண்டிருக்கிறது. இந்த செலவுக் குறைப்பானது சாதாரண விஷயமல்ல… நாம் செய்த, செய்துகொண்டிருக்கிற அரிய பல செயல்களுக்கு வேட்டுவைப்பது.

அமெரிக்காவின் சுகாதாரத் துறைக்கான தேசியக் கழகங்களின் தலைமை இயக்குநர் டாக்டர் பிரான்சிஸ் காலின்ஸைக் கேட்டால் இதன் தீவிரம் புரியும். இந்த அமைப்பானது அமெரிக்காவுக்கே உயர்ந்த அணிகலனாகத் திகழும் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம். 2013 நிதியாண்டில் மட்டும் இந்தக் கழகங்களுக்கான நிதியில் சுமார் 975 கோடி ரூபாயை வெட்டப்போவதாகக் குடியரசுக் கட்சியின் தேநீர் விருந்து எம்.பி-க்கள் அறிவித்துள்ளனர். இந்தக் கழகத்தில் மட்டும் 27 அமைப்புகளும் மையங்களும் இருக்கின்றன. இந்த அமைப்புகளில் உள்ளவர்கள் ஆராய்ச்சியின் எந்த நிலையில் இருந்தாலும் நிதி வெட்டுவது தாட்சண்யம் பாராது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. "அப்படியே நிதி ஒதுக்கீட்டைக் குறைத்தாலும் நிலைமைக்கேற்பச் செயல்பட இந்த நிறுவனங்களால் முடியும். அதே சமயம் தேசிய சுகாதாரக் கழக இயக்குநர் என்ற முறையில் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு அதிக நிதி, மற்ற ஆராய்ச்சிகளுக்குக் குறைந்த நிதி என்று என்னால் முடிவெடுக்க முடியாது. எல்லா ஆராய்ச்சிகளுமே அதனதன் நோக்கத்தில் முக்கியமானவைதான்" என்கிறார் பிரான்சிஸ் காலின்ஸ். "பணவீக்கம் காரணமாகவும் நாடாளுமன்ற எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சிலர் நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கப் போவதாக எச்சரித்திருப்பதன் காரணமாகவும் நாங்கள் ஏற்று நடத்தும் ஆராய்ச்சிகளில் சுமார் 17 சதவீதம் அதாவது, 640 ஆராய்ச்சித் திட்டங்கள் - அரைகுறையாகிவிடும்" என்று அச்சப்படுகிறார் காலின்ஸ்.

புற்றுநோய், நீரிழிவு (சர்க்கரை வியாதி), மூளைமுடக்குவாதம், இதய நோய்கள் ஆகியவை தொடர்பாக ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இவை எல்லாவற்றையுமே நாம் மிக முக்கியமான ஆய்வுகளாகவே கருதுகிறோம். நாம் தரும் உதவித் தொகையால் இந்த நோய்களில் எந்த நோய்க்கு அற்புதமான மருந்து அல்லது சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்படும் என்று நம்மில் எவருக்குமே தெரியாது. இந்த ஆய்வுகளில் எந்த விஞ்ஞானி இன்னும் 20 ஆண்டுகளில் நோபல் பரிசு பெறுவார் என்று நம்மால் ஊகிக்க முடியாது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகளுக்கு நிதியை நிறுத்தி சாகடிப்பது சரியா? "இந்த 640 திட்டங்களில், 150-க்கு முந்தைய நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் மேலும் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி தேவைப்படுகிறது என்று அவர்கள் கழகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இப்போது நீங்கள் நிதி ஒதுக்குவதை நிறுத்தினால் அல்லது குறைத்தால் நீங்கள் ஏற்கெனவே செய்த முதலீட்டையும் விரயமாக்குகிறீர்கள், எதிர்கால முதலீட்டையும் நாசமாக்குகிறீர்கள்" என்று சுட்டிக்காட்டினார் காலின்ஸ். "2014-ல் புதிதாக 12 துறைகளில் ஆராய்ச்சிகளை முடுக்கிவிட தேசிய சுகாதாரக் கழகம் உத்தேசித்திருந்தது. பார்கின்சன் வியாதிக்கு ஸ்டெம் செல்கள் மூலம் எப்படித் தீர்வு காணலாம் என்ற ஆராய்ச்சியும் அதில் ஒன்று. அரிவாள் செல் வியாதியால் ஏற்படும் வலியைக் குறைப்பது எப்படி, மூளை முடக்குவாதத்தை முன்கூட்டியே கண்டறிவது எப்படி என்ற ஆய்வுகளும் அதில் அடங்கும். பணம் ஒதுக்க முடியாது என்று நிராகரிப்பதாக இருந்தால், உங்களுடைய ஆய்வுத் திட்டங்கள் என்ன என்று அவர்களிடம் கேட்டு மனு வாங்க வேண்டிய அவசியம் என்ன?" என்று வேதனை பொங்கக் கேட்டார் காலின்ஸ்.

இத்துடன் 2013-ல் தேசிய சுகாதாரக் கழகத்தின் ஆய்வு மருத்துவமனையிலிருந்து 750 நோயாளிகளை சிகிச்சை அளிக்காமலேயே அனுப்ப நேரிட்டது. தனியார் மருத்துவர்களால் செய்ய முடியாத ஆராய்ச்சிகளைத் தேசிய சுகாதாரக் கழகம் மேற்கொள்கிறது. நாட்டின் சுகாதாரச் செலவுகளை அதிகப்படுத்தும் நோய்களைக் கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும் உதவும் ஆய்வுகளையே சிக்கன நடவடிக்கை என்ற பெயரால் குலைக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், இலக்கே இல்லாமல் நிதியுதவியை வெட்டும் தீர்மானத்தைக் கொண்டுவருகிறார்கள். இதற்குக் காரணம், ஒரு கட்சியில் சிலர் மட்டும் தலைமையைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டுவிட்டனர். தலைமையோ அவர்களைக் கட்டுப்படுத்தும் துணிவில்லாமல் அஞ்சி நிற்கிறது. எனக்கு ஜனநாயகக் கட்சியினரோடும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் அவர்களுக்குப் பொறுப்பில்லை என்று கூறிவிட முடியாது. குடியரசுக் கட்சி இந்த அளவுக்குப் போகும்போது வரிச் சீர்திருத்தம் போன்ற அடிப்படையான விஷயங்களில் அதிபர் பராக் ஒபாமாவை ஓரளவுக்குக்கூட ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அசைத்துப் பார்க்கவில்லை என்பதே அவர்கள் மீது எனக்குள்ள கோபம்.

© நியுயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x