Last Updated : 04 May, 2017 02:53 PM

 

Published : 04 May 2017 02:53 PM
Last Updated : 04 May 2017 02:53 PM

தாதா சாகேப்: கமலின் இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு வாழ்நாள் கௌரவம்

நேற்று டெல்லியில் நடைபெற்ற விழாவொன்றில் திரைப்படத்திற்கான நாட்டின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை இயக்குனர் கே.விஸ்வநாத் பெற்றார்.

டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற இவ்விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்கினார். திரைப்படத் துறையில் அப்படியென்ன வாழ்நாள் சாதனையை கே.விஸ்வநாத் புரிந்துள்ளார் என்பது இன்றைய தலைமுறைக்கு சற்று புரிந்துகொள்வது கடினம்தான். இருந்தாலும் கமல் என்று சொன்னால் எளிதாக அவர்களுக்குப் புரியக்கூடும்.கமலிடமிருந்தே விஸ்வநாத் பற்றிய விவரங்களைத் தொடர்வோம்.

ஒருமுறை கமலஹாசன் இப்படி கூறினார், ''இனி பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்கமாட்டேன்'' என்று. இப்படி சொல்லும்போது அவருக்கு உலக நாயகன் என்று பட்டம் அமைந்திருக்கவில்லை. அதற்காக அப்படிச் சொல்லும்போது ஒரு வளரும் கலைஞர் என்ற நிலையில்தான் இருந்தார் என்றும் சொல்ல முடியாது. நன்கு வளர்ந்தும் வளராத உச்சங்களை(?) நோக்கிய பயணத்தின் பாதியில் இருந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

''இனி பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்கமாட்டேன்'' என்று வளர்ந்துகொண்டிருக்கும் அவரிடமிருந்து ஒரு அறிக்கை வெளிவந்தபோது அதை உடனே உள்வாங்க தமிழ்த் திரையுலகம் சற்று யோசிக்கத்தான் செய்தது.

பாலச்சந்தர், பாரதிராஜா

கமல் இப்படி சொன்னாரே தவிர, அதற்கான காரணம் என்ன என்று அவர் விவரிக்கும்போதுதான் அதன் அழுத்தம் மெல்ல பிடிபடத் தொடங்கியது. அதாவது இயக்குநர்களின் படங்களில் ஒரு கலைஞனின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. உண்மைதானே! பெரிய இயக்குநர்கள் என்பவர்கள் தங்கள் கதையை அல்லது தங்கள் கதை சொல்லும் முறையின் வேகத்திற்கு பெரிய ஹீரோக்களை பலிகொடுக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதுதான் அதை மேலும் விரிவுப்படுத்தும்போது கிடைக்கும் சாராம்சம். கமல் போன்ற தேர்ந்த கலைஞரிடம் இப்படியொரு கருத்து வெளிப்படுவது விவாத்திற்குரிய விஷயம் ஒருபக்கம் இருக்கிறது என்றாலும் இயக்குநர்களின் போதாமையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டிய அம்சம் இருப்பதையும் மறுக்கமுடியாது.

இயக்குநர் சிகரம் பாலச்சந்தருக்கு முன்பே கமல்ஹாசன் தமிழில் நிறைய படங்களில் நடித்தவர் என்றாலும் பாலச்சந்தர் படங்களில் நடிக்க ஆரம்பித்தபிறகு அவரது பரிமாணம் மெருகேறியது. ஆனால் இதிலும் கூட மூன்று முடிச்சு, அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் பாலச்சந்தர் வெளிப்பட்ட அளவுக்கு கமல்ஹாசன் வெளிப்படவில்லை.

இயக்குநர் இமயம் பாரதிராஜா 16 வயதினிலே (சப்பானி), சிகப்பு ரோஜாக்கள் (எதிர்மறை நாயகன்), திரைப்படங்களிலும் கமல்ஹாசன் எனும் கலைஞன் சிக்கலான திரைக்கதைகளின் வழியே தோன்றும் கதைமாந்தராகவே தோன்றுவதோடு கிடைத்த அத்தகைய பாத்திரங்களை மிகச்சிறப்பாக வெளிப்படுத்திய தேர்ந்த கலைஞனாகவே தன்னை அதற்கு ஈடுகொடுத்திருப்பார்.

கே.விஸ்வநாத்

இவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கும் இயக்குநர் பாலுமகேந்திரா இதற்கு முன்பு இவரை காட்டிய பாலச்சந்தர், பாரதிராஜாவைவிட முற்றிலும் புதிய கோணத்தில் வெளிப்படுத்தினார். ஆனால் இவர்களையெல்லாம் விட இயக்குநர்.. கே.விஸ்வநாத் தனது சாகர சங்கமம் (சலங்கை ஒலி) வாயிலாக பெரும் கலைஞனை வெளிக்கொணர்ந்தார். அதையும் கடந்து ஸ்வாதி முத்யம் (சிப்பிக்குள் முத்து) திரைப்படத்தில் அபலைப் பெண்ணின் துயரம் பொறுக்காத அப்பாவி இளைஞனாக பரிமளித்த பாத்திரம் அது. ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டது. தமிழில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த தெய்வமகன் படத்திற்குப் பிறகு சில பத்தாண்டுகளுக்குப் பிறகு அப்போதுதான் ஒரு தமிழ்க்கலைஞனின் படம் மீண்டும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

நாம் வழக்கமாக பார்த்த கமலுக்குள் இவ்வளவு செய்யமுடியுமா என்று வியக்கவைத்தவர் கே.விஸ்வநாத். வாழ்க்கையிலிருந்து விலகினாலும் நாட்டிய சாஸ்திரத்திலிருந்து சற்றும் விலகாத லட்சியப் பாத்திரம் கமல் ஏற்றபோது சாஸ்த்திரிய விமர்சகர்களிடமிருந்து சில விமர்சனங்களும் வரத்தான் செய்தன. அக்குள் முடியை எடுக்காமலே கமல் பரதநாட்டியம் ஆடினார் என்ற காமாசோமா விமர்சனங்களே அவை. தோல்வியடைந்த கலைஞன் என்றாலும் தனது கொள்கைகளுக்காக எதையும் விட்டுக்கொடுக்காத லட்சிய நாட்டியக் கலைஞனாக வாழும் பாத்திரம் கமலுடையது. ஒடிசி, குச்சிப்புடி, பரதம் போன்ற நடனங்கள் வேறுபடும் நுட்பமான தளங்களை சலங்கை ஒலியில் வெளிப்படுத்தியிருந்த விதம் இந்திய குறிப்பாக தென்னிந்திய செவ்வியல் நடனத்தின் அழகை இவ்வளவு நேர்த்தியாக எத்திரைப்படமும் பேசியதில்லை என்ற அளவுக்கு அமைந்திருந்தது.

சிப்பிக்குள் முத்து

சிப்பிக்குள் முத்து (1986) திரைப்படத்தில் சிவய்யா (கமல்) ஒரு ஆற்றல்மிக்க அதேநேரத்தில் தாய்தந்தையரின்றி தனது பாட்டியோடு வசிப்பவன். வெகுளித்தனமும் அப்பாவித்தனமும் அவன் குணம். அதேஊரில் ஒரு இளம் விதவையான லலிதா (ராதிகா) தனது 5 வயது மகனுடன் மூத்த சகோதரரின் ஆதரவில் வாழ்பவள். ஆனால் அவளது அண்ணி (ஒய்.விஜயா) ஒரு கொடுமைக்காரி. லலிதாவும் எல்லாவற்றையும் பொறுத்துப்போகக்கூடியவள். வெகுளித்தனமும் அப்பாவித்தனமும் மிக்க சிவய்யாவும் புண்ணாக்கு செக்குஆட்டும் முதலாளியிடம் கடுமையாக அடிவாங்குகிறான்.

அதேநேரத்தில் லலிதா என்ற அந்த இளம்விதவையும் தனது அண்ணியின் கொடுமைக்கு ஆளாகும் நிலையை எண்ணி மனம் வருந்துகிறான். ஒருமுறை கிராமத்தில் விசேஷமாக நடைபெறும் ராமநவமி விழாவில் சீதாக் கல்யாண நிகழ்ச்சியில் எல்லோருக்கும் தட்டில் தேங்காய்பூபழத்தோடு சீதா தாலியை தொட்டுக்கும்பிட பக்தர்கள் கூட்டத்தில் எடுத்துவரும் இடத்தில் சிவய்யா அந்தத் தாலியை எடுத்து விதவை லலிதா கழுத்தில் கட்டிவிடுவான்.

பெரிய ஆச்சாரமும் மரபுவழிதோன்றலும் மிக்க கிராமத்து பெரியவர்கள் இதை வெறுக்கிறார்கள். அவர்களை ஒதுக்கிவைக்கிறார்கள். ஆனால் இந்நிலையிலும் சிவய்யாவையும் லலிதாவையும் பாட்டி அரவணைத்து ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் காலம் பாட்டியை அழைத்துக்கொள்ளும் நேரத்தில் சிவய்யா ஒரு அப்பாவி நீதான் அவனை ஆளாக்கவேண்டும என லலிதாவிடம் ஒப்படைத்து இறந்துவிடுகிறாள். ஆனால் காலங்கள் கடந்தபிறகு தனது மனைவியும் இறந்துவிட தனது மனைவியின் நினைவாக வாழும் சிவய்யாவின் மார்கழி மாத அதிகாலையிலிருந்து ஒரு ப்ளாஷ்பேக்காகத்தான் இப்படம் தொடங்குகிறது. அவரைத் தேடிவரும் பேரன் பேத்திகளோடு தனது மனைவியை அருமைபெருமைகளை சொல்வதோடு திரைப்படத்தின் மேற்சொன்ன முழுக் கதைப்பயணமும் தொடங்குகிறது.

தமிழில் அக்காலத்தில் பெண்களுக்கான குரல் தரும் படங்களாக கே.எஸ். கோபாலகிருஷ்ணன், கே. பாலச்சந்தர், படங்களுக்குப் பிறகு விசு படங்களே அதிகமாக வெளிவந்தன. ஆனால் அதற்கு முன்னதாக விதி படம் இவர்கள் எல்லா படங்களையும் தாண்டி அப்படத்தின் வசனங்களுக்காக பெரும் வெற்றியைப் பெற்றது. ஆனால் இத்தகைய படங்கள் எல்லாம் வசனங்களாலும் எடுத்துக்கொண்ட பிரச்சனைகளாலும் நட்சத்திர நடிப்பினாலும் கவனம்பெற்றன. ஆனால் ஸ்வாதி முத்யம் (1986) பெண்களின் இதயத்தோடு உரையாடியது. பெண்சிசுக்கொலையைக் கண்டித்து வெளிவந்த பாரதிராஜாவின் கருத்தம்மா திரைப்படம் 1994ல்தான் வந்தது.

விதவை மறுமணத்தைப் பேசிய, தெலுங்கில் வெளிவந்த ஸ்வாதிமுத்யம் இப்படம் தமிழில் சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் வெளியானது. இயக்குநரோடு ஏற்பட்ட சிறு முரண்பாட்டினால் கமல் தமிழில் குரல் கொடுக்க மறுக்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கமல் பாத்திரத்திற்கு குரல் கொடுத்திருப்பார். ஒரு முழுமையான சினிமா என்கிற உலகளாவிய தகுதியோடு தமிழ்ரசிகர்களை ஆகர்ஷித்தது.

தமிழில் 1969ல் வெளிவந்த தெய்வமகன் திரைப்படம் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு 1969ல் முன்மொழியப்பட்டது. அதன்பிறகு ஒரு தமிழ்க்கலைஞன் நடித்த திரைப்படம் ஆஸ்கருக்கு முன்மொழியப்பட்ட படம் சிப்பிக்குள் முத்து (ஸ்வாதி முத்யம்).

தோல்வியடைந்த பாசவலை

இதனாலேயே கமலுக்கு விஸ்வநாத் என்றால் பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு. அதனாலேயே தனது அறிக்கை எல்லோருக்குமானதாக அல்லாமல் விஸ்வநாத்துக்கு விலக்கு அளித்தார். அந்த வகையில் மீண்டும் ஒரு பெரிய இயக்குநரின் படத்தில் நடிக்க முன்வந்தார்.

1995ல் வெளிவந்த அப்படம் சுபசங்கல்பம் (தமிழில்: பாசவலை). துரதிஷ்டவசமாக இருபெரும் கலைஞர்களின் அன்புமிகுதியால் வீசப்பட்ட பாசவலையில் அந்த இருவருமே வீழ்ந்தனரே தவிர ரசிகர்கள் அல்ல. இப்படம் பெரும்தோல்வியை சந்தித்தது. அதற்குக் காரணம் அது கமல் படமாகவும் இல்லாமல் விஸ்வநாத் படமாகவும் இல்லாமல் இரண்டுபேரும் தங்களை அவர்கள் வளர்ந்திருந்த நிலையில் இருந்த இடத்தைவைத்து இருவருக்காகவும் விட்டுக்கொடுத்து இயங்கியதால் படம் பெரும் சொதப்பாலாக அமைந்தது.

மாறிய பாதைகள்

அதன்பிறகு சத்யா, பேசும்படம் போன்ற வித்தியாசமான படங்களில் நாம் புதிய கமலைப் பார்த்ததும் மணிரத்னம் இயக்கிய நாயகனில் கம்பீர கமலைப் பார்த்தது எல்லாம் பிற்காலத்திய நவீன தமிழ் சினிமா வரலாறு. கே.விஸ்வநாத் தமிழ்த் திரைப்படங்களில் தோன்றி நடிக்கவும் ஆரம்பித்தார். ஆனால் அது சரிவரவில்லை. அவரது நடிப்பில் எள்ளளவும் குறையில்லை. அது சில படங்களில் மிகச்சிறப்பாக வெளிப்பட்டது. ஆனால் பெரும்பாலான தமிழ்ப்படங்களில் முக்கியமாக ராஜபாட்டை போன்ற படங்களில் அவர்தேர்ந்தெடுத்த பாத்திரங்கள் அவரது பெரிய மனிதர் இமேஜ்க்கு சற்றும் பொருந்தவில்லை.

விஸ்வநாத் படங்கள்

ஆனால் விஸ்வநாத் இவ்வளவுதான் என்று நாம் முடிவு செய்யமுடியாது. நம்மில் பலருக்கு நிறைய முரண்பாடுகள் இருப்பினும் இந்திய இசையை இந்திய வாழ்வியல் தரிசனத்தை கே.விஸ்வநாத் படங்களில் தனது வாழ்நாள் பணியாக அவர் மேற்கொண்டதை அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிடமுடியாது. கிட்டத்தட்ட 53 படங்களை அவர் இயக்கியுள்ளார்.

தனக்கென்று ஒரு திரைப்பாணியை வடிவமைத்துக்கொண்டு அதை முழுமையாக நம்பினார். சனாதன கிராம சமுகத்தைத்தான் அவர் படைத்தார். ஆனால் அதில் உள்ள சிடுக்குகளை விமர்சனம் செய்தாரா? அப்படியே ஏற்றுக்கொண்டாரா அல்லது வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஏற்றத்தாழ்வை களையும் மறுமலர்ச்சி இயக்குநராக அவர் மிளிர்ந்தாரா என்பதெல்லாம் முழுவதும் விவாதத்திற்குரியது.

ஒரு படத்திலேயே காட்சியாக இடம்பெறும்வகையிலான மரபார்ந்த கிராமங்களுக்கிடையே அதை உடைக்கத்தகுந்த மறுமலர்ச்சிக்கான சமூகத்தையே அவர் முன்வைக்க விரும்பினார் என்று தனது படைப்புகளில் அவர் எடுத்துக்கொண்ட கருப்பொருள்கள் பறைசாற்றுகின்றன என்பதுதான் நிஜம்.

சிரிசிரிமூவா, சப்தபதி, சுயம்குருஷி, ஸ்வர்ணாபிஷேகம், சுப்ரபாதம் சுபலேகா, சுருதி லயலு (தமிழில்: இசைக்கு ஒரு கோவில்). ஸ்வாதிகிரணம் போன்ற பல படங்களிலும் நாடோடி சமூகத்தையும் நிலஉடைமைச் சமூகத்தையும் அதன் உள்ளார்ந்த அன்பு பரிமாற்றங்களை அவர் பேசத் தவறவில்லை.

அவருக்கான இடம் எது?

உலகப்படங்களை விதந்தோதும் இக்காலகட்டத்தில் இந்திய படங்களுக்கான திரைமொழிகளை முன்மொழிந்த சிறந்த இயக்குநர்களின் பட்டியலின சத்யஜித்ரே, மிருணாள் சென், ஷ்யாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், கிரீஷ் காரசவள்ளி வரிசையில் நிச்சயம் கே.விஸ்வநாத்துக்கு ஒரு இடம் கிடையாது. அந்த இடங்களில் ஒன்றாக அவரைநாம் முன்மொழியவும் போவதில்லை.

ஆனால் இயக்குநர்கள், ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, எம்.டிவாசுதேவன் நாயர், தாசரி நாராயணராவ், ராமு காரியத், பி.பாஸ்கரன், பத்மராஜன், பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம் மற்றும் இவ்வரிசையில் பிற இந்திய இயக்குநர்களோடு இவரை வைக்கலாம்.

கிராமிய மறுமலர்ச்சி சிந்தனைகள்

மலையாளத்தில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றான, 'சிறந்த இசைக்கலைஞர் சுவாதித் திருநாள்' போன்ற வாழ்க்கை வரலாற்று படங்களை கே.விஸ்வநாத் இயக்கவில்லை. மாறாக தான் கண்ட கேட்ட படித்த சங்கதிகளிலிருந்தே தனக்கான கருப்பொருள்களை அவர் உருவாக்கிக்கொண்டார். அவரது பூர்வீகம் கிருஷ்ண நதிப் படுகையோர குக்கிராமம் என்பதால் தனது அனைத்துப் படங்களிலும் கிருஷ்ணா நதிதீரத்தை தனது கதைப்போக்குகளில் அவர் கொண்டுவரத் தவறவில்லை.

தென்னிந்திய வாழ்வியலுக்கான தெளிவும் உறுதியும்மிக்க படைப்பாளிகளின் வரிசையில் கே.விஸ்வநாத்துக்குத்தான் முதல் இடம் என்பதை நாம் மறுத்துவிடமுடியாது. ஏனெனில் ஒரு திரைப்படம் முதலில் மண்டல ரீதியான பிரதேச ரீதியான கலையம்சத்தை அடிநாதமாகக் கொண்டிருக்கவேண்டும். அதிலிருந்து நீங்கள் பேசும் விஷயம்தான் அது மறுமலர்ச்சிக்கு உகந்ததா இல்லையா என்பதை ஆராய முடியும். அதுவே உலகத்திரைப்படங்களின் போக்காகவும் இருப்பதைம் நாம் காணலாம்.

திரைப்பயணம்

வாஹினி ஸ்டூடியோவில் ஒரு சவுண்ட் என்ஜீனியராக வாழ்வைத் தொடங்கிய விஸ்வநாத் 1965ல் ஆத்ம கௌரவம் என்ற திரைப்படத்தின் வாயிலாக இயக்குநராக உருவானார். அதிலிருந்து 2010ல் வெளிவந்த சுப்ரபாதம் திரைப்படம் வரை 53 படங்களை இயக்கியுள்ளார். அவரது பல படங்களிலும் இசைக்கும் நாட்டியத்திற்கும் கிராமிய வாழ்வுக்கும் பெண்களின் உள்ளார்ந்த மறுமலர்ச்சிகளும் பேசப்பட்டன.

கே.விஸ்வநாத்தின் பல படங்கள் மொழிமாற்றம் செய்ப்பட்டு தமிழ், கன்னடம், இந்தி, ரஷ்ய உள்ளிட்ட பலமொழிகளில் கொண்டுசெல்லப்பட்டன. அவரே நேரடியாக சில இந்திப் படங்களையும் இயக்கினார்.

அனில்கபூர், விஜயசாந்தி, கமல்ஹாசன் ஆகியோர் நடிக்க இந்தியில் விஸ்வநாத் மிகவும் அழகுணர்ச்சியும் அறிவார்ந்த விவாதங்களும் கொண்டு எடுத்த ஈஸ்வர் திரைப்படம் சிறந்த கதையம்சத்திற்கான பிலிம்பேர்விருது பெற்றது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பலமுறை தேசிய விருதுகள் பெறக் காரணமான பலபடங்கள் கே.விஸ்வநாத் இயக்கியவை. இவரது பல படங்கள் எண்ணற்ற தேசிய விருதுகளை பெற்றுள்ளன. சிறந்த இயக்குநருக்கான 9 பிலிம்பேர் விருதுகள், சிறந்த படங்களுக்கான 3 தேசிய விருதுகள் உள்ளிட்ட 7 தேசிய விருதுகள், பிரான்ஸ் நாட்டின் பெசான்கார் சர்வதேச திரைப்படவிழாவில் சங்கராபரணம் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது என அவரைத்தேடி விருதுகள் அவரது வாழ்நாள் முழுவதும் வளையமிட்டுக்கொண்டே இருந்தன.

ஒரு ரசிகையின் தூய அன்புக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடமுடியாத சூழலுக்கு ஆளான ஒரு இசைக்கலைஞனின் வாழ்வை பேசும் "சங்கராபரணம்" திரைப்படம் ஒன்று போதும். கலைக்கு ஜாதி மதம் மொழி இனம் வர்க்கம் என்ற பேதம் இல்லை என்பதைக் கூறும் இப்படம் இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றளவும் பட்டியலில் இடம் பெற்றுவருகிறது.

கலை துறைப் பங்களிப்புக்காக பத்ம ஸ்ரீ விருது பெற்ற கே.விஸ்வநாத்துக்கு சத்யஜித் ராய், அடூர் கோபாலகிருஷ்ணன், சிவாஜி கணேசன், பாலச்சந்தர் உள்ளிட்ட எவ்வளவோ உயர்ந்தவர்களின் வரிசையில் இந்த ஆண்டு இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாஹேப் பால்கே வழங்கப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x