Published : 30 Oct 2014 08:53 AM
Last Updated : 30 Oct 2014 08:53 AM
அதிகாலைப் பொழுது. பனியின் ஈரம் போர்த்திய தாவரங்களும் புதர்களும் சாலையின் இருபுறங்களிலும் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கின்றன. நாயகனும் நாயகியும் ‘ஜாகிங்’ செல்கிறார்கள். காலடி ஓசையின் ‘தட் தட்’ ஒலியின் பின்னணியில் ஒரு பூவைப் போல் மலர்கிறது அந்தப் பாடல். ‘பருவமே… புதிய பாடல் பாடு’. பனிப் படலத்தில் அமிழ்ந்து கிடக்கும் புல்வெளிப் பரப்பு, புதர்களுக்கு இடையில் படுத்திருக்கும் ஈரமான பாதைகள் என்று அழகாகக் காட்சிகள் விரிகின்றன. அதிகாலையில் காணும் கனவு போன்ற அந்தப் பாடலில், மகேந்திரன், இளையராஜாவின் கற்பனையை உள்வாங்கிக்கொண்டு அத்தனை குளுமையாகப் படமாக்கியிருப்பார் ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.
தமிழகத்தில் 80-களில் பால்யத்தைக் கழித்தவர்கள் இன்னமும் 80-களில் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் அவர்களுடைய ரசனை உலகில் இளையராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா, கமல்ஹாஸன் போன்ற கலைஞர்கள் செலுத்திய ஆதிக்கம்தான். மகேந்திரன் படங்களின் பாடல் காட்சிகளும் பிற காட்சிகளும் அவற்றின் காட்சியமைப்புக்காகவும் ஒளிப்பதிவுக்காகவே சிலாகிக்கப்படுகின்றன.
‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘மெட்டி’, ‘நண்டு’ போன்ற படங்களின் பாடல் காட்சிகள் தமிழ் ரசிகர் களின் கண்களிலும் மனதிலும் தங்கிவிட்டவை. மகேந்திரனின் கண்களாக இருந்து, அவரது படைப் புலகை உருவாக்கியவர் அசோக்குமார். அந்த வகையில் தமிழ் ரசிகர்களின் ரசனை வட்டம் அவர் இல்லாமல் முழுமையடையாது.
ஒளியின் தூதுவர்
வெளிப்புறப் படப்பிடிப்புகளில் நடிகர் – நடிகை களின் தலைக்குப் பின்புறமிருந்து பொழியும் ஒளியைப் பயன்படுத்தி அவர் வடிவமைத்த காட்சி கள் ஒருவிதம் என்றால், அறைக்குள் இருக்கும் பாத்திரங்களின் முகங்களை இயல்பான ஒளியில் அவர் காட்சிப்படுத்திய விதம் இன்னொரு வகை.
‘ஜானி’ படத்தின் ‘என் வானிலே’ பாடலின் ஒளிப்பதிவை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மாலையின் மஞ்சளும் மெல்லிய இருளின் கருமையும் கலந்த நிறக்கலவையின் பின்னணியில், ஸ்ரீதேவி பியானோ வாசிக்க, மின்னும் தலைமுடியுடன் ரஜினி அதை ரசித்துக்கொண்டிருக்கும் காட்சியை மறக்க முடியுமா? பாடலின் இடையிசை முடிந்து சரணம் தொடங்கும் தருணத்தில் கேமரா மலையிலிருந்து இறங்கி, ரஜினி – ஸ்ரீதேவி இருக்கும் அறைக்குள் நுழையும். அறையை அலங்கரிக்கும் பூக்களில் ஒன்றாக மெல்லிய புன்னகையுடன் பாடலைத் தொடரும் ஸ்ரீதேவி, பூமிக்கு வந்த தேவதையாகக் காட்சியளிப்பார். அந்த மந்திரத்தின் ரகசியம், அசோக்குமாரின் ஒளிப்பதிவு.
அசையும் ஓவியம்
அதே படத்தின் ‘ஒரு இனிய மனது’ பாடலில், இருளான மேடையில் பாடும் தேவியின் தலைமுடி பொன்னிறத்தில் மின்னும். மெல்ல அசையும் ஓவியம் போன்ற காட்சியமைப்பு அது. இளையராஜாவின் இசையின் நுட்பத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற ஒளிப்பதிவைத் தந்திருப்பார் அசோக்குமார்.
‘மெட்டி’ படத்தின் ‘மெட்டி ஒலி காற்றோடு’, ‘சந்தக் கவிகள் பாடிடும்’ போன்ற பாடல்களில் இயற்கையான ஒளியைப் பயன்படுத்திக் கதா பாத்திரங்களைப் பாந்தமான அழகுடன் மிளிரச் செய்திருப்பார். ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் வரும் ‘அழகிய கண்ணே’ பாடலில் தாய்மையின் மேன்மையையும் கைவிடப்பட்ட பெண்ணின் தனிமையையும் உணர்த்தியிருப்பார்கள் மகேந் திரனும் அசோக்குமாரும். பாடலின் மூன்றாவது இடையிசையில், உயிரை உருக்கும் குழலிசையின் பின்னணியில், தேயிலைச் செடிகளின் மத்தியில் இலையுதிர்ந்த மரங்கள் பான்னிங் ஷாட்டில் காட்டப்படும். கையறு நிலையில் இருக்கும் தாயின் சோகத்தைக் குறியீடாகக் காட்டியிருப்பார் அசோக்குமார்.
கலையின் முன்னோடி
‘நண்டு’ படத்தின் ‘அள்ளித் தந்த பூமி’ பாடலில் நினைவின் சுவடுகளைச் சுமந்து நிற்கும் லக்னோ நகரின் பழைய கட்டிடங்களை மாலை ஒளியில் பதிவுசெய்திருப்பார். கதையின் தன்மைக்கேற்ப ஒரு பாடலைப் படமாக்குவதில் நிபுணர் அவர். அதே காலகட்டத்தில் பிற இயக்குநர்களின் படங்களுக்குச் சற்றே மாறுபட்ட விதத்தில் ஒளிப்பதிவு செய்தார். ‘உல்லாசப் பறவைகள்’ படத்தின் ‘தெய்வீக ராகம்’ பாடலில் வயல்வெளியின் பசுமையை அசலாகப் படம் பிடித்திருப்பார். இதுபோன்ற எத்தனையோ பாடல்கள், காட்சிகளைச் சொல்லலாம். “எத்தனை கஷ்டமான காட்சிகள் என்றாலும் அவர் ஒருபோதும் சலித்துக்கொண்டதில்லை” என்று மகேந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என்று பல்வேறு மொழிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அசோக்குமார், சில படங்களை இயக்கியுமிருக்கிறார். சில்க்கை வைத்து அவர் இயக்கிய ‘அன்று பெய்த மழையில்’, அன்றைய காலகட்டத்தில் ஒரு துணிச்சலான முயற்சி. பாலியல் பின்னணியிலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தும் இயக்கியும் இருக்கிறார். ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’, ராஜேஷ் வரின் ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ (2003) வரை தொடர்ந்து இயங்கினார். கதையின் தன்மை கருதி தனது பாணியையும் மாற்றிக்கொள்ள அவர் தயங்கியதில்லை. பாண்டியராஜனின் ‘நெத்தியடி’ படத்துக்கும் ஒளிப்பதிவு செய்வார்; பரபரப்பான ‘வெற்றிவிழா’வுக்கும் பணியாற்றுவார்.
சிறந்த கலைஞர்கள் அவர்கள் காலத்தில் கவுரவிக்கப்படுவதில்லை என்ற கூற்று அசோக்குமார் விஷயத்திலும் உண்மையானது. அவரது இறுதிச் சடங்கில் ஓரிருவரைத் தவிர திரையுலகின் பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ள வில்லை. அவரது மறைவு குறித்து மகேந்திரன், பிரதாப் போத்தன் தவிர வேறு எந்தப் பிரபலமும் பொதுவெளியில் பதிவுசெய்யவில்லை. அடுத்த முறை ‘பருவமே புதிய பாடல்’ பாடலைப் பார்க்கும் போது இதை உருவாக்கிய கலைஞன் உயிரோடு இல்லையே என்று ரசிகன் வருந்துவான். அந்த ஒரு கணம் அவருக்கான மரியாதையைச் செய்துவிடும்.
- வெ. சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT