Published : 27 Jul 2016 08:31 AM
Last Updated : 27 Jul 2016 08:31 AM
பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக் கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாததால் 23 வயது இளைஞன் தற்கொலை செய்துகொண்டான் என்ற செய்தி கேட்டவுடன் மனம் பதைபதைத்தது. எப்படி இவ்வாறெல்லாம் நடக்க முடியும் என்ற பலத்த சிந்தனை மனதுக்குள் மீண்டும் மீண்டும் எழுந்தது. நேரிலேயே சென்று அவர்களைப் பார்த்துவிடுவோம் என்று நண்பர்கள் சாமுவேல்ராஜ், க.சாமிநாதன், ஆர்.கிருஷ்ணன் ஆகியோருடன் புறப்பட்டேன்.
போகும் வழியில் இதே பிரச்சினைக்காக இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். மதுரை ராஜாஜி நகர், அனுப்பானடி பகுதியில் வசிக்கும் லெனின் வீட்டைக் கண்டுபிடித்துச் செல்லும்போது இருட்டிவிட்டது. வீட்டில் ஏராளமான உறவினர்கள் துக்கம் விசாரிக்கக் குழுமியிருந்தனர்.
ரிலையன்ஸின் மிரட்டல்
லெனினின் தந்தை கதிரேசன் சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டு எங்களிடம் நடந்ததை விவரித்தார். “கடந்த ரெண்டு மாசமா விடாம போன் மேல போன் வந்துகிட்டே இருந்துது. நீங்க லெனினின் அப்பா வான்னு கேட்டாங்க. ஆமான்னதும், உங்க பையன் பேங்க்ல கடன் வாங்கியிருக்காரு. அந்தக் கடன நீங்க உடனே அசலும் வட்டியுமா கட்டணும்னு சொன்னாங்க. எனக்கு என்ன ஏதுன்னு வெவரம் புரியல. பேசறது யாருன்னு கேட்டா, நாங்க ரிலையன்ஸ் கம்பெனில இருந்து பேசறோம்னு சொன்னாங்க. எனக்குத் தலயும் புரியல.. வாலும் புரியல. நாம ஸ்டேட் பேங்க்லதான கடன் வாங்குனோம். வேற யாரோ கடன திருப்பிக் கட்டச் சொல்லிக் கேக்கறாங்களே அப்படீன்னு எனக்கு நானே யோசிச்சிட்டிருந்தேன்.
திரும்பத் திரும்ப போன் மேல போன் போட்டு மிரட்டர தொனியில தொந்தரவு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. என்னால நெருக்கடியைத் தாங்க முடியல. சரி, பையன்கிட்ட எப்படியும் சொல்லிதான ஆகணும்னு போன வாரம் அவன்கிட்ட சொன்னேன். அவன் ஒருமாதிரி ஆயிட்டான். பொலம்ப ஆரம்பிச்சிட்டான். ‘அப்பா நான் படிச்சி ஒண்ணும் பிரயோஜனம் இல்லப்பா.. என்னாலதான உங்களுக்கு இந்தக் கஷ்டம். எந்த வேலையும் கெடைக்க மாட்டேங்குது. நான் உங்களுக்கு ரொம்பப் பாரமா ஆயிட்டேம்ப்பா’ன்னு திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தான்.
ஸ்டேட் பேங்க்கால் போன வாழ்க்கை
அன்னைக்கு ராத்திரி ரொம்பப் புலம்பினான். நானும் அவங்கம்மாவும் அவன கவலப்படாதன்னு தட்டிக் குடுத்தோம். மறுநாள் காலைல நான் எப்பவும்போல காலையிலயே வேலைக்குப் போயிட்டேன். ஒரு ஒம்பது மணி இருக்கும். அவங்க அம்மாகிட்டயிருந்து போன் வந்துது. ‘என்னங்க… பையன் எவ்வளவு தட்னாலும் கதவத் தெறக்க மாட்டேங்கறான். நீங்க செத்த வந்துட்டுப் போங்க’ன்னாங்க. நானும் பதறியடிச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்தேன். கதவ தட்டித் தட்டிப் பாத்தோம். கதவே தெறக்கல. அதுக்குள்ள பக்கத்து வீட்ல இருக்கவங்க எல்லாம் வந்துட்டாங்க. கதவ ஒடச்சிப் பாத்தா பையன் தூக்குல தொங்கிக்கிட்டிருக்கான்’’- கதறி அழுதார் கதிரேசன்.
போன எங்களுக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்றே புரியவில்லை. ஒரு மகனைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி 23 வயதில் பலி கொடுப்பது சாதாரண இழப்பில்லை. பெரும் கொடுமை!
லெனினுடைய தாய்மாமன் எங்களைப் பார்த்து ஆவேசமாகக் கேட்டார், “எங்க பையன் ஸ்டேட் பேங்க்ல தானங்க கடன் வாங்கினான். அத வசூல் பண்றதுக்கு ரெளடி மாதிரி ரிலையன்ஸ் எப்படி வருவாங்க? யாரு அவங்களுக்கு அந்த அதிகாரத்தக் குடுத்தாங்க?”
ஒரே தவணையில் போன உயிர்
லெனின் 2010-ல் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில், சிவில் இன்ஜினீயரிங் சேர்ந்து படிப்பதற்காக மதுரை ஸ்டேட் வங்கிக் கிளையில் கல்விக் கடன் பெற்றார். 2014-ல் படிப்பை முடிக்கும் வரையில் அவர் வாங்கிய கடன் ரூ. 1,90,000. ஆனால், ரிலையன்ஸ் கம்பெனி அவருக்கு மே மாதம் 6-ம் தேதி அனுப்பிய கடிதத்தில் 15 நாட்களுக்குள் அன்றைய தேதி வரையிலான வட்டியுடன் ரூ. 2,48,623-ம் அதற்குப் பிறகு வரும் நாட்களுக்கான வட்டியும் மற்ற செலவுகளையும் சேர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
லெனினின் தந்தை கதிரேசன், தினக் கூலிக்கு வேலை செய்யும் கொத்தனார். லெனினுடைய தாயார் எந்தப் பணிக்கும் செல்லாத குடும்பத் தலைவி. அவர்களுடைய ஆண்டு வருமானம் அதிகபட்சம் ரூபாய் 2.50 லட்சத்துக்கு மேல் இல்லை. பெற்றோர்களின் கூட்டு வருமானம் வருடத்துக்கு ரூ. 4.50 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால், படிப்புக் காலத்துக்கும் அதன் பிறகு வேலை கிடைக்காவிட்டால், ஒரு வருடத்துக்கும் வட்டி எதுவும் கிடையாது. இந்த வட்டியை மத்திய அரசாங்கமே ஏற்கும். அப்படியானால், 2015 ஜூன் மாதம் வரை அவருடைய கடனுக்கு வட்டி கேட்கக் கூடாது. அதன் பிறகு, ஒரு வருடத்துக்கு 11.25% வட்டி. அசலும் வட்டியுமாகச் சேர்த்தாலும் ரூ. 2,11,000 தாண்ட வழியில்லை. அப்படி இருக்கும்போது, ரிலையன்ஸ் நிறுவனம் ஏன் ரூ. 2,48,623 திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கேட்கிறது? கல்விக் கடனை 7 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்த கால அவகாசம் இருக்கும்போது, இந்த ஏழை மாணவனை ஒரே தவணையில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் கேட்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?
சீரழிக்கும் சதி
கடன் வாங்கும்போதே படிப்பு முடிந்து ஒரு வருடம் கழித்து மாதம் ரூ. 4,155 மட்டும்தான் மாதத் தவணையாக 60 மாதம் கட்ட வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது மொத்தக் கடனையும் ஒரே தவணையாகக் கேட்டதால்தான் அந்த ஏழைக் குடும்பம் பயந்துவிட்டது. அதுதான் அந்த மாணவனைத் தற்கொலைக்குத் தூண்டியது. இப்படி ஒரு நிலைப்பாட்டை ரிலையன்ஸ் கம்பெனி எப்படி எடுக்க முடியும்? அதன் பின்புலம் என்ன?
ஸ்டேட் வங்கி, கல்விக் கடனை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்கும்போது 55% தள்ளுபடிசெய்து 45% மட்டுமே கொடுத்தால் போதும் என்று ஒப்பந்தம் போட்டுள்ளதாகத் தெரிகிறது. அப்படி ரிலையன்ஸ் கொடுக்க வேண்டிய தொகையிலும் 15% முதலில் கட்டினால் போதும். மீதமுள்ள 85% தொகையை 15 வருட காலத்தில் செலுத்தலாம் என்று சலுகை அளித்துள்ளதாம். ரிலையன்ஸ் கம்பெனிக்குக் காட்டும் சலுகையைக்கூட ஓர் ஏழை மாணவனுக்குக் காட்ட ஸ்டேட் வங்கி நிர்வாகம் தயாராக இல்லை. இது பொதுத் துறையை உள்ளிருந்து சீரழிக்கும் சதிதானே?
ரிலையன்ஸ் நிறுவனமே பல வங்கிகளுக்கு ரூ.1,25,000 கோடி கடன் பாக்கி வைத்திருக்கும்போது, அந்நிறுவனத்திடம் இந்தக் கடனை வசூல் செய்யும் வேலையை ஸ்டேட் வங்கி போன்ற பொதுத் துறை வங்கி எப்படிக் கொடுக்க முடியும்?
கடனை வசூலிக்க சட்ட ரீதியான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலும், பல நீதிமன்றத் தீர்ப்புகளும் உள்ளன. அவற்றையெல்லாம் துச்சமாக மதித்து, ஓர் ஏழை மாணவனிடம் எப்படி இத்தகைய கெடுபிடியை ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ள முடியும்?
லெனின் மரணத்துக்கு பாரத ஸ்டேட் வங்கியும், ரிலையன்ஸ் நிறுவனமும், இதற்கு வழிவகுத்த ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும்தானே பொறுப்பு. அந்தப் பொறுப்பை அவர்கள் தட்டிக் கழிக்க முடியுமா?
- சி.பி.கிருஷ்ணன், பொதுச்செயலாளர், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு.
தொடர்புக்கு : cpkrishnan1959@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT