Published : 25 Apr 2017 08:36 AM
Last Updated : 25 Apr 2017 08:36 AM
கொல்கத்தாவில் ஏதோ ஒன்று இருக்கிறது. உண்மையில் அது ஏதோ ஒன்று அல்ல. அங்கிருக்கும் எல்லாமும் கூடிக் கொடுக்கும் உணர்வு! அது சாலை நடைபாதையில் தொழிலாளர்கள் சர்வ சாதாரணமாகக் கூடி உட்கார்ந்து கேரம் விளையாடிக்கொண்டிருப்பதாக இருக்கலாம், வீதிகளில் வீடுகளுக்கு முன் ஆங்காங்கே மரத்தடிகளில் உட்கார்ந்து ஆண்-பெண் வேறுபாடின்றி பேசிக்கொண்டிருப்பதாக இருக்கலாம், பத்து ரூபாய்க்கு பூரி - சப்ஜி கிடைப்பதாக இருக்கலாம், பூங்காக்களில் ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்தபடி குவிந்து கிடக்கும் காதல் ஜோடிகளை யாரும் வேடிக்கை பார்க்காமல், அவரவர் வேலையைப் பார்த்தபடி மக்கள் கடப்பதாக இருக்கலாம், நடைபாதை டீக்கடைகளில் தென்படும் இளைஞர் கூட்டத்தில் எந்த மாச்சரியமும் இல்லாமல் பசங்களுக்கு இணையாகப் பெண் பிள்ளைகளும் ஒரு கையில் சிகரெட், ஒரு கையில் டீ கிளாஸ் சகிதம் உட்கார்ந்து விவாதித்துக்கொண்டிருப்பதாக இருக்கலாம், ஓடும்போதே ஏறி இறங்கும் வேகத்தில் இயங்கும் டிராம் வண்டிகளாக இருக்கலாம், இவற்றையெல்லாம் பார்க்கும்போது எழும் சுதந்திர உணர்வு அது உண்டாக்கும் மனஎழுச்சி இருக்கிறதே… இந்தியா கிழக்கிலிருந்துதான் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது! இந்தச் சுதந்திர உணர்வை அனுபவிப்பதற்காகவே வருடத்துக்கு இரு முறையேனும் கொல்கத்தா ஓடிவிட வேண்டும் என்று நினைப்பதுண்டு. இந்தப் பயணத்தின்போதும் கொல்கத்தா சென்றிருந்தேன். ஆறு மாதங்களுக்குள் எவ்வளவு மாற்றங்கள்! இந்தியா வேகவேகமாக மாறிக்கொண்டிருப்பதை கொல்கத்தாவில்தான் முதல் முறை உணர்ந்தேன்!
இன்றைக்கு நாட்டிலேயே சங்கப் பரிவாரங்களின் உண்மையான பலத்தைப் புரிந்துகொண்டு, பாஜகவின் ‘இந்தி-இந்து தேசிய அரசிய’லுக்கு மாற்று அரசியலை முன்னெடுப்பதில் ஓரளவேனும் திட்டமிட்டுச் செயல்படுபவர்களில் வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே முதன்மையானவர் என்பது என்னுடைய புரிதல். 10 ஆண்டுகளுக்கு முன்பே வங்கத்தில் எல்லாச் சமூகங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் அவர் வெற்றிபெற்றிருந்தார். சிங்கூரில் அவர் நடத்திய போராட்டத்தின்போது, ‘‘இங்குள்ள அத்தனை ஜனநாயக சக்திகளையும் என் பின்னே நிறுத்தியிருக்கிறேன்’’ என்று அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. மூன்று தசாப்த கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சியை அவருடைய திரிணமூல் காங்கிரஸ் கட்சி முடிவுக்குக் கொண்டுவந்தபோது, காங்கிரஸ்காரர்கள் முதல் மாவோயிஸ்ட்டுகள் வரை அவருக்குப் பின்னால் இருந்தனர். தலித்துகள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இடைநிலைச் சாதியினர், உயர் சாதியினர், ஏழைகள் - உயர் வர்க்கம் என்று எல்லாத் தரப்புகளையும் தன் பின்னே கச்சிதமாக அவர் இணைத்திருந்தார். இந்த இணைப்பின் மையப் புள்ளி வங்க அடையாள அரசியல்.
நூறாண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக கொல்கத்தா இருந்தவரை எல்லாத் துறைகளிலும் முன்னின்ற நாம், இன்றைக்கு எவ்வளவோ சரிந்துவிட்டோம் என்ற ஆதங்கம் பெரும்பான்மை வங்காளிகளிடம் உண்டு. மம்தா அந்தப் புள்ளியையே தன்னுடைய களத்தின் மையமாக மாற்றினார். மம்தா முதல் முறை வென்றபோது, ‘‘மார்க்ஸ் இருந்த இடத்தில் தாகூர் அமர்ந்துவிட்டார்’’ என்று எழுப்பப்பட்ட முழக்கங்கள் மேலோட்டமான கூச்சல்கள் அல்ல.
இந்தப் பயணத்துக்கு முந்தைய கொல்கத்தா பயணத்தில் என்னுடன் இணைந்திருந்தவர் மார்க்ஸியரும் வங்க - தமிழ் மொழிபெயர்ப்பாளருமான வீ.பா.கணேசன். வங்கத்தோடு கால் நூற்றாண்டுக்கும் மேலான உறவைக் கொண்டவர் கணேசன். வாய்ப்புக் கிடைக்கும் ஒவ்வொரு இடத்திலும் மம்தா எப்படியெல்லாம் வங்க அடையாள அரசியலுணர்வைக் கட்டியெழுப்பியிருக்கிறார் என்று அந்தப் பயணம் முழுவதிலும் நாங்கள் பேசிக்கொண்டு வந்தோம்.
வங்கத்து ஆளுமைகள் பிறந்து வளர்ந்த வீதிகள், வீடுகள் எங்கும் அவர்களை நினைவுகூரும் சின்னங்களை உருவாக்கியிருக்கிறார். பஸ் நிறுத்தங்கள் பின்னணியில் பெயர்ப் பலகைகளில் வங்கத்து அரசியல், கலை, இலக்கிய ஆளுமைகளின் பிரமாண்டப் படங்கள் - கூடவே அவர்கள் உதிர்த்த பொன்மொழிகள். நாங்கள் சென்ற அரசு அலுவலகங்கள் எங்கிலும் ஒவ்வொரு அலுவலரின் மேஜையிலும் தாகூர் படம் அல்லது சிலை; வங்கமொழி எழுத்தாளர்களின் புகைப்படங்கள் அடங்கிய நாட்காட்டிகளைப் பார்க்க முடிந்தது. ஒரு மாநகராட்சி தன் மக்களிடத்தில், ‘குப்பை போடாதீர்கள்’ என்று அறிவுறுத்த வைக்கும் விளம்பரப் பலகைகளில் என்ன உள்ளூர் மண் அரசியல் பேசிவிட முடியும்? மம்தா அரசு அதைக்கூட விட்டுவைக்கவில்லை. கொல்கத்தாவின் சாலைகள்தோறும் சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர், தாகூர், அரவிந்தர், சத்யஜித்ரே போன்ற ஆளுமைகளின் படங்கள். கூடவே ஒரு வாசகம், ‘கொல்கத்தா சுபாஷ்/விவேகானந்தர்/ சத்யேஜித்ரேவின் நகரம்.. அதைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்!’
ஒரு வங்காளியின் கண்ணில் எங்கோ திரும்பத் திரும்ப வங்கப் பெருமிதம் பட்டுக்கொண்டே இருக்கிறது. ‘அவன் இந்து அல்ல, முஸ்லிம் அல்ல, கிறிஸ்தவன் அல்ல, பிராமணன் அல்ல, தலித் அல்ல; முதலில் வங்காளி; அப்புறம்தான் அடுத்தது!’ என்ற செய்தி ஏதோ ஒருவகையில் திரும்பத் திரும்ப அவனிடத்தில் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
ஒரு உரையாடலில் ஊடக நண்பர் சுவோஜித் பக்ஷி சொன்னார், “மோடி தனிப்பட்ட வகையில் ஊழல் குற்றச்சாட்டுகளில் நேரடியாகச் சம்பந்தப்படாதவரா? மம்தாவும் அப்படித்தான். மோடி எளிமையானவரா? மம்தா அவரைவிட எளிமையானவர். பாஜக இந்து தேசிய வாளுடன் வருகிறதா? மம்தா கையில் வங்க தேசியக் கேடயம் இருக்கிறது.’’
2014 மக்களவைத் தேர்தல் சமயத்தில் கொல்கத்தா சென்று திரும்பியபோது சொன்னேன், “2014 அல்ல; 2019-ம் அல்ல; 2024 வரை வங்கத்தை பாஜக கற்பனையில்கூட நினைக்க முடியாது.” ஆறு மாதங்களுக்கு முன் சென்ற பயணத்தின்போது கணேசனிடம் பேசிக்கொண்டிருக்கையிலும் இதையே கூறினேன். ‘‘பாஜக இங்கே வளரும். கம்யூனிஸ்ட்டுகளின் இன்றைய இரண்டாம் இடத்தை அது ஆக்கிரமிக்க முடியுமே தவிர, திரிணமூல் காங்கிரஸின் முதலிடத்தை அவ்வளவு சீக்கிரம் பாஜகவால் தொட முடியாது.’’
இந்தப் பயணம் எனக்குப் பெரும் அதிர்ச்சி. பொதுவெளியிலேயே பத்தில் மூன்று பேர் ‘‘ஏதாவது ஒரு மாற்றம் இருந்தால், நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது!’’ என்று பேசக் கேட்க முடிந்தது. என்ன காரணம்? ‘‘ஒவ்வொரு நாளும் ஒரு புது இடத்தில் ஒரு ஷாகா (அன்றாடம் பயிற்சி அளிக்கப்படும் ஒரு கிளை) தொடங்குவது என்று திட்டமிட்டுச் செயல்பட்டுவருகிறது ஆர்எஸ்எஸ். 2013-ல் விவேகானந்தரின் 150-வது பிறந்த தினம் வந்தபோது, பள்ளிக்கூடங்கள் வரை கீழே இறங்கிச் சென்றார்கள். மோடி அரசு பொறுப்பேற்ற பின் வேகம் அதிகரித்தது. இன்றைக்கு வங்கத்தில் அன்றாடம் குறைந்தது 1,800 இடங்களில் ஷாகாக்கள் நடக்கின்றன. மூன்று வருடங்களுக்கு முந்தைய சூழலோடு ஒப்பிட்டால், இது இரண்டு மடங்கு’’ என்றார்கள் நண்பர்கள்.
2014 மக்களவைத் தேர்தலுக்கு முன் நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் நடத்திக்கொண்டிருந்த ஷாகாக்களின் எண்ணிக்கை 39,000. மோடி நாற்காலியில் உட்கார்ந்த அடுத்த 4 மாதங்களில் இந்த எண்ணிக்கை 8% அதிகரித்து 42,000 ஆனது. அடுத்த சில ஆண்டுகளுக்குள் இந்த எண்ணிக்கையை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். இன்றைக்கு அதன் எண்ணிக்கை 57,000-ஐத் தாண்டிவிட்டது. இதே காலகட்டத்தில் காங்கிரஸ் எத்தனை புதிய கிளைகளைத் தொடங்கியிருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. கடைசியாக நம்முடைய வீடு தேடி ஒரு காங்கிரஸ்காரர் வந்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும் அல்லது நம்முடைய தெருக்களில் காங்கிரஸ் கொடியுடன் யாரையாவது பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று தோன்றியது.
நாம் பாஜகவின் வெற்றியை மேடையில் முழங்கும் மோடி வழியாக மேல் நோக்கிப் பார்க்கிறோம். கீழே அதன் ரத்த நாளங்களாகப் படர்ந்து பரவிக்கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் ஷாகாக்கள் வழியாகவும் அயராது உழைத்துக்கொண்டிருக்கும் அதன் தொண்டர்களின் வழியாகவும் பார்ப்பதே சரியாக இருக்கும். ஷாகா என்றால், ஷாகா மட்டும் அல்ல...
(உணர்வோம்...)
சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT