Published : 16 Feb 2014 12:00 AM
Last Updated : 16 Feb 2014 12:00 AM
மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் வாயிலில் திடீரென்று ஓர் அறிவிப்புப் பலகை கடந்த வாரம் தொங்கியது. நூற்றுக் கணக்கில் தினசரி ஆஜராகும் பொதுமக்கள் அதைப் படித்துவிட்டு, ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர். அடுத்த நாள் ஊடகங்கள் செய்தி வெளியிடும்வரை அதற்கான காரணமும் புரியவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவொன்றின் அடிப்படையிலேயே பொதுஅறிவிப்பு வெளியிட்டதாகக் கூறப்பட்டது.
எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்திலேயே கிரிமினல் குற்றங்களைப் பற்றி புகார்/ தகவல் அளிக்க வேண்டுமென்றும், குற்றத் தகவல்களை ஆணையர் பெற்றால், அவரோ உயர் அதிகாரிகளோ முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்த பின்னரே, உரிய காவல் நிலையத்துக்கோ வேறொரு அதிகாரிக்கோ அந்தக் குற்றம்பற்றித் துப்புத்துலக்க உத்தரவிடலாம் என்றும் இடப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவினால், இந்தத் திடீர் நடவடிக்கை என்று கூறப்பட்டது.
நியாயமற்ற செயல்
பொதுமக்களின் குறை தீர்க்க வாங்கப்படும் மனுக்களைத்திடீரென்று வாங்க மறுக்கும் ஆணையரது செயலில் நியாயமில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முதல்முதலமைச்சர் அலுவலகம் வரை பொதுமக்களின் குறைதீர்க்கும் மனுக்கள் தினசரி ஆயிரக் கணக்கில் பெறப்பட்டு, உரியநடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. நூறாண்டுகளுக்கும் மேலாக, நகரக் காவல்துறை ஆணையர் கடைப்பிடித்துவந்த நடைமுறையை ரத்துசெய்வது சட்டவிரோதமானது. மனுக்களைப் பொதுமக்களிடமிருந்து ஆணையர் பெறக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கூறவில்லை. மாறாக, பிடியாணையின்றிக் கைதுசெய்வதற்குரிய குற்றங்கள்பற்றி வரப்பெறும் மனுக்களைக் கையாள்வதுபற்றிதான் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
கிரிமினல் குற்றங்கள்பற்றிய தகவல்கள் மட்டுமின்றி, மாநகரக் காவல்துறை ஆணையருக்குப் பல பணிகள் உண்டு. மைக் செட்டுக்கான உத்தரவில் தொடங்கி மசால் வடை விற்கும் டீக்கடைகளுக்கான உரிமங்கள் வரை அவரிடம்தான் உத்தரவு பெற வேண்டும். துப்பாக்கி உரிமம் முதல் மதுபானக்கூட உரிமங்கள் வழங்குவது வரை அவர்தான் பொறுப்பு. ஓய்வுபெற்ற மற்றும் இறந்துபோன காவலர் குடும்பங்களின் பிரச்சினைகள், காவலர் குடியிருப்புப் பிரச்சினைகள், ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் தண்டனைபற்றிய புகார்கள் என்று ஏராளமான பிரச்சினைகளைத் தினசரி அவர் கவனிக்க வேண்டும். மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் சட்டம் - ஒழுங்கு மற்றும் கிரிமினல் குற்றங்கள்பற்றிய நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அதிகாரமும் அவருக்கு உண்டு. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட நிர்வாக நடுவராகவும் அவர் செயல்படுகிறார். குறிப்பிட்ட காவல் நிலைய அதிகாரிகளின் ஒழுங்கீனமான நடவடிக்கைகள்குறித்து வரும் புகார்களையும் அவர்தான் விசாரிக்க வேண்டும். இப்படிப் பன்முகப் பொறுப்புகள் பல இருப்பினும், அவற்றைத் தவிர்க்கும் விதமாக உயர் நீதிமன்ற உத்தரவின்மீது பழிபோட்டுவிட்டு, பொதுமக்களை ஆணையர் அலைக்கழிப்பது நியாயமற்ற செயல்.
திரைப்பட நடிகை வழக்கு
உயர் நீதிமன்ற உத்தரவு என்னதான் சொல்கிறது? திரைப்பட நடிகை ஒருவர், தன்னை சினிமா ஃபைனான்ஸியர் ஒருவர் திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் அவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்ததாகவும், அதைப் பயன்படுத்திக்கொண்டு பாலியல் இச்சைகளுக்கு அவர் தன்னை உட்படுத்தி, அவற்றைப் புகைப்படங்கள் எடுத்துத் தன்னை மிரட்டிவருவதாகவும், திருமணம் செய்துகொள்ளாமல் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், பெருந்தொகையைத் தன்னிடமிருந்து கடனாகப் பெற்றும், திருப்பித் தராமல் ஏமாற்றியதாகவும் புகார் ஒன்றைக் காவல்துறை ஆணையரிடம் கொடுத்தாராம்.
அந்தப் புகார் உரிய காவல் அதிகாரியிடம் அனுப்பப்பட்டும் 11 நாட்களுக்குப் பின்னரே முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. ஊடகங்களில் இந்தச் சம்பவம்குறித்துப் பெருஞ்செய்திகள் வந்தமைக்கு நீதிபதி கண்டனமும் தெரிவித்துள்ளார். வந்த புகாரை காவல்துறை ஆணையர் பெற்றுக்கொள்ளாததும் உரிய காவல் நிலையத்துக்குப் புகார்தாரரை அனுப்பாததும் சட்டப்படி குறையென நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
நீதிபதி கொடுத்த உத்தரவு, சினிமா ஃபைனான்ஸியர் போட்ட முன்ஜாமீன் மனுவின் பேரில் போடப்பட்டது. முன்ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அத்துடன் முடித்துக்கொள்ளாமல், மேலும் சில கருத்துக்களைத் தனது உத்தரவில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: (அ) திரைப்பட நடிகை கொடுத்துள்ள புகார் முதல் நோக்கில் சிவில் வழக்காகும். அதில் பணம் கொடுக்கல், வாங்கல்பற்றியே கூறப்பட்டுள்ளது (ஆ) 30 வயதுள்ள திரைப்பட நடிகை நான்கு ஆண்டுகளாக சினிமா ஃபைனான்ஸியருடன் ஒரே வீட்டில் தங்கி உடலுறவு வைத்துக்கொண்டிருந்ததால், அவர் ஏமாற்றப்பட்டிருப்பாரா என்ற சந்தேகமும் எழுகிறது. அவர் இளம் பெண்ணல்ல. முதிர்ச்சியடைந்தவர். (இ) நமது சமுதாயம், வயதுவந்த ஆணும் பெண்ணும் திருமணமின்றி உடலுறவுகொள்வதை ஏற்றுக்கொள்ளாது. (ஈ) காவல்துறை ஆணையர் புகார் மனுவைப் பெற்ற பின்னர், தானே முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரித்திருக்க வேண்டும் (அல்லது) புகாரைப் பதிவுசெய்த பின்னரே, உரிய காவல் அதிகாரி விசாரணைக்கு அனுப்பியிருக்க வேண்டும். (உ) இந்த உத்தரவை வெளியிடும் ஊடகங்கள், சட்ட சஞ்சிகைகள் சினிமா ஃபைனான்ஸியர் மற்றும் திரைப்பட நடிகையின் பெயர்களைத் தவிர்த்து, அவர்களை ‘எக்ஸ்’ மற்றும் ‘ஒய்’ என்றே குறிப்பிட வேண்டும். (ஊ) அரசு மற்றும் காவல்துறை ஆணையர் தனது உத்தரவின்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் ஆணையர் பொதுமக்களின் மனுக்களை ஒருவேளை வாங்க மறுக்கிறாரோ என்று தெரியவில்லை.
தொக்கிநிற்கும் கேள்வி
இப்படி ஜாமீன் மனுக்களின்மீது கோரும் உத்தரவுகளில் தங்களது சொந்தக் கருத்துக்களையோ சட்ட வியாக்கியானங்களையோ நீதிபதிகள் செய்ய முடியுமா என்ற கேள்வி தொக்கிநிற்கிறது. பல வழக்குகளில் ஜாமீன் மனுக்களுக்குச் சம்பந்தமான பிரச்சினைகள் தவிர, வேறு கருத்துக்களைத் தங்களது உத்தரவுகளில் நீதிபதிகள் தெரிவிக்கக் கூடாதென்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சினிமா ஃபைனான்ஸியர் போட்ட மனுவில் ஆணையரோ தமிழக அரசோ கட்சிகளாகச் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருடைய முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் பொது விசாரணைக்கு எடுத்துக்கொண்டதால், அதில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளும் பொது ஆவணங்களாகும். எனவே, முன்ஜாமீன் கேட்ட ஃபைனான்ஸியரின் பெயர் வெளியிடப்படுவதை ஏன் தவிர்க்க வேண்டும் என்று தெரியவில்லை. பிடியாணையின்றிக் கைதுசெய்வதற்குரிய குற்றங்கள்பற்றிய தகவல்கள் வரும்போது, எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்கள் முதல் தகவல் அறிக்கையைக் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும் என்று ‘லலிதகுமாரி’ என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் குறிப்பிட்டதுடன், குற்றத் தகவல் அளிப்பவர்களை எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்கே அனுப்ப வேண்டிய அவசியத்தை நீதிபதி வலியுறுத்தியுள்ளார். ஆணையரே முதல் தகவலைப் பெற்றுக்கொண்டால், அவர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்த பின்னரே உரிய காவல் அதிகாரியிடம் அந்த வழக்கைத் துப்புத்துலக்க அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளதுதான் காவல்துறை ஆணையர்களுக்குத் தற்போது கிலியை ஏற்படுத்தியுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தால், பின்னர் குற்ற விசாரணையின்போது நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க ஆஜராக வேண்டும் என்ற கட்டாயத்தைத் தவிர்க்கவே மனுக்கள் வாங்குவது தவிர்க்கப்படுகிறது.
மக்களுக்கான பயன்பாடே முக்கியம்
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுக்கும் தருணத்தில், அந்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்குத் தபால் மூலம் புகாரை அனுப்பலாம் என்றும், அந்தத் தகவல்களைப் பெறும் அதிகாரி உரிய காவல் நிலையத்துக்கு அதை அனுப்பி விசாரிக்க உத்தரவிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இப்படிப்பட்ட நடைமுறைதான் செயலில் இருக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் என்பது நடைமுறைகளைப் பற்றிய சட்டம் என்பதால், அதன் பிரிவுகளைப் பெரும்பான்மையான பொதுமக்களின் பயன்பாட்டுக்கேற்பத் தாராளமாக வியாக்கியானம் செய்ய வேண்டும். காவல் நிலையங்களுக்குத் தகவல் அளிக்கச் செல்வோர் படும் பாடு அனைவரும் அறிந்ததே. புகாரை ஏற்றுக்கொள்ளாத உள்ளூர் காவல் நிலையங்களுக்கு எதிராகத்தான் பொதுமக்கள் மேலதிகாரிகளின் அலுவலகங்களுக்குப் படையெடுக்கிறார்கள். இதுமட்டுமன்று, உயர் நீதிமன்ற சென்னை மற்றும் மதுரை அமர்வுகளில், முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு உத்தரவிடக் கோரி, தினசரி நூற்றுக் கணக்கான வழக்குகள் தாக்கல்செய்யப்படுகின்றன. மிக்க பொருட்செலவிலும், காலவிரயத்திலும் செய்யப்படும் இந்த வழக்குகளைத் தவிர்க்க உதவ வேண்டும். மாவட்டக் கண்காணிப்பாளர்களோ அல்லது நகர ஆணையர்களோ பொதுமக்களிடமிருந்து தகவல்களைத் தெரிந்துகொண்டபின், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்குக் குற்றங்களை விசாரிக்க உத்தரவிடுவதற்குச் சட்டத்தில் தடையேதும் இல்லை.
தற்போது உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு பொதுமக்களைப் பாதிப்பதால், தமிழக அரசு அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடுசெய்து தக்க வழிகாட்டுதலை விரைவில் பெற வேண்டும் என்பதும் ஆணையர் அலுவலகங்களின் ஆராய்ச்சி மணிகள் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்பதுமே பொதுநலன் கருதும் அனைவரது விருப்பம்.
சந்துரு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, சமூக விமர்சகர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT