Published : 21 Apr 2017 09:01 AM
Last Updated : 21 Apr 2017 09:01 AM
தமிழக அரசியல் அரங்கில் காட்சிகள் வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன. பொதுமக்கள், தொண்டர்கள் ஆகியோர் வெளிப்படையாக சசிகலாவைத் திட்டிக்கொண்டிருந்தபோது எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் சசிகலாவின் காலில் பிடிவாதமாக விழுந்து கிடந்த கட்சியினர், இன்று சசிகலாவால் பயனில்லை என்று தெரிந்ததும் அவரையும் அவரது குடும்பத்தையும் தூக்கி எறியத் தயாராகிவிட்டார்கள்.
சசிகலா தன்னைத் தொந்தரவு செய்யாத வரையிலும் அவரைப் பற்றி ஓ.பன்னீர்செல்வமும் கவலைப்படவில்லை. சசிகலா பொதுச் செயலாளராக விரும்பியபோது அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவரே பன்னீர்செல்வம்தான். ராஜினாமா கடிதம் கொடு என்றதும் பணிவோடு சமர்ப்பித்தவரும் அவர்தான். பன்னீர்செல்வத்தைப் போன்ற வெளிப்படையான அவமானம் எதுவும் அவருக்குப் பின் வந்த முதல்வர் பழனிசாமிக்கு இல்லை. ஆனாலும் அவரும் மூத்த தலைவர்களும் சசிகலா குடும்பத்தினர் கட்சியையும் ஆட்சியையும் விட்டு விலகி இருக்க வேண்டும் என்னும் தீர்மானத்தை இப்போது பன்னீர்செல்வத்தின் போக்கில் எடுத்திருக்கிறார்கள். ஆர்.கே. நகர் தேர்தலின்போது கிடைத்த அனுபவங்கள், துரத்தும் வழக்குகள், மாறும் களச் சூழல் ஆகியவற்றின் விளைவாக “கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்லது என்றால் நான் ஒதுங்கிவிடத் தயார்” என்று டிடிவி தினகரனும் அறிவித்துவிட்டார்.
ஆட்சியில் நீடிப்பதற்காக எத்தனையோ அவமானங்களைப் பொறுத்துக்கொண்ட பன்னீர்செல்வம், அந்த ஆட்சியே தன் கையை விட்டுப் போய்விடும் என்னும் நிலையில் போர்க் கொடி எழுப்பினார். ஆர்.கே. நகரில் நிற்பதாக தினகரன் முடிவெடுத்ததுமே அவர் வென்றால் அடுத்து தனது நிலை என்ன என்பது பற்றிய சமிக்ஞை பழனிசாமிக்குக் கிடைத்திருக்க வேண்டும். சசிகலா குடும்பத்தின் பிடியில் இருக்கும் வரை யாருக்கும் எந்தப் பதவியும் உத்தரவாதமல்ல என்பதைப் பன்னீர்செல்வம், பழனிசாமி மட்டுமல்லாமல் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.
தொண்டர்களையோ மக்களையோ சந்திக்காமல் கூவத்தூர், தலைமைச் செயலகம் என்னும் அரண்களுக்குள் பாதுகாப்பாக உலவிவந்த கட்சித் தலைவர்களின் கண்களை இடைத் தேர்தல் திறந்திருக்க வேண்டும். வென்றால் மன்னன், தோற்றால் நாடோடி என்னும் அபாயகரமான சூதாட்டத்தில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கிய தினகரனே சசிகலாவின் படத்தைப் போட்டு வாக்குக் கேட்பதைத் தவிர்த்தார். சசிகலா குடும்பத்தின் மீதான தொண்டர்கள், வாக்காளர்களின் ஒவ்வாமையை அவர் நேரில் கண்டதுதான் அதற்குக் காரணம். பொது வெளியில் சசிகலாவின் இடம் என்ன என்பதை எல்லோரும் ஆர்.கே.நகரில் கண்ணாரக் கண்டுவிட்ட சூழலில், சசிகலா குடும்பத்துக்கு எதிரான காய் நகர்த்தல்கள் தொடங்கின. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசின் புலனாய்வு அமைப்புகளும் வழக்குகளும் தினகரனைத் துரத்தத் தொடங்கியதும், சசிகலா குடும்பத்தைத் துறக்கும் முடிவுக்கு நேரடியாக வந்துவிட்டார்கள். ஆட்டுவிக்கப்பட்ட பொம்மைகளாக இருப்பது குறித்த அவமானம் ஏதுமற்ற தலைவர்கள், ஆட்டுவிக்கும் கைகள் சுமையாகிவிட்டது தெரிந்த பிறகு விடுதலை பற்றிப் பேசுகிறார்கள்.
இன்று கட்சி இரு கூறாகி நிற்கிறது. இணைப்பு குறித்துப் பேசப்பட்டாலும், ஒரு விஷயம் இன்னும் தெளிவடைந்துவிடவில்லை. சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைப்பது அத்தனை எளிதா என்பதே அது! அது அவ்வளவு எளிதாக இருந்திருந்தால் கட்சியினர் எப்போதோ அவரைத் துரத்தியிருப்பார்கள். தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் நாற்சந்திகளிலும் சசிகலாவை மக்கள் தூற்றிக்கொண்டிருந்தபோது கண்களும் காதுகளும் இல்லாததுபோல இந்தத் தலைவர்கள் நடித்தார்கள் என்றால், அதற்குக் காரணம் கட்சி அமைப்பின் மீது சசிகலாவுக்கு இருந்த அபரிமிதமான பிடிமானம்தான். இன்று அந்தப் பிடிமானம் ஆட்டம் கண்டிருக்கலாம். ஆனால், 25 ஆண்டுகளுக்கு மேலாகக் கட்சியின் நிழல் தலைவர்போலச் செயல்பட்டுவந்த சசிகலாவின் ஆற்றலை அத்தனை எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது. திரைமறைவு அரசியலில் ஊறிய அந்தக் குடும்பத்தின் அடுத்தடுத்த நகர்வுகள் இந்த நாடகத்தில் எதிர்பாராத திருப்பத்தை அரங்கேற்றலாம்.
பாஜகவின் ஆட்டம்
இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் தன் கைக்குள் கொண்டுவரும் ஆட்டத்தில் இறங்கி யிருக்கும் பாஜக, தமிழகத்தில் தன்னுடைய முக்கியமான பகடைக்காயாக அதிமுகவைக் கையாண்டுகொண்டிருக்கிறது. சசிகலா மீது மக்களுக்கு இருக்கும் ஒவ்வாமையை அது பயன்படுத்திக்கொள்கிறது. பாஜகவுக்கு சசிகலா மீதிருக்கும் ஒவ்வாமை அரசியல்ரீதியான தகுதிகளையோ அவர் மீதான வழக்குகளையோ அடிப்படையாகக்கொண்டு உருவானதல்ல. சசிகலா தரப்பைத் தங்கள் விருப்பப்படி வளைக்க முடியாது என்னும் கணக்குதான் மத்திய அரசின் ஒவ்வாமைக்குக் காரணம் என்பதைக் கண்டு பிடிக்க ஒருவர் அரசியல் விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை.
தமிழகத்தில் ஒரு பொம்மை அரசு வேண்டும். அந்த பொம்மையை ஆட்டுவிக்கும் கரங் களாகத் தாங்களே இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதிமுகவினர் எப்போதுமே பொம்மையாக இருந்து பழகியவர்கள்தான். நேற்றுவரை அந்தப் பொம்மைகளை ஆட்டுவித்த கரங்கள் இன்று இல்லாதுபோய்விட்ட நிலையில், அடுத்து வந்த கரங்களும் பலவீனமாகிவிட்ட சூழலில் பாஜக இப்போது அந்த இடத்தை நோக்கி நகர்கிறது. இனி பொம்மைகளை இயக்கும் கயிறு களைக் கைப்பற்ற வேண்டியதுதான் பாக்கி. இரு அணிகளும் ஒன்று சேர்ந்தால்தான் கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை மீட்க முடியும். இரு அணிகளும் ஒன்றுசேர உதவும் சக்தியால் பல விதமான பேரங்களைப் பேச முடியும். அரசியலில் அரிச்சுவடி படித்தவர்களும் அறிந்திருக்கக்கூடிய இந்தக் கணக்கு, நாட்டை ஆளும் கட்சிக்குத் தெரியாதா என்ன?
ஆளுக்கொரு கனவு
எனினும், சதித் திட்டங்கள் யாவும் தீட்டிய விதத்திலேயே நிறைவேற்றப்பட்டுவிடுவதில்லை. பாஜகவின் சூழ்ச்சியோ, அதிமுகவினரின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமோ, உண்மை யான ஞானோதயமோ தமிழகத்தின் ஆளுங் கட்சியை வலுப்படுத்துவதற்கான களத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறது. சசிகலாவின் ஆசீர்வாதத்துடன் பதவியேற்ற பன்னீர்செல்வம், சசிகலாவை அச்சுறுத்தும் அளவுக்கு வளர்ந்ததோடு அல்லாமல், இன்று ஒரு மக்கள் தலைவராகவும் உருவெடுத்து நிற்கிறார். இன்னொருபுறம் பழனிசாமி உருவெடுக்கிறார். எந்தக் காரணத்தினால் ஒன்று சேர்ந்தாலும் கட்சியையும் சின்னத்தையும் கைப்பற்றிய பிறகு அதிமுக தன்னிச்சையாகச் செயல்படும் மாநிலக் கட்சியாக நடந்துகொள்ள முனையலாம். பாஜக சார்ந்த கட்சியாக அதிமுக மாறினால், அது அதிமுகவின் செல்வாக்கைக் காணாமல் ஆக்கிவிடும். எதிரே திமுக தலைமையில் அத்தனை கட்சிகளையும் ஒன்றிணைய வழி வகுத்துவிடும் என்பது பன்னீர்செல்வத்துக்கோ பழனிசாமிக்கோ தெரியாதது அல்ல. ஆட்சியில் பிடிமானமும் மக்களிடத்தில் செல்வாக்கும் வளருமெனில் மாநில உணர்வுகளையும் நலன்களையும் விட்டுக்கொடுக்காமல் பேரம் பேசக்கூடிய வலிமையையும் அது பெறலாம்.
ஆளுக்கு ஒரு கனவு இருக்கிறது. எல்லோர் மனதிலும் ஒரு கணக்கும் இருக்கிறது. ஆனால், எல்லாக் கனவுகள், கணக்குகளும் திட்டமிட்டபடியே நடந்துவிடுவதில்லை!
அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT