Published : 23 Dec 2013 12:00 AM
Last Updated : 23 Dec 2013 12:00 AM
இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் தேவயானி, அமெரிக்கா அத்துமீறல் என்கிற வார்த்தைகளுக்கு அடுத்து அதிகம் அடிபடும் பெயர் வியன்னா ஒப்பந்தம்.
வியன்னா ஒப்பந்தம் என்றால் என்ன?
சர்வதேச நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளைப் பேணுவதற்காக 1963-ம் ஆண்டு வியன்னா மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது. ஒரு நாட்டில் ராஜ்ஜிய ரீதியில் பணியாற்றும் நபர் (தூதர்) பயமின்றித் தன் பணியை மேற்கொள்ளவும், எந்தத் துன்புறுத்தலுக்கும் ஆளாகாமல் இருப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை ஏற்று 48 நாடுகள் கையெழுத்திட்டன. 2013-ம் ஜூன் நிலவரப்படி இந்த ஒப்பந்தத்தை ஏற்று 189 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி ஒரு நாட்டில் உள்ள தூதர் சிறப்பு விருந்தினர் என்ற தகுதியைப் பெறுகிறார். சிறப்புச் சலுகைகளுக்குத் தகுதி படைத்தவராகிறார். தாய்நாட்டுடன் அவர் மேற்கொள்ளும் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும், சுதந்திரமாகவும் பயமின்றியும் தூதர்கள் பணி செய்வதை ஒவ்வொரு நாடும் உறுதிசெய்ய வேண்டும் என இந்த ஒப்பந்தத்தில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
முக்கிய ஷரத்துகள்
வியன்னா ஒப்பந்தத்தில் மொத்தம் 79 ஷரத்துகள் இடம்பெற்றுள்ளன. சில முக்கியமான ஷரத்துகளைப் பார்ப்போம்.
ஷரத்து 1 டி: ஒரு தூதரகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் சிறப்பு விலக்குரிமையைப் பெறத் தகுதி படைத்தவர்கள்.
ஷரத்து 9 : ஒரு நாட்டில் உள்ள தூதர் மற்றும் தூதரகப் பணியாளர்களை, சம்பந்தப்பட்ட நாடு ஏற்றுக்கொள்ள முடியாது என எந்த விளக்கமும் இல்லாமல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அறிவிக்கலாம். இதை ஏற்று சம்பந்தப்பட்ட நாடுகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்களைத் திரும்பப் பெற வேண்டும். இல்லா விட்டால் ராஜதந்திரப் பாதுகாப்பை இழக்க நேரிடும்.
ஷரத்து 22: தூதரகம் அமைந்துள்ள வளாகம் கேடு, சேதம் விளைவிக்கக் கூடாத இடமாகும். தூதரின் அனுமதியின்றிச் சம்பந்தப்பட்ட நாட்டைச் சேர்ந்த எவரும் வளாகத்துள் நுழையக் கூடாது. தூதரகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிப்பது சம்பந்தப்பட்ட நாடுகளின் கடமை. தூதரகத்துக்குள் எதையும் தேடுவதற்கோ, ஆவணங்களைப் பறிமுதல் செய்யவோ அனுமதி கிடையாது.
ஷரத்து 30: தூதர்கள் குடியிருக்கும் வீட்டுக்கும் இது பொருந்தும்.
ஷரத்து 27: தூதர்கள் தங்கள் தாய்நாட்டுடன் மேற்கொள்ளும் தகவல் பரிமாற்றத்துக்குச் சுதந்திரமும் பாதுகாப்பும் சம்பந்தப்பட்ட நாடுகள் வழங்க வேண்டும். சந்தேகத்தின்பேரில் தூதரின் கைப்பையைத் திறந்து சோதனையிடக் கூடாது. தூதரின் தபால்கள், கூரியர் கவர்கள் தடுத்து வைக்கப்படக் கூடாது.
ஷரத்து 29: தூதர்கள் எந்த வடிவத்திலும் கைதுசெய்யப்படுவதற்கு உள்ளாக மாட்டார்கள். சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் இருந்து விலக்கு உண்டு.
ஷரத்து 31 (1சி): ராஜதந்திரப் பாதுகாப்புப்படி நடவடிக்கைகள் பொருந்தாது. வெளி இடங்களில் அலுவலகம் சார்ந்த பணியில் இருக்கும்போதும் இது பொருந்தும்.
ஷரத்து 34 மற்றும் 36: வரியில் இருந்து விலக்கு. சுங்க வரியில் இருந்தும் விலக்கு.
ஷரத்து 37: தூதரகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் குடும்பத்தினரும் இந்தச் சலுகைகள் அனைத்தையும் பெற முடியும்.
- இவை வியன்னா ஒப்பந்தத்தில் உள்ள முக்கியமான ஷரத்துகள்.
அத்துமீறல் வரலாறு
சர்வதேச ஒப்பந்த ஷரத்துகளைத் தங்கள் விருப்பப்படியும், தங்கள் தேவைக்குத் தகுந்தாற்போலவும் பயன்படுத்துவது எல்லா நாடுகளுக்கும் வழக்கமே. முக்கியமாகப் பெரியண்ணன் அமெரிக்காவுக்கு. சில உதாரணங்கள்:
#1997-ல் அமெரிக்காவுக்கான ஜார்ஜியா நாட்டுத் துணைத் தூதர் குயோர்கொ மகாரட்சே குடித்துவிட்டு கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டார். நால்வர் காயம் அடைந்தனர். ஜார்ஜியா, தூதரகச் சட்டப் பாதுகாப்பு கோராமல் துணைத் தூதரின் உரிமைகளை விட்டுக்கொடுத்தது. அமெரிக்க அரசு விசாரித்து அவருக்குத் தண்டனை வழங்கியது
#2004-ல் ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்த வான் கோதம் என்கிற கடற்படை ஊழியர் குடித்து விட்டு கார் ஓட்டி இசைக் கலைஞர் ஒருவரைக் கொன்றார். பின்னர் அங்கிருந்து தப்பி ஜெர்மனிக்கு ஓட்டம் பிடித்தார். ஆனால், அமெரிக்க அரசு தூதரக விலக்கைக் காரணம் காட்டி, அவரை ருமேனியாவுக்கு அனுப்ப மறுத்தது.
#2011-ல் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களைச் சுட்டுக்கொன்றது லாகூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றிய சி.ஐ.ஏ. முகவர் ரேமண்ட் அலென் டேவிஸ். பாகிஸ்தான் அவர்மீது நடவடிக்கை எடுத்தது. உடனே அமெரிக்க அரசு வியன்னா ஒப்பந்தத்தைக் காரணம் காட்டியதோடு ராஜதந்திரப் பாதுகாப்பு என்ற வாதத்தையும் முன்வைத்துப் பாகிஸ்தானை அடிபணிய வைத்தது (சுட்டுக்கொல்லப்பட்ட இரு பாகிஸ்தானியர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்து ரேமண்ட் அலென் டேவிஸ் வழக்கிலிருந்து தப்பித்தது தனிக் கதை).
#இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் ஒருவருக்கு ஆபாச மின்னஞ்சல் அனுப்பியதாக அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி தேவாசிஷ் விஸ்வாஸின் 18 வயது மகள் கைதுசெய்யப்பட்டு, பாலியல் தொழிலாளர்களுடன் தங்க வைக்கப்பட்டார். கைதுசெய்யப்பட்டதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும் இல்லை. வியன்னா ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டிச் சட்ட விலக்கு கோரியபோது, தூதரகப் பணியாளர்களுக்கு மட்டுமே விலக்கு பொருந்தும் என்று மறுத்தனர் அமெரிக்க அதிகாரிகள். இந்த வழக்கில் இருந்து பின்னர் அந்தப் பெண் விடுவிக்கப்பட்டார்.
இவை சில உதாரணங்கள் மட்டுமே. தனக்குச் சாதகமானது என்றால், வியன்னா ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டுவதும், பாதகமானது என்றால் ஒப்பந்தத்தைக் காலில் போட்டு மிதிப்பதும் அமெரிக்காவுக்குக் கைவந்த கலை. கடந்த காலங்களில் வியன்னா ஒப்பந்தத்தை அமெரிக்கா சாக்குப்போக்குக் காட்டி மீறியிருக்கிறது என்பதே உண்மை.
தொடர்புக்கு: karthikeyan.di@kslmedia.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT