Published : 13 Sep 2016 09:49 AM
Last Updated : 13 Sep 2016 09:49 AM
தமிழக ஆளுநராகப் பதவி வகித்த ரோசையாவின் பதவிக்காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில், தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு ஏற்றிருக்கிறார் மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ். இதுவும்கூடத் தற்காலிகப் பொறுப்புதான் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. இவ்விஷயத்தில் மத்திய அரசு என்ன மாதிரியான திட்டத்தை மனதில் வைத்திருக்கிறது என்று கணிப்பதில் அரசியல் பார்வையாளர்கள் இறங்கியிருக்கிறார்கள். மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர், ஆளுநர் நியமனங்கள், புதிய ஆளுநர்களின் செயல்பாடுகள் பற்றிய சர்ச்சைகள் வெடித்த நிலையில், தமிழக ஆளுநர் நியமனம் தொடர்பாகவும் பேசப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலின் முடிவில் சென்னை மாகாணத்தில் யாருக்கும் அறுதிப் பெரும் பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்கத் தேவையான பலம் எதிர்க்கட்சி அணிக்கு இருந்தது. ஆனால், “நீங்கள் தேர்தலுக்குப் பிறகு அணி சேர்ந்தவர்கள்” என்று சொல்லி, அவர்களை ஒதுக்கிவிட்டு, காங்கிரஸை ஆட்சியமைக்க அழைத்தார் அப்போதைய ஆளுநர் பிரகாசா. போதாக்குறைக்கு, சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ராஜாஜியை நியமன உறுப்பினராக்கினார். அப்போது முதலே ஆளுநர் பதவி விமர்சனத்துக்கு உள்ளாகிவிட்டது.
அரசியலில் தலையிட்ட ஆளுநர்கள்
எழுபதுகளில் தமிழக ஆளுநராக இருந்தவர் கே.கே.ஷா. அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தவர் என்பதால், அவரை ‘கலைஞர் கருணாநிதி ஷா’ என்றே அப்போது சொல்வார்கள். திமுக அமைச்சரவை மீது எம்ஜிஆர் ஊழல் புகார் கொடுத்தது கே.கே.ஷாவிடம்தான். ஆனால், அந்தப் புகார்களை முதலமைச்சரிடம்தான் அனுப்ப முடியும் என்று ஆளுநர் சொல்லிவிட்டதால், அந்தப் புகார் மனுக்களை நேரடியாக குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார் எம்ஜிஆர்.
நெருக்கடி நிலை அமலுக்கு வந்து, திமுக அரசைக் கலைப்பதென முடிவெடுத்தபோது, ஆளுநரிடம் இருந்து அறிக்கை கோரியது இந்திரா அரசு. அதற்கு ஷா மறுத்ததாகவும் பிறகு வேறுவழியின்றி அறிக்கையில் கையெழுத்திட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆட்சிக் கலைப்புக்குப் பிறகு பிரபுதாஸ் பட்வாரி ஆளுநரானார்.
ஆளுநர் பற்றிய சர்ச்சை பெரிய அளவில் வெடித்தது சுந்தர்லால் குரானா காலத்தில்தான். அவர் ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு அனுசரணையானவர்தான். என்றாலும், 1984 தேர்தலில் அதிமுக வெற்றிபெற்ற பிறகும் முதல்வராக வேண்டிய எம்ஜிஆர் அமெரிக்காவில் மருத்துவச் சிகிச்சையிலேயே இருந்தார். எப்போது வருவார் என்பது பற்றிய உறுதியான தகவல்கள் ஆளுநருக்குச் சொல்லப்படவில்லை.
ஒருகட்டத்தில் அதிருப்தியடைந்த ஆளுநர் குரானா, பேச முடியாத, முழுமையாகச் செயல்பட முடியாத ஒருவருக்கு எப்படி முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்துவைப்பது என்று கேட்டார். அதனைத் தொடர்ந்து எம்ஜிஆரின் நடவடிக்கைகள் குறித்த புகைப்படங்களும் வீடியோ பதிவுகளும் ஆளுநரிடம் தரப்பட்டன. அதன் பிறகும் ஆளுநர் திருப்தியடையவில்லை. எம்ஜிஆர் தமிழகம் திரும்பியதும், அவரை நேரில் சென்று பார்த்த பிறகே சமாதானம் ஆனார்.
ஒரு ஆளுநர் நேரடியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்ற குற்றச்சாட்டு பெரிய அளவில் எழுப்பப்பட்டது, அலெக்சாண்டரின் வருகைக்குப் பிறகுதான். காரணம், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் ஆளுநருடன் நல்ல தொடர்பில் இருந்தனர். நேரடியாகச் சென்று பார்ப்பது, மகஜர் கொடுப்பது, ஆலோசனை நடத்துவது என எல்லாம் நடந்தன.
உச்சகட்டமாக, ஆட்சிக் கலைப்புக்குப் பிறகான ஆறு மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டு, ஆளுநர் ஆட்சி நீட்டிக்கப்பட்டது. காங்கிரஸைத் தேர்தலுக்குத் தயார்ப்படுத்தும் காரியத்தில் ஆளுநர் மறைமுகமாக ஈடுபட்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஆனாலும், அடுத்து வந்த தேர்தலில் திமுகவே ஆட்சியைப் பிடித்தது.
குற்றச்சாட்டில் சென்னா ரெட்டி
அலெக்சாண்டருக்குப் பிறகு சுர்ஜி சிங் பர்னாலா ஆளுநரானார். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே சுமுக உறவு இருந்தது. அதுவே பின்னாளில் சர்ச்சையாகிப்போனது. விடுதலைப் புலிகள் நடமாட்டம் என்று சொல்லித் திமுக அரசைக் கலைக்க முடிவுசெய்தது சந்திரசேகர் அரசு. ஆனால், அதற்குரிய அறிக்கையைத் தர ஆளுநர் மறுத்துவிட்டார். என்றாலும், ஆளுநர் அறிக்கை இல்லாமலும் மாநில அரசைக் கலைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியது சந்திரசேகர் அரசு.
அதன் பிறகு ஆளுநரான பீஷ்மநாராயண் சிங்குடன் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை. ஆனால், முதல்வர் மீது ஊழல் புகார் குற்றம்சாட்டியதோடு, அவர் மீது வழக்கு தொடுக்க அனுமதி கோரினர் எதிர்க்கட்சியினர். அந்தக் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்துவிட்டார். அது தொடர்பாகச் சுப்பிரமணியன் சுவாமி பலத்த சர்ச்சைகளை எழுப்பினார். அதன் நீட்சியாக ஆளுநர் மாற்றப்பட்டார். சென்னா ரெட்டி வந்துசேர்ந்தார்.
தீவிர அரசியல்வாதியான சென்னா ரெட்டிக்கும் முதல்வருக்கும் இடையே சின்னதும் பெரியதுமான பிரச்சினைகள் வந்துகொண்டே இருந்தன. ஆர்.எஸ்.எஸ். அலுவலகக் குண்டுவெடிப்பு ஆரம்பப்புள்ளி. அதுபற்றித் தனக்கு மாநில அரசு தகவல் தரவில்லை என்றார் சென்னா ரெட்டி. அடுத்து, சட்டசபையைக் கூட்டச் சபாநாயகர் அனுப்பிய மடலுக்குப் பதில் அளிப்பதிலும், தலைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமனைப் பதவி நீட்டிக்க அனுமதி தருவதிலும் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக ஆளுங்கட்சி குற்றம்சாட்டியது. அநேகமாக, தமிழகத்தில் ஆளுநர் பதவி குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது சென்னா ரெட்டி காலத்தில்தான்.
மத்திய அரசின் திட்டம் என்ன?
அதன் பிறகு, பரபரப்புக்கு உள்ளான ஆளுநர் ஃபாத்திமா பீவி. 2001-ல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் ஃபாத்திமா பீவி. மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஒருவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தது தவறு என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஃபாத்திமா பீவியின் செயல் தவறானது என்று தீர்ப்பு வரவே, முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஜெயலலிதா. அந்தத் தீர்ப்பு வெளியானபோது, ஆளுநர் பொறுப்பில் ஃபாத்திமா பீவி இல்லை. அவருக்குப் பதில் ஆந்திர ஆளுநர் ரங்கராஜன் தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகித்துக்கொண்டிருந்தார். அதன் பிறகு ஆளுநராகப் பதவியேற்ற எவர்மீதும் பெரிய சர்ச்சைகள் இல்லை. ரோசையா பதவியில் இருந்தவரை அவருக்கு எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை.
ஒருவேளை, முதலமைச்சருடன் அணுக்கமாகச் செல்ல முடிவெடுத்தால், அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் பாஜகவுக்குச் சில அனுகூலங்கள் இருக்கலாம். அதுவும்கூட முதலமைச்சரின் கடைசி நேர மனநிலையைப் பொறுத்தது. கூட்டணி விஷயங்களுக்கு அவர் தயாராக இல்லாத நிலையில், புதிய ஆளுநர் நியமனத்தால் பாஜகவுக்கு லாபம் ஏதுமில்லை. மாறாக, நீண்ட கால அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள ஏதுவான ஒருவரை ஆளுநராக நியமிக்க முடிவெடுத்தால், அதுவும்கூடப் பெரிய லாபத்தைத் தராது. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தமிழ்நாடு ஒன்றும் யூனியன் பிரதேசமல்ல, துணை நிலை ஆளுநரைவிட குறைவான அதிகாரங்களைக் கொண்ட பதவிதான் மாநில ஆளுநர் பதவி. ஆட்சிக்குப் பெரும்பான்மை இல்லாத நேரத்தில்தான் ஆளுநருக்கான மெய்யான அதிகாரங்களைச் செயல்படுத்த முடியுமே தவிர, ஏனைய தருணங்களில் ஆளுநர் பதவிக்குப் பெரிய அதிகாரங்கள் கிடையாது. ஆகவே, அதை வைத்துக்கொண்டு பெரிய அரசியல் திருப்பங்களை அரங்கேற்றிவிட முடியாது.
இரண்டாவது, அதிமுக, திமுக என்ற இருபெரும் கட்சிகளின் வசம் ஒட்டுமொத்த மாநிலமே இருக்கும் நிலையில், ஆளுநரின் உதவியோடு மூன்றாவது ஒரு கட்சி வெற்றிபெறுவது சாத்தியமில்லை. 1989 தேர்தல் களமே அதற்கான சாட்சி. நீண்ட நெடிய முயற்சிகளின் பலனாகச் சுமார் 20% வாக்குகளைத்தான் காங்கிரஸால் பெற முடிந்ததே தவிர, வெற்றியைப் பெற முடியவில்லை. ஆகவே, ஆளுநர் பதவி விஷயத்தில் ஆயிரத்தெட்டு கணக்குகளைப் போட்டுப்பார்த்த பிறகே மோடி அரசு ஒரு முடிவுக்கு வர வேண்டியிருக்கும்!
- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர், ‘தமிழக அரசியல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT