Published : 13 Oct 2014 12:42 PM
Last Updated : 13 Oct 2014 12:42 PM
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் ‘தி நியூயார்க்கர்’ நாளிதழில் வெளியான ‘நமது கண்ணுக்குத் தெரியாத ஏழைகள்’ என்ற கட்டுரை, அமெரிக்கா முழுக்க முழுக்க பணக் காரர்களைக் கொண்ட நாடு, அங்கு ஏழைகளே இல்லை என்ற மாயையைத் தகர்த்தது. டிவைட் மெக்டொனால்டு எழுதிய அந்தக் கட்டுரைதான் வறுமைக்கு எதிரான போரை லிண்டன் ஜான்சன் தொடங்கக் காரணமாக அமைந்தது.
எங்கே பணக்காரர்கள்?
ஏழைகள் இப்போது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்வதாக நான் நினைக்கவில்லை. “அவர்களை ஏழை என்று நினைக்க வேண்டாம். அவர்கள் வீட்டில் ‘எக்ஸ்பாக்ஸ்’ (வீடியோ கேம் சாதனம்) இருக்கிறது” என்றுகூடச் சிலர் கூறுகின்றனர். உண்மையில், இப்போது பணக்காரர்களைத்தான் பார்க்க முடிவதில்லை. நம்முடைய தொலைக்காட்சிகள் பெரும் பணக்காரர்களைப் பற்றிய நிகழ்ச்சிகளை, நாடகங்களை, தொடர்களைத்தான் பாதி நேரம் காட்டிக்கொண்டிருக்கின்றன. யார் உண்மையில் பணக்காரர்கள், அவர்களுடைய சம்பாத்தியம் என்ன, அவர்களுடைய வாழ்க்கை வசதிகள் எப்படிப்பட்டவை என்று பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. பெரும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான வாழ்க்கை வித்தியாசங்களைக்கூட அவர்கள் அறிய மாட்டார்கள்.
சமீபத்தில் எல்லா நாடுகளிலும் ஒரு கணிப்பு நடத்தப்பட்டது. அவர்களுடைய நாட்டுத் தொழிலதிபர் களும் சொந்தத் தொழில் செய்யும் தொழில்முறைப் பணியாளர்களும் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் தெரியுமா என்று மக்களிடம் கேட்கப்பட்டது. அமெரிக் கர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தைப் போல 30 மடங்கு சம்பாதிப்பார்கள் என்றே தெரிவித்தனர். இது 1960-களில் இருந்த நிலைமை. இப்போதோ 3,000 மடங்கு சம்பாதிக்கிறார்கள். அதாவது, ஒருவர் மாதந்தோறும் 1,000 டாலர் சம்பாதிக்கிறார் என்றால், பெரிய பதவியில் இருப்பவர்கள், பணக்காரர்கள் 30,00,000 டாலர் சம்பாதிக்கிறார்கள். செல்வம் சிலரிடம் மட்டுமே குவிகிறது என்பதை அறியாமல் இருக்கிறார்கள் அமெரிக்கர்கள்.
ஒரு சதவீதப் பணக்காரர்கள்
மக்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறோம். பாவம்! அவர்கள் உண்மையை உணராமல் இருக்கிறார்கள். அமெரிக்க அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்துவரும் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’, ‘ஒரு சதவீத பணக்காரர்கள்’தான் நாட்டின் வளங் களைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்று பிரச்சாரம் செய்த பிறகுதான் பலருக்கு விஷயமே தெரிந்தது. மக்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்துப் பேசாத அரசியல் தலைவர்களே கிடையாது. அது ஏதோ பள்ளியிறுதி வகுப்புவரை படித்தவர்களுக்கும் கல்லூரி பட்டதாரிகளுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வைப் போலப் பேசிவிட்டுச் செல்வார்கள். இந்த ஒரு சதவீதம் என்பதே சரியல்ல. அந்த ஒரு சதவீதத்திலும் ஒரு சதவீதம்தான் எல்லாவற்றையும் ஆள்கிறது, சொந்தமாக்கிக்கொண்டுள்ளது.
1973-ல் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒரு சதவீதத்தினரிடம் நாட்டின் மொத்த செல்வ வளத்தில் 25% இருந்தது. இப்போதோ அது 40% ஆக அதிகரித்துவிட்டது, அதுவும் 0.1% பணக் காரர்களிடம்! அதாவது, வெறும் 1,000 பேர் நாட்டின் வளத்தில் பெரும் பகுதியைத் தங்களுக்கே சொந்த மாக்கிக்கொண்டுள்ளனர்.
ஹெலிகாப்டர்வாசிகள்
எப்படி இது மற்ற மக்களுக்குத் தெரியாமல் போனது? பணக்கார வீட்டுப் பிள்ளை கல்லூரிக்கு காரில் போகும்போது, அதோ போகிறான் பார் பணக்காரன் என்போம். ஆனால், இன்றைய பெரும் பணக்காரர்கள் அரண்மனை போன்ற தங்களுடைய வீடுகளின் முன் வாசலிலிருந்து தனி ஹெலிகாப்டர்களில் ஏறித் தங்களுடைய அலுவல கங்களுக்கோ தொழில்நிறுவனங்களுக்கோ போய் இறங்குகிறார்கள். அவர்களை எங்கே நாம் வீதிகளில் பார்ப்பது?
அதே திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பெரிய எழுத்தாளர்கள் போன்றவர்களை நாம் நம்மிடையில் நடமாடும்போது பார்க்க முடிகிறது. ஆனால், இவர்களுடைய எண்ணிக்கை பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிகமிகச் சொற்பமே. ராபர்ட் டௌனி ஜூனியர் என்ற பணக்கார ஹாலிவுட் நடிகர், ஆண்டுக்கு 750 லட்சம் டாலர் சம்பாதிக்கிறார் என்கிறது
ஃபோர்பஸ். ஆனால், 25 நிதி நிறுவன மேலாளர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 100 கோடி டாலர்கள் சம்பாதிக்கின்றனர்!
பெரும் பணக்காரர்கள் கண்ணில் படுவதும் படாததும் முக்கியமா? அரசியல்ரீதியாக அது முக்கியம்தான். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து அமெரிக்க வாக்காளர்கள் ஏன் கவலை கொள்வதில்லை என்று கேட்கப்படுகிறது. அந்த ஏற்றத்தாழ்வு எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாததே இதற்குக் காரணம். அவர்களுடைய அறியாமையையே, பெரும் பணக்காரர்களின் ஆதரவாளர்கள் தங்களுடைய வாதத்துக்கு வலுசேர்க்கும் காரணியாகச் சேர்த்துக்கொள்கிறார்கள். பெரிய பணக்காரர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் மக்கள் ஆட்சேபிப்பதில்லை, உங்களுக்கு என்ன வந்தது என்று மற்றவர்களை மடக்குகின்றனர்.
நாட்டில் அதிக வருமானம் ஈட்டும் 10% பணக்காரர்களே நாட்டின் வருமான வரிவசூலில் 68%-ஐக் கொடுத்துவிடுகின்றனர் என்று அவர்களுடைய ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள். நாட்டின் மொத்த வருமானத்தில் 50%-ஐ பெரும் பணக்காரர்களில் வெறும் 10% பேரே பெறுகிறார்கள் என்பதையும் நாட்டின் செல்வத்தில் 75%-ஐ அவர்கள்தான் வைத்திருக்கிறார்கள் என்பதையும் வசதியாக மறைத்துவிடுகிறார்கள்.
நம்முடைய சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருந்தால், குறைந்தபட்ச வருவாயைக் கணிசமாக உயர்த்த வேண்டும், பணக்காரர்களுக்கு அதிகம் வரி போட வேண்டும் என்றே பேசுகின்றனர். இன்றைய அரசியல் என்பது வாக்காளர்களின் அறியாமை அல்லது அக்கறையின்மையை நம்பித் தான் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.
- © தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT