Published : 12 Dec 2013 12:00 AM
Last Updated : 12 Dec 2013 12:00 AM
ரஜினி பிறந்த நாளில் ரஜினிபற்றி ஒரு மீள்பார்வையில் நாம் யோசிக்கலாம். மற்ற நடிகர்களையும் ரஜினியையும் வேறுபடுத்திக் காட்டும் தன்மை என்னவென்றால், ரஜினியிடம் இருக்கும் ஒரு மின்காந்த வசீகரம். அதனால்தான் ஒரு சிறிய குழந்தைகூட ரஜினியைப் பார்த்தால் குதூகலம் அடைகிறது.
இயல்பே அழகு
உலக அளவில் இதே போன்ற வசீகரத்தைக் கொண்டவராக இருந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவரைப் பார்த்த மாத்திரத்தில் ரசிகர்கள் பரவசம் அடைந்தார்கள். ஆனந்த மிகுதியில் கண்ணீர் விட்டார்கள். அப்பேர்ப்பட்ட மைக்கேல் ஜாக்ஸனைவிட ஒரு விதத்தில் ரஜினி சிறந்து விளங்கினார். எப்படியென்றால், ஒரு தேவதூதனைப் போல் கொண்டாடப்பட்ட மைக்கேல் ஜாக்ஸன், தன்னுடைய கருப்புத் தோலை மாற்றிக்கொள்வதற்காக என்னென்னவோ முயற்சிகளை மேற்கொண்டு, அதன் காரணமாகவே பலவித சரீர உபாதைகளுக்கு உட்பட்டு, கடைசியில் அதற்கே பலியானார். அதுவும் 51 வயதில்.
ஆனால், ரஜினி வேறு எந்தப் பிரபலமும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்தார். வழுக்கைத் தலை, நரைத்த முடி, உதட்டில் சிகரட் தழும்பு என்று தன் நிஜமான உருவத்துடனேயே தோற்றம் அளிப்பதில் அவர் எந்தக் கவலையும் அடையவில்லை. அதிலும் தமிழ்நாட்டில் 50 வயதுக்கு மேற்பட்ட எந்தப் பிரமுகரையும் தலைச் சாயம் இல்லாமல் பார்க்க முடியவில்லை. தமிழர்களுக்கு மட்டும் தலைமுடி கருக்காதோ என்று மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு
‘சாய வியாதி’ பரவியிருக்கும் இந்தக் காலத்தில் உடம்பையும் தோற்றத்தையும் மூலதனமாகக் கொள்ள வேண்டிய நடிப்புத் தொழிலில், தன் தோற்றம் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க, மிகப் பெரிய மனோபலம் வேண்டும். அது ரஜினியிடம் இருந்தது.
“அதெல்லாம் சினிமா டயலாக்”
ஆனால், இந்த அளவுக்கு மனோபலம் கொண்ட ரஜினிதான், அரசியலுக்கு வருவதுபற்றி ஏன் கடந்த 25 ஆண்டுகளாக எதுவுமே சொல்லாமல் தன் ரசிகர்களைப் பதற்றத்திலேயே வைத்திருந்தார்! ‘குசேலன்’ படத்தில் “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” என்ற கேள்விக்கு, “அதெல்லாம் சினிமா டயலாக்” என்று பதில் சொல்கிறார் ரஜினி. இந்தப் பதிலை அவர் சினிமாவில் சொல்லாமல் நேரடியாகச் சொல்லியிருந்தால், அவர் என்றாவது அரசியலுக்கு வருவார் என்று நம்பிக்கொண்டிருந்த கோடானு கோடி ரசிகர்கள் தங்கள் சொந்த வேலையைப் பார்க்கப் போயிருப்பார்கள் அல்லவா? ஆக, ரஜினி தன் படங்களின் வெற்றிக்காக அந்த அப்பாவி ரசிகர்களைப் பயன்படுத்திக்கொண்டார் என்றுதானே ஆகிறது?
இருந்தாலும், ரஜினி தன் வாழ்க்கையில் எடுத்த சரியான முடிவுகளில் ஒன்று, அவர் அரசியலில் நுழையாதது. ஒருகட்டத்தில், அவர் நினைத்திருந்தால் தமிழ்நாட்டின் முதல்வராகி இருக்கலாம். ஆனால், அவர் அதில் ஆசை கொள்ளாதது அவரைப் பற்றிய நம் மதிப்பீட்டை உயர்த்துகிறது. அப்படி இல்லாமல், அவர் அரசியலில் நுழைந்திருந்தால் இன்றைய விஜயகாந்தின் நிலைதான் அவருக்கும் ஏற்பட்டிருக்கும். இல்லையென்றால், ‘முன்னாள் முதல்வர்’ என்ற அடைமொழிகூடக் கிடைத்திருக்கலாம். அதைத் தவிர, வேறு எந்த மாற்றமும் நடந்திருக்காது.
ஏனென்றால், வட இந்தியாவில் - அதிலும் டெல்லி போன்ற படித்தவர்கள் வசிக்கும் மாநிலங்களில் - ஊழலுக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்பட்டதைப் போல் தமிழகத்தில் நடக்கவில்லை. தமிழர்களாகிய நாம் உணர்ச்சிப் பிழம்பானவர்கள்; எந்நேரமும் வெடிக்கும் நிலையில் உள்ள எரிமலையைப் போலவேவாழ்ந்துகொண்டிருப்பவர்கள்; அரசியலில் பெரும்பாலும் அறிவார்ந்த அணுகுமுறை இல்லாதவர்கள். எனவே, ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால், ‘பாட்ஷா’வில் பார்த்தது போன்ற ஒரு ரஜினியையே முதல்வராக எதிர்பார்த்து ஏமாந்திருப்போம்.
நிஜம் வேறு… நிழல் வேறு என்ற புரிதல் நம்மில் எப்போது ஏற்படுகிறதோ, அப்போதுதான் ‘ஆம் ஆத்மி’ கட்சியைப் போன்ற எழுச்சியைத் தமிழகத்தில் பார்க்க முடியும்.
ரஜினியைக் கண்டால் குழந்தைகூடக் குதூகலம் கொள்கிறது என்றேன். இயற்கை கொடுத்த அந்த வசீகரத்தோடு, ரஜினியிடம் உள்ள அபாரமான நடிப்புத் திறமையும் சேர்ந்து அவரை சூப்பர் ஸ்டாராக ஆக்கியுள்ளது. ‘நான் சிகப்பு மனிதன்’ என்ற படத்தில் ஒரு கையில் தினசரியை வைத்தபடி, இன்னொரு கையால் (ஒரே கையால்) வெகு அநாயாசமாக, சர்வ சாதாரணமாக சிகரெட்டைப் பற்றவைப்பார் ரஜினி. இது க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ஏற்கெனவே ஒரு படத்தில் செய்துகாட்டியது. இதேபோல் சத்ருகன் சின்ஹா, அமிதாப் பச்சன் ஆகிய இருவரின் பாதிப்பும்கூட ரஜினியிடம் உண்டு. என்றாலும், ரஜினி இவர்கள் எல்லோரையும் தனக்குள் வாங்கிக்கொண்டார். அந்த பாணியில் ரஜினி இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. உதாரணம்: ‘முள்ளும் மலரும்’, ‘தளபதி’.
தன் பிம்பத்தின் சுமை
இருந்தாலும், ரஜினி கடந்த 20 ஆண்டுகளாக அவருடைய பழைய பிம்பத்தையே சுமந்துகொண்டு வாழ்பவராகவே தெரிகிறார். அமிதாப் பச்சன் அவருடைய 65-வது வயதில் ரிதுபர்னோ கோஷ் என்ற - அவ்வளவாக அறியப்படாத ஒரு வங்காள இயக்குநரின் படத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட ஒரு முதிய நாடக நடிகராக நடித்திருக்கிறார். ‘தி லாஸ்ட் லியர்’ என்ற அந்தப் படம், பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பரிசு பெற்று அமிதாப்புக்கு உலகப் புகழைப் பெற்றுத்தந்தது. இந்தப் படத்தில் நடிப்பற்காக அவர் தன் ஊதியத்தில் பத்தில் ஒரு பங்கையே பெற்றார்.
ஆனால், ரஜினியோ ‘எந்திரன்’ படத்தில் ஒரு ஹீரோயினோடு டூயட் பாடிக்கொண்டிருக்கிறார். லாஸ்ட் லியரை ரஜினி பார்த்திராவிட்டால், இப்போதாவது பார்க்க வேண்டும். பார்த்தால், அவரால் அமிதாப் பச்சன் சென்ற உயரத்தைவிட அதிக உயரத்துக்குச் செல்ல முடியும்.
அரசியலைப் புறக்கணித்த அதே மனோபலத்தை ரஜினிக்கு மசாலா சினிமாவையும் புறக்கணிக்க அருள வேண்டும் என்று நான் வணங்கும் மஹா அவதார் பாபாவை ரஜினியின் பிறந்த நாளில் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
சாரு நிவேதிதா, எழுத்தாளர், தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT