Published : 27 Jan 2014 10:40 AM
Last Updated : 27 Jan 2014 10:40 AM

முதலீட்டு வாய்ப்புள்ள மியூச்சுவல் ஃபண்டுகள்

சென்றவாரம் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு களில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குள்ள வாய்ப்புகள் குறித்துப் பார்த்தோம். இவ்வாரம் பங்குசார்ந்த மியூச்சுவல் ஃபண்டு களில் உள்ள வகைகள் குறித்துப் பார்ப்போம்.

பங்குச் சந்தையில் மிகப் பெரிய, பெரிய, நடுத்தர, சிறிய மற்றும் மிகச் சிறிய நிறுவனங்களின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பங்குகளைத்தான் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் தங்களது திட்டத்தில் வாங்குகின்றன. மிகப் பெரிய மற்றும் பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீட்டு ரிஸ்க் குறைவு ஆகும். நிறுவனத்தின் சைஸ் (size) குறைய குறைய அந்த பங்கின் முதலீட்டு ரிஸ்க் பொதுவாக அதிகரிக்கும். ஆகவே பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் தங்களது திட்டங்களை கீழ்க்கண்ட வகைகளாகப் பிரித்துள்ளன.

1.லார்ஜ் கேப் ஃபண்டுகள்

(LARGE CAP FUNDS)

2.மல்டி கேப் ஃபண்டுகள்

(MULTI CAP FUNDS)

3.மிட் மற்றும் ஸ்மால்

கேப் ஃபண்டுகள்

(MID and SMALL CAP FUNDS)

4.மைக்ரோ கேப் ஃபண்டுகள் (MICRO CAP FUNDS)

மேற்கண்ட ஃபண்டு வகைகள் அனைத்தும் தங்களது முதலீட்டைப் பரவலாக அனைத்துத் துறைகளிலும் முதலீடு செய்கின்றன.

நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பை (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) பொறுத்து நிறுவனங்களை நாம் பெரிய, நடுத்தர, மற்றும் சிறிய நிறுவனங் களாகப் பிரிக்கிறோம். லார்ஜ் கேப் திட்டங்கள் அனைத்துத் துறை சார்ந்த, மிகப்பெரிய மற்றும் பெரிய நிறுவனப் பங்குகளில் மட்டுமே முதலீட்டை மேற்கொள்கின்றன. உதாரணத்திற்கு இது போன்ற திட்டங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்போஃசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐ.டி.சி. போன்ற நிறுவனப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்கின்றன. இவ்வகைத் திட்டங்கள் பங்குச் சந்தை சரிவில் இருக்கும் பொழுது, சந்தை குறியீட்டை ஒட்டித்தான் குறையும்.

அதே சமயத்தில் மிட், ஸ்மால், மற்றும் மைக்ரோ கேப் ஃபண்டுகள், குறியீட்டைவிட மிகவும் அதிகமாகக் குறைய வாய்ப்புள்ளது. சந்தை ஏறும் பொழுது இதுவே உல்டாவாக மாறும். மல்டி கேப் திட்டங்கள் அதிகமான சொத்தை (சுமாராக 70%) பெரிய நிறுவனப் பங்குகளிலும், சற்றுக் குறைவான சொத்தை (சுமாராக 30%) நடுத்தர நிறுவனங்களிலும் முதலீடு செய்கின்றன. இத்திட்டங்களை டைவர்சிபைடு ஃபண்டுகள் எனவும் குறிப்பிடுகின்றனர். கனரா வங்கி, கிராம்டன் கிரீவ்ஸ், எல்.ஐ.சி ஹவுசிங், டாபர் இந்தியா போன்றவை நடுத்தர நிறுவனப் பங்குகள் ஆகும்.

கார்ப்பரேஷன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, டி.டி.கே பிரஸ்டீஜ் போன்றவைகள் சிறிய நிறுவனப் பங்குகள் ஆகும். இதுபோன்ற பங்குகளிலும் மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளிலும் மிட் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகள் தங்களது முதலீட்டை மேற்கொள்கின்றன. இதைவிட சிறிய நிறுவனப் பங்குகளில் மைக்ரோ கேப் பண்டுகள் தங்களது முதலீட்டை மேற்கொள்கின்றன. இவ்விதமான ஃபண்டுகளில் ரிஸ்க் மற்றும் ரிவார்டு ஆகிய இரண்டும் அதிகம்.

இவ்வகைகளைத் தவிர, மியூச்சுவல் ஃபண்டுகளில் துறை சார்ந்த ஃபண்டுகளும் உண்டு. இவ்வகையான ஃபண்டுகள் பரவலாக அனைத்துத் துறை களிலும் முதலீடு செய்யும் ஃபண்டுகளைக் காட்டிலும், அதிக ரிஸ்க் உடையவை. உதாரணத்திற்கு வங்கித்துறை சார்ந்த ஃபண்டுகளில் மட்டும் ஒரு ஃபண்டு முதலீடு செய்யும். மற்றொரு ஃபண்டோ, ஃபார்மா துறைசார்ந்த பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும். இவ்வகை ஃபண்டுகளில், பரவலாக முதலீடு செய்யும் ஃபண்டுகளைவிட ரிஸ்க் அதிகம்.

இவை தவிர வெளிநாட்டு பங்குகளில் முதலீடு செய்யும் ஃபண்டுகளும் உள்ளன. இன்றைய அளவில் நம் நாட்டில், அமெரிக்கா, சீனா, ஐரோப்பா போன்ற நாட்டு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் ஃபண்டுகள் உள்ளன. இவைகள் ஓவர்ஸீஸ் ஃபண்டுகள் எனக் கூறப்படுகின்றன.

இவற்றைப்போல ஒரு தீம்-ஐ (Theme) அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்யும் ஃபண்டுகள் உள்ளன. உதாரணத் திற்கு கன்ஸம்ஷன் (Consumption) ஃபண்டுகள் உள்ளன. இந்த ஃபண்டுகள், மக்கள் தினசரி தேவைகளுக்காக வாங்கக்கூடிய பொருட்களை தயாரிக்கும் நிறுவனப்பங்குகளில் முதலீடு செய்கின்றன. இதுபோல் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளை நாம் பலவகையாக பிரிக்கலாம்.

பங்கு சந்தைக்கு முதன் முதலாக வருபவர்கள் லார்ஜ் கேஃப் ஃபண்டுகளில் தங்களது முதலீட்டைத் துவக்குவது சிறந்தது. இனி வரும் வாரத்தில் இவ்வகை ஃபண்டுகளில் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்பதைக் குறித்தும், முதலீட்டிற்கு உகந்த ஃபண்டுகள் யாவை என்பதைக் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.

prakala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x