Published : 05 Feb 2014 10:45 AM
Last Updated : 05 Feb 2014 10:45 AM
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர் ஆறுபாதி ப. கல்யாணம் பேட்டி
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து 60 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் நாட்டின் உணவு உற்பத்தியை மட்டுமே மையப்படுத்தியும் உற்பத்திசெய்யும் விவசாயிகள் நலன்களைப் பின்தள்ளியும் செயல்பட்டுவருவதுதான் விவசாயிகளின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். இதன் தொடர்ச்சிதான் விவசாயிகளின் தற்கொலைகள். விவசாயிகளுக்கு வாழ்க்கைப் பாதுகாப்பு அளிப்பதன் மூலம்தான் தேசம் உணவுப் பாதுகாப்பை அடைய முடியும் என்பதை இப்போதாவது அரசியல்வாதிகள் உணர வேண்டும்;
தேசியப் பட்டியலில் நதிகள்
இயற்கை வளங்களின் அடிப்படையில், முக்கியமாக நீர் ஆதாரங்களின் அடிப்படையில் மாநில எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. ஆனால், நீர் ஆதாரங்கள் மாநிலங்களின் பட்டியலில் இருக்கின்றன என்பதைக் காரணம் காட்டி, அந்த நீர் ஆதாரங்கள் முழுவதையும் சில மாநிலங்கள் ஆக்கிரமித்துவருகின்றன. இதனால்தான், சட்டமேதை அம்பேத்கர் நதிநீரை மாநிலங்களின் பட்டியலில் வைக்கக் கூடாது என்று எதிர்த்தார்.
தமிழகம் காவிரியில் பெற்றிருந்த தொன்மையான நீர்வரத்தை உறுதிசெய்ய வேண்டும். தமிழகத்தின் இரண்டு கோடி மக்களின் வாழ்வாதாரமாகவும், சுமார் ஐந்து கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி இருக்கிறது. எனவே, காவிரிப் பிரச்சினையில் தீர்வு ஏற்படுவதற்காகப் போராடுவதாக தேசிய, மாநிலக் கட்சிகள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
வேளாண் பொருட்களின் விலையை விவசாயிகள் அல்லாதவர்கள் தான் நிர்ணயிக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். மத்திய வேளாண் விலை நிர்ணயக் குழுவிலும் மாநில விலை பரிந்துரைக் குழுவிலும் விவசாயப் பிரதிநிதிகள் இடம்பெறுவது அவசியம்.
காவிரியில்தான் தண்ணீர் வரவில்லை. குறைந்தபட்சம் காவிரி பாசனப் பகுதிகளில் பெய்யும் மழை நீரையாவது முறையான வகையில் பயன்படுத்திக்கொள்ள முடிகிறதா? மழைநீர் சேமிப்பு, நிலத்தை நீர்வளத்தைப் பெருக்க, விவசாயிகளின் இழந்துவிட்ட பொருளாதாரத்தை மீட்சி செய்ய நிலம்+குளம்+களம்+வனம்+வளம் என்ற திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு 10 ஏக்கர் விவசாய நிலத்துக்கும் ஒரு ஏக்கர் குளம், இந்தக் குளம் வெட்டும் மண்ணைக் கொண்டு இரு ஏக்கர் நிலத்தை மூன்று அடி உயரத்துக்கு மேடாக்கிக் களம், பல்வகை மரங்கள் வளர்த்தல் மூலம் நெல் விவசாயம் மட்டுமே செய்து நஷ்டப்பட்டுவரும் விவசாயிகளுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டத்தைச் செயலாக்க வேண்டும்.
தொடரும் சோகம்
தற்போது மத்திய, மாநில அரசுகளின் மொத்த நிதிநிலை அறிக்கையில் 2% முதல் 3% மட்டுமே விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்டுவருவது சுதந்திர இந்தியாவில் தொடரும் சோகமாகும். மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டில் வேளாண்மை உற்பத்திக்காக 10% விவசாயிகள் நலனுக்காக 10% ஒதுக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கான எல்லா நிதியுதவிகளும் சலுகைகளும் நேரடியாக இடைத்தரகர்களின்றி கிடைக்கச் செய்ய வேண்டும்.
பாலைவனம் ஆக்கிவிடாதீர்கள்
இப்படி விவசாயத்துக்காகச் செய்யப்பட வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. ஆனால், அரசு என்ன செய்கிறது என்றால், விவசாயிகளுக்கு எதிர்த் திசையில்தான் நிர்வாகத்தைச் செலுத்துகிறது. இதற்கு ஓர் உதாரணமாகக் காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைச் சொல்லலாம். காவிரிப் படுகையில் விவசாயத்தை அழித்துவிட்டு நாம் எந்த வளர்ச்சியை அடையப்போகிறோம் என்று தெரியவில்லை.
காவிரிப் படுகை தென்னகத்துக்கே சோறு போடும் தாய் என்ற உணர்வு இருந்தால் இதைச் செய்வார்களா? அமையவிருக்கும் நாடாளுமன்றமாவது விவசாயிகளின் நலன் காக்கும் நாடாளுமன்றமாக அமைய வேண்டும் என்பதுதான் விவசாயிகளாகிய எங்களின் கோரிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT