Published : 24 Oct 2013 10:39 AM
Last Updated : 24 Oct 2013 10:39 AM
இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் சங்க இலக்கியத்துக்கு மிக முக்கியமான இடம் உண்டு. விடுதலைக்கு முன் “எங்களுக்கும் பழமை இருக்கிறது. இலக்கியம், பண்பாடு எல்லாவற்றிலும் தொன்மை மிக்கவர்கள் நாங்கள்” என்று ஆங்கிலேயர்களுக்கு உணர்த்த சங்க இலக்கியத்தை அறிஞர்கள் ஆதாரமாக்கினர். ‘ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்’என்னும் நூலை எழுதிய வி. கனகசபை “கி.பி. 9-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியம் எதுவுமில்லை என்பதே இன்று மேலைஅறிஞர்களின் பொதுக்கருத்தாக இருந்துவருகிறது. ஆனால், உண்மை இதற்கு நேர்மாறானது” என்று சொல்லித் தமிழின் பழம் இலக்கியச் சிறப்பை நிறுவுகிறார்.
புறநானூற்றை உ. வே. சாமிநாதையர் பதிப்பித்து வெளியிட்டதும் தமிழ்ச் சூழலில் முக்கியமான நிகழ்வாக மாறியது. தமிழர் வரலாற்றுக்கு ஆதாரமான பல செய்திகளைக் கொண்ட அந்நூல் பெரும் செல்வாக்குப் பெற்றது. அதன் பின் சங்க இலக்கியங்கள் தமிழக அரசியலில் தவிர்க்க இயலாத இடத்தைப் பெற்றன. பார்ப்பனிய எதிர்ப்பைக் கொள்கையாகக் கொண்டு எழுச்சிபெற்ற திராவிட இயக்கம், தமிழர் பெருமை பேசச் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றையே கையிலெடுத்தது.
காதலும் வீரமும் ஆகிய தமிழர் பண்பாடு பல நூல்களாகவும் கட்டுரைகளாகவும் உருவெடுத்தன. மேடைப் பேச்சுக்களில் தமிழர் வீரம் பலபடப் பேசப்பட்டது. புலியை முறத்தால் அடித்துத் துரத்திய பெண்ணைப் பற்றிய சித்திரங்கள் எத்தனையோ விதமாக வெளிப்பட்டன. முதல் நாள் தந்தை, அடுத்த நாள் கணவன் ஆகியோரைப் போரில் இழந்த பெண், தன் இளவயதுப் பாலகனைத் தயார் செய்து போருக்கு அனுப்பிய காட்சி பாட நூல்களிலும் பலபட விவரிக்கப்பட்டன. அரசியல் அதிகாரத்தைப் பெறத் திராவிட இயக்கத்துக்குத் தேவைப்பட்ட தமிழர் மேன்மை என்னும் கருத்துக்கு ஏராளமான சான்றுகளைச் சங்க இலக்கியங்கள் கொடுத்தன.
21-ம் நூற்றாண்டிலும் சங்க இலக்கியம் அரசியல் முக்கியத்துவம் பெற்றே இருக்கிறது. தமிழைச் செம்மொழி என்று அறிவிக்க சங்க இலக்கியங்களே முதன்மை ஆதாரமாயின. தமிழைச் செம்மொழி என்று அறிவித்ததும் பிறமொழியினர் ஒவ்வொருவரும் தம் மொழியையும் செம்மொழி என அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைப்பதால், மாநிலம் கடந்து செம்மொழி அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. இந்திய அரசியல் தளத்துக்குச் சங்க இலக்கியம் சென்றுவிட்டதை 21-ம் நூற்றாண்டில் காண்கிறோம். செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் பல்வேறு கருத்த ரங்குகள், பயிலரங்குகள், ஆய்வுத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு நிதியுதவி அளிப்பதால் ஆண்டு முழுவதும் தமிழகக் கல்விப் புலங்களில் சங்க இலக்கியம் தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 21-ம் நூற்றாண்டிலும் அரசியல், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் சங்க இலக்கியம் கோலோச்சும் என்று நம்பலாம்.
எல்லாக் காலகட்டத்திலும் ஓர் இலக்கியம் இத்தகைய செல்வாக்கைப் பெற்றிருக்குமா? இலக்கியத்துக்குக் காலம் கடந்த நிலைபேறு உண்டு என்பது உண்மைதான். எனினும் ஒவ்வொரு காலத்திலும் அக்காலத்தின் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப ஓர் இலக்கியம் போற்றப்படுவதும் புறக்கணிப்புக்கு உள்ளாவதும் இயல்பாக இருக்கிறது. 20ம் நூற்றாண்டில் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாகவே விளங்கிய சங்க இலக்கியத்தின் நிலை 19-ம் நூற்றாண்டில் எப்படி இருந்தது?
உ.வே.சாமிநாதையர் பழைய நூல்களைப் பற்றிச் சொல்லும்போது, “நான் படித்ததில்லை. என்னுடைய ஆசிரியரே படித்ததில்லை. புஸ்தகத்தைக்கூட நான் கண்ணால் பார்த்ததில்லை” என்று சொல்கிறார்.
கலித்தொகையைப் பதிப்பித்த சி. வை. தாமோதரம்பிள்ளை “என் காலத்தில் யான் பார்க்கப்பெற்ற ஐங்குறுநூறு இப்பொழுது தேசங்கடோறுந் தேடியும் அகப்பட்டிலது. எத்தனையோ திவ்விய மதுர கிரந்தங்கள் காலாந்தரத்தில் ஒன்றன் பின் ஒன்றாய் அழி கின்றன” என்று வருத்தத்துடன் எழுதுகிறார்.
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து அச்சுக்குக் கொண்டுவர முயன்றனர். ஆகவே, இவற்றை அறியும் வாய்ப்பு உருவாயிற்று. 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்நூல்களைப் பயின்றோர் இருந்தனரா என்பது சந்தேகமே. இன்னும் கொஞ்சம் முன்னோக்கிப் போய் 17-ம் நூற்றாண்டைப் பார்க்கலாம். அப்போது தோன்றிய இலக்கண நூல்களில் முக்கியமானது ‘இலக்கணக் கொத்து’. இதை இயற்றியவர் சாமிநாத தேசிகர். அந்த நூலுக்கான உரையையும் அவரே எழுதியுள்ளார். அவ்வுரையில் சங்க இலக்கியங்களைப் படிக்கக் கூடாது என்று கூறுகிறார்.
படிக்கக் கூடாத நூல்கள் என்று அவர் தரும் பட்டியல் இது: நன்னூல், சின்னூல், அகப்பொருள், யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை,பதினெண்கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன் கதை, அரிச்சந்திரன் கதை.
படிக்க வேண்டிய நூல்கள் என அவர் தரும் பட்டியல் இது: தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், பட்டினத்துப் பிள்ளையார் பாடல்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய நூல்களைப் படிப்பவர்களைப் பற்றி “பாற்கடலுள் பிறந்து அதனுள் வாழும் மீன்கள் அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை விரும்புதல்போல” என்று கூறுகிறார். அதாவது, சங்க இலக்கியம் உள்ளிட்ட பழைய நூல்கள் அழுக்குகள் என்பது அவர் அபிப்ராயம். தேவாரம், திருவாசகம் முதலிய சைவ நூல்களையே அவர் பால் என்று கருதுகிறார்.
17-ம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் சைவம் சார்ந்த சிற்றிலக்கியங்கள், இலக்கண நூல்கள் ஆகியவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. சைவ ஆதிக்கம் மிகுந்திருந்த அந்தச் சூழலில் பிற மதம் சார்ந்த நூல்களை அழுக்குகள் என்று புறந்தள்ளும் பார்வை, கருத்து நிலவியிருக்கிறது என்பதற்கு சாமிநாத தேசிகரின் கூற்றே சான்றாகிறது. இன்றைய சூழலில் “சங்க இலக்கியத்தைப் படிக்கக் கூடாது” என்று யாராவது சொன்னால் என்னவாகும்? தமிழ்த் துரோகியாகப் பட்டம் கட்டப்பட்டு, மாபெரும் எதிர்ப்புக்கு உள்ளாக நேரும். ஆனால்,17-ம் நூற்றாண்டில் அப்படி ஒரு குரல் எழுந்திருக்கிறது. அது அந்நூற்றாண்டின் குரல் என்றுகூடச் சொல்லலாம்.
அக்குரலைப் பலரும் பிரதிபலித்த காரணத்தால்தான் 18-ம் நூற்றாண்டில் சங்க இலக்கியப் பயிற்சி படிப்படியாகக் குறைந்துவந்திருக்கிறது. புதிய ஓலைகளில் அவற்றைப் படியெடுப்போர் இல்லை. இருந்த பழைய ஓலைச்சுவடிகள் படிப்படியாக அழியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மீட்டுருவாக்கம் செய்யும் வேலையில் அறிஞர்கள் இறங்கிய பிறகே, அவற்றுக்கு முக்கியத்துவம் உருவாகியிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்துவரச் சங்க இலக்கிய நூல்கள் பெரும்பாடு பட்டிருக்கின்றன.
இன்று உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் நூல்கள், ஒருகாலத்தில் எங்கிருக்கின்றன என்பதே தெரியாமல் கிடந்திருக்கின்றன. காலம் கடந்து நிற்கும் இலக்கியம் என்றாலும் சமூகத் தேவையே அதன் இருப்பைத் தீர்மானிக்கிறது என்பதற்குச் சங்க இலக்கியங்கள் புறக்கணிக்கப்பட்டதும் பின்னர் அவையே போற்றிக் கொண்டாடப்பட்டதுமான வரலாறே சான்றாகிறது. அழுக்காகக் கருதப்பட்ட ஓர் இலக்கியம் பின்னர் பாலாக உருமாறி, அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கி யிருக்கிறது என்பது காலம் தரும் ஆச்சர்யம்.
- பெருமாள் முருகன், எழுத்தாளர் - தொடர்புக்கு: murugutcd@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT