Last Updated : 16 Dec, 2013 12:00 AM

 

Published : 16 Dec 2013 12:00 AM
Last Updated : 16 Dec 2013 12:00 AM

மார்கழி என்றால்…

“வைகறையின் செம்மை இனிது.

மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க.

உஷையை நாங்கள் தொழுகின்றோம்.

அவள் திரு.

அவள் விழிப்பு தருகின்றாள்.

தெளிவு தருகின்றாள்.

உயிர் தருகின்றாள்.

ஊக்கந் தருகின்றாள்.

அழகு தருகின்றாள்.

கவிதை தருகின்றாள்.”

- வைகறைப் பொழுதை வாழ்த்தும் பாரதியின் வார்த்தைகள் இவை.

வைகறை எப்போதும் அழகு; மார்கழியிலோ கூடுதல் அழகு; தமிழர் வாழ்வியலில் இன்னும் அழகு. முன்பனி, பின்பனி, நான்கு திசைகளில் வரும் வாடை, தென்றல், குடக்கு, குணக்கு என எல்லாவற்றையும் போற்றிய எம் மக்கள் பனிப் படலத்தைத் தன்மீது போர்த்திக்கொள்ளும் மார்கழியைக் கொண்டாடுவதுதான் எத்தனை அழகு?

மார்கழி என்றால், ‘முன்பே வந்து என்னை எழுப்புவேன் என்று சொன்னாயே, இன்னும் உறங்குகின்றாயோ, நாங்கள் முன்வந்து உன்னை எழுப்ப வேண்டியதாகியுள்ளதே, என்ன வினோதம் இது. பெருமாளை அத்தன் என்று அழைத்தாய் நீ, ஆனந்தன் என்று அழைத்தாய், அமுதன் என்று அழைத்தாய் நீ. இதெல்லாம் வெறும் வாய்ஜாலமோ. நீ இனி தூங்கிக்கொண்டே இருந்தால், உன் இரு கண்களும் மிக நீண்டு வளர்ந்துவிடும் எனும் அபாயத்தை மறந்துவிடாதே, விரைவில் நீராடிவிட்டு இறைவனை வழிபட வா’ என்று துயில் எழுப்பும் திருப்பாவை, திருவெம்பாவைக் கவிதைகள்.

மார்கழி என்றால், திருப்பாவை, திருவெம்பாவைக் கவிதைகளை அடாணா, பிலஹரி, வராளி, குந்தளவராளி, சங்கராபரணம், சிந்துபைரவி, தேஷ், பெஹாக் ராகங்களில் பாடிய எம்.எல்.வசந்தகுமாரியின் மறக்க முடியாத குரல். மார்கழி என்றால், கவிதையை ஆண்ட ஆண்டாள் பாசுரங்கள்.

மார்கழி என்றால், பாவை நோன்பு. மார்கழி என்றால், வீதிகள்தோறும் வெள்ளிக் கம்பளம் விரித்தது போன்று அரிசி மாவில் ஐந்து புள்ளி ஐந்து வரிசை, ஏழு புள்ளி ஏழு வரிசை, ஒன்பது புள்ளி ஒன்பது வரிசை என வளைந்து நெளியும் விதவிதமான கோலங்கள்.

மார்கழி என்றால், சூரிய விடியலுக்குக் காத்திராமல் அதற்கு முன்பே நீராடி விடியற்காலம் நான்கு மணிக்கே தொடங்கும் உஷ கால பூஜை. உஷ கால பூஜையில் வாசிக்கப்படும் பௌளி, பூபாளம்; காலை காலசந்தி பூஜையின்போது வாசிக்கப்படும் மலைய மாருதம், பிலஹரி, சாவேரி; சூரியன் உச்சியை அடையும் மத்திம காலத்தில் வாசிக்கப்படும் மத்தியமாவதி, சுருட்டி; உச்சிப் பொழுதிலிருந்து சூரியன் சாயுங்காலமான சாயரட்சை காலத்தில் வாசிக்கப்படும் கல்யாணி, பூர்விகல்யாணி; இரண்டாம் காலம், சுவாமி படுக்கைக்குச் செல்லும் முன் அர்த்தஜாம பூஜையில் வாசிக்கப்படும் நீலாம்பரி ராகங்கள்.

மார்கழி என்றால், முன்புறம் சுருட்டி, வாசமாலை, முகபடாம் போர்த்திய யானையின் அலங்காரம், எக்காளம், திருச்சீர்னம், டவுண்டி, நகரா என இசைக் கருவிகளின் இசையின் நடுவே மிதந்து வரும் சுவாமியின் வீதியுலா.

மார்கழி என்றால், இசை விழா.

மார்கழி என்றால், எதையும் கொண்டாடிப் பார்க்கும் எம் மக்களின் பண்பாட்டுச் சான்று.

மார்கழி என்றால், ஞாபகங்கள்.

மார்கழி போற்றுதும், மார்கழி போற்றுதும்!


தேனுகா, கலை விமர்சகர், தொடர்புக்கு: dhenuga.srinivasan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x