Published : 24 Oct 2013 01:15 PM
Last Updated : 24 Oct 2013 01:15 PM
சங்கப் பலகை கண்ட மதுரையில் மற்றொரு பலகையுண்டு. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைப் பிரிவிற்கு கிளை, பலகை, அமர்வு என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப பெயர் சூட்டப்பட்டுள்ளது. மதுரை-மேலூர் சாலையில் ஒத்தக் கடையருகே 100 ஏக்கரில் மிகப்பெரும் ஏரியை உள்ளடக்கி பூஞ்சோலையாக்கப்பட்ட வளாகத்தில் பிரம்மாண்ட கட்டிடங்களில் இந்த நீதிமன்றம் இயங்குகிறது. நீதிமன்ற வாயிலில் ”மதுரை பெஞ்ச் ஆப் தி மதராஸ் ஹைகோர்ட்” என்ற பெயர் பலகையுள்ளது. சங்கம் வளர்த்த மதுரையிலேயே தமிழ் படும் பாடு சொல்லத் தேவையில்லை.
மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை அமைக்கவேண்டுமென்ற போராட்டக் கதை கண்ணீரால் எழுதப்பட வேண்டும். தென் மாவட்ட மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பின் மத்திய அரசு 1981ல் நீதிபதி ஜஸ்வந்த் சிங் கமிஷனை அமைத்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நிரந்தரக் கிளையமைக்க கமிஷன் பரிந்துரைத்தது.அதன் பின்னரும் ஏற்பட்ட தாமதத்தை எதிர்த்த மதுரை வழக்கறிஞர்களின் போராட்டத்தினாலும் 2002ல் பதவியேற்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியின் உறுதியான முயற்சியாலும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நீதிமன்றக் கட்டிடங்களும் உருவாயின. குடியரசுத் தலைவரின் அறிவிக்கைக்குப் பிறகு 24.7.2004ல் நிர்ணயிக்கப்பட்ட 12 நீதிபதிகளுடன் மதுரைக் கிளை 13 தென் மாவட்டங்களுக்கு நீதி பரிபாலனத்தைத் தொடங்கியது.
மதுரைக்கிளை சுழற்சிமன்றமா(circuit court) அல்லது நிரந்தர நீதிமன்றமா (permanent bench) என்ற விவாதத்தில் நிரந்தர அமர்வு என்று முடிவானது. மும்பை நீதிமன்றத்தின் மற்ற அமர்வுகளான நாக்பூர், ஔரங்காபாத், கோவாவிலுள்ளதுபோல் நிரந்தரமாக நீதிபதிகளை நியமிக்காமல் சென்னையிலிருந்தே நீதிபதிகள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுக்கு இரு மாதப்பணி என்றிருந்தது தற்பொழுது மூன்று மாதங்களாகியுள்ளது. நீதிபதிகளுக்கு சென்னையிலிருப்பதைப் போன்றே வீடு, கார், பணியாளர், பாதுகாவலர் மற்றும் ஓட்டுநர்கள் மதுரையிலும் உண்டு. தலைமை நீதிபதியாயிருந்த ஏ.பி.ஷா புதுநியமன நீதிபதிகள் சிலரை மதுரையில் தொடர்ந்து பணியாற்ற உத்திரவிட்டிருந்தார். பின்னாள் தலைமை நீதிபதிகளின் உத்திரவுகளின் மூலம் அவர்கள் சென்னைக்கே திரும்பிவிட்டனர். விதிவிலக்காக நீதிபதி செல்வம் மட்டுமே 8 வருடங்களாக மதுரையில் பணியாற்றி வருவது பாராட்டத்தக்கது.
சுழற்சி காலத்தைக் கூட்டும் முயற்சிகள் தோல்வியடைந்து நிரந்தர நீதிமன்றம் இன்று சுழற்சி அமர்வாக்கப்பட்டுள்ளது. மதுரைக்குச் செல்லும் நீதிபதிகளுக்கு ஊதியம் தவிர தினப்படியுமுண்டு. அரசு விதிகளின்படி 89 நாட்களுக்கு மேல் தலைமையிடம் தவிர்த்து வேறிடங்களில் பணியாற்றினால் முறையான பணியிடமென்று கருதி தினப்படி மறுக்கப்படும்.அந்த காரணத்தால் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட சுழற்சியை பெரும்பாலோர் ஏற்க மறுத்தனர். மூன்று மாத சுழற்சியென்றாலும் நீதிமன்ற வேலை நாட்கள் 55-60 நாட்களுக்கு மிகாது. வார இறுதியிலும் விடுமுறை நாட்களிலும் நீதிபதிகள் சென்னைக்குத் திரும்புவதால், அங்குள்ள பணியாளர்களும் சென்னைக்கு வந்துவிடுகின்றனர். இதனால் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டு பணிகளும் தடைபடுகின்றன.
காசுமீர் முதல் குமரி வரை எங்கு வேண்டுமானாலும் பணியாற்ற சம்மதித்த நீதிபதிகள் மணி நேர விமானப் பயணத்தில் அடையக்கூடிய மதுரையில் நிரந்தரமாக பணியாற்றத் தயங்குகின்றனர். தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் இச்சுழற்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து நீதிபதிகளை நிரந்தரமாக மதுரை அமர்விற்கு அனுப்புவாரா?
நீரில்லையென்றாலும் அழகர் வைகையிலிறங்கும் வைபவம் போல் மதுரைக் கிளையும் அடையாளச் சின்னமாகிவிடும் அபாயம் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT