Last Updated : 11 Nov, 2013 02:57 PM

 

Published : 11 Nov 2013 02:57 PM
Last Updated : 11 Nov 2013 02:57 PM

ஆசாத் எனும் மகா அக்பர்

உயரம் ஐந்து அடி ஐந்து அங்குலம்; மிகவும் ஒடிசலான உடல்வாகு; வெளுப்பான நிறம்; சுமார் 33வயது; சவரம் செய்யவதில்லை என்றாலும் முகத்தில் அநேகமாக ரோமம் ஏதும் இல்லை; நீண்ட, தீர்க்கமான முகம், எடுப்பான மூக்கு. இந்திய சுதந்திரப் போரின் மகத்தான இளைஞனாக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாதைப் பற்றி முறையாகச் சொல்ல வேண்டும் என்றால் இதுதான் சரியான வர்ணனை. தனது தன்னம்பிக்கை, வசீகரம், அர்ப்பணிப்பு ஆகிய குணங்களாலும் அறிவுக் கூர்மை, சிந்தனை வேகம் ஆகியவற்றாலும் ஆசாத் பெரிதும் ஈர்த்தார்.

ஆனால், பிற்காலத்தில் அவர் வரித்துக்கொண்ட தோற்றம் வேறு: அவருடைய ஆழ்ந்த கல்வியறிவுக்கும் வயதுக்கு உரிய மரியாதையைத் தரும் தோற்றம். எந்தக் குறிப்பிட்ட சிந்தனைப் போக்காலும் சொந்தம் கொண்டாட முடியாத அளவுக்கு மிகவும் அகவயமான மேதைமையையும் போக்கையும் கொண்டவர் அவர். இருப்பினும், அவருடைய எழுத்துகளும் அவர் ஆற்றிய உரைகளும் ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தின; விசாலமான பார்வையும் பொறுமையின் விளைவாகப் பெற்ற கல்வியறிவும்தான் அதற்குக் காரணம்; அதனால்தான் ஆசாதை ‘நம் காலத்தின் அக்பர்’ என்று ராஜாஜி அழைத்தார்.

மரபின் மீது எரிச்சல்

ஆசாதின் ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றிய தகவல்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை. எனினும், மரபு, அது விதிக்கும் கட்டுப்பாடு ஆகியவற்றின் மீது ஆசாதுக்கு இருந்த எரிச்சலுணர்வை நாம் அறிந்துகொள்வதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. மரபு என்று சொன்னாலே போதும்; அவருக்கு கோபம் வந்துவிடும். படைப்புத் திறனுக்கே வழியில்லாத அளவுக்கு இறுக்கத்தையும் போதனைத் திணிப்புகளையும் கொண்டவையா இஸ்லாமிய மதக் கோட்பாடுகள்? - இந்தச் சிந்தனையுடன் உடைத்தெறிந்தார் ஆசாத், இறுகிப்போயிருந்த மதக் கோட்பாடுகளின் தளைகளை.

மேலும், அறிவியல் வளர்ச்சியையும் அதன் அளப்பரிய பயன்களையும் மதக்கோட்பாடுகளில் இருக்கும் சில அம்சங்கள் தடுக்கின்றன என்று கடுமையாக விமர்சித்தார். பொருள் சார்ந்த வாழ்க்கை முறை பரவலாகிகொண்டுவருவது குறித்தும் மத அடிப்படையிலான வாழ்க்கை முறையின் தேக்கம், மந்த நிலை ஆகியவை குறித்தும் அவர் கொண்டிருந்த பார்வை யாவரும் அறிந்த ஒன்றே. ‘மதம் என்பது மூடத்தனம் அன்றி வேறில்லை’ என்று அவர் கொண்டிருந்த கருத்து சில காலம்தான் நீடித்தது. மத நம்பிக்கையாளராக அவர் மாறியதும் சீர்திருத்தக் கோட்பாடுகளும் மதத் தத்துவங்களும் சரிவிகிதத்தில் கலந்த ஒரு கலவையைக் கைக்கொண்டார். இந்தப் பயணத்தில் அவர் மிகவும் நீண்ட தூரம் செல்லவில்லை என்றாலும் சூழலின் அப்போதைய நிலையை அசைத்துப்பார்க்கும் அளவுக்குச் சென்றிருந்தார்.

அலிகார் பல்கலைக்கழகத்தில் உருவான புத்தறிவானது முஸ்லிம் அறிவுலகத்தில் சீர்திருத்தம், மாறுபட்ட பார்வைக் கோணம், புதுமை ஆகியவற்றுக்கு ஊட்டம் அளித்தது. சையது அகமது கான் இளம் ஆசாதின் சிந்தனையை வடிவமைத்தார். சையது அகமது கானின் எழுத்துகளைப் படித்து அவர் மேல் ஆசாத் ஈடுபாடு கொண்டார். அதேபோல், லக்னோவின் நட்வத் அல்-உலமாவை நிறுவிய ஷிப்லி நொமானியின் மீதும் ஆசாத் பெருமதிப்பு கொண்டிருந்தார்.

உள்ளார்ந்த இறை நம்பிக்கை

ஆசாதின் ஆரம்ப கால எழுத்துகளைப் படித்தால் ஒன்று தெளிவாகத் தெரியும்; அந்தக் காலத்து மதவாதிகளுக்குச் சாட்டையடி கொடுப்பதற்காக, குழப்பங்களும் நிச்சயமின்மைகளும் மிகுந்த ஒரு பிரதேசத்தில் அவர் நுழைந்திருக்கிறார். குர்ஆன், சுன்னா ஆகியவற்றின் உட்பொருளைப் புரிந்துகொள்ளாமல், ‘வேதநூல் விற்பன்னர்கள்’ அல்லது ‘மேலோட்டப் பொருள்காரர்கள்’ சொல்லுக்குச் சொல் பொருள் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்றதை ஆசாத் எதிர்த்தார். மதத்தின் மேற்பூச்சின் மேல் அவருக்கு இருந்த ஈடுபாடு குறைந்துவிட்டது. அதே நேரத்தில் தனது உள்ளார்ந்த இறை நம்பிக்கையில் அவர் சற்றும் பிறழவில்லை. குர்ஆனின் முதல் அத்தியாயத்தின் வசனங்களைக் கொண்டே குர்ஆன் முழுமையையும் புரிந்துகொள்ள ஆசாத் முயன்றார். அதுபோலவே, குர்ஆன் தெரிவிக்கும் இறையுணர்வின் பரிமாணத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய அரசியலை உருவாக்கி அதையே ஆசாத் பின்பற்றினார்.

அனைத்துலக இஸ்லாமியம்

புவியியல் ரீதியிலும், மொழி, பண்பாடு ஆகியவை அடிப்படையிலும் இன்னும் சில விஷயங்களில் உட்குழுக்களின் பெரும் பிளவுகள் அடிப்படையிலும் அன்றைய இஸ்லாமியச் சமூகங்கள் சிதறுண்டு கிடந்தன. இருந்தாலும் ‘அனைத்துலக இஸ்லாமியம்’ என்ற கருத்தாக்கம் அவர்களின் உணர்வுகளைக் கொழுந்து விட்டு எரியச் செய்தது. வரலாற்றின் சக்கரங்களில் அகப்பட்டுக்கொண்டு நெடுங்காலமாக அவர்கள் நசுக்கப்பட்டபோதிலும் உலகம் முழுவதும் பரவியிருக்கும் வலிமை மிக்கச் சமூகமாக அவர்கள் தங்களைக் கருதிக்கொண்ட உணர்வுதான் ‘அனைத்துலக இஸ்லாமியம்’ என்பது.

இஸ்லாமியப் பண்பாட்டின் பொதுவான பாரம்பரியத்தோடு நெருக்கமாகத் தன்னைப் பிணைத்துக்கொண்டவர் ஆசாத். ஒன்றுபட்ட இஸ்லாத்துக்கு உரிய சிந்தனைகள், உணர்வுகள் ஆகியவற்றின் செல்வங்களை அகழ்ந்தெடுக்க முயன்றவர் அவர். இஸ்லாமியச் சமூகத்தின் மேம்பாட்டுக்குக் கல்வி, சுதந்திரமான அணுகுமுறை, வளர்ச்சியில் நம்பிக்கை ஆகியவை அடிப்படை என்ற இயல்பான நம்பிக்கையின் அடிப்படையில் தன் பயணத்தை மேற்கொண்டார் ஆசாத்.

காங்கிரஸின் ஆன்மா

முதல் உலகப் போர் காலகட்டத்தில் தலைமைப் பண்பின் மாண்புக்கு இலக்கணம் வகுத்த ஆசாத், காங்கிரஸ் கட்சியின் ஆத்மாவாக உருவெடுத்தார். தன்னுடைய சகாக்கள் முஸ்லிம்களுக்கு என்று தனி நாடு வேண்டும் என்று முழங்கியபோது தேசப் பிரிவினையை ஆசாத் முழு மூச்சோடு எதிர்த்தார். அப்படிப் பிரிவினையை முன்னெடுத்தவர்களை வெளிப்படையாகவே வெறுத்தார். தனது பொதுவாழ்வில் என்றுமே இந்த நிலையை அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. கடந்த காலம் உருவாக்கியிருந்த மாச்சரியங்களையும் வெறுப்பையும் துணிச்சலாகப் புறம்தள்ளிவிட்டு புதுவாழ்வை நோக்கிப் பயணம்செய்யும் முனைப்பில் இந்தியர்கள் இருந்த அற்புதக் காட்சி ஆசாதுக்கு மிகுந்த ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. அதனால், ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடுவதற்குத் தீவிரப் போக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்றும் பன்மைச் சமூகம் என்பதுதான் ஆதிக்கப் பிரிவினருக்கும் சரி, நலிந்த பிரிவினருக்கும் சரி ஆங்கிலேயருக்கு எதிரான மிக முக்கியமான ஆயுதம் என்றும் ஆசாத் கண்டுகொண்டார்.

ஔரங்கசீப்பின் சதி வேலைகளுக்குப் பலியான அவருடைய மூத்த சகோதரர் தாரா சிகா, ‘அறுதி உண்மைக்கான தேடலில் மசூதிகளும் கோயில்களும் சுட்டிக்காட்டுவது ஒரே திசையைத்தான்’ என்று சொல்வார். அதே நம்பிக்கை உடையவர்தான் ஆசாதும்.

மூர்க்கத்தின் எதிரி

ஒரு பக்கம், இஸ்லாத்துக்கும் இந்தியத் தேசியத்துக்கும் இடையிலான சமநிலை; மறுபக்கம் இஸ்லாத்துக்கும் உலகின் மற்ற கோட்பாடுகளுக்கும் இடையிலான சமநிலை; இரண்டையும் ஒரே நேரத்தில் பேணுவதற்கான ஒரு சூத்திரத்தை முன்வைத்ததுதான் ஆசாதின் மகத்தான திறமை. ஒருங்கிணைந்த, ஒத்திசைவான, படைப்பூக்கம் மிக்க இஸ்லாம் என்பதில் நம்பிக்கை கொண்டவர் ஆசாத். கூடவே, பாரசீக சூஃபிக் கவிதை மரபில் வெளிப்படும் மனிதநேயத்தின் வழியில், மதவியலாளர்-மனித நேயர் என்ற ஒரு பிம்பத்தை ஆசாத் தழுவிக்கொண்டார்.

அவர் கனவு கண்டது மூர்க்கமான பிரிவினைவாத இஸ்லாத்தை அல்ல; கலாச்சாரத்திலும் ஆன்மிகத்திலும் பன்மைத்தன்மை கொண்ட ஒரு சமூகத்துக்கு அதாவது கடுமையான பிரிவினைப் போக்கினால் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய ஒரு சமூகத்துக்கு மிகுந்த ஊக்கத்துடன் ஒத்துழைப்பை நல்கும் இஸ்லாத்தையே அவர் கனவு கண்டார்.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான ஆசாத், பிரிட்டிஷ் தளையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள இந்து-இஸ்லாமியச் சமூகங்கள் இரண்டும் தேளோடு தோள் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தக் கருத்தை வலியுறுத்துவது முக்கியமென்று ஆசாதும் மற்றவர்களும் ஏன் நினைத்தார்கள்? முகலாய வம்சத்தின் கடைசி மன்னர்கள் உருவாக்கிய பன்மைத்தன்மை கொண்ட தேசியத்தை பிரிட்டிஷ்காரர்கள் அடியோடு அழித்துவிட்டதால் உருவான வருத்தத்தைப் பதிவுசெய்வதற்காக இருக்கலாம்: அல்லது, எதிர்காலத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அவ்வளவு எளிதில் ஒருங்கிணைந்து செயல்பட முடியாத வகையில் பிரிட்டிஷ்காரர்கள் ஆக்கிவிட்டதை எண்ணிப் புலம்புவதற்காக இருக்கலாம்.

சிறையிலே பெரும் வாழ்வு

மொத்தம் 10 ஆண்டுகளை ஆசாத் சிறையில் கழித்தார். அவர் தள்ளப்பட்ட உலகத்தின் அளவு நூறு கஜங்கள்தான் இருக்கும்; அதன் மக்கள்தொகை என்பது 15 பேர்தான். அந்த இடத்தில் காலை வெயிலிலும் மாலையிருட்டிலும் ஆசாத் திளைத்தார். அந்தோனியோ கிராம்சியைப் போலவே ஆசாதும் தன்னை மூழ்கடிக்கக் கூடியதும் தன் அகவாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கக் கூடியதுமான எழுத்துகளைப் படைக்க முற்பட்டார். அதற்காக அவர் நிறையப் படித்தார்.

துயரங்களை மீறிய நம்பிக்கை

‘விதியுடன் ஒரு சந்திப்பு’ என்ற நேருவின் பேச்சுடன் சுதந்திரம் வந்தது. ஆனால் தேசப் பிரிவினை ஆசாதின் உணர்வுகளைக் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது. “வெற்றியால் ஏற்படும் அரசியல் போதையை தலைக்கு ஏற்றிக்கொள்ளாத திறன்தான் ஒரு நல்ல அரசியல் தலைவரை நிரூபிப்பதற்கான சிறந்த சோதனை” என்று எச்.ஏ.எல்.ஃபிஷர் ‘ஹிஸ்டரி ஆஃப் யுரோப்’ என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

மாபெரும் துயரச் சம்பவத்தால் மனமுடைந்துபோயிருந்தாலும், மன அமைதியில்லாதபோதும் தனது துயரங்களைத் துணிவுடன் சுமந்துகொண்டு ஆக வேண்டிய காரியங்களை ஊக்கமுடன் மேலும் தொடர்ந்தார் ஆசாத். இறுதியாக, உண்மையின் பொருட்டு பெரும் இடருக்குள்ளானார். “அழகுக்கும் மகத்துவத்துக்கும் அடையாளமாய்ப் பூத்த பூக்களெல்லாம் இப்போது ஒரு மூலையில் குவிந்துகிடக்கின்றன, எரிந்து சாம்பலான புதர்களைப் போலவும், மிதிக்கப்பட்ட புற்களைப் போலவும்” என்று ஆசாத் அழகாக ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அல்-ஹிலால், அல்-பலாக் ஆகிய பத்திரிகைகளின் பளிச்சென்ற நிறங்களுடன் தொடங்கிய அவருடைய கதை ஆழ்ந்த இருட்டோடு முடிவடைந்தது.

வாழ்வின் பன்முகத்தன்மையில் சாதாரண மனிதர்கள் முரண்களையே பார்ப்பார்கள். ஆனால், ஆசாத் அப்படியல்ல; அந்தப் பன்மைத்தன்மையின் அடிநாதமான ஒற்றுமையைக் காணுமளவுக்கு மகத்தானவர் அவர்; அதுமட்டுமல்லாமல், மேற்குறிப்பிட்ட ஒற்றுமையில்தான் இந்தியா முழுமைக்கும் எதிர்காலம் இருக்கிறது என்றும் உணர்ந்தவர் ஆசாத்!

முஷிருல் ஹசன், வரலாற்றாசிரியர் - இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்ட ‘ஆசாத்’ஸ் லெகசீஸ்: இஸ்லாம் ப்ளூரலிஸ்ம் அண்ட் நேஷன்ஹுட்’ என்ற நூல் விரைவில் வெளியாகவிருக்கிறது.

தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x