Published : 27 Feb 2017 09:15 AM
Last Updated : 27 Feb 2017 09:15 AM
நெடுவாசலில் விவசாயிகள் கொந்தளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பிப்ரவரி 15 அன்று இங்கு ஹைட்ரோ கார்பன் வாயுவை எடுப்பதற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியின் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். தமிழகத்தின் வறண்ட மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. வானம் பார்த்த நிலம். சில மாதங்களுக்கு முன் உள்ளூர் செய்தியாளர் சுரேஷுடன் புதுக்கோட்டை கிராமங்களைச் சுற்றி வந்தேன். நிலத்தடி நீர்மட்டம் வேகமாகச் சரிந்துகொண்டிருக்கிறது. “கிணத்துல அஞ்சடி ஆறடி ஆழத்துல கெடந்த தண்ணியை ஏத்தம் கட்டி எறைச்ச காலம் போய், இன்னிக்கு ஆயிரம் அடி நோக்கி தண்ணி கீழே போய்க்கிட்டுருக்கு” என்றார்கள்.
நெடுவாசல் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் அவ்வளவு மோசம் இல்லை என்றாலும், பத்தாயிரம் அடி பதினைந்தாயிரம் அடிக்கு ஆழ்துளைக் கிணறு போட்டு எரிபொருள் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தும்போது, சுற்றுப்புறக் கிராமங்கள் முழுக்க நீர்மட்டம் விழுந்துபோகும்; விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் இது நிலைகுலைத்துவிடும் என்று அஞ்சுகிறார்கள் விவசாயிகள். இந்தத் திட்டம் அழிவுத் திட்டமா? தெரியவில்லை. வளர்ச்சித் திட்டமாகவேகூட அமையலாம். ஆனால், எந்த நிலத்தில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறதோ அந்த நிலம்சார் மக்களுக்கு இதுகுறித்து முழுமையான விளக்கம் அளிக்கப்பட வேண்டுமா, இல்லையா?
எந்த விவரமும் சொல்லப்படவில்லை என்கிறார்கள் மக்கள். சம்பந்தப்பட்ட தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், அமைச்சர் எவருக்கும் இத்திட்டம் தொடர்பில் முழுமையாகத் தெரியவில்லை அல்லது மக்களிடம் இதுகுறித்து அவர்கள் விரிவாகப் பேச மறுக்கிறார்கள் என்கிறார்கள். மக்களிடம் பேச அனுப்பப்படும் அதிகாரிகளோ, மக்களின் அச்சங்களைத் துச்சமென அணுகுகிறார்கள். இன்று நெடுவாசலில் மட்டும் அல்ல; நேற்று கல்பாக்கத்திலும் இப்படித்தான் நடந்தது, கூடங்குளத்திலும் இப்படித்தான் நடந்தது. இணையத்திலும் இப்படித்தான் நடக்கிறது.
அச்சம் நியாயமற்றதா?
ஒரு பெரிய திட்டம் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவருவது எப்படிச் சாத்தியமோ, அதேபோல பாதிப்புகள், அபாயங்களுக்கான சாத்தியங்களையும் உள்ளடக்கியே வருகிறது. பெருமளவில் நலன்கள் - பாதிப்புகள் இரண்டை மட்டுமே வைத்து, கணக்குப் போட்டு திட்டங்களுக்கான தேவை தொடர்பில் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது அரசு. இந்த நலன்களை யார் பெறுகிறார்கள், பாதிப்புகளை யார் சுமக்கிறார்கள்; காலக் கணக்கில் எதன் தாக்கம் அதிகம் என்பதும் முக்கியம். ஒரு பெரிய திட்டத்தின் பலன்களை எல்லோரும் அனுபவிக்கலாம். அதன் விளைவுகளை, பாதிப்புகளை, ஆபத்துகளை உள்ளூர் மக்களே அதிகம் சுமக்கிறார்கள்.
போபால் விபத்துக்கு 32 வருடங்களுக்குப் பின்னரும், விஷவாயுக் கசிவு தாக்குதலின் விளைவுகளை அனுபவிக்கிறார்கள் போபால் மக்கள். ஊனத்தையும் உடலுறுப்புச் சிதைவு நோய்களையும் சுமக்கிறார்கள். ‘யூனியன் கார்பைடு நிறுவனம்’ விட்டுச்சென்ற நச்சுக்கழிவு இன்னும் அகற்றப்படவில்லை. என்ன பாடம் கற்றோம்?
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் சமீபத்தில் இரு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகி, கடற்கரையைக் கச்சா எண்ணெய் சூழ்ந்தபோது, பிளாஸ்டிக் வாளி சகிதம் கடலில் இறங்கியது துறைமுக நிர்வாகம். எப்படியான பேரிடர் மேலாண்மை ஏற்பாடுகள் அங்கிருக்கின்றன? கச்சா எண்ணெய்க்குப் பதில் இன்னும் அபாயகரமான நச்சுப் பொருட்கள் கொட்டியிருந்தால் என்ன செய்திருப்போம்? மக்களிடம் மூடிமறைக்கத்தானே முற்படுகிறார்கள்? இன்றைக்கு, கூடங்குளம் அல்லது கல்பாக்கத்தின் அணு உலைகளில் ஒரு விபத்து நேரிட்டால், அதை எதிர்கொள்ள சுற்றுப் பகுதி மக்களுக்கு என்ன பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது?
குமரி மீதான வன்முறை
திருவிதாங்கூரின் களஞ்சியம் என்று போற்றப்பட்ட கன்னியாகுமரி, தமிழகத்தின் பொக்கிஷம். நான்கு திணைகளும், மூன்று ஆறுகளும் ஒன்றுகூடிய ஒரே மாவட்டம். இன்றைக்கும் நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி வனமாகவும், இரண்டில் ஒரு பகுதி வயலாகவும் நீடிக்கும் பசுமைப் பிரதேசம். செறிவான வளம் கொண்ட கடலையும், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குத் தேசிய அளவில் பெயர் பெற்ற கடலோடிகளையும் கொண்ட பிராந்தியம். தமிழ் மக்கள் இன்னும் ஆயிரமாண்டுகள் உழைத்தாலும், குமரி போன்ற ஒரு பசுமையான நிலப்பரப்பை உருவாக்க முடியாது. இவ்வளவு வளங்கள் கூடிய ஒரு மாவட்டத்தை எப்படிக் கையாள்கிறது அரசு? அணு உலைகள் நமக்குத் தேவையா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அப்படி அணு உலைகள் வேண்டும் என்றால்கூட, அதை அமைக்க குமரி மாவட்டத்தையா தேர்ந்தெடுக்க வேண்டும்? குமரி மாவட்டத்தின் மீது நடத்தப்படும் அடுத்த பெரும் வன்முறை இணையம் துறைமுகத் திட்டம்.
எழுத்தாளரும் நண்பருமான ஜோ டி குரூஸ் கடலோடிச் சமூகத்தைச் சார்ந்தவர். கடல் தொழிலோடு, துறைமுக வாணிபம், சரக்குக் கையாள்கையிலும் தேர்ந்தவர். ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரி. வறட்டுத்தனமான சூழல்நலவாதியல்ல அவர். கடல் தொழில் சார்ந்து, இந்தியா இன்னும் தன்னுடைய வளத்தில் ஒரு சதத்தைக்கூடப் பயன்படுத்தவில்லை என்பவர். குறிப்பாக, 1,096 கி.மீ. நீளக் கடற்கரையைக் கொண்ட தமிழகம், பெரிய அளவில் கடல்சார் வாணிபத்தை வளர்த்தெடுக்க வாய்ப்புள்ள மாநிலம் என்பவர். வளர்ச்சியின் பெயரால் குமரி மாவட்ட கிறிஸ்தவர்கள் மத்தியில், ஒரே மேடையில் மோடியுடன் நின்று அவருக்காக ஓட்டு கேட்டவர்.
ஜோ டி குரூஸ் சொல்கிறார். “இயற்கையிலேயே கப்பல் கட்டும் தளத்துக்கான 20 மீட்டர் ஆழம்கூட இல்லாத கரையைக் கொண்ட இணையம் கடற்கரை, ஒரு வணிக துறைமுகத்துக்கான சரியான தேர்வு அல்ல. ஒரு துறைமுகத்துக்கான சரக்கு உருவாக்கத் தளத்துக்கான சாத்தியமோ, சரக்கு உருவாக்கம் மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கான வாய்ப்புகளோ இல்லாத குமரியில், வெற்றிகரமான ஒரு வணிகத் துறைமுகமாக இதை உருவாக்க முடியாது. சில பெருநிறுவனங்கள் பலன் அடையலாம். அதற்கான விலையாக, பாரம்பரியக் கடலோடிகளின் கடல் தொழில் அழியும். பல கிராமங்கள் நிர்மூலமாகும். குமரி மாவட்ட பசுமைச் சூழல் சின்னாபின்னமாகும்.”
யார் வாழ யார் தியாகம் செய்வது?
மக்கள் எதிர்க்கிறார்கள். போராடுகிறார்கள். மத்திய ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் தரப்பில் மக்கள் மத்தியில் பேசச் செல்லும் ஆளும் பாஜக தலைவர்கள் சொல்லிவைத்தாற்போல் பேசும் ஒரே வசனம்: “நாட்டுக்காக நீங்கள் தியாகம் செய்ய வேண்டும்!” யார் வாழ யார் தியாகம் செய்வது?
தமிழக அரசியல்வாதிகளுக்கு இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஆழமான பார்வை இல்லை என்றே தோன்றுகிறது. தேசியக் கட்சிகளுக்கு ஓட்டரசியலில் பெரிய பலன்களைத் தராத மாநிலம் எனும் சூழலில், அக்கட்சிகளைச் சேர்ந்த இங்குள்ள தலைவர்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும், தம் விசுவாசத்தை வெளிப்படுத்தவும் தாமாகவே இந்தத் திட்டங்களுக்கான முகவர்களாக மாறிவிடுகின்றனர். மாநிலத்தை ஆளும் இரு திராவிடக் கட்சிகளோ இப்படியான பிரச்சினைகளைத் தேசிய அளவில் ஒரு விவாதமாக்கும் அல்லது இதற்காக மத்திய அரசோடு மோதும் திராணியற்று நிற்கின்றன. இதைத் தாண்டி, “பெரும் திட்டங்களை ஏன் எங்கள் விருப்பமின்றி எங்கள் மீது திணிக்கிறீர்கள்?” என்று பேசுபவர்களை முடக்க ‘தமிழ்த் தேசியவாதி’ எனும் முத்திரைக் குத்தல் போதுமானதாக இருக்கிறது.
மிக எளிமையான ஒரு கேள்வி. “இன்றைக்குச் சுற்றுச்சூழல் சார்ந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை - தனக்கென ஒரு இயற்கை வளக் கொள்கையின் அடிப்படையில், எந்தத் திட்டத்தையும் முழுமையாக ஆராய்ந்து ஏற்கும் அல்லது நிராகரிக்கும் உரிமை - இந்நாட்டில் ஒரு மாநில மக்களுக்கோ, மாநில அரசுக்கோ இருக்கிறதா?” இதுகுறித்து ஏன் தமிழக அரசியல்வாதிகள் பேச மறுக்கிறார்கள் அல்லது எப்போது பேசப்போகிறார்கள்?
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT