Published : 02 Apr 2017 11:18 AM
Last Updated : 02 Apr 2017 11:18 AM

பெண் என்பதால் மற்றவர்களைவிட அதிகம் உழைக்க வேண்டியிருந்தது! - ‘செர்ன்’ ஆய்வு மைய விஞ்ஞானி அர்ச்சனா ஷர்மா பேட்டி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த ‘கடவுள் துகள்’(ஹிக்ஸ் போஸோன்) கண்டுபிடிப்பில் பங்கேற்ற ஒரே இந்திய விஞ்ஞானி அர்ச்சனா ஷர்மா. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ‘செர்ன்’ ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானியான இவர், உத்தர பிரதேசத்தின் ஜான்ஸி நகரைச் சேர்ந்தவர். இந்தியாவின் ஒரு மூலையிலிருந்து, துகள் இயற்பியல் துறையின் புனித ஸ்தலமாகக் கருதப்படும் ‘செர்ன்’ ஆய்வு மையம் வரையிலான அவரது பயணம், இந்தியாவின் இளம் விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் தரக்கூடியது. பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்ற இவர், டெல்லிப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அதன் பின்னர் முதுமுனைவர் பட்ட ஆய்வுக்காக ஜெனீவாவுக்குச் சென்றார். தனியாகவும் பிறருடன் இணைந்தும் 600-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், புத்தகங்களைப் பதிப்பித்திருக்கும் அர்ச்சனா, சர்வதேசக் கருத்தரங்கங்களிலும், அறிவியல் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழகத்தின் (ஐ.ஈ.ஈ.ஈ.) சிறப்பு விரிவுரையாளராகப் பணியமர்த்தப்பட்டிருக்கும் இவர், ஜெனீவாவில் உள்ள சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம் (ஐ.எல்.ஓ.), சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடக்கும் உலக தகவல் தொடர்பு மாநாடு ஆகியவற்றிலும் பங்கேற்றிருக்கிறார். அவருடன் ஒரு பேட்டி:

‘கடவுள் துகள்’ சோதனையில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்றது நீங்கள் மட்டும்தான். 2012-ல் நடந்த அந்தக் கண்டுபிடிப்புக்குப் பின்பு உங்கள் பயணம் எப்படி இருக்கிறது?

‘செர்ன்’ ஆய்வகத்தின் நிரந்தர ஊழியராகப் பணியாற்றுவது எனக்குப் பெருமையளிக்கும் விஷயம். அதேசமயம், ‘செர்ன்’ ஆய்வகப் பணிகளில் பல இந்திய நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுகின்றன. ‘செர்ன்’ ஆய்வகத்தின் ஆய்வுகளில் இந்தியாவைச் சேர்ந்த இயற்பியலாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்புக்குப் பிறகான பயணம் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. துகள் இயற்பியல் துறையில் கடந்த 30 ஆண்டுகளாகப் பிரதான நோக்கமாக இருந்த சோதனை இது. ‘கடவுள் துகள்’ மற்ற துகள்களுக்கு நிறையை அளிக்கிறது என்று 1964-ல் மேற்கொள்ளப்பட்ட கணிப்பை உறுதிசெய்தது.

‘செர்ன்’ ஆய்வகத்தில் நீங்கள் சந்தித்த சவால்களைச் சொல்லுங்கள்…

இன்றைய இணைய யுகத்தில் மாணவர்கள் நிறைய தெரிந்துவைத்திருப்பதுடன், எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் திறனுடன் இருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து ‘செர்ன்’ ஆய்வகத்துக்கு நான் சென்றபோது, சூழல் இன்று இருப்பதைப் போல் இல்லை. மாணவர்கள் எங்கு சென்றாலும் சமமான வாய்ப்பைப் பெறும் அளவுக்கு இந்தியக் கல்வி அமைப்பும் மிகவும் முன்னேற்றமடைந்திருக்கிறது. மென்பொருட்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் ஆரம்பத்தில் எனக்குச் சிரமங்கள் இருந்தன. எனினும், இந்தியர் எனும் முறையில் மற்றவர்களைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு உழைப்பைச் செலுத்தும் திறன் நம்மிடம் உண்டு என்று எப்போதும் சொல்வேன்.

அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு பற்றி பல்வேறு விவாதங்கள் உள்ளன. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெண் விஞ்ஞானிகள் பல்வேறு கட்டங்களைத் தாண்டித்தான் வந்திருக் கிறார்கள். குடும்பப் பொறுப்புகள், அறிவியல் உலகத்தி லிருந்து விலக்கிவைக்கப்பட்டிருந்த நிலை என்று பல்வேறு விஷயங்களைத் தாண்டி, இன்றைக்குப் பல பெண்கள் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஆர்வம் காட்டுகிறார்கள். அறிவியல் துறையில் பெண்கள் பங்கேற்பதில் பெற்றோர்களும் உற்சாகம் காட்டுகிறார்கள். பெண்கள் பின்பற்றுவதற்கு ஏராளமான முன்மாதிரிகள் உண்டு: 1903-ல் இயற்பியல் பிரிவில் தனது கணவர் பியரி கியூரியுடன் இணைந்தும், 1911-ல் வேதியியல் பிரிவிலும் இரண்டு முறை நோபல் பரிசு வென்ற மேரி கியூரி ஓர் உதாரணம். அவரது மகள் ஐரீன் ஜோலியாட் கியூரியும் சிறந்த விஞ்ஞானி. 1935-ல் கதிரியக்கம் தொடர்பான ஆய்வுக்காக தனது கணவருடன் நோபல் பரிசைப் பெற்றவர் அவர். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு மேரி கியூரியின் வாழ்க்கை ஓர் உதாரணம்.

பயிற்சிக்காக இந்தியாவிலிருந்து வரும் இளைஞர்களில் சராசரியாக 50% பெண்கள் இருப்பதைப் பார்க்கிறேன். எனவே, அறிவியல் துறையில் பெண்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்றே கருதுகிறேன். பெண் எனும் முறையில் அறிவியல் துறையில் அங்கீகாரம் பெறுவதற்குக் கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது. எல்லாவற்றையும் தாண்டி, பிரச்சினைகளும் சவால்களும் என்னென்ன என்று தெரிந்துகொண்டாலே, அவற்றுக்கான தீர்வுகளையும் கண்டறிந்துவிட முடியும். உதாரணத்துக்கு, ஜெனீவா பல்கலைக்கழகத்தில் எனது இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிவுசெய்துகொண்டேன். அது எல்லா படிப்புகளை மேற்கொள்ளவும், போட்டிகளை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ளவும் உதவியது. 1996-ல் ‘டி.எஸ்சி’ (டாக்டர் ஆஃப் சயின்ஸ்) பட்டம் பெற்றேன்.

இயற்பியல் துறைக்கு உங்களை ஈர்த்தது எது?

ஜான்ஸியில் பிறந்த எனது வாழ்க்கை நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த பிற குழந்தைகளைப் போலவே இருந்தது. கல்வியும், எதிர்காலம் குறித்த அக்கறையும் என்னைச் செலுத்தின. என் பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் என்பதால், படிப்பில் கவனம் செலுத்துவதற்குத்தான் முன்னுரிமை. மருத்துவராகவோ, பொறியாளராகவோ ஆக வேண்டும் என்று நான் நினைத்ததேயில்லை. மாறாக, வாழ்க்கையில் அர்த்தம் நிறைந்த விஷயங்களைச் செய்ய வேண்டும் என்றும், சமூகத்துக்கான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது குறித்தே எனது கனவுகள் அமைந்தன.

உத்வேகமூட்டும் உங்கள் பயணத்தில், ஆரம்பம் முதல் இன்று வரையிலான முக்கியமான அம்சங்கள் என்னென்ன?

பாலினப் பாகுபாடு நிறைந்த சமூகத்தில், ஒரு பெண்ணாக எனது கனவுகளை நிறைவேற்றிக்கொள்வது என்பது சவால்கள் நிறைந்ததாக இருந்தது. எனினும், எனது பெற்றோரும் ஆசிரியர்களும் அளித்த ஆதரவு எனது இலக்குகளை அடைய வழி ஏற்படுத்தித் தந்தது. பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் அணு இயற்பியலைத் தேர்வுசெய்வதற்குக் மிகத் திறமையான ஆசிரியர்கள் அங்கு பணியாற்றியதுதான் காரணம். பல்வேறு கஷ்டங்களுக்கு இடையில் பணியாற்றி, தத்தம் துறைகளில் முன்னோடிகளாக ஆன பெண்களை எப்போதும் போற்றுகிறேன். இந்தியாவில், இதுபோன்ற ஏராளமான உதாரணங்கள் நம்மிடையே உண்டு.

தற்போது நீங்கள் பணியாற்றிவரும் திட்டங்கள் பற்றிச் சொல்லுங்கள்…

‘காம்பாக்ட் முயோன் சோலெனாய்டு’ (சி.எம்.எஸ்.) எனும் ஆய்வை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். இந்த ஆய்வில் அதிகமான கதிரியக்கத்தைத் தாங்கக்கூடிய, தரவுகளை அடுத்த 25 ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய துகள் கண்டுபிடிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம், இயற்பியலாளர்கள் பெரிய அளவிலான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும், இயற்பியல் துறையில் இதுவரை விடை கண்டுபிடிக்கப்படாத கேள்விகளுக்கு விடை தேடவும் முடியும். உதாரணத்துக்கு, பிரபஞ்சத்தில் எதிர்ப் பொருள் (ஆன்டிமேட்டர்) எங்கிருக்கிறது? வேறு பரிமாணங்கள் உள்ளனவா? பிரபஞ்சத்தின் பருப்பொருளில் பிரதானப் பங்கை வகிக்கும் கரும்பொருள் என்பது என்ன.. என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை தேட முடியும்.

இந்திய மாணவச் சமுதாயத்துக்கும், சிறிய நகரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் என்ன மாதிரியான திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?

கடந்த 20 ஆண்டுகளாகப் பல மாணவர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். ஆண்டுக்குச் சராசரியாக 15 முதல் 20 இந்திய மாணவர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். ‘செர்ன்’ ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகளுடன் உரையாட அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன். தங்களை அனுப்பிய நிறுவனங்கள் அளித்த நிதியைக் கொண்டு, ‘செர்ன்’ ஆய்வு மையத்தில் மாணவர்கள் சில மாதங்கள் பணியாற்றியிருக்கிறார்கள். ஆய்வு மையத்தின் மேற்பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார்கள். அந்த மாணவர்களைப் பற்றிய பாராட்டுக்களைக் கேட்கும்போது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். சின்ன நகரமோ, பெரு நகரமோ எங்கிருந்து வந்தாலும் நம் மாணவர்கள் சிறந்தவர்கள் என்பதைக் காட்டும் வகையில் அவர்களது செயல்பாடுகள் இருக்கும். கணினித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் அவை தொடர்பான அறிமுகம் இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்திருக்கிறது. எனினும், இன்னமும் பெரிய இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. பெருங்கடலில் விழும் ஒரு துளி போல, ‘செர்ன்’ ஆய்வு மையம் போன்ற மிகப் பெரிய அறிவியல் ஆய்வுகளில் மாணவர்களுக்கு என்னால் இயன்றவரை உதவிவருகிறேன். என்னால் இயன்றவரை அவர்களுடன் உரையாடிவருகிறேன். எனது ஆரம்ப காலத்தில், புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடனான உரையாடல் எனது எண்ணங்களையும் லட்சியங்களையும் வடிவமைக்க உதவியது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது.

புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் போன்ற விஷயங்களில் இந்தியாவில் எங்கு பற்றாக்குறை நிலவுகிறது என்று நினைக்கிறீர்கள்?

நமது ஆய்வகக் கட்டமைப்புகளில் முன்னேற்றங்கள் இருந்தாலும், தொழில்நுட்ப விஷயத்தில், குறிப்பாக சாதனங்கள் விஷயத்தில் நல்ல நிலைமையை அடைவதற்கு வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. ‘இஸ்ரோ’ பெரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. அறிவியல், ஆய்வகத் துறைகளில் கடந்த சில பத்தாண்டுகளில் இந்தியா குறிப்பிடத் தக்க பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. எனினும், அறிவியலின் அனைத்துத் துறைகளிலும் பயனாகும் வகையில் ஆய்வுகளில் தனித்த கவனம் செலுத்த, தொழில்நுட்பங்களுடன் கூடிய சில மைய ஆய்வகங்கள் நமக்குத் தேவை.

ஐ.ஐ.டி. ஆகட்டும், என்.ஐ.டி. ஆகட்டும் அல்லது அறிவியல், தொழில்நுட்பம் தொடர்புடைய பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகட்டும் அவர்களது ஆய்வின் கடைசி சில ஆண்டுகளில் இதுபோன்ற ஆய்வு மையங்களில் பயிற்சி அளித்தாலே போதும். உண்மையைச் சொன்னால், இந்தியாவின் மிக முக்கியமான கல்வி நிறுவனங்களிலிருந்து வரும் மாணவர்கள் கூட, பொறுப்பெடுத்துக்கொண்டு செயல்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் மட்டும் குறுகிய காலத்தில் இதற்கெல்லாம் தயாராகிவிடுகிறார்களே, எப்படி?

ஆர்வமிக்க இளம் விஞ்ஞானிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன?

இந்திய மாணவர்களுடனான எனது உரையாடல்கள் உத்வேகம் தருகின்றன. அவர்களிடம் திறமையும், லட்சிய மும் இருக்கின்றன. இந்தியாவில் இப்போது வழக்கமான போக் காக இருக்கும் உடனடி வேலைகள், அதிகச் சம்பளம் போன்ற அம்சங்களில் மயங்கித் தங்கள் கனவுகளை இன்றைய இளைஞர்கள் விட்டுத்தருவதில்லை என்று மனமார நம்புகிறேன். தங்கள் லட்சியக் கனவுகளைத் தொடர்வதற்கு ஆழ்ந்த சிந்தனை தேவை. அப்படித்தான் நான் கற்றுக்கொண்டேன். ஒரு பாடம் என்றும் நிரந்தரமானது: ‘மற்றவர்களால் ஒரு விஷயத்தைச் செய்ய முடியும் என்றால், உங்களாலும் முடியும்!’

© ‘தி இந்து’ (ஆங்கிலம்) தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x