Last Updated : 01 Mar, 2015 09:30 AM

 

Published : 01 Mar 2015 09:30 AM
Last Updated : 01 Mar 2015 09:30 AM

என்ன சொல்கிறது புதிய நிதிநிலை அறிக்கை?

பொதுமக்கள், பெருநிறுவனங்கள், பாஜக ஆதரவாளர்கள், பாஜக எதிர்ப்பாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தருணம் வந்துவிட்டது. ஆம், பாஜகவின் முழுமையான முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அரசுக்கும் தனது முதல் நிதிநிலை அறிக்கை என்பது அக்னிப் பிரவேசம் போன்றது. அந்த அரசு தொடர்ந்து எந்தத் திசையில் செல்லவிருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்துவது முதல் நிதிநிலை அறிக்கைதான்.

வெள்ளியன்று பொருளாதார ஆய்வறிக்கை 2014-15 சமர்ப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பொருளாதார ஆய்வறிக்கையில் சொல்லியபடியே அரசின் செலவுகளைக் குறைத்து, கூடுதல் வருவாய் தேடாமல், முடிந்த வரை நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவே மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி முயன்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

நிதி வருவாய்

14-வது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி தற்போது உள்ள 32 சதவீதத்துக்குப் பதில் 42% மத்திய வரி வருவாயை மாநிலங்களுக்குக் கொடுப்பதால், மத்திய அரசிடம் உள்ள நிகர வரி வருவாய் 9.20 லட்சம் கோடியாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. இது கடந்த ஆண்டைவிட ரூ. 12 ஆயிரம் கோடி மட்டுமே அதிகம். அதே நேரத்தில், முதலீட்டுக் கணக்கில் அதிக வருவாயைத் தேட இந்த அரசு முயற்சித்திருக்கிறது. குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது மூலம் ரூ. 40 ஆயிரம் கோடி வரை கிடைக்கும் என்று கணக்கிட்டுள்ளது.

பொதுச் செலவுகளின் போக்கு

அரசுக்கு வருவாயை உயர்த்தத் தவறிய பாஜக அரசு, பொதுச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் திட்டக் குழுவைக் கலைத்த அரசு, திட்டச் செலவுகளையும் வெகுவாகக் குறைத்திருக்கிறது. 2014-15 நிதிநிலை அறிக்கையில்

ரூ. 5.75 லட்சம் கோடியைத் திட்டச் செலவுகளுக்கு ஒதுக்கிய இந்த அரசு அதனைத் திருத்திய மதிப்பீட்டில் ரூ. 4.68 லட்சம் கோடியாகக் குறைத்து 2015-16 நிதிநிலை அறிக்கையில் ரூ. 4.65 லட்சம் கோடியென மேலும் குறைத்துள்ளது. இதனால், அரசின் புதிய முயற்சிகளுக்கான செலவுக்குப் போதுமான பணம் இல்லை என்றே தெரிகிறது.

இதே போன்று திட்டம் சாராத செலவுகளையும் மத்திய அரசு குறைத்துள்ளது. 2014-15 நிதிநிலை அறிக்கையில் ரூ. 12.20 லட்சம் கோடியைத் திட்டம் சாராத செலவுகளுக்கு ஒதுக்கிய இந்த அரசு அதனைத் திருத்திய மதிப்பீட்டில் ரூ. 12.13 லட்சம் கோடியாகக் குறைத்து 2015-16 நிதிநிலை அறிக்கையில் சற்றே உயர்த்தி ரூ. 13.12 லட்சம் கோடியென நிர்ணயித்துள்ளது. எனவே, தான் அறிவித்த நிலையிலிருந்து அரசு சிறிது விலகாமல், கூடுதல் வரிவருவாயைத் தேடாமல், செலவுகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது.

நிதிப் பற்றாக்குறை

இவ்வளவு முயற்சிகள் இருந்தும் இந்த அரசால் பெரிய அளவில் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசு அடுத்த வருடம் ரூ. 5.56 லட்சம் கோடி கடன் வாங்க நிதிநிலை அறிக்கையில் திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் மொத்தக் கடன் தொகையான ரூ. 5.13 லட்சம் கோடியைவிட சற்று அதிகம். அரசின் கடன் என்பது நிதிப் பற்றாக்குறையின் அளவாகும். எனவே, அரசின் நிதிப் பற்றாக்குறையை நாட்டின் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த ஆண்டு 4.1% உள்ளது, அது சற்றே குறைந்து 3.9 சதவீதமாக அடுத்த நிதியாண்டில் குறையும். ஆனால், கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தபோது 2015-16-ல் 3.6% எனவும், 2016-17-ல் 3.0% எனவும் குறைப்போம் என்று ஜேட்லி கூறினார். இப்போது நிதிப் பற்றாக்குறையின் அளவை 3 சதவீதமாகக் குறைக்க இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்று அரசு கூறுகிறது. வருவாயைப் பெருக்காமல், செலவுகளைக் குறைத்தும் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தாத சம்பிரதாயமான நிதிநிலை அறிக்கையாகவே எஞ்சிவிட்டது இது.

துளித்துளியாய்...

* மானியங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதை அரசு பல வழிகளில் கூறியுள்ளது. கடந்த 2013-14-ல் மானியத்தொகை ரூ. 2.55 லட்சம் கோடியாக இருந்தது. இதனை 2014-15-ல் ரூ. 2.67 லட்சம் கோடியாக உயர்த்தி 2015-16-ல் ரூ. 2.44 லட்சம் கோடியாகக் குறைத்திருக்கிறது.

* விவசாயத்தின் மேல் எந்த அரசுக்கும் அக்கறை இருப்பதில்லை என்பதை இந்த அரசும் நிரூபிக்கிறது. விவசாயத் துறையில் இந்த ஆண்டு திருத்திய மதிப்பீட்டில் உள்ள செலவு ரூ. 26,987 கோடி. இந்தத் தொகையை அடுத்த ஆண்டு ரூ. 25461 கோடியாகக் குறைத்து எப்படி விவசாயத்தை முன்னேற்றுவது?

* இந்த நிதிநிலை அறிக்கை யாருக்கானது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இது. பெருநிறுவனங்களின் வருமான வரிவருவாய் 2013-14 ஆண்டுடன் ஒப்பிடும்போது 2014-15-ல் 12% வளர்ந்து ரூ 3.83 லட்சம் கோடியாகவும், 2015-16-ல் 8% மட்டுமே வளர்ந்து ரூ 4.15 லட்சம் கோடியாக இருக்கும் என்று இந்த நிதிநிலை அறிக்கை சொல்கிறது. இந்த வரிவருவாயின் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிடக் குறைவு. எனவே, பெருநிறுவனங்களிடமிருந்து வரி வசூலிக்க அரசு தவறிவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. அது மட்டுமா, இந்த வருமான வரி விகிதம் இன்னும் 5 ஆண்டுகளில் 33%-லிருந்து 25% ஆகக் குறைக்கப்படும் என்றும் சொல்லிப் பெருநிறுவனங்களுக்குப் பெரிய பூச்செண்டைக் கொடுத்திருக்கிறார் ஜேட்லி.

* தனிநபர் வருமான வரி வசூலில் மத்திய அரசு தொடர்ந்து அதிகக் கவனம் செலுத்திவந்திருக்கிறது. இந்த ஆண்டு தனிநபர் வருமான வரி 14% உயர்ந்தும், அடுத்த ஆண்டு 17% உயர்ந்து ரூ. 3.04 லட்சம் கோடியாக இருக்கும் என்று நிதிநிலை அறிக்கை கூறுகிறது. மருத்துவக் காப்பீடு போன்ற செலவுகளுக்கு வரிச் சலுகை கொடுத்தாலும், அடுத்த ஆண்டுகளில் பெருநிறுவனங்களின் வருமான வரியைக் குறைக்கும்போது தனிநபர் வருமான வரியையும் குறைக்க வேண்டும்.

* மறைமுக வரிகளான இறக்குமதி மீதான சுங்க வரி, உற்பத்தி மீதான கலால் வரி, சேவை வரி என்ற மூன்றிலும் இந்த ஆண்டு திருத்திய மதிப்பீட்டில் வரிவருவாய் குறைந்துள்ளதும், அடுத்த ஆண்டு அதிகரிக்கும் என்று சொல்வதும் நம்பத் தகுந்ததாக இல்லை. ஏனென்றால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி அதிகம். எனவே, இந்த வரிவருவாய்களும் அதிகரித்திருக்க வேண்டுமல்லவா? அடுத்த ஆண்டு மட்டும் வளர்ச்சி விகிதம் அதிகரித்தால் எப்படி வரிவருவாயும் அதிகரிக்கும் என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

* அடுத்த ஆண்டு பணவீக்கம் 5% முதல் 6% வரை இருக்கும் என்று வைத்துக்கொண்டால், சமூகப் பாதுகாப்புத் துறைகளில் அரசின் செலவுகள் குறைந்தபட்சம் 6% அதிகரிக்க வேண்டும். மருத்துவத் துறையின் செலவு 0.7% மட்டுமே அதிகரித்துள்ளது, அதாவது, ரூ. 34,556.79 கோடியிலிருந்து ரூ. 34,783.84 கோடியாக அதிகரித்துள்ளது. பள்ளிக் கல்வியின் செலவு 1% மட்டுமே அதிகரித்து அடுத்த ஆண்டு ரூ. 69,794.50 கோடியாக இருக்கும். பெண்கள் மற்றும் குழந்தைகள் துறையில் ஒதுக்கீடு குறைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆண்டு திருத்திய மதிப்பீட்டில் ரூ. 18,588.39 கோடியாக உள்ள செலவு 2015-16-ல் ரூ. 10,382.40 கோடியாகக் குறையும்.

* நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கியதாகக் கூறும் இந்த அரசு, அந்தச் செலவை உள்ளடக்கிய கிராம வளர்ச்சித் துறைக்கான செலவை 5% மட்டுமே அதிகரித்துள்ளது.

* பிரதமரின் செல்லத் திட்டமான ‘தூய்மை இந்தியா’ அதிகக் கவனம் பெற்றதால், குடிநீர், சாக்கடை வசதித் துறைக்குச் செலவு 34% அதிகரித்து ரூ. 2,532.74 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று ‘ஸ்மார்ட் நகரம்’ திட்டமும் பிரதமரின் கனவுத் திட்டம்தான். இதனால் நகர்ப்புறத் துறைக்கு 52% கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு அதன் செலவு 2015-16-ல் ரூ. 16,832.23 கோடியாக இருக்கும்.

* பெட்ரோல் விலை வீழ்ச்சி அடைந்த பிறகு, மத்திய அரசு அதன் மீதான கலால் வரியை உயர்த்தியது. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மீதும் சாலை மேம்பாட்டு வரி ரூ. 4 என்று விதித்து அதையும் சேர்த்து சாலை வசதித் துறையின் செலவு 42% அதிகரித்து 2015-16-ல் ரூ. 79,078.74 கோடியாக இருக்கும் என்று நிதிநிலை அறிக்கை கூறுகிறது.

* பள்ளிக் கல்விக்கான செலவை 1% மட்டும் அதிகரித்த மத்திய அரசு உயர்கல்விச் செலவை 13% அதிகரித்துள்ளது. இது பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசால் நிறுவப்படும் மத்திய உயர்கல்வி நிலையங்களுக்குப் பயன்படும்.

* சாமானியர்களை நேரடியாகச் சென்றடையும் மானியம், சுகாதாரம், பள்ளிக் கல்வி, கிராம வளர்ச்சி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் என்ற பல துறைகளில் அதிகம் செலவிடாத இந்த அரசு, செல்வந்தர்களைப் பெரிதும் சென்றடையும் சாலை வசதி, நகர்ப்புற வளர்ச்சி, உயர்கல்வி போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x