Last Updated : 07 Oct, 2014 08:28 AM

 

Published : 07 Oct 2014 08:28 AM
Last Updated : 07 Oct 2014 08:28 AM

ஹாங்காங்: இன்னொரு தியானென்மென் சதுக்கமா?

சீன மக்கள் குடியரசின் ஆட்சிக்கு உட்பட்ட ஹாங்காங்கில் இப்போது இளைஞர்களும் மாணவர்களும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கியுள்ளனர். செப்டம்பர் 26 முதல் இந்தக் கிளர்ச்சி வேகம் பிடித்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவர்களைக் கலைக்க பெப்பர் ஸ்பிரேயையும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் போலீஸார் பயன்படுத்தினர். சுமார் 80,000 பேர் நகரின் மையத்தில் திரண்டு, தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, முழு ஜனநாயக உரிமைகளை வழங்க வேண்டும் என்று போராடிவருகின்றனர்.

தியானென்மென் சதுக்கத்தில் இதே போல ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த பெய்ஜிங் நகர மாணவர்கள், சீன ராணுவத்தின் டாங்கிப் படையால் நசுக்கி அழித்து ஒடுக்கப்பட்டார்கள். அந்தக் கிளர்ச்சியில் பங்கேற்றோர் எத்தனை பேர், இறந்தவர்கள் எத்தனை பேர், வீடு திரும்பியோர் எத்தனை பேர், உடலுழைப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டோர் எத்தனை பேர் என்றெல்லாம் இதுவரை துல்லியமாக யாருக்கும் தெரியாது. அதேபோல் இந்தப் போராட்டமும் நசுக்கப் படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

முதலில் பிரிட்டன்; இப்போது சீனா

சுமார் 155 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஹாங்காங்கை சீனத்திடம் ஒப்படைக்க பிரிட்டன் 1984-ல் ஒப்பந்தம் செய்துகொண்டது. 1997 ஜூலை 1 முதல் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. ‘ஒரு நாடு, இரு ஆட்சி முறைகள்’ என்ற வகையில் ஹாங்காங்கும் மகாவ் என்ற பகுதியும் சுயேச்சை அதிகாரங்களுடன் சீனத்துடன் இணைக்கப்பட்டன. சீனா மீண்டும் 1997-ல் தன் பொறுப்பில் ஏற்றது. ராணுவம், வெளியுறவு ஆகிய இரு துறைகள் மட்டுமே பிரதான நிலப் பகுதியான சீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும், இதர துறைகள் சிறப்பு நிர்வாகப் பகுதியின் சுயேச்சை ஆட்சியதிகாரத்தின் கீழ் வரும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஹாங்காங்கின் நீதித் துறை சுயேச்சையானது. அதுவும் அப்படியே பராமரிக்கப்படுகிறது. கல்விமுறை பிரிட்டிஷ் கல்வி முறையை ஒட்டியே இருந்தது. இப்போது முதல் முறையாக சீன அரசு அதில் சில மாறுதல்களைச் செய்துகொள்ளுமாறு கூறியிருக்கிறது.

கிளர்ச்சி ஏன்?

ஹாங்காங்கின் அரசியல் உரிமையில் தலையிட மாட்டோம் என்று கூறியிருந்தது சீன கம்யூனிஸ்ட் கட்சி. கடந்த ஜூலை மாதம் பெய்ஜிங் வெளியிட்ட வெள்ளை அறிக்கை ஒன்று ஹாங்காங்கின் சிறப்பு அதிகாரக் குழுவுக்கு உள்ள அதிகாரங்கள் அனைத்தும் தங்களால் அளிக்கப்படுவது என்றும், 2017 பொதுத்தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கு முன்ன தாகவே வேட்பாளர்களைப் பற்றிய தகவல்களைத் தங்களிடம் தர வேண்டும் என்றும் தங்களால் அங்கீகரிக் கப்பட்டவர்கள் மட்டுமே வேட்பாளர் ஆக முடியும் என்றும் திட்டவட்டமாகக் கூறியது. அப்போதுதான் பெரிதானது பிரச்சினை. சீன அரசின் போக்கைக் கண்டித்து நகரின் மையப் பகுதியில் வண்ணவண்ணக் குடைகளின் கீழ் திரண்டு நின்று, அரசியல் சுதந்திரத்தில் கைவைக்கக் கூடாது என்று கோஷமிடுகின்றனர். இந்த எழுச்சியை ‘குடைப் புரட்சி’ என்று அரசியல் விமர்சகர்கள் வர்ணிக்கின்றனர்.

சீனாவின் அச்சம்

ஹாங்காங் மக்கள் வெறும் அரசியல் உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை, தங்களுடைய தனித்துவமான கலாச்சாரம், கல்வி, வியாபார, தொழில் உரிமைகள் போன்றவற்றுக்காகவும் போராடுகின்றனர். கான்டன் மொழி பேசும் இளைஞர்கள் சீன ஆதிக்கத்தின் கீழ் வந்ததும் மண்டாரினையும் கற்றுக்கொண்டு சரளமாகப் பேசுகின்றனர். ஹாங்காங்கின் செல்வ வளம், கலாச்சாரத் தனித்தன்மை, பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றுக்காக ஆண்டுதோறும் லட்சக் கணக்கான சீனர்கள் சீனாவின் பிற மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக வருகின்றனர். எனவே, ஹாங்காங்கில் வழங்கும் அரசியல் உரிமைகள் தங்களுக்கு ஏன் தரப்படவில்லை என்று பிற மாநிலங்களிலும் எதிர் காலத்தில் கேட்கக்கூடும் என்பதால், சீன அரசு இப் போது ஹாங்காங்கின் ஜனநாயக உரிமைகளில் கைவைக்கத் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஹாங்காங்கின் வர்த்தகத்தில் பிரதான நிலப் பகுதியில் சீனர்களே இப்போது ஆதிக்கம் செலுத்துகின்றனர்; நிலம், அடுக்கக விலைகள் சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. வீட்டுக் கடன் வட்டி, குத்தகைப் பணமும் அதிகரித்துவிட்டது. இதனால் தங்களின் எதிர்காலம் குறித்து ஹாங்காங் மக்களிடம் அச்சமும் கவலையும் அதிகரித்துவருகிறது. கிளர்ச்சிக்கு இவையும் உள்ளார்ந்த காரணங்கள்.

தங்களுக்கு எது வேண்டும் என்பதை மக்களே தீர்மானிப்பதை சீன அரசு விரும்புவதில்லை. மக்களுக்கு எது நல்லது என்று கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டும்தான் தீர்மானிக்க முடியும் என்று கருதுகிறது. கடந்த சில மாதங்களாக ஹாங்காங் நிர்வாகம் தன்னுடைய மக்களுக்குப் பதில் சொல்வதைவிட, மத்திய சீன அரசின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. சுதந்திர வர்த்தகப் பிரதேசமான ஹாங்காங் அரசியல் போராட்டப் பிரதேசமாக மாறிக்கொண்டுவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x